Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
ஜூன் 2007

பா.ம.க.வின் சமூக அநீதி!

தமிழ் அம்பேத்கர்

ஜாதியை மறுத்து காதலித்த குற்றத் திற்காக, வாயில் விஷம் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட கண்ணகி முருகேசன் இணையரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. பொறியியல் பட்டதாரி தலித் இளைஞர் முருகேசன். வணிகவியல் படித்த கண்ணகி வன்னியர் சாதிப் பெண். இருவரும் காதலித்து, பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். ‘பறையனுக்கு வன்னியப் பெண் கேட்குதோ?’ என வன்னியர்கள் ஒன்றுகூடி முருகேசன் கண்ணகி இருவரின் வாயிலும் விஷம் ஊற்றி உயிரோடு எரித்துக் கொன்றனர். தற்பொழுது, மீண்டும் ஒரு தலித் இளைஞன் சாதி மீறி காதலித்த காரணத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளார்.

திண்டிவனம் அருகே உள்ளது மானூர் கிராமம். இங்கு 400 வன்னியர் குடும்பங்களும், 350 தலித் குடியிருப்புகளும் உள்ளன. மானூருக்கு மிக அருகில் உள்ளது காலூர் கிராமம். காலூரில் நியாய விலைக் கடை கிடையாது. மானூர் சென்றுதான் பொருள்களை வாங்க வேண்டும். இவ்வாறு பொருள் வாங்க வரும்போதுதான், காலூரைச் சேர்ந்த கோவிந்தராஜி (கவுண்டர்) மகள் சுதாவும், மானூர் தலித் இளைஞர் ராஜாவும் காதலித்தனர்.

சென்னையில் கூலிவேலை செய்து கொண்டிருந்த ராஜாவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசரமாக மானூர் வரவழைத்தார் சுதா. வீட்டில் தனக்கு மாப்பிள்ளை பார்ப்பதாகவும், உடனே சென்னைக்கு அழைத்துச் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படியும், இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாகவும் ராஜாவிடம் கூறியுள்ளார் சுதா. அன்றே 4.4.07 இரவு 10 மணிக்கு சுதாவை அழைத்துக் கொண்டு ராஜா சென்னை சென்றுள்ளார்.

இதன் பிறகு என்ன நடந்தது என ராஜாவின் அக்கா சுஜாதாவிடம் கேட்டோம். ‘என் தம்பி ராஜா சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்கிறான். கடந்த 4.4.07 அன்று காலை 9 மணிக்கு திடீர்னு ஊருக்கு வந்தான். என்னடான்னு கேட்டேன். சும்மாதான்னு சொல்லிட்டான். பிறகு கோயிலுக்குப் போறன்னு போயிட்டான். அன்னிக்கு இரவு 10 மணிக்கு நான், எங்க அம்மா எல்லாம் வீட்ல இருந்தோம். அப்ப தடதடன்னு நிறைய பேர் கதவ தட்டினாங்க. திறந்து பார்த்தோம். எங்கள் ஊர் வன்னியர்களான அறிவொளி (இவரோட மனைவி பா.ம.க. ஒன்றிய கவுன்சிலர்), அவர்கூட தனுசு மற்றும் சிலர் தடியுடன் நின்று கொண்டிருந்தனர். பறையனுக்கு வன்னியப் பெண் கேட்குதா. நீங்க வேணா எங்ககூட வந்து படுங்கடி என்று என்னை யும், என் அம்மாவையும் கேவலமாகப் பேசினார்கள்.

‘நைட்டுக்குள்ள உன் தம்பி எங்க பொண்ண கொண்டு வந்து விடணும். இல்லன்னா, நாங்களா கண்டு பிடிச்சோம்னா நடக்கிறதே வேற என்று மிரட்டிச் சென்றனர். அதற்கப்புறம்தான் எங்களுக்குத் தெரிந்தது என் தம்பி ராஜாவும், சுதாவும் விரும்பறது. அன்னிக்கு நைட்டே எங்க மாமாவான வேலாயுதம்கிறவற மிரட்டி சென்னைக்கு அழைச்சிட்டுப் போயிருக்காங்க’ என்று கூறினார்.

சென்னையில் என்ன நடந்தது என்பதை அறிய வேலாயுதத்தை சந்தித்து கேட்டோம். அவர் நம்மிடம், ‘கடந்த 4 ஆம் தேதி அறிவொளி, தனுசு, கோவிந்தசாமி, விஜயகுமார் என இன்னும் சில வன்னியர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து, என்னை சென்னைக்கு அழைத்தார்கள். என்னை சுமோவில் ஏற்றிக் கொண்டார்கள். இன்னொரு அம்பாசிடர் காரும் கூடவே வந்தது. சென்னையில் உள்ள சொந்தக்காரர்களின் வீடுகளை காட்டச் சொன்னார்கள். ஒவ்வொரு வீடாக 5 ஆம் தேதி காலை 5 மணியிலிருந்து காட்டிக்கொண்டே சென்றேன்.

‘காலை சுமார் 10 மணியளவில் திருவேற்காட்டில் உள்ள என்னுடைய மச்சான் ஜெயவேல் வீட்டிற்குச் சென்றோம். அங்குதான் சுதாவும், ராஜாவும் இருந்தார்கள். பின்பு அறிவொளி மற்றும் அவருடன் இருந்தவர்கள் யார் யாருக்கோ செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். கொஞ்ச நேரத்தில் 6 அல்லது 7 டூவீலரில் சுதாவின் உறவினர்கள் என சிலர் வந்தனர். அதன் பின்பு என்னையும், சுதாவையும் சுமோவில் ஏற்றிக் கொண்டு மானூர் செல்ல கிளம்பினார்கள்.

அப்போது, ராஜா எங்கள் வண்டியில் சுதா இருப்பதால், துரத்திக் கொண்டே ஓடிவந்தான். உடனே டூவிலரில் அங்கு வந்திருந்தவர்கள் ராஜாவை ஓடிவரவிடாமல் வளைத்துப் பிடித்துக் கொண்டனர். பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. திண்டிவனத்தில் அறிவொளி வீட்டில் சுதாவை இறக்கி விட்டு, என்னை சுமோவில் மானூரில் கொண்டு வந்து விட்டனர். அதன் பிறகு நான் ராஜா வீட்டுக்குச் சென்று நடந்ததை சொல்லி ராஜாவை தேடத் தொடங்கினோம். மாலை 4 மணியளவில், விவசாயப் பண்ணை அருகே உள்ள அய்யனார் கோவிலின் அருகே ராஜா தூக்கில் தொங்குவதாக வந்து கூறினார்கள்’ என நம்மிடம் கூறி முடித்தார்.

இதன் பிறகு என்ன நடந்தது என வழக்கறிஞரும், திண்டிவனம் நகரமன்ற உறுப்பினருமான மு. பூபால் நம்மிடம், ‘ராஜாவை கொன்னுட்டாங்கன்னு தகவல் கிடைச்சி போய் பார்த்தோம். கழுத்தில் காயம். அதுமட்டும் இல்லாமல் வயிற்றின் கீழ்ப் பகுதியிலும், உயிர்நிலையிலும் ஊசியால் குத்தப்பட்டது போன்ற காயங்கள் நிறைய இருந்தன. ராஜாவின் உறவினர்கள் மற்றும் தோழர்களுடன் இணைந்து ராஜாவின் பிணத்தை சாலையில் வைத்து, குற்றவாளிகளை கைது செய்யச் சொல்லி சாலை மறியல் நடந்தது. பிறகு புகார் கொடுத்து, எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து எப்.அய்.ஆர். நகல் தந்தார்கள்.

‘அதன் பிறகு பிரேதப் பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு போலிசார் எடுத்துச் சென்றனர். இரவென்பதால், மறுநாள் 6 ஆம் தேதி காலை போஸ்ட் மார்ட்டம் செய்யத் தொடங்கினார்கள். குற்றவாளிகளை கைது செய்யாமல் போஸ்ட்மார்ட்டம் செய்யக் கூடாது என 300க்கும் மேற்பட்ட மக்கள் கூடி மறியல் செய்தார்கள். உடனடியாக மாவட்ட எஸ்.பி. பெரியய்யா வந்தார். ராஜாவின் குடும்பத்தினரை விசாரித்து, குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். எத்தனை நாளானாலும் குறைந்தபட்சம் அறிவொளியை மட்டுமாவது கைது செய்யுங்கள் என்று கேட்டோம்.

‘குற்றவாளியை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என்று கூறி, மக்கள் அனைவரும் மருத்துவமனையில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள். விடிய விடிய மக்கள் மருத்துவமனையிலேயே இருந்தார்கள். விடிந்தும்கூட யாரும் வீடு செல்லவில்லை. போலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், அறிவொளி பா.ம.க.வில் முக்கியப் பிரமுகர் என்பதால், திண்டிவனத்தில் பா.ம.க.வில் உள்ள ஒரு வி.அய்.பி.யின் வீட்டிலும், தைலாபுரம் தோட்டத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தார். போலிசாருக்கு இது தெரிந்திருந்தும் கைது செய்யவில்லை.

இந்நிலையில் செண்டூர் வெடிவிபத்து நடந்தது. அதில் பலியானவர்களின் உடல்கள் திண்டிவனம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. மேலும், இந்த வெடிவிபத்தில் தமிழ் நாடே பதட்டமாகி, சோகமயமானது. அதனால் மனிதாபிமான அடிப்படையில், நாங்கள் ராஜாவின் உடலை வாங்கிக் கொண்டோம். முதலில் கொலை வழக்காகப் பதிவு செய்திருந்தார்கள். அதனால் அதன் பிறகு திண்டிவனம் டி.எஸ்.பி. குமார், தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கை மாற்றினார்.

எனவே, தற்போது குற்றவாளிகள் பெயில் வாங்கிக் கொண்டார்கள். குற்றவாளிகளை பெயிலில் விடுவதற்காகவே டி.எஸ்.பி. வழக்குப் பிரிவை மாற்றியுள்ளார். தன்னுடைய பதவியை தவறாகப் பயன்படுத்திய அவர் மீது எஸ்.சி., எஸ்.டி. சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குப் போட ஏற்பாடு செய்து வருகிறோம்’ என்றும் கூறினார்.

வன்னியர் சாதிப் பெண்ணை காதலித்ததற்காக ராஜாவை படுகொலை செய்த குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். பாதிக்கப்பட்ட ராஜாவின் குடும்பமோ பயத்தில் பரிதவித்துக் கொண்டிருக்கிறது. ராஜாவின் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில மய்யக் குழு உறுப்பினர் ரமேஷ்நாதனை சந்தித்தோம். ‘நாங்கள் விசாரித்த வகையில் இது திட்டமிட்ட படுகொலைதான்.குறைந்தபட்சம் அறிவொளியை மட்டுமாவது கைது செய்யுங்கள் என்று கூறினோம்.

அரை மணி நேரத்தில் கைது செய்வதாகக் கூறி எங்களை அனுப்பி வைத்தார் டி.எஸ்.பி. ஆனால், வழக்கின் பிரிவை மாற்றி குற்றவாளிகள் வெளியிலேயே இருக்கும் அதிசயம்தான் நடந்தது. இந்நிலையில்தான் திண்டிவனம் டி.எஸ்.பி. குமாரின் பொறுப்பற்றத்தனத்தையும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் போக்கையும் கண்டித்து, எங்கள் பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமையில் 25 ஆம் தேதி திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

உடனடியாக தனுசு என்பவரை போலிசார் ரிமாண்ட் செய்தனர். அறிவொளியை, ஆசிரியர் பணியில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்தார் மாவட்ட ஆட்சியர். டி.எஸ்.பி. குமார் மீது எஸ்.சி., எஸ்.டி சட்டத்தில் நடவடிக்கை கோரியும், ராஜா கொலை குறித்து சி.பி.சி.அய்.டி. விசாரணை கேட்டும் எங்கள் வழக்கறிஞர் பூபால் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஏற்பாடு செய்து வருகிறோம்’ என்றார் ரமேஷ்நாதன்.

பாட்டாளி மக்கள் கட்சியும் அதன் தலைவர் மருத்துவர் ராமதாசும் உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதற்காக மாபெரும் போராட்டத்தை முன்னின்று நடத்துகின்றனர். மறுபுறம் சாதி மறுத்து காதலித்த தலித் இளைஞரை கொலை செய்த வன்னியர்களுக்கு அடைக்கலமும் அரவணைப்பும் தருகின்றனர்.

ஒருபுறம் சமூக நீதி வேண்டும் என்ற முழக்கமும், மறுபுறம் ஜாதி ஆதிக்கத்திற்கான செயல்பாடுகளும்தான் நடைமுறையாக இருக்கின்றன. ஆட்சிக்கு வர நினைத்து, அதிகாரத்தை ருசி பார்க்கத் தொடங்கும்போதே சமூக நீதியை தங்கள் ஜாதிக்கான சமூக நீதியாக மட்டுமே கருதும் போக்கு – ஜாதிகளை ஒழிக்காது; மீண்டும் மீண்டும் தமிழ் ஜாதிகளை வளர்க்கவே பயன்படும்.நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com