Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
ஜுன் 2006
பெரியார் பேசுகிறார்

தகுதி, திறமை என்று கூச்சல் போடுவது அயோக்கியத்தனம்

நான் சாதாரணமான ஆள்தான். என் கூட்டத்தில் வந்து கூடியிருக்கிறீர்கள். சாதாரணமான ஆள்தான் என்றாலும் எப்படிப்பட்டவன் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் கும்பிடுகிற சாமிகளான ராமனையும், பிள்ளையாரையும் உடைத்து தூள்தூளாக ஆக்கினவன். பெரும்பாலோர் மதிக்கிற ராமனையும் அவன் ஒரு அயோக்கியன். அவன் மனைவி சீதை ஒரு ஒண்ணா நம்பர் விபச்சாரி; "அவள் சினையானதே' ராவணனால்; அதுவும் இலங்கையில் என்பதை ராமாயணத்திலிருந்தே எடுத்துக்காட்டி வருகிறவன். 20, 30 வருஷத்திற்கு முன்பாகவே நான் சாஸ்திரத்தை, மநுதர்ம சாஸ்திரத்தை நெருப்பிலே போட்டு எரித்தவன். இந்த ராமாயணத்தை எரிக்கணும் என்று சொன்னவன். எல்லோரும் ஜனநாயகம் (மக்களாட்சி) என்று சொல்வதை நான் முழுப் பித்தலாட்டம், மக்களைப் பிடித்த பேய் என்று சொல்லுகிறவன்.

Periyar E.V.Ramasamy சாதி ஒழியணும் என்பதுதான் எங்களுடைய முதலாவது கொள்கை. பார்ப்பானும் இருக்கக்கூடாது; பறையனும் இருக்கக்கூடாது; மனிதன்தான் இருக்கணும் என்று சொல்லுகிறோம். ஜனநாயக அரசாங்கம் என்று சொல்லுகிறான். சாதி காப்பாற்றப்படும் என்பது, மூலாதார உரிமை என்று அரசமைப்புச் சட்டத்திலே எழுதி வைத்துக் கொள்கிறான். அதில் நாம் சூத்திரன் நாலாஞ்சாதி மக்கள் பார்ப்பானுடைய வைப்பாட்டி மக்கள்! இதுக்குப் பேர் ஜனநாயகமா? நாம் 100க்கு 97 பேர். அவன்கள் 100க்கு 3 பேர். அவனிடம் ஆட்சி இருக்கிறது. அவன் சாதியைக் காப்பாற்ற சட்டம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறான். இந்த நாட்டிலே இருக்கிற மற்றக் கட்சிக்காரனெல்லாம் அவன் போடுகிற எலும்புத் துண்டைக் கடித்துக் கொண்டு, அந்தச் சட்டத்தின் மீது சத்தியம் பண்ணிக் கொடுத்துவிட்டு அவனுடைய சட்டசபையில் உட்காருகிறான். அவனுக்கு சாதி ஒழிய வேண்டும் என்ற எண்ணம் இருக்க முடியுமா? சட்டத்தை மாற்ற வேண்டும் என்றால், கிளர்ச்சி தவிர வேறு ஏதாவது வழி நமக்கு இருக்கிறதா?

20 கோடி ரூபாய் இந்த வருஷத்து கல்விக்கு செலவாகிறதே! இவையெல்லாம் யாருடைய பணம்? நம் பணம்தான்; ஆனால் இதனால் படிக்கிறவன் நூற்றுக்கு நூறு பார்ப்பான் தானே? நாம் வரி கொடுத்துத்தானே இப்படிப் பணம் செலவிட முடிகிறது? நம்மிடத்தில் வரி வாங்கணும் என்றால், அவன் தேவையை உத்தேசித்து அல்ல. நம்மைப் "பாப்பராக' (பணம் இழந்தவன்) ஆக்கவேணும்; பிச்சையெடுக்கும்படிச் செய்ய வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன? ஏன் நமக்குப் படிப்பு வராதா? நம் வாயிலே மாத்திரம் படிப்பு நுழையாதா?

இவற்றையெல்லாம் மீறி நம் பையன்கள் இப்போது படித்து விடுகிறார்கள். அதைத் தடுக்கவும் சூத்திரனைப் படிக்க விடக்கூடாது என்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அத்தனையும் பார்ப்பான் செய்கிறான். வெளிப்படையாகச் சொல்லவில்லை. வேறுவிதமாக அதையே சொல்லுகிறான். பள்ளிக்கூடத்திலே தகுதி, திறமை அடிப்படையில் இனிமேல் சேர்க்கணும்; ஜாதி அடிப்படையில் பின் தங்கியவர்கள் இவர்கள் என்பதைப் பார்த்து, எந்தவிதச் சலுகையும் கூடாது என்பதாக ஓர் உத்தரவு போடணும் என்கிறான். இன்னும் நூற்றுக்கு 70 - 80 மார்க் வாங்கினவனைத்தான் சேர்க்கணும் என்கிறான்.

பார்ப்பானைத் தவிர மற்றவரைச் சேர்க்கணும் என்றால் திறமை இல்லையே என்று சொல்லி விடுகிறான். நம் பையன்கள் டாக்டருக்குப் படிக்கணும்; எஞ்சினியருக்குப் படிக்கணும் என்றால் நூற்றுக்கு 60 மார்க்கு வாங்கணும் என்கிறான். நம் பையன்கள் 35 மார்க் வாங்குவதே மிகவும் கடினம்; இவனை 60 மார்க் வாங்கு என்றால் அது எப்படி முடியும்? சாதாரணமாகப் பாஸ் பண்ணுவது எதற்கு? யோசிக்க வேண்டாமா? இன்றைக்குப் போத்தனூரிலே ஒரு வீட்டிலே தங்கியிருந்தேன். 70,000 பெறுமான மதிப்புள்ள பெரிய வீடு; கட்டி 30 வருஷமாயிற்று; இன்றும் நன்றாகத்தான் இருக்கிறது; இதை என்ன படிச்சு 60 மார்க் வாங்கிய தகுதி, திறமை உள்ள எஞ்சினியர்தான் கட்டினாரா?

டாக்டர், எஞ்சினியர் என்று ஆயிரம் இரண்டாயிரம் கொள்ளையடிக்கிற உத்தியோகம் எல்லாம் நமக்குக் கிடைக்காதபடி என்னென்ன செய்ய வேண்டுமோ, அத்தனையும் செய்து அவனே படிக்கும்படியான அளவுக்கு வசதி செய்து கொண்டான். வேறு ஒரு நாடாக இருந்தால், இந்த மாதிரி அக்கிரமம் செய்கிற பார்ப்பானைச் சுட்டுத்தள்ளியே இருப்பார்களே! சாதாரணமாக நாட்டு வைத்தியம் பண்ணணும் என்றால், தனியாகப் பிராக்டீஸ் (தொழில்) செய்கிறவர்கள் ஒரு சர்டிபிகேட் இருந்தால் போதுமானது. ஓமியோபதி டாக்டர் என்கிறான். ஆனால், அலோபதி ஆங்கில மருத்துவர் டாக்டர் படிப்பு படிக்கணும் என்றால் 60 மார்க் வாங்கணும் என்றால் என்ன அர்த்தம்?

3 பேர் வேலைக்கு வரணும் என்றால் 30 வருடமாக நாம் முட்டிக் கொள்ள வேணும். பார்ப்பான் தகுதி போச்சு, திறமை போச்சு என்று கூச்சல் போடுகிறான் என்றால் இது எவ்வளவு அயோக்கியத்தனம்? இந்த அயோக்கியத்தனத்திற்குக் கேள்வி கேட்பாரே இல்லையே! ஒரு பயலும் இதை எடுத்துக்காட்டி இதற்குப் பரிகாரம் தேடணும் என்று வருவதே கிடையாதே! நம்முடைய நிலைமை அப்படி இருக்கிறது. தகுதியும், திறமையும் தான் முக்கியமா? அதை அளப்பதற்கு தர்மா மீட்டர் பார்ப்பான்தானா? நம்மவன் படித்தால் என்ன, இவன் அப்பன் வீட்டு முதல் குறைந்தா போகிறது? முதலிலே ‘இண்டர்மீடியெட்' படித்தால் போதும் என்றான். இப்போது என்ன என்றால், நீ அது பாஸ் பண்ணியிருந்தாலும் 60 மார்க் வாங்கணும் என்றால் என்ன போக்கிரித்தனம்! மாடு மேய்க்கிறவனெல்லாம் மந்திரியாகி விடுகிறான்! அவன்தான் பெரிய பெரிய எஞ்சினியரை எல்லாம் நிர்ணயிக்கிறான். சீப் எக்சிகியூடிவ் எஞ்சினியர் போன்ற பலவித உத்தியோகஸ்தர்களையும் நியமிக்கிறான் என்றால் அதற்கு மாத்திரம் தகுதி, திறமை வேண்டாமா?

சேலம் - பொட்டிரெட்டிப்பட்டியில் 25.3.1959 அன்று ஆற்றிய உரை


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com