Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
 width=
 width=ஜூன் 2008

பாபாசாகேப் பேசுகிறார்

காஷ்மீரைப் பிரித்து விடுவதே சரியான தீர்வு என்பது என் உறுதியான கருத்து

அசாத்தியமானதைச் செய்ய முனையும் இந்த கொள்கை (வெளியுறவுக் கொள்கை) மிகவும் ஆபத்தானது. இதனால் ராணுவத்துக்கு கோடி கோடியாக செலவழிக்க வேண்டியிருக்கிறது. இதன் விபரீத விளைவு என்ன? பட்டினி கிடக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிக்க முடியவில்லை; நமது நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு உதவி செய்ய முடியவில்லை. ஆண்டுதோறும் நாம் பெறும் 350 கோடி ரூபாய் வருமானத்திலிருந்து கிட்டத்தட்ட 180 கோடி ரூபாயை ராணுவத்திற்காகச் செலவழிக்கிறோம். இது மிகப் பெரிய செலவாகும். இந்த அபரிமிதமான செலவீனம், நமது வெளியுறவுத் துறைக் கொள்கையின் நேரடி விளைவாகும். அவசரத் தேவையின் போது நம் உதவிக்காக நாம் நம்பியிருக்கக்கூடிய நண்பர்கள் எவரும் நமக்கு இல்லை என்பதால், நமது பாதுகாப்புக்கான செலவு முழுவதையும் நாமே ஏற்க வேண்டியுள்ளது. இத்தகைய வெளியுறவுக் கொள்கை சரியானதுதானா என நான் வியப்படைகிறேன்.

பாகிஸ்தானுடனான நமது மோதல், நமது வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகும். இது குறித்து நான் பெரிதும் அதிருப்தியடைந்துள்ளேன். பாகிஸ்தானுடனான நமது உறவுகள் பாதிக்கப்பட்டதற்கு இரு முக்கியக் காரணங்கள் உள்ளன: ஒன்று காஷ்மீர், மற்றொன்று கிழக்கு வங்காளத்திலுள்ள நமது மக்களின் நிலைமை. கிழக்கு வங்காளத்தில் நமது மக்களின் நிலைமை காஷ்மீரில் இருப்பதைவிட சகிக்க முடியாததாக இருக்கிறது. அனைத்து செய்தி ஏடுகளும் இதனை உறுதி செய்துள்ளன. எனவே, நாம் கிழக்கு வங்காள விஷயத்தில் ஆழ்ந்த அக்கறை காட்டியிருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், காஷ்மீர் பிரச்சினையில் நம் ஆற்றல் முழுவதையும் வீண்விரயம் செய்து வருகிறோம்.

ஒரு போலியான பிரச்சினைக்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என்றே எனக்குத் தோன்றுகிறது. யார் செய்வது சரி, யார் செய்வது தவறு என்ற பிரச்சினைக்காகவே நாம் பெரும்பாலும் போராடிக் கொண்டிருக்கிறோம். உண்மையான பிரச்சினை, யார் செய்வது சரி என்பது அல்ல; எது சரி என்பதே. இதையே முக்கியப் பிரச்சினையாக வைத்துப் பார்க்கும்போது, காஷ்மீரைப் பிரித்து விடுவதே சரியான தீர்வு என்பது எப்போதுமே என் கருத்தாக இருந்து வந்திருக்கிறது. இந்திய வரைபடத்தில் செய்தது போல, இந்து மற்றும் பவுத்தர்கள் வாழும் பகுதியை இந்தியாவுக்கும், முஸ்லிம்கள் வாழும் பகுதியை பாகிஸ்தானுக்கும் கொடுங்கள்.

காஷ்மீரில் உள்ள முஸ்லிம் பகுதிகளைப் பற்றி உண்மையில் நாம் எந்த அக்கறையும் கொண்டிருக்கவில்லை. காஷ்மீர் முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சினை அது. இப்பிரச்சினை குறித்து அவர்கள் விரும்புவதுபோல முடிவு செய்யட்டும்; அல்லது நீங்கள் விரும்பினால் அதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்: அதாவது போர் நிறுத்தப் பகுதி, பள்ளத்தாக்குப் பகுதி மற்றும் ஜம்மு - லடாக் பகுதி என்று பிரிக்கலாம். பள்ளத்தாக்கில் மட்டும் பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தலாம். இது தொடர்பாக எனக்கு ஓர் அச்சம் உள்ளது. அதாவது ஒட்டுமொத்த வாக்கெடுப்பாக இருக்கக்கூடிய உத்தேச பொதுமக்கள் வாக்கெடுப்பில், காஷ்மீரைச் சேர்ந்த இந்துக்களும் பவுத்தர்களும் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக பாகிஸ்தானுடன் பிணைக்கப்படும் ஆபத்து உள்ளது.

இந்நிலைமையில் கிழக்கு வங்கத்தில் இன்று சந்திக்கும் அதே பிரச்சினைகளையே நாம் சந்திக்க நேரிடும். எனது பதவி விலகலுடன் பெரிதும் தொடர்புடைய நான்காவது விஷயத்துக்கு இப்போது வருகிறேன். அமைச்சரவை என்பது ஏற்கனவே பல்வேறு குழுக்களால் எட்டப்பட்ட முடிவுகளைப் பதிவு செய்யும் வெறும் பதிவு அலுவலகமாக மாறியுள்ளது. ஏற்கனவே நான் சொல்லியது போல, அமைச்சரவை இப்போது குழுக்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பாதுகாப்புத் துறைக்கு குழு உள்ளது. வெளியுறவுத் துறைக்கு குழு உள்ளது. வெளியுறவுத் துறை தொடர்புடைய அனைத்து முக்கிய விஷயங்களையும் அக்குழுவே கையாண்டு வருகிறது. பாதுகாப்பு தொடர்புடைய அனைத்து விஷயங்களும் பாதுகாப்புக் குழுவினரால் சரி செய்யப்படுகின்றன.

அமைச்சரவையின் உறுப்பினர்கள் இக்குழுக்களால்தான் நியமிக்கப்படுகின்றனர். இதில் எந்தக் குழுவிலும் நான் இல்லை. இரும்புத் திரைக்குப்பின்னால் அவர்கள் செயல்படுகின்றனர். இங்கு முக்கிய உறுப்பினர்கள் அல்லாத மற்றவர்கள் கொள்கையை உருவாக்குவதில் பங்கு கொள்ளும் எந்த வாய்ப்புமின்றி, கூட்டுப் பொறுப்பை மட்டுமே அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஓர் முரண்பாடான நிலையாகும்.

பதவி விலக வேண்டும் என்ற முடிவுக்கு நான் வர என்னை இறுதியாக இட்டுச்சென்ற ஒரு விஷயம் குறித்து இப்போது கூறுகிறேன். இந்து சட்டத் தொகுப்பிற்கு நேர்ந்த கதிதான் அது. 1947 ஏப்ரல் 11 அன்றுதான் இந்த சட்டத்தொகுப்பு வரைவு அவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது நான்காண்டு காலம் உயிரோடிருந்தது. அதன் நான்கு சட்டக் கூறுகள் ஏற்கப்பட்ட பின்னர் அது கேட்பாரின்றி செத்து மடிந்தது.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 14(2), பக்கம் : 1322


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com