Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
ஜூலை 2005
திறனாய்வு

பிரமராக்கி கிழவியின் கள்மணக்கும் முத்தம்


- யாழன் ஆதி


நூல் : நமக்கிடையிலான தொலைவு
ஆசிரியர் : ம. மதிவண்ணன்
வெளியீடு : கருப்புப் பிரதிகள்,
45 ஏ, இஸ்மாயில் மைதானம்,
லாயிட்ஸ் சாலை, சென்னை - 5
பக்கங்கள் : 64
விலை : ரூ. 35


ஒன்றின் இருப்பையும் இல்லாமையையும் புலப்படுத்துவதற்கு கவிதை அவசியமாகிறது. புலன்களின் வழி ஊடுறுவி மனவெளிச் சுழல்வில் உயரும் காற்றுக் கோபுரமாய் அது இருப்புக் கொள்கிறது. சொற்களின் மீது ஏற்றப்பட்ட புதிய அர்த்தங்களைச் சுமந்து திரிகின்றன கவிதைகள். அன்றைய பழம் இலக்கியத்திலிருந்து இன்றைய நவீன இலக்கியம்வரை கவிதையின் நிகழ்வு இதுதான்.

சங்கத் தமிழ் இலக்கியங்களுக்கிடையில் புகுந்த பார்ப்பன வேளாள இலக்கியங்களே, ‘செவ்விலக்கியமாய்' தன்னை நியமித்துக் கொள்ள, விளிம்புநிலை மக்களின் வாழ்வு, பண்பாடு, மொழி புறக்கணிக்கப்பட்டன. இதன் எதிர்வினையாய் கிளர்ந்தெழும்பி - தலித் இலக்கியம் ‘பொது புத்தி' இலக்கியத்திற்கு எதிராக தன்னை நிறுத்தியது. புறந்தள்ளப்பட்ட சொற்களின் கொண்டாட்டமாய் எழுந்து, இன்று பொது இலக்கிய உலகிலும் ஆளுமை செய்யும் தலித் இலக்கியத்தின் கோபாவேசத்துடனும், காதலின் நுண்ணுணர்வுடனும் வந்திருக்கிறது மதிவண்ணனின் "நமக்கிடையிலான தொலைவு'.

இந்தக் கவிதைகள் பொதுமொழியில் எழுதப்பட்டிருந்தாலும், பிரமராக்கி கிழவியின் கள்மணம் கமழும் முத்தத்தில் கிளைத்த குரலின் வீரத்தையும் கோபத்தையும் தருகின்ற கவிதைகளாய் அமைந்திருக்கின்றன. தலித் வாழ்க்கையின் அதுவும் குறிப்பாக அருந்ததிய வாழ்க்கையின் அகத்தையும் புறத்தையும் பேசுகின்றன, மதிவண்ணனின் கவிதைகள். பன்றி மேய்த்துப் பிழைக்கும் வாழ்க்கைச் சிக்கலில் வந்து சேர்கின்ற மல்லிகைச் செடியைப் பிழைக்க வைக்க எத்தனிக்கும் அதே கவிதை மனம், "பீ' வாரிய முன்னோர்களை ஒருவேளை மல்லிகை பழித்து அழும் என்றால் அதன் கண்ணீரைத் துடைக்க கையைச் சுருக்கிக் கொள்கிறது.

இந்துத்துவ இலக்கியக் கற்பிதங்களின் மீது சாட்டையாய் இறங்குகின்றன ஒவ்வொரு வரிகளும். ‘உலகளந்தவன் என்று புளுகித் திரியுமவனை மயிரளக்கட்டும்' என்பதும், ‘ஆவுரித்துத் தின்னும் புலையர்' என்று சொன்ன திருநாவுக்கரசன், மாட்டுக் கறியின் பலம் அறியாமல் செத்தைகளைத் தின்று நிற்கக்கூட முடியாமல் விழுந்து செத்ததும், தீட்டுப்பட்ட பெண்கள் கோயிலுக்குள் நுழைய முடியாத கோபத்தை ‘மீசை மழித்த தேவன்' பக்கத்தில் தொடைகளை இறுக்கிக் கொண்டு, தீட்டினால் துன்பப்படும் தேவியரைக் காட்டுவதும் இந்துத்துவத்திற்கு எதிரான தலித் கவிதையின் சவுக்கு, மதிவண்ணனிடம் இருப்பதை தெளிவுபடுத்துகிறது. சக்கிலியன் என இழிவுபடுத்தியவனின் வாயை அடைக்க - தீட்டுத்துணியைத் திணிக்கின்றன மதிவண்ணனின் கவிதைகள். ‘தமிழ்தான் எனக்கும் மூச்சு. ஆனால், அதை நான் பிறர்மேல் விடமாட்டேன்' என்ற பார்ப்பனக் கூத்தனுக்கு மதிவண்ணனின் பதிலடி: "நாற்றமெடுக்கும் குசுவை / பிறர்மேல் தாராளமாய் விடும் நீ / மூச்சை மட்டும் விடாமலிருப்பதில் / ஒளிந்துள்ள...' என்று நீள்கிறது. சாதி மயமாகி இருக்கிறது இலக்கியம் எனப் புலம்புகின்றவர்களுக்கு - இதற்கு முன்னான இலக்கியங்களின் மேல் நிர்வாணமாக நின்று தன்னை ‘சக்கிலியன்' என்று ஓங்கி கத்தி பதில் சொல்கிறார்.

இத்தொகுப்பின் இன்னொரு சிறப்பு, இதில் அமைந்துள்ள அகவுணர்வுக் கவிதைகள். மிகச் சரியான சிற்பத்தைப் போல உணர்வுகளைச் செதுக்குகிறார் மதிவண்ணன். ‘அகல்' என்னும் அற்புதமான கவிதைப்பிரிவின் சுடர் எரியும் நிசப்தமான பாடல் மிக அற்புதம். தன் வாழ்வின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சி, அதன் இருண்மைகளையே சவுக்காக்கி, அந்தக் கொடுமை புரிந்தவர்களைப் புரட்டி எடுக்கின்றன மதிவண்ணனின் கவிதைகள். தலித் வாழ்வில் குறிப்பாக அருந்ததிய வாழ்வின் வெளிப்பாடாக வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்பு விடுதலை உணர்வினையும், அகம் சார்ந்த சுயவாழ்வனுபவத்தையும் ஒருங்கே நமக்குத் தருகின்றது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com