Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
ஜூன் 2007

சேரிகள் கழிவுத் தொட்டிகள் அல்ல!

பூவிழியன்

சேரி வாழ்க்கை-வாழ்வதற்காக அல்ல; போராடுவதற்காகத்தான் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி கிளம்பிய போராட்டம்தான் சீர்காழி வட்டம் திட்டை ஊராட்சியில் மக்களை எழுச்சி கொள்ள வைத்திருக்கிறது. போராளி கே.பி.எஸ். மணி பிறந்த மண் சீர்காழி. இது, நகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இருபத்தி நான்கு வார்டுகளைக் கொண்ட சீர்காழி நகராட்சிக்குள் சுமார் 12,000 குடும்பங்கள் உள்ளன. ‘சீர்காழி டவுன்ல உள்ள 36,000 மக்களோட கழிவ எல்லாம் கொண்டு வந்து எங்கச் சேரியில தான் உடனுமா? ஊருல மத்தவங்க வாழுற இடத்துல எல்லாம் விட்டா என்ன?’ என்கிற கேள்வியோடு இந்தப் போராட்டம் கிளம்பியுள்ளது.

பாதாள சாக்கடைத் திட்டத்தை அமைப் பதற்கு சீர்காழி நகராட்சி கடந்த ஆண்டி லிருந்து முயற்சிகள் எடுத்தாலும், தற்போது தான் அதனை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. மக்கள் தொகையின் பெருக்கத்திற்கேற்ப, நகரத்தின் மேம்பாடும் உயர்ந்து கொண்டே செல்ல, சீர்காழி நகராட்சியை அழகுபடுத்தும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது. அதாவது, சோடியம் விளக்குகளை வரிசையாக அமைப்பது, குப்பைகளை ஓரிடத்தில் சேகரிப்பது, மழைநீர் ஓடுவதற்கென்று கான்கிரீட் அமைப்பது போன்றவை. இதில் ஒன்றுதான் திறந்தவெளியில் ஓடும் சாக்கடையை, பாதாள சாக்கடைத் திட்டமாக மாற்றுவது.

நோய் பரவாமல் தடுப்பது, கழிவு நீர் பாதையில் இருந்து வழிந்து சாலையில் ஓடுவதைத் தடுப்பது, கழிவு நீர் வெளியேறு வதில் உள்ள சிக்கல் எனப் பல காரணங்களைக் கொண்டுதான் பாதாள சாக்கடைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, முக்கிய சாலைகளின் நடுவே வாய்க்கால் போன்று சுமார் பத்து அடி ஆழத்திற்கு வெட்டி, கான்கிரீட்டால் மூடிவிடுவார்கள். இந்தப் பெரிய சாக்கடைப் பாதைக்குள் தெருவிற்குள் இருந்து வரும் கிளை சாக்கடைப் பாதைகள் இணையும். இறுதியாக, சாக்கடை எல்லாம் சுத்திகரிக்கப்பட்டு பெரிய பெரிய தொட்டிகளில் சேகரிக்கப்படும்.

பாதாள சாக்கடைக்கான தொட்டிகள் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்ட திட்டை ஊராட்சியில் உள்ள மக்களில் 80 சதவிகிதம் பேர் தலித்துகள். பிற சாதியினர் 20 சதவிகிதம். தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகள் எல்லாம் சுமார் அரை கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தில்தான் இருக் கின்றன. குளங்கரை, ஆறுமுகவெளி, வடக்குவெளி, மேல சிவனார் வளாகம், புளியந்தோப்பு, திட்டை கன்னிக்கோயில் தெரு என முழுவதும் தலித்துகள் வாழ்கிற பகுதிகளையே இக்கழிவுகளைக் கொட்ட தேர்வு செய்துள்ளனர்.

இதுகுறித்து சம்பத் (முன்னாள் திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் கவிதாவின் கணவர்) கூறும்போது, ‘எங்க ஊராட்சியில யானைக்கால் போன்ற கொடூரமான நோய் யாருக்குமே கிடையாது. இங்கு அந்தத் தொட்டி வந்தால் எல்லா நோயும் வரும். இன்னும் குறிப்பாக சொன்னா, இங்க அதிகமாக தாழ்த்தப்பட்டவங்கதான் இருக்காங்க. அதனால் தொட்டிகளை இங்கக் கட்டினா யாரும் கண்டுகொள்ள மாட்டாங்கன்னுதான் செய்யுறாங்க’ என்றார்.

கழுமலையாறு பாசன சங்கத் தலைவர் கோவி. நடராசன், ‘பாதாள சாக்கடைத் தொட்டிகள் சேரிகளில் அமைக்கப்படுவதை, கடுமையாக எதிர்க்கிறோம். இதனால் குடி தண்ணீர், சாகுபடி போன்றவை பாதிக்கப்படும்’ என்றார். இது தவிர, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புதுத்துறை, வெள்ளப் பள்ளம், காரைமேடு போன்ற தலித் கிராமங்களும் இந்தப் பாதிப்பை சுமக்க வாய்ப்புள்ளது. சீர்காழி நகரத்தையொட்டி தொட்டி கட்டினால் செலவு குறையும் என திட்டமிட்டவர்கள், பெரும்பான்மையான தலித் மக்களின் வாழ்நிலையைக் கணக்கில் கொள்ளவில்லை.

மக்கள் வாழ்விற்கு தொல்லையில்லாத இடத்தைத்தான் தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால், பணத்தைவிட தலித் உயிர்கள் மதிப்பு மிக்கவை. மேடான இடத்தைத் தேர்வு செய்வதில் எந்தச் சிக்கலுமில்லை. அறிவியல் வளர்ச்சிக்கேற்ப அதிக அழுத்தம் உள்ள பம்புகளைக் கொண்டு சாக்கடையைத் தொட்டிக்கு அனுப்பலாம் என்கிற முடிவுக்கு அதிகாரிகளும், அரசும் வர வேண்டும். இல்லையெனில், கழிவுகள் தங்கள் பகுதியில் கொட்டப்படுவதற்கு எதிராக தலித்துகள் போராடுவதைத் தவிர்க்க முடியாது.நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com