Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
ஜூன் 2007
பாபாசாகேப் பேசுகிறார்

இரண்டே வர்க்கங்கள்தான் உள்ளன என்பது வறட்டுத் தத்துவமே! II

பொதுப் பள்ளிகள், பொதுக் கிணறுகள், பொதுக் கழிப்பிடங்கள், பொது மருந்தகங்கள் ஆகியவை சிவில் உரிமைகள் தொடர்புடையவை. பொதுமக்களுக்காக, பொது மக்கள் நிதியின் மூலம் நிர்வகிக்கப்படும் எல்லாமே ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியவை. ஆனால், இத்தகைய சிவில் உரிமைகள், லட்சக்கணக்கான மக்களுக்கு மறுக்கப்படுகின்றன. இது, பார்ப்பனியத்தின் விளைவு அல்ல என்று யாராவது சொல்ல முடியுமா? பார்ப்பனியத்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த அடக்குமுறை, இன்றும் உயிரோட்ட முள்ள ஒரு மின்கம்பியாக ஓடிக்கொண்டிருக்கவில்லையா? பொருளாதார வாய்ப்புகளைக் கூட பாதிக்கும் அளவுக்கு, அத்தனை சர்வ வல்லமை கொண்டதாக பார்ப்பனியம் விளங்குகிறது.

ஒரு தாழ்த்தப்பட்ட தொழிலாளிக்குள்ள வாய்ப்பு வசதிகளை, பிற தொழிலாளியின் வாய்ப்பு வசதிகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். பணிப் பாதுகாப்பு, பணி முன்னேற்றம் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்ட தொழிலாளிக்குள்ள வாய்ப்புகள் என்ன? தீண்டத்தகாதவன் என்பதால், அவனுக்கு எத்தனையோ வேலைவாய்ப்புகள் மூடப்பட்டு விடுகின்றன. இதற்கு பருத்தித் தொழில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியாவில் பிற பகுதிகளில் உள்ள நிலவரம் எனக்குத் தெரியாது. ஆனால், பம்பாயிலும் சரி, அகமதாபாத்திலும் சரி, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் நூற்புத் துறையில் மட்டுமே பணிபுரிய முடியும். நூற்புத் துறையில் ஊதியம் மிக மிகக் குறைவு. நெசவுத் துறையில் அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்குக் காரணம், அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதுதான். ஒரு சாதி இந்து, முஸ்லிம்களோடு பணிபுரிவதில் எந்தச் சுணக்கமும் காட்டுவதில்லை. இருப்பினும் தீண்டத்தகாதோர் என்றால், அவன் எதிர்ப்புத் தெரிவிக்கிறான்.

ரயில்வேயை எடுத்துக் கொள்ளுங்கள். ரயில்வேயில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை என்ன? தாழ்த்தப்பட்டவன் ஒரு ‘கேங்க் மேனா'கத்தான் பணிபுரிய வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. பதவிக் காலம் முழுவதும் எந்தவித உயர்வும் இல்லாமல் ‘கேங்க் மேனா'கவே பணிபுரியும் நிலை உள்ளது. அவனுக்கு வேறு பதவி உயர்வும் தரப்படு வதில்லை. போர்ட்டராகக்கூட அவன் வர முடியாது. போர்ட்டராக வர வேண்டுமானால், ஸ்டேஷன் மாஸ்டரின் வீட்டு வேலைகளையும் அவன் செய்தாக வேண்டும். ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு சாதி இந்துவாக இருப்பார். ஆகவே, தாழ்த்தப்பட்ட தொழிலாளி போர்ட்டராக அவர் வீட்டுக்குள் நுழைவதை அவர் விரும்பமாட்டார். எனவே, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் போர்ட்டராக நியமிக்கப்படுவதில்லை.

ரயில்வே எழுத்தர் பணிக்குத் தேர்வு நடத்துவதில்லை. மெட்ரிக் தேர்ச்சி அடையாதவர்களே பெரும்பாலும் இந்த இடங்களுக்கு அமர்த்தப்படுகிறார்கள். இந்திய கிறித்துவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், சாதி இந்துக்கள் ஆகிய சமூகத்தினர் மெட்ரிக் தேறாத பட்சத்திலும் நூற்றுக்கணக்கில் ரயில்வேயில் எழுத்தர்களாக இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் மெட்ரிக் தேறியவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு எழுத்தர் பணி வாய்ப்பு வேண்டுமென்றே மறுக்கப்படுகிறது. ரயில்வே பணிமனைகளிலும் இதே நிலைதான். தாழ்த்தப்பட்டோர் மெக்கானிக் துறையில் நுழையவே முடியாது. அவன் மேஸ்திரி ஆகவும் முடியாது. பணிமனையில் போர்மென், சார்ஜ்மென் ஆகிய பணிகளில் அமர அவனுக்குத் தகுதியில்லை. அவன் வெறும் கூலிதான். இறுதிவரை அவன் கூலியாகவே இருந்துவிடுகிறான். ரயில்வேயில் தாழ்த்தப்பட்ட தொழிலாளியின் நிலை இதுதான்...

எனக்கும் உங்களுக்கும் தீய நோக்கத்தைக் கற்பிப்பவர்களிடம் இரண்டு கேள்விகளைக் கேட்கிறேன். இந்தக் கேள்விகள் நேரடியான கேள்விகள். மேலே சொன்னவையெல்லாம் உண்மையான குறைபாடுகள்தானே? உண்மையான குறைபாடுகள் என்றால், அவற்றை நீக்க முனைவதும் அதற்காகத் திரள்வதும் சரிதானே? இந்தக் கேள்விகளுக்கு நேர்மையான எந்த மனிதனும், எதிர்மறையாக பதிலளிக்க முடியாது. எனவே, நமது முயற்சிகள் நியாயமானவை. நம்மீது குற்றம் சாட்டும் தொழிலாளர் தலைவர்கள், ஏதோ ஒரு வித மாயையில் இருக்கிறார்கள். அவர்கள் கார்ல் மார்க்சைப் படித்தவர்கள்; உடைமை வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என இரண்டு வர்க்கங்கள் மட்டுமே உள்ளன என்பவர்கள். எனவே இந்தியாவிலும் இரண்டே வர்க்கங்கள்தான் உள்ளன; ஆகவே நமது கடமை முதலாளித்துவத்தை ஒழிப்பதே என்று கருதுபவர்கள், இதே விஷயத்தில் இரண்டு தவறுகளைச் செய்கிறார்கள்.

மார்க்ஸ் சொன்னதை ஒரு கருத்து நிலையாகக் கொள்ளாமல், மெய்ம்மை என்று நினைப்பது அவர்கள் செய்யும் முதல் தவறு. சமுதாயத்தில் இரண்டு வர்க்கங்களே உள்ளன என்பது கருத்துநிலை. அதை வறட்டுத் தத்துவமாகத் தொழிலாளர் தலைவர்கள் பிடித்துக் கொண்டு விட்டார்கள். இரு வர்க்கங்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரம் நடத்தினால், வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. எல்லா வகுப்பிலும் ஒரு பொருளாதார மனிதன், ஒரு பகுத்தறிவுள்ள மனிதன், ஒரு தர்க்க நியாயத்திற்கு உட்பட்ட மனிதன் இருப்பதாக நம்புவது எத்தனை பொய்மையானதோ, அத்தனை பொய்மையானது இவர்கள் சிந்தனையும் செயலும்.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:177)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com