Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
 width=
 width=ஜூன் 2009

அரசியல் அதிகாரம்: புரிந்து கொள்ளப்படவேண்டிய சில உண்மைகள்-3
டாக்டர் அம்பேத்கர்

தாழ்த்தப்பட்ட வகுப்புகளும் சைமன் ஆணையமும்

16. தன்னாட்சி பெற்ற இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் நமக்கு என்னென்ன வகையான பாதுகாப்புகள் அவசியம் தேவை என்று நான் கருதுகின்றவற்றை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். இப்போது நமது நலன்களுக்காக சைமன் ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகள் எவை என்பதில் நமது கவனத்தைத் திருப்புவோம். தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கான அரசமைப்புச் சட்டப் பாதுகாப்புகளில் சைமன் ஆணையம் பரிவோடு கவனம் செலுத்தியுள்ளது என்பதில் அய்யம் இல்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின் தற்போதைய உண்மை நிலையை அளிக்க சைமன் ஆணையம் முயன்றுள்ளது. ஆனால் அது முழுமையானதாக இல்லை. பள்ளிக்கூடம், கிணறு தொடர்பான இடர்ப்பாடுகளை மட்டுமே அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த எளிய வகுப்பு மக்கள் படும் எண்ணற்ற துன்பங்களில் அவை ஒரு மிகச் சிறு கூறாகும். இருப்பினும் தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கு அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பின் இன்றியமையாமையை, மான்ட்போர்டு அறிக்கையைவிட சைமன் ஆணையத்தின் அறிக்கை மிக உண்மையாக உணர்ந்துள்ளது. ஆனால், நமது கோரிக்கைகளின் தன்மை யையும் அவற்றின் நியாய வலிமையையும் உணர்ந்துள்ள வகையில் இரண்டு அறிக்கைகளுமே நமக்கு மிகுந்த ஏமாற்றத்தைத்தான் அளிக்கின்றன என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Ambedkar 17. தற்பொழுது தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கு, நியமன அடிப்படையில்தான் பிரதிநிதித்துவம் கிடைத்து வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நியமன முறை பிரதிநிதித்துவத்தால் விளைந்துள்ள கேடுகள் என்னென்ன என்பதைத் தற்பொழுது மேலவைகளில் உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எங்களைப் போன்றவர்கள் கூற முடியும். சைமன் ஆணையத்தின் முன்பு நமது மக்கள் அளித்துள்ள வாக்குமூலங்கள் நியமன முறையை வன்மையாகக் கண்டித்துள்ளன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முறையினால், நமது மக்களில் சிறந்தவர்களை நாம் தேர்ந்தெடுப்பது தடுக்கப்படுவதுடன், நியமிக்கப்பட்டுள்ள நமது பிரதிநிதிகளையும் சுதந்திரமாக செயல்பட விடாமல் முடக்குகிறது. இந்தப் பழுதான முறையை சைமன் ஆணையம் கைவிட மறுத்து, தகுதியான வேட்பாளர்கள் தேர்தல் மூலம் கிடைக்கவில்லை எனில், தாழ்த்தப்பட்ட வகுப்புகளின் பிரதிநிதிகளை ஆளுநர் நியமிக்கலாம் என்ற பரிந்துரையை உறுதியாகப் பிடித்துக் கொண்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது மட்டுமன்று; சைமன் ஆணையம் இதற்கும் ஒரு படி கீழே சென்று சட்ட மன்றங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்புகளின் பிரதிநிதிகளாக, தாழ்த்தப்பட்டோர் அல்லாதோரையும் ஆளுநர்கள் நியமிக்கலாம் என்று மிகவும் விரும்பத்தகாத பரிந்துரையையும் அளித்துள்ளது. இவற்றில் எல்லாம் நாம் உடனடி கவனத்தை செலுத்தத் தேவையில்லை.

ஆனால், எனது கருத்துப்படி, சைமன் ஆணையத்தின் முதன்மையான முன்மொழிதலே (கணூணிணீணிண்ச்டூ) ஏற்கத் தகுதியற்ற ஒன்றாகும். அதாவது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கூட்டுத் தொகுதிகளில் இடஒதுக்கீடு என்ற முறையில் சட்ட மன்றங்களில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்று அம்முன்மொழிவு கூறுகிறது. ஆணையம் இத்துடன் நின்றிருந்தால் இப்பரிந்துரை நமது இன்றைய நிலையை மேம்படுத்துவதில் பெருத்த முன்னேற்றம் ஏற்படும் என்று இதை நாம் வரவேற்றிருக்கலாம். ஆனால் இப்பரிந்துரையுடன் கூடவே, தேர்தலில் நிற்கத் தகுதியுடையவர் என்று மாநில ஆளுநரால் சான்றுறுதி வழங்கப்படாத தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் எவரும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றொரு நிபந்தனையையும் ஆணையம் இணைத்துள்ளது.

பெயருக்குத் தேர்தல் முறையென்று கூறப்பட்டாலும் இந்த நிபந்தனையோடு சேர்த்துப் பார்க்கையில், இது இன்றைய நியமன முறையின் மறுவடிவம்தான் என்பது தெளிவாகிறது. எனவே, இம்முறை நமக்கு ஏற்புடையது அல்ல. இதில் நாம் தேர்ந்தெடுப்பதற்கென ஒன்றுமில்லை. மேலும் ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளருக்கு மட்டுமே ஆளுநர் சான்றுறுதியளிக்க முடிவு செய்கிறார் எனில், அத்தொகுதியில் தேர்தல் என்பது ஆளுநரின் நியமனமாகத்தான் முடியுமேயன்றி, தேர்தலாக இருக்காது என்பது எவருக்கும் தெள்ளத் தெளிவாக விளங்கும் எளிய உண்மை. சான்றுறுதி வழங்கப்படும் முறை, எந்த அடிப்படையில் அது வழங்கப்படும் என்பன எதுவும் தெளிவாக்கப்படவில்லை. ஆணையம் கூறுவதெல்லாம், “தாழ்த்தப்பட்ட வகுப்பு சங்கங்களுடன் கலந்தாலோசித்தோ, அல்லது தமக்குச் சரியென்று தோன்றுவதையொட்டியோ ஆளுநர் சான்றுறுதி வழங்கலாம்'' என்பது மட்டுமே.

இரு வழிகளில் எது பின்பற்றப்படுமாயினும், அதற்கு நாம் ஆதரவளிக்கத் தேவையில்லை. சங்கங்களுடன் கலந்தாலோசித்தல் என்னும் முறை பின்பற்றப்படும் எனில், பெரும்பாலான தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு ஏற்பில்லாத, ஆனால் தமக்கு உகந்த வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக எண்ணற்ற போலி சங்கங்கள் உருவாவதில்தான் இது போய் முடியும். மாற்று வழியென்பது தரகர்கள் மற்றும் தாசில்தார்களின் தன்னிச்சை அதிகாரப் போக்கிலேயே முடியும். ஏனென்றால், ஆளுநர் இத்தகைய அலுவலர்களின் அறிக்கையைக் கொண்டுதான் சான்றுறுதி குறித்து முடிவு எடுக்க வேண்டியிருக்கும். தரகர்கள் மற்றும் தாசில்தார்கள் போன்றோர் எத்தகைய அலுவலர்கள் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். அவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின்பாலும், அவர்களில் அறிவுடைய மக்கள் பாலும் எத்தகைய மனப்பான்மையை கொண்டிருப்பார்கள் என்பதை அனைவரும் அறிவோம். எனவே, எத்தகைய மனிதர்களுக்குச் சான்றுறுதி தர அவர்கள் பரிந்துரைப்பார்கள் என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள்.

18. ஆணையம் பரிந்துரைத்துள்ளவாறு, தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின் பிரதிநிதிகளுக்கு மட்டும் தனித்த சான்றுறுதி தேவை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தகுதியில்லாதவர்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம் என்றால், பிற எல்லா வகையான வகுப்பு மக்களின் பிரதிநிதித்துவம் குறித்தும் இதே நிலைதான் எடுக்கப்பட வேண்டும் என்பது உறுதி. தகுதியின்மை என்பது ஆங்கில மொழியறிவும் பேச்சாற்றலும் இல்லாமையைக் குறிப்பது என்றால், பம்பாய் சட்டமன்ற மேலவையில் ஆங்கிலமே அறியாத பார்ப்பனரல்லாத உறுப்பினர்களும், எண்ணற்ற சிந்து முஸ்லிம் உறுப்பினர்களும் இடம் பெற்றிருந்தனர் என்பதை நாம் சுட்டிக்காட்ட முடியும். அவர்கள் ஒருபோதும் உரையாற்றியதில்லை; வாய் திறந்து ஒரு கேள்விகூட கேட்டதில்லை.

பிற மாநில சட்டமன்ற மேலவைகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதிகளாக இருந்திருக்கும் உங்களில் பலரும் இத்தகைய "பேசா மனிதர்'கள் பலரைக் கண்டிருப்பீர்கள் என்பது உறுதி. இவர்களுக்கெல்லாம் சான்றுறுதி தேவைப்படாதபோது, தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு மட்டும் அது ஏன் தேவைப்படுகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, நாம் சைமன் ஆணையத்தின் பரிந்துரையை ஒட்டுமொத்தமாக ஒதுக்கித் தள்ளி, நமது பிரதிநிதிகளை எவ்வித நிபந்தனையோ, தடையோ இன்றி நாமே தேர்ந்தெடுக்கும் உரிமையையே கோர வேண்டும். நமது நலன்கள் என்ன என்பதை முடிவு செய்பவர்கள் நாமாகவே இருக்க வேண்டுமேயன்றி, அதை முடிவு செய்யும் அதிகாரத்தை ஆளுநர் எடுத்துக் கொள்ள நாம் அனுமதிக்க இயலாது.

19. மத்திய சட்டமன்றத்தின் அமைப்பு குறித்த சைமன் ஆணையத்தின் பரிந்துரை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. இப்போதைய நடைமுறையில் சட்டமன்றப் பேரவைக்கும் மேலவைக்கும் நேரடியான தேர்தல் முறையே நிலவுகிறது. மத்திய மேலவையின் இப்போதைய அமைப்பே தொடர வேண்டும் என்று சைமன் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் பேரவை உறுப்பினர்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின்படி, மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளது. மறைமுகத் தேர்தல்களை நான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. எனவே, சைமன் குழுவின் பம்பாய் மாநில உறுப்பினர் என்ற முறையில் நான் மறுப்பு எழுதியனுப்பி, எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளேன்.

சைமன் ஆணையத்தின் பரிந்துரையாக வரும் இந்த அமைப்பில் சில நன்மைகளும் உண்டு; சில தீமைகளும் உண்டு. முதலாவதாக, சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்திற்கு கூட்டுத் தொகுதிகளா, தனித் தொகுதிகளா என்ற சிக்கலை அது தவிர்க்கிறது. இரண்டாவதாக, மாநில மேலவைக்கு ஒன்றும், பேரவைக்கு ஒன்றுமான இரட்டை வாக்குரிமை முறையின் தீங்குகளை அது தவிர்க்கிறது. மூன்றாவதாகப் பேரவையை எளிதில் சமாளிக்கக் கூடிய அவையாக அது ஆக்குகிறது. அதன் தீமைகளில் முதலாவது பொது மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான பிணைப்பை அது வலிமை குன்றச் செய்து, நாடு முழுவதும் ஒன்று என்ற கண்ணோட்டத்தை மக்களின் பார்வையிலிருந்து அகற்றி, தேசிய ஒருமைப்பாட்டின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கிறது. பரிந்துரைகளில் நன்மை மிகுதியா தீமை மிகுதியா என்பது எப்படியிருப்பினும், சைமன் ஆணையத்தின் மத்திய சட்டமன்றம் குறித்த பரிந்துரை ஏற்கப்பட வேண்டும். ஆனால் அது எந்த அவைக்குப் பொருத்தமானது : பேரவைக்கா, மேலவைக்கா என்பதுதான் நாம் தீர்வு காண வேண்டிய கேள்வி. இப்பரிந்துரை இரண்டு அவைகளுக்கும் ஒரு சேரப் பொருந்தாது என்பது தெளிவு. மறைமுகத் தேர்தல்

முறையின் மிகப்பெரும் பலவீனம் என்பது, அது தனது முதல் பயன்பாட்டிலேயே வலுவிழந்து விடுவதுதான். வாக்காளர்களுக்கும் வேட்பாளர்களுக்குமிடையே பெருத்த இடைவெளி நிலவுகையில், ஏதாவது ஒரு வகையில் பிரதிநிதித்துவத்தைத் தொடங்கி வைக்க உறுதியாக வழிவகை செய்கிறது என்பது மட்டுமே இதன் முக்கியப் பயன். ஆனால் வாக்காளர்களிடமிருந்து வேட்பாளர் இரண்டு படி தள்ளி நிற்கும் சூழ்நிலையில், வாக்காளரின் சார்பாண்மை ஊடகம் என்ற தகுதியை வேட்பாளரிடமிருந்து அகற்றி அது தன் பயனை இழக்கிறது.

மத்திய சட்டமன்றத்தை இரட்டை அவை கொண்டதாக நிறுவ முடிவு செய்தோமெனில், பேரவையை நிறுவ மறைமுகத் தேர்வுமுறை பின்பற்றப்படும் எனில் மேலவையை நிறுவ உற்ற வழிகள் ஏதுமின்றி வெற்றுநிலை உருவாக நேர்கிறது. எனவே, அவை அமைப்பில், மாநிலங்கள் அவையை மறுபரிசீலிப்பது என்ற நோக்கில் கருதினால், மிகப் பயனற்ற, முறையான அமைப்பொழுங்கற்ற அவையாய் அது குன்றி விடுகிறது. தனது பணிகளை சரிவர செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்படுகிறது. எனது இக்கண்ணோட்டம் சரியெனில், மத்திய சட்டமன்றப் பேரவை

களுக்கு நேரடித் தேர்தலும், மேலவைகளுக்கு மறைமுகத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும். மறைமுகத் தேர்தலில் மாநிலப் பேரவை உறுப்பினர்கள் வாக்காளர் தொகுதியாவர். மாநிலங்கள் அவை இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுமென்றும், மத்திய சட்டமன்றப் பேரவையில் தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க மறைமுகத் தேர்தல் முறையே மிக எளிதான முறையாகும். இது, கண்டனம் தெரிவிப்பதற்குரிய முறையன்று. நமது நலன்களுக்குப் பாதுகாப்பு எனும் நோக்கில், நியமன முறையோடு ஒப்பிடுகையில் இம்மறைமுகத் தேர்தல் முறை மிகப் பெரிய முன்னேற்றமேயாகும்.

20. மாநில சட்டமன்றங்கள் தற்பொழுது அமைந்துள்ள நிலையில், சிறுபான்மை வகுப்பினரின் பிரதிநிதிகள் மிகக் குறைந்த அளவிலேயே இடம் பெற்றுள்ளனர். 1919இல் "சவுத் பரோ குழு' இந்த விவகாரத்தில் அவர்களுக்கு மிகுந்த அநீதி விளைவித்துள்ளது. எனவே, இந்திய அரசேகூட குழு பரிந்துரைத்திருந்த அற்பமான பங்கீட்டைச் சிறிது கூட்டலாம் என்று பரிந்துரைத்தது. அவர்களுக்கு இழைக்கப்பட்ட இத்தீங்கு அச்சமயம் சரி செய்யப்படாமலேயே இருந்தது. 1923 இல் நியமிக்கப்பட்ட "முடிமன் குழு' தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கு மேலவைகளில் அளிக்கப்பட்டிருக்கும் ஒதுக்கீடு எத்துனை சொற்பமானது என்பதைச் சுட்டிக்காட்டி அதனைக் கணிசமாக அதிகரிக்க வேண்டுமென்று பரிந்துரைத்தது. ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு மாற்றங்கள் செய்யப்பட்டனவேயன்றி குறைகளைக் களைவதற்கு உருப்படியான செயல் பாடு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. வலுவற்ற நிலையிலிருந்த தாழ்த்தப்பட்ட வகுப்புகளிடம், உங்கள் ஆதரவுக்கு அதிகார வட்டங்களில் துணையை நாடுங்கள் என்று கூறப்பட்டது.

ஆனால் அதிகார வர்க்கமோ, தம்மைத் தவிர பிறர் எவரிடமும் பரிவு கொண்டவர்கள் அல்லர் என்பதையும், தமது நலன்களின் மேம்பாட்டு நோக்கில்தான் அவர்களது நட்பும் உதவியும் அளிக்கப்படும் என்பதும் அனுபவம் நமக்கு அளித்துள்ள பாடம். கடந்த பத்தாண்டுகளில் அதிகார வட்டங்கள் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து பெற்றதைவிட, அவர்களுக்கு அளித்தது மிக மிகக் குறைவு என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். நடந்தது ஒருபுறம் இருக்க, அதிகார வட்டத்தின் நம்பகமற்ற ஆதரவை இனியும் நம்பி இருக்காமல், பிற சிறுபான்மை வகுப்பினரைப் போன்றே தமக்கும் அரசமைப்புச் சட்டம் வாயிலாகப் போதிய பிரதிநிதித்துவம் வேண்டுமென்று தாழ்த்தப்பட்ட வகுப்பினர் எதிர்பார்ப்பது நியாயமில்லையா?

மாநில சட்டமன்றங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கு ஒதுக்கலாம் என்று சைமன் ஆணையம் பரிந்துரைத்துள்ள பிரதிநிதித்துவ ஒதுக்கீடுதான் எவ்வளவு? (தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்காக) மாநிலத்தின் மொத்த இடங்களின் எண்ணிக்கையில் அவர்களது மக்கள் தொகை விகிதத்தில் முக்கால் பங்கு விகித அளவிலான எண்ணிக்கையில் இடங்கள் ஒதுக்கப்படலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இந்த அளவை மனதில் கொண்டு மற்ற இந்திய சிறுபான்மையினருக்கு சைமன் ஆணையம் பரிந்துரைத்துள்ள பிரதிநிதித்துவத்தின் அளவினை பார்ப்போம்.

முஸ்லிம் சிறுபான்மையினர் லக்னோ ஒப்பந்தத்தின்படி, தாங்கள் ஏற்கனவே பெற்றிருந்த (மக்கள் தொகை விகிதத்தை விட) மிகவும் கூடுதலான பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று, காங்கிரசின் கடுமையான எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியக் கிறித்துவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், அய்ரோப்பியர் ஆகியோருக்கும் அவர்களது மக்கள் தொகையை ஒட்டிய, மக்கள் தொகை விகிதத்தை விட மிகக் கூடுதலான அளவில் பிரதிநிதித்துவத்தை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது, பெரும் ஊழல் அல்லவா? கடுமையான பின்னடைவுகளுடன் பல துன்பங்களை சந்திக்கும் சமூகத்தினருக்கு (பிறரைப் போன்று) தாராளம் காட்டவில்லை என்றாலும், நியாயமான அளவிலாவது பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டாமா? இதோடு ஒப்பிடுகையில், இந்திய மத்தியக் குழு ஓரளவு நியாய உணர்வுடன், தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கு, அவர்களது மக்கள் தொகை விகிதத்திற்கேற்ற அளவில் பிரதிநிதித்துவம் தரப்படலாம் என்று அளித்த பரிந்துரையை ஏற்று செயல்பட்டிருந்தாலாவது, தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்குக் குறைந்த அளவு நீதியாவது கிடைத்திருக்கும் அல்லவா? ஒவ்வொரு சிறுபான்மையினரும் பெறும் நீதியில் அவர்களுக்குப் பங்கில்லையா?

- தொடரும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com