Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
ஜூலை 2005
கண்டதேவி சூழ்ச்சி

இன்னுமா இந்துவாக இருப்பது?

- ஜெனிபர்


கண்டதேவி தேரோட்ட நாள் -

யுத்த பூமிக்குள் நுழைந்துவிட்டதைப் போன்ற அச்ச உணர்வு. எந்த திசை திரும்பினாலும் ஆயிரக்கணக்கில் குவிந்திருக்கிறது துப்பாக்கி ஏந்திய போலிஸ். வழியெங்கும் ‘செக் போஸ்ட்'டுகள். இந்தியாவுக்குள் நுழையும் பாகிஸ்தான்காரர்களைப் போல, சோதனை மேல் சோதனை. கண்டதேவிக்குச் செல்லும் நான்கு வழிச் சாலைகளும் காவலர்கள் கட்டுப்பாட்டில்! அடையாள அட்டைகள் குறைந்தபட்சம் பத்து முறையாவது சரிபார்க்கப்படுகின்றன. ஊருக்குள் நுழையும் ஒவ்வொரு முகத்தையும் நெருக்கமாகப் படம் பிடிக்கின்றன மூலைக்கு மூலை இருக்கும் கேமராக்கள். இது ஒரு பக்க நிகழ்வு.

இன்னொரு பக்கம்... வடம் பிடிக்க அல்லாமல், தேரோட்டத்தைப் பார்க்கவும், சாமி கும்பிடவும் கிளம்பி வந்த சுமார் மூவாயிரம் தலித் மக்களைக் கொத்துக் கொத்தாக கைது செய்து, சம்பந்தமேயில்லாமல் திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கிறது காவல்துறை. கண்டதேவி சேரிவாசிகள் முந்தைய நாளே ஊரைவிட்டு அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர். புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி திருச்சியிலும், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் மதுரையிலும் கைது செய்யப்படுகின்றனர். தவிர, முந்தைய நாள் இரவே சுமார் முப்பத்தைந்து தலித் தலைவர்களும் ஆர்வலர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.


மற்றொரு பக்கம்... ‘ஆபரேஷன் கண்டதேவி'யை வெற்றிகரமாக நடத்திக் காட்ட வேண்டுமே என்ற பதட்டத்தில் கலெக்டர் ஆனந்த்ராவ் பட்டேல். ஊருக்கு வெளியே தலித் மக்களை கைது செய்து கொண்டே... "தேரோட்டத்தில் கலந்து கொள்ளவும், வடம் பிடிக்கவும் எல்லா சமூக மக்களும் தாங்களாகவே வருவார்கள். ஒற்றுமையாக வடம் பிடிப்பார்கள். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாங்கள் செய்திருக்கிறோம்'' என்று புன்னகை மாறாமல் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்.

சரியாக பிற்பகல் 2.10 மணிக்கு அரங்கேறியது, ஆதிக்க நாடகம். நான்கு நாடுகளைச் சேர்ந்த அம்பலக்காரர்களும் அழைக்கப்பட்டனர். அவசர அவசரமாக அவர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டது. பிறகு, ஆயிரக்கணக்கான போலிஸ் காவலுக்கு நிற்க, கர்வமும் திமிருமாக ணவக் கொக்கரிப்போடு கள்ளர்களும் அவர்களோடு "மப்டி'யில் இருந்த காவலர்களும் தேரை இழுத்தனர். முக்கால் மணி நேரத்தில் பரபரவென்று தேர் நான்கு வீதிகளையும் சுற்றி வந்து நிற்க... வெற்றிக் களிப்பில் கள்ளர்கள் பலமாக கை தட்டி ஆரவாரம் செய்தார்கள். தலித் மக்கள் முகத்தில் அரசும் சாதி இந்துக்களும் சேர்ந்து, டன் டன்னாக கரி பூசிய நாள் என்று வரலாற்றில் குறித்துக் கொள்ளலாம். சாதிக்கு எதிராக எதையுமே முன்னிறுத்த முடியாத கையாலாகாத சமூகம் இது என்பதைதான் கண்டதேவி மீண்டும் நிரூபித்திருக்கிறது.

தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியான கண்டதேவியில் தேர்தல் பிரச்சனையாகாமல், தேரோட்டம் ஏன் இவ்வளவு பெரிய பிரச்சனையாகிறது? தலித் மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபடும் உரிமையை அறுபதாண்டுகளுக்கு முன்னரே பெற்றுவிட்ட நிலையில், வடம் பிடிக்கும் உரிமையை மட்டும் பகிர்ந்து கொள்ள சாதி இந்துக்கள் மறுப்பது ஏன்? இந்தக் கேள்விக்கு விடை தெரிய வேண்டுமானால், நாம் கண்டதேவி என்ற குக்கிராமத்தின், மிகச் சிக்கலான பின்னணியை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது...

மதுரை தேவகோட்டை சாலையில், ராம் நகரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் உள்ளே தள்ளி இருக்கிறது கண்டதேவி. இங்குள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில், வரலாற்றுச் சிறப்புமிக்கதாக கருதப்பட்டு வருகிறது. அய்நூறுக்கும் குறைவான குடும்பங்களே வசிக்கும் சிறு கிராமம்தான் என்றாலும் சாதி இவ்வூருக்கு ‘சிறப்புத் தகுதியை' பெற்றுத் தந்திருக்கிறது. முன்னூறுக்கும் மேற்பட்ட கள்ளர் குடும்பங்கள் வசிக்கும் கண்டதேவியில் பள்ளர், பறையர், நாடார், பார்ப்பனர், பிள்ளை, ஆசாரி, வேளார், வளையர் எனப் பல சாதியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கின்றனர்.

கண்டதேவி மக்களின் முக்கியமான தொழில் விவசாயம். குறிப்பாக, தலித் மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை மய்யமாகக் கொண்டது. விவசாயம் சார்ந்த வேறு சில தொழில்களில் தலித் மக்கள் ஈடுபட்டு வந்தாலும், பொருளாதார ரீதியாக அவை பெரிதளவு உதவவில்லை. அதே வேளை, கள்ளர்களின் வியாபாரத் தளம் மிகவும் பலமிக்கது. தேவகோட்டையில் இருக்கும் அத்தனை பெரிய கடைகளும் கள்ளர்களுக்கானது என்ற வகையில் அவர்களின் பொருளாதார நிலை பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை.

கண்டதேவியிலும் அதைச் சுற்றிலும் உள்ள நிலங்கள் 65 சதவிகிதத்திற்கும் மேல் கள்ளர்களிடமே இருக்கிறது. அவர்களுக்கு அடுத்ததாக தலித் மக்களிடம் 25 சதவிகித நிலங்கள் உள்ளன. நிலம் பற்றி பேசும்போது, இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்: கோயில் பெயரில் இருக்கும் சுமார் முன்னூறு ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியை இப்போது கள்ளர்கள் கையகப்படுத்தியுள்ளனர். விடுதலை பெற்று நம் நாடு ஜனநாயகமானதாக மாறி இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும் இன்னும் அங்கு ‘நாடு' முறை நடைமுறையில் இருப்பதுதான் கண்டதேவியின் தனித்துவ பிரச்சனை.

நிர்வாக வசதிக்காக இந்தியாவை கிராமம், பஞ்சாயத்து, ஒன்றியம், வட்டம், மாவட்டம், மாநிலம் என்று பிரித்திருப்பது போல மன்னராட்சியில் நிர்வாக வசதிக்காக, 22 1/2, 32 1/2, 42 1/2, 64 1/2, 96 1/2 என்று கிராமங்களை ஒன்றிணைத்து நாடுகளாகப் பிரித்தனர். இதற்கு வாரிசு முறையில் ஒரு அம்பலம் நியமிக்கப்பட்டிருந்தார். மன்னரின் சார்பாக வரி வசூல் செய்வதும், ஊர் பஞ்சாயத்து செய்வதும், அரசுக்கு தேவைப்படுகிறபோது படைக்கு ஆள் அனுப்புவதும் இவர்களுடைய வேலை. தலித் மக்கள் அம்பலங்களாக இருந்ததில்லை. பெரும்பாலும் கள்ளர்கள்தான்.

கண்டதேவியைச் சுற்றி உஞ்சனை, செம்பொன்மாரி, தென்னிலை, இரவுசேரி என நான்கு நாடுகள் உள்ளன. இந்திய துணைக் கண்ட அரசின் சமஸ்தானங்கள் இணைக்கப்பட்ட பிறகு, எல்லா பகுதிகளும் இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டன. ஆனாலும் விடுதலைக்குப் பிறகு காலாவதியாகிப் போன ‘நாடு' நிறையை கள்ளர்கள் இன்னும் கைவிட்ட பாடில்லை. காரணம், அம்பலங்களாக இருந்து அனுபவிக்கும் அதிகார சுகத்தைத் துறப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. நாடு அதிகாரம் இருப்பதால், அம்பலங்கள் அரசர்களைப் போல வலம் வருகிறார்கள். அவர்களை மீறி அங்கு ஒரு அணுவும் அசையாது.

சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலைப் பொறுத்தவரை, அதன் நிர்வாகம் மொத்தத்தையும் நான்கு நாட்டைச் சேர்ந்த அம்பலங்கள் கைக்குள் வைத்திருக்கிறார்கள். கண்டதேவியில் ஆதிக்கம் அதிகாரம், செல்வம் செல்வாக்கும் கோயிலை சார்ந்தே இருப்பதால்தான் இவ்வளவு பிரச்சனையும். அம்பலங்கள் கோயில் உரிமையை விட்டுக் கொடுக்காததற்கு முக்கிய காரணம், அவர்களிடம் இன்று இருக்கும் அதிகாரமும் வளமும் முழுக்க முழுக்க கோயில் தந்தது. தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று வேறு சாதிக்காரர்களும் வந்துவிடுவார்களோ என்ற பதட்டத்தில்தான் கள்ளர்கள் தங்களின் தேர்வட உரிமையைப் பங்கிட மறுக்கிறார்கள்.

1936 ம் ஆண்டிலேயே கண்டதேவி கோயிலுக்குள் தலித் மக்கள் நுழைந்துவிட்டனர் என்றாலும், இன்றுவரை தேர்வடம் பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. 1953 ம் ண்டு தேர்வடம் பிடிக்க வந்த தலித் மக்கள், முதல் முறையாக மேல் சட்டை அணிந்து வந்திருக்கிறார்கள். வழக்கமாக வால் பகுதியில் மட்டுமே வடத்தைப் பிடிக்க அனுமதிக்கப்பட்டவர்கள், தலைப் பகுதியைப் பிடிக்க முயல இந்த இரண்டு காரணங்களுக்காகவும் தலித் மக்களை மூர்க்கமாகத் தாக்கினர் கள்ளர்கள். "இப்படியொரு இழிவை சந்தித்து சாமி கும்பிட வேண்டிய அவசியமில்லை' என்று தலித் மக்கள் ஒதுங்கத் தொடங்கியது அப்போதுதான். அவர்கள் தேரோட்டத்தில் பங்கேற்க விரும்பாமல் போனதற்கு இன்னொரு முக்கியமான காரணம் உஞ்சனைக் கலவரம்.

இருபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டாலும், உஞ்சனை கலவரம் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து இன்னும்கூட தலித் மக்கள் மீளவில்லை. கோயில் வழிபாட்டு உரிமை கேட்டதற்காகவும், கள்ளர்களுக்கு சரிநிகராக கோலாகலமாக திருவிழா கொண்டாடியதற்காகவும் கள்ளர்கள் கொலைக் கருவிகளை கொண்டு தலித் மக்களை தாக்கினர். அய்ந்து பேர் அதே இடத்தில் உயிரிழக்க, 29 பேர் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, கால்நடைகளைக் கொன்று, வீடுகளை தீ வைத்து தங்கள் சாதி வெறியை தணித்துக் கொண்டனர் கள்ளர்கள். ஆயிரத்து அய்நூறு சாதி இந்துக்கள் கைது செய்யப்பட்டும் தண்டனையின்றி எல்லோருமே விடுவிக்கப்பட்டனர். நீதி விலை போவதை நேரடியாகப் பார்த்த தலித் மக்கள் மனச் சோர்வு அடைந்தனர். ஆனால், மிக விரைவிலேயே நிலைமை மாறியது.

தேர் வடம் பிடிக்கும் உரிமை தங்களுக்கும் உண்டு என்று தலித் மக்கள் உரிமைக் குரல் எழுப்பினர். 1997 ம் ண்டு தலித் இளைஞர் ஒருவர் தேரை இழுக்க முற்பட, அவரை கள்ளர்கள் அடித்துத் துரத்தினர். புதிய தமிழகம் கட்சி மற்றும் வேறு சில தலித் அமைப்புகள், கண்டதேவி மக்களோடு கைகோர்க்க, போராட்டத்துக்குப் புத்துயிர் கிடைத்தது. 1998 இல் டாக்டர் கிருஷ்ணசாமி தொடுத்த வழக்கின் தீர்ப்பாக, "அனைத்துச் சாதியினரும் தேர் வடம் பிடிக்க உரிமை இருக்கிறது' என்று உயர் நீதிமன்றம் சொல்லியும்கூட, இன்றுவரை தலித் மக்கள் பங்கேற்க முடியவில்லை. தேரோட்டமே இல்லாமல் போனாலும் சரி, தலித் மக்களோடு சேர்ந்து தேரிழுக்க மாட்டோம் என்று சாதிவெறியில் துடிக்கும் கள்ளர்களுக்கு இந்த நாள் வரை ஆதரவாகவே இருந்து வந்திருக்கிறது ஆளும் அரசு.

காரணம், கண்டதேவி பகுதியைப் பொறுத்தவரை, வாக்கு வங்கி கள்ளர்கள்தான். அவர்கள் எந்தக் கட்சியை கை நீட்டுகிறார்களோ, அதுதான் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்பதால் அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ கள்ளர்களை பகைத்துக் கொள்ளத் தயாராக இல்லை.

ஜனநாயகத்தின் முக்கிய தூணான நீதிமன்றத்தின் எந்த உத்தரவையும் தமிழக அரசோ, அதன் ‘கடமைமிகு' ஊழியர்களோ பின்பற்றவில்லை. "தலித் மக்களுக்கு வடம் பிடிக்கும் உரிமை உண்டு. வெறும் கணக்கிற்காக பத்துப் பேரை வைத்து தேரை இழுக்காமல், தலித் மக்கள் முழுமையாகப் பங்கேற்கும் வண்ணம் தேரோட்டத்தை நடத்த வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை'' என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாக வலியுறுத்தியும், அரசு அதைத் துளிகூட மதிக்கவில்லை. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சியின் தொண்டர்கள் சிலரையும், அடிவருடிகள் சிலரையும் பொறுக்கி எடுத்து ‘நாங்களும் தேரிழுத்தோம்' என்று சொல்ல வைத்து நாடகமாடியதோடு, அந்த ஒரு சிலர் வடத்தைத் தொடுவது போல புகைப்படம் எடுத்து, போலி வணங்களையும் தயாரித்து வைத்திருக்கும் துணிச்சலில்தான் 26 பேர் தானாக வந்து தேரிழுத்தார்கள் என்ற கட்டுக்கதையை விடாமல் சொல்கிறது அரசு.

‘எட்டாண்டுகளுக்குப் பிறகு, தலித் மக்களையும் பங்கேற்கச் செய்து தேரை சுமூகமாக ஓட வைத்து விட்டோம்' என்று தமிழக அரசு மார்தட்டிக் கொள்ளலாம். அரசு பெருமைப்பட்டுக் கொள்கிறபடி உயிரிழப்போ, சிறு அசம்பாவிதமோ கூட ஏற்படவில்லைதான். ஆனால், ஊர் ஊராக சத்தமே இல்லாமல் சிறைப்படுத்தப்பட்ட தலித் மக்களின் மனக் கொதிப்புக்கு மத்தியில் கள்ளர்கள் கூடி இழுத்த தேரின் சக்கரங்களுக்கு அடியில் நசுங்கிச் செத்தனவே ஜனநாயகமும் சமத்துவமும்! அது படுகொலை இல்லையா?

தலித் மக்களின் கண்டதேவி போராட்டத்துக்கு சட்ட ரீதியாக துணை நிற்கும் வழக்குரைஞர் கே. சந்துரு, "போன ஆண்டும், வெறும் கணக்குக்கு பத்து பேரை தேரிழுக்க வைத்தார்கள் என்பதற்காகத்தான் இந்த முறை அது கூடாது என்று வலியுறுத்தி மறு உத்தரவு வாங்கினோம். ஆனால், நீதிமன்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் திட்டம் போட்டு புறக்கணித்துவிட்டது. சட்டப்படி பார்த்தால், கலெக்டர் மீதும் ஆர்.டி.ஓ. மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கண்டதேவிக்குள் செல்ல எல்லோருக்கும் அனுமதி இருக்கிற பட்சத்தில் கிருஷ்ணசாமி, திருமாவளவன் உள்ளிட்ட பலரை கைது செய்ததும் சட்டத்துக்குப் புறம்பானது. அந்தக் கைதும் கண்டதேவியில் பண்ணவில்லை. திருச்சியிலும் மதுரையிலும் கைது செய்ய வேண்டிய அவசியமென்ன? இந்தக் கைதும், தடை உத்தரவும் நீதிமன்ற அவமதிப்பாகும். இரு தரப்பினரையும்தான் கைது செய்தோம் என்று காவல் துறை சொல்வதே தவறு. ஒடுக்குகிறவரையும் ஒடுக்கப்படுகிறவரையும் எப்படி ஒரே மாதிரி நடத்த முடியும்?

நீதிமன்றம் உத்தரவு போடுகிறது. அவ்வளவுதான். சாதி ஒழிக்கப்பட வேண்டுமென்றுதான் அதுவும் விரும்புகிறது. ஆனால், நடைமுறை அப்படியில்லை. போன முறை கலெக்டர் சந்தோஷ்பாபுவை சாதிப் பெயரைச் சொல்லி திட்டி தாக்க வந்தனர் நாட்டார்கள். எஸ்.சி./எஸ்.டி. சட்டத்தில் அவர் கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய, அவரை இரவோடு இரவாக இடமாற்றம் செய்தது அரசு. ஒரு கலெக்டருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களை நினைத்துப் பாருங்கள். அந்தக் காலத்தில் பெரியார் மாதிரியான தலைவர்கள் துணிச்சலாக களமிறங்கினர் என்றால், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கவில்லை. கண்டதேவியை பொறுத்தவரை, தீர்வு என்பது நீதிமன்றத்துக்கு வெளியேதான் இருக்கிறது. இந்தப் பிரச்சனையை இயக்கங்கள் மிகத் தீவிரமாக கையில் எடுக்க வேண்டிய சரியான நேரமிது. ஏனென்றால், மக்கள் உண்மையாக எழுச்சி பெற்றிருக்கிறார்கள். இதை இயக்கத் தலைவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்கிறார்.

ஊரெங்கும் தலித் மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். மாலையிட்டான் வயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், "வடம் பிடிக்க எல்லாரும் வாங்கன்னு கலெக்டரே போஸ்டர் அடிச்சு ஒட்டவும், எங்க ஊர்ல இருந்து நாங்க அம்பது பேர் ஆர்வமா கிளம்பிப் போனோம். ஆனா, சிறுமருதூர்கிட்ட எங்கள பத்து பதினஞ்சு போலிசு மறிச்சாங்க. "வண்டியில ஏறுங்க நாங்களே பத்திரமா கொண்டு போய் கண்டதேவியில விட்டுடுறோம். பிரச்சனை எதுவும் வந்துடக் கூடாதுல்ல'னு சொன்னாங்க. முதல்ல மறுத்துட்டோம். மிரட்டி ஏத்துனாங்க. எங்களைக் கொண்டு வந்து தேவகோட்டை கல்யாண மண்டபத்துல அடைச்சுட்டாங்க. சாயங்காலம் ஆறு மணிக்குதான் விட்டாங்க. போனவருஷமே வடம் பிடிக்க முடியலன்னாகூட, தூர நின்னு தேரையாவது பார்த்தோம். இந்த வருஷம் அந்த உரிமையும் இல்ல. தேரோட்டத்த டிவியிலதான் பார்த்தோம். கைது பண்ற அளவுக்கு நாங்க என்ன தப்புப் பண்ணினோம்? எல்லாம் நல்லா நடந்த மாதிரியே நியூஸ் போடுறாங்க. நாங்களும் தேரிழுக்கலாம்னு கோர்ட்டு உத்தரவு போட்டிருக்கும்போது ஏன் இந்த அரசாங்கம் இப்படி நடந்துக்குது?'' என்கிறார்கள் கோபமாக.

அரசாங்கம் அப்படிதான் நடந்து கொள்ளும். எந்த அரசு ஒடுக்கப்பட்ட மக்களிடம் நியாயமாக நடந்து கொண்டிருக்கிறது இப்போது மட்டும் அதை எதிர்பார்த்துவிட... அரசியல்வாதிகள் ஏதோ ஓரளவுக்கு மக்களை மதிக்கிறார்கள் என்றால், அது ஓட்டுக்காகத்தான். ஆனால், தலித் மக்களை வாக்குவங்கி என்ற அளவில்கூட அவர்கள் மதிப்பதில்லை.

மக்கள் கறுப்புக் கொடி ஏற்றியிருக்கிறார்கள், அ.தி.மு.க. அடையாள அட்டைகளையும் கரை வேட்டிகளையும் எரித்திருக்கிறார்கள். டாக்டர் கிருஷ்ணசாமி மீண்டும் ஒரு வழக்குத் தொடுக்கப் போவதாகவும், ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் செய்து மனு கொடுக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் ‘நாங்கள் இந்நாட்டு குடிமக்களாக மதிக்கப்படவில்லை' என்பதற்கு அடையாளமாக குடும்ப அட்டைகளையும், தேர்தல் அடையாள அட்டைகளையும், அரசிடமே திரும்ப கொடுக்கப் போவதாக சொல்லியிருக்கிறார்கள். சி.பி.எம். கட்சியும் உள்ளூர் அமைப்பான "கண்டதேவிதேர் நடவடிக்கை குழு'வும் அடுத்தடுத்து சட்டரீதியான, ஜனநாயகரீதியானப் போராட்டங்களை அறிவித்திருக்கின்றன.

K. Sandru அனைத்துப் போராட்டங்களும் நடந்து முடிந்த பிறகு என்ன நடக்கும்...? அடுத்த ஆண்டு ஆனி மாதம் கள்ளர்கள் கூடி தேரிழுக்கப் போகிறார்கள். சாதிப் புரையோடிப் போன இந்த சமூகத்திடம் பாகுபாட்டை கட்டிக்காக்கும் இந்த அரசிடம், இதை மீறிய ஒரு நீதியைப் பெற்றுவிட முடியாது என்பதே நம் பல்லாண்டு கால அனுபவம். ஒரு பக்கம் தலித் அமைப்புகள் ‘நாம் இந்துக்கள் அல்ல' என்ற முழக்கத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. இன்னொரு பக்கம் கண்டதேவி மாதிரியான இந்துக் கோயில்களில் உரிமை கேட்டுப் போராட்டங்கள் நடக்கின்றன. தலித் மக்கள் இந்துக்கள் அல்ல என்பது வரலாற்று உண்மையானால், இந்து கோயில்களில் உரிமை கேட்டு ஏன் இத்தனை ஆயிரம் காலம் இழிவையும் அவமானத்தையும் சந்திக்க வேண்டும்? நம்மை சாதி பெயராலும், சாமி பெயராலும் ஒதுக்கி வைத்திருக்கும் இந்துக்களிடமே உரிமையையும் சமத்துவத்தையும் நாம் எதிர்பார்க்கிறோமா? சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவாத ஒரு உரிமைக்காக இத்தனை ஆண்டுகாலம் தலித்துகள் அவமானத்தை சந்தித்திருக்க வேண்டுமா? சமூக அந்தஸ்தையோ, சுயமரியாதையையோ ஒரு காலம் மீட்டுத் தராத ஒரு விஷயத்துக்காக இத்தனை உயிர்களை நாம் இழந்திருக்க வேண்டுமா?

இந்து மதம் பார்ப்பனர்களின் தனிச் சொத்து. அதை அவர்களே வைத்துக் கொள்ளட்டும். சாதி இந்துக்கள் அதில் உரிமைகளைப் பெற முடிந்து ஆதிக்கத்தை கைப்பற்றுகிறார்களா? நல்லது... அது அவர்கள் விருப்பம். னால், இந்துக்கள் அல்லாத தலித்துகள் சாதிப்படி நிலைக்காக சூழ்ச்சிகரமாக இந்துவாக்கப்பட்டவர்கள் ஏன் மல்லுக்கு நிற்க வேண்டும்?

கண்டதேவி மாதிரியான தேர்வடப் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு, இந்து மதத்தை விட்டு வெளியேறுவதுதான். அதில் வன்முறைக்கு இடமில்லை; அம்பேத்கர் வழிகாட்டுதலிலான சட்ட ரீதியான நடைமுறைத் தீர்வு அது. கோயிலுக்குள் நுழைவதும் வடம் பிடிப்பதும் தலித் மக்களின் உரிமை என்ற அடிப்படையில்தான் இவ்வளவு பிரச்சனைகள். தலித் கட்சிகளும் இயக்கங்களும்கூட அந்த உரிமையை (!) வலியுறுத்துகின்றன. மண்ணுரிமை கேட்கிறோம், பொது இடங்களில் உரிமை கேட்கிறோம், பொது வளங்களில் பங்கு கேட்கிறோம், அரசுத் துறைகளில் ஒதுக்கீடு, அரசியல் சமூக அங்கீகாரம் கோருகிறோம். இந்நாட்டு குடிமக்கள் என்ற அடிப்படையில் மேற்கூறிய உரிமைகளைக் கேட்பதற்கும் பெறுவதற்கும் தலித் மக்களுக்கு முழு உரிமை உண்டு.

ஆனால், இந்துக்கள் அல்லாத, வலுக்கட்டாயமாக இந்துவாக்கப்பட்ட தலித் மக்கள் இந்து கோயிலில் உரிமை கேட்டுப் போராடுவதிலும் அவமானப்படுவதிலும் உயிர்களை இழப்பதிலும் ஏதாவது அர்த்தமிருக்கிறதா? அப்படியே பெற்றாலும், அது தலித் மக்கள் மீது அப்பிக்கிடக்கும் சாதி அசிங்கத்தைத் துடைத்துவிடுமா? மக்களுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தலித் தலைவர்களும், இயக்கவாதிகளுமே கோயில் உரிமைக்காகத்தானே குரல் கொடுக்கிறார்கள்! இந்து மதத்தை விட்டு வெளியேறச் செய்வதற்கான துணிவையோ அறிவையோ மக்களுக்கு கற்பிக்க வில்லை என்பது வருத்தத்திற்குரியது.

கோயிலுக்குள் தலித் மக்கள் நுழைந்தால் தீட்டு, பாவம், சாமி கண்ணைக் குத்திவிடும் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தவர்களின் முகமூடியைக் கிழித்தெறிந்தார் பெரியார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென அவர் வலியுறுத்தியதன் நோக்கம்கூட, சமத்துவத்தை மீட்டெடுப்பதுதானே அன்றி மத உரிமைகளைப் பாதுகாப்பதன்று. அதே நேரம், அதற்கு இணையாக அதைவிட உக்கிரமாக அவர் இந்து மத எதிர்ப்பையும், கடவுள் மறுப்பையும், தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்பதையும் வலியுறுத்தி, அதிதீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்த விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

அம்பேத்கரை தன்னிகரில்லாத் தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பவர்கள்கூட, சாதி ஒழிப்புக்குத் தீர்வாக அவர் முன்மொழிந்த மதமாற்றத்தையும், இந்துமத எதிர்ப்பையும் மக்களிடம் முழு வீச்சில் எடுத்துச் செல்லவில்லை. மாறாக, தங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் இந்து மதத்திடம் உரிமைகளைக் கேட்டு காலம் முழுவதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கேடுகெட்ட இந்து மதத்தின் வெற்றி அதுதான். மதம் என்பது போதை என்றால் இந்து மதம் என்பது அதிபோதை. இத்தனை கோடி மக்களை இத்தனை ஆண்டுகளாக ‘நாங்கள் அடிமைகள்தான்' என்று நம்பி ஏற்றுக் கொள்ள வைக்கும் அளவுக்கு அதிபோதை. அதிலிருந்து தெளிந்து வெளியேறுவதென்பது, உண்மையிலேயே மிகப் பெரிய சாதனை. ‘உரிமை வேண்டும்' என்று தன்னெழுச்சி பெற்றிருக்கும் கண்டதேவி மக்களே அந்த சாதனையைத் தொடங்கி வைக்கலாம்.

கண்டதேவியிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவே இருக்கும் கீழ செம்பொன்மாரி மக்கள் தேர்வட உரிமைக்காக உயிரைவிடவும் தயாராக உள்ளனர்: "எப்படியாவது தேர இழுத்துரணும்னுதான் கிளம்புனோம். போலிசுங்க வழி மறிச்சு ஊரோட அடைச்சு வச்சுட்டாங்க. கள்ளரா, பள்ளரானு கேட்டுத்தான் கண்டதேவிக்குள்ள விட்டாங்க. எஸ்.சி.னா அவ்ளோ எளக்காரமா? போலிசு வந்தது பாதுகாப்புக்காம். எத பாதுகாக்குறதுக்கு ஜாதியவா? காக்கிச் சட்டையப் பார்த்தாலே வெறுப்புத்தான் வருது. அவங்க மட்டும் இல்லனா நாங்கதான் தேர இழுத்திருப்போம்.

மனுசங்கள்ல ஆண் ஒரு ஜாதி, பொண்ணு ஒரு ஜாதினு ரெண்டே பிரிவு தாங்க. இது ஏன் அவங்களுக்கு புரிய மாட்டேங்குது. சாமி சொல்லுச்சா தலித்துங்க தேர இழுக்கக் கூடாதுணு. நாங்க விடுறதா இல்ல... எங்க உசிரு சிந்துனாலும் அங்கதான் சிந்தும்'' என்கிறார்கள் கொதித்துப் போய்.

மதத்துக்காக மக்கள் ஏன் உயிரை விட வேண்டும்? மக்களுக்காகத்தான் மதம். உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டியது ஒன்றே மதங்களின் கடமை. அந்த ஜனநாயகக் கடமையிலிருந்து மதங்கள் முரண்படும்போது, அதை துச்சமென மதித்து வெளியேறினால்தான் உரிமை மீறல்கள் தடைபடும். மக்களை அதற்குத் தயார்படுத்த வேண்டியதுதான் இன்றைய முக்கியத் தேவை.


"கண்டதேவி கள்ளர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பாய வேண்டும்?'' "இரு தரப்பினரும் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும்'' "தலித் மக்கள் தன்னெழுச்சியாக போய் தேர்வடத்தைப் பிடிக்க வேண்டும்'' "சாதி என்பது ஒரே நாளில் தீரக்கூடிய பிரச்சனை அல்ல... காத்திருங்கள்'' என்று ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு தீர்வை முன்மொழிகின்றனர். உண்மையாகவே இவை எல்லாம் சாதி ஒழிப்புக்கான தீர்வுகளா? கண்டதேவியில் போராடி தேர்வட உரிமையைக்கூட நாம் ஒரு வேளை பெற்றுவிடலாம். அதன் பிறகு, தலித் மக்கள் புனிதமானவர்கள் என்று மநுதர்மம் மாற்றி எழுதிவிடப் போகிறதா என்ன? நிச்சயமாக இல்லை. அப்போதும் ஜாதி இருக்கத்தான் போகிறது. வெவ்வேறு வடிவங்களில் அது தலித் மக்களை பலிவாங்கத்தான் போகிறது.

எத்தனையோ போராட்டங்களை நடத்திப் பார்த்து தோற்றுவிட்ட கண்டதேவி தலித் மக்கள், இன்னும் கையிலெடுக்காத வலுவான யுதம் மதமாற்றம் ஒன்றுதான். ஒரேயொருமுறை அதை அவர்கள் கையிலெடுக்கட்டுமே?! கள்ளர்களை தரிக்கும் இதே அரசு, தலித் மக்கள் முன் மண்டியிடும். சாதி இந்துக்கள் கலவரமடைவார்கள். இந்து மதவாதிகள் நடுக்கமடைவார்கள். சர்வதேச பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும்கூட ஓடோடி வரும். "ஒரே நாளில் சாதியை அழித்துவிட முடியாது'' என்று அண்மையில் தீர்ப்பளித்த நீதிமன்றத்திற்கு, ஒரே நாளில் சாதியை அழித்துக் காட்டி வரலாற்றில் இடம் பிடிப்பார்கள் கண்டதேவி தலித் மக்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


வரலாற்றுத் தகவல்கள் : கே.எஸ். முத்துநண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com