Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
ஜுன் 2006
பாபாசாகேப் பேசுகிறார்

தேர்தல் அறிக்கைகள் வெறும் உறுதி மொழியாக மட்டுமே இருக்கக் கூடாது

சில நாட்களுக்கு முன்பு பண்டித நேரு இங்கு வந்திருந்தார். அவர் பேசுவதைக் கேட்க, ஏறக்குறைய மூன்று லட்சம் மக்கள் கூடியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. நான் நேற்று ஜலந்தர் சென்றிருந்தபோது, இரண்டு லட்சம் மக்கள் கூடியிருப்பார்கள். ஆனால், முப்பதாயிரம் மக்கள் மட்டுமே கூடியதாகப் பத்திரிகைகள் எழுதுகின்றன. காங்கிரஸ் மாநாட்டுக்கு குறைந்தளவே மக்கள் திரண்டிருந்தாலும், மாநாட்டுக்கு ஏராளமானோர் கலந்து கொண்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகும். அய்ந்து பேர் கூடினால் அய்ம்பது பேர் என்றும், அய்ம்பது பேர் கூடினால் அய்நூறு பேர் என்றும், அய்நூறு பேர் கூடினால் அய்ந்தாயிரம் பேர் என்றும், அய்ந்தாயிரம் பேர் கூடினால் அய்ந்து லட்சம் பேர் என்றும் செய்தி வெளியிடுவார்கள். பத்திகையாளர்களின் இத்தகைய விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதில்லை. மக்கள் அதிகளவில் கூட வேண்டும் என்று நான் எண்ணியதில்லை. நான் விரும்புவதெல்லாம் சாதி இந்துக்களின் வன்கொடுமைகளுக்கு எதிராக, நம்முடைய மக்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். நீங்கள் எவ்வளவு பேர் கூடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல; நான் சொல்வதை எத்தனை பேர் கேட்கின்றீர்கள் என்பதுதான் முக்கியம்.

Ambedkar ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று அவை உறுதிமொழி அளித்து வருகின்றன. "பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு'ம் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் மிகப் பெரியதொரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால், இதை மக்கள் புரிந்து கொள்வது கடினம் என்று தெரிந்தவுடன், அதை மாற்றி சிறிய அளவில் வெளியிட்டுள்ளனர். அவர்களுடைய தேர்தல் அறிக்கை கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி, ஒருநாள் காங்கிரசுக்கென்று தேர்தல் அறிக்கையே இல்லாமல் போய்விடும். நான் அனைத்துக் கட்சிகளுக்கும் சவால்விட்டுச் சொல்கிறேன். நீங்கள் ஒரு குழுவை அமைத்து, எந்தத் தேர்தல் அறிக்கை மிகச் சிறப்பாக இருக்கிறது என்று ஆய்வு செய்யுங்கள். எங்கள் தேர்தல் அறிக்கையே மிகச் சிறந்த ஒன்றாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகம் இல்லை. அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் மக்களுக்குப் பலவற்றைச் செய்வதாக உறுதி அளித்துள்ளன. உறுதிமொழி அளிப்பது எளிது. ஆனால், செய்வது கடினம். தேர்தல் அறிக்கைகள் வெறும் உறுதிமொழிகளாக மட்டுமே இருந்துவிடக் கூடாது. அது பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதாக இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இத்தகைய தன்மையோடு இருக்கின்றதா?...

வரவிருக்கின்ற தேர்தலில், "பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு' மூலம் நாம் வேட்பாளர்களை நிறுத்த இருக்கிறோம். பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு, அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கானதொரு அமைப்பாகும். ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும். யாரும் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. "சமார்'களும் "பாங்கி'களும் சமமானவர்களே. நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்; நமக்கிடையே வேறுபாடுகள் பார்க்கக்கூடாது. அனைத்து ஆண்களும் பெண்களும் எல்லாவற்றையும் ஒருபுறம் வைத்துவிட்டு, தேர்தல் அன்று வாக்களிக்கச் செல்ல வேண்டும். ஏற்கனவே நம்முடைய வாக்குகள் போதிய அளவுக்கு இல்லை; நாம் போதிய அளவில் வாக்களிக்கவில்லை எனில், அது நமக்கு நல்லதல்ல. நம்மைப் பிரதிநிதித்துவப்படுத்த யாரும் இல்லாமல் போய்விடுவர். தேர்தல் நாள் பட்டியல் சாதியினருக்கு வாழ்வா, சாவா என்பதைத் தீர்மானிக்கும் நாளாகும்.

வரவிருக்கும் தேர்தலில், நமது கூட்டமைப்பின் சின்னம் யானை. நம் மக்களுக்கு எந்தக் குழப்பம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் நான் இதைத் தேர்ந்தெடுத்தேன்... பல்வேறு கட்சிகளும் கூட்டணிக்காக நம்மை அணுகியுள்ளன. ஆனால், இதுவரை எதுவும் முடிவாகவில்லை. பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. நாம் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஒரு முறைக்குப் பலமுறை சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனால், கூட்டணி அமைத்தாக வேண்டிய சூழல் நிலவுகிறது.

இறுதியாக நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஆயிரக்கணக்கான மக்கள் டில்லி, பஞ்சாப், உத்திரப் பிரதேசம் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து என்னிடம் தங்களின் குறைகளை முறையிடுகிறார்கள். சிலர் தாங்கள் பண்ணையார்களால் தாக்கப்படுவதாகவும், இது குறித்து அரசிடம் முறையிட்டால் அதிகாரத்தில் உள்ள சாதி இந்துக்கள், பாதிக்கப்பட்டவர்கள் மீதே நடவடிக்கை எடுப்பதாகவும் சொல்கிறார்கள். இதைப்போன்ற எண்ணற்ற குற்றப்பத்திகைகளைத் தனியொருவனாகத் தீர்க்க முடியாது. இதனால், மக்கள் அனைவரும் ஏமாற்றத்துடனேயே திரும்புகின்றனர்.

இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் ஓர் அலுவலகத்தை டில்லியில் நிறுவ இருக்கிறேன். உங்களின் குறைகளைத் தீர்க்கவும், ஆலோசனை சொல்லவும் ஒருவரை அங்கு நியமிக்க இருக்கிறேன். இதற்கென புது டில்லியில் ஏற்கனவே ஓர் இடத்தை வாங்கிவிட்டேன். இந்த இடம் கூட்டமைப்பின் தலைமை அலுவலகமாகவும் செயல்படும். இவ்விடத்தில் கட்டடத்தை எழுப்ப போதிய பணவசதி இல்லை. எனவே, இந்த உயரிய நோக்கத்தை நிறைவேற்ற, நீங்கள் உங்களால் இயன்ற பணத்தை இம்மய்யத்திற்கு அளித்து உதவுங்கள். இதன் மூலம் நம்முடைய நோக்கம் நிறைவேறும்.

(28.10.1951 அன்று, லூதியானாவில் ஆற்றிய உரை)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com