Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
ஜூலை 2007

சமூக நோய்க்கு தீர்வு கண்ட நாயகர் ஏபி. வள்ளிநாயகம்

Ilangovan, Azhakiya Periyavan, Suba.veerapandian, Poonguzhali,  Christudoss Gandhi, Oviya and Kolattur Mani

சமநீதி எழுத்தாளர் ஏபி. வள்ளிநாயகம் அவர்களுக்கு ‘தலித் முரசு' சார்பில் வீரவணக்கக் கூட்டம், 16.6.2007 அன்று சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மறைந்த ஏபி. வள்ளிநாயகத்திற்கு, ‘பாலம் தலித் முரசு கலை இலக்கிய விருது 2007' கிருத்துதாசு காந்தி அவர்களால் வழங்கப்பட்டது. விருதை ஏபி. வள்ளிநாயகத்தின் துணைவர் ஓவியா மற்றும் அவர்களுடைய மகன் ஜீவசகாப்தன் பெற்றுக் கொண்டனர்.

மிக எழுச்சியாகவும், ஏபி. வள்ளிநாயகத்தின் சமூகப் பணியை சிறப்பாக நினைவுகூர்ந்தும் தோழர்கள் சி. மகேந்திரன், சுப. வீரபாண்டியன், கிருத்துதாசு காந்தி, அழகிய பெரியவன், யாக்கன், பூங்குழலி, யாழன் ஆதி மற்றும் புனித பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். ஓவியா ஏற்புரை நிகழ்த்தினார். கொளத்தூர் தா.செ. மணி, படத்தைத் திறந்து வைத்து உரை நிகழ்த்தினார். இந்நிகழ் வுக்கு அய். இளங்கோவன் தலைமை வகித்து கூட்டத்தை நெறிப்படுத்தினார். இக்கூட்டத்திற்கு ‘தலித் முரசு' வாசகர்கள் மற்றும் ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.

அய். இளங்கோவன்: "தோழர்களே! இது வீரவணக்கக் கூட்டம். புனித பாண்டியன் சொல்லியது போல, இது அவருடைய குடும்பத்தினர் ஏற்பாடு செய்த கூட்டம் அல்ல; சமூகக் குடும்பம் ஏற்பாடு செய்த கூட்டம். நீங்கள் சமூகத்தைப் பற்றி கவலைப் படுங்கள். சமூகம் உங்களைப் பற்றிக் கவலைப்படும். நீங்கள் சமூகத்தின் அவலங்களை களையப் புறப்படுங்கள். சமூகம் உங்களுக்கு அரணாக நிற்கும் என்ற வகையில், தோழர் வள்ளிநாயகம் அவர்கள் ஏறக்குறைய தனது வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்காகவே செலவு செய்து, தனக்காக எதையும் சேர்த்துக் கொள்ளாமல் மக்களுடைய விடுதலைக்காக, மக்களுடைய அவலங்களைப் போக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மிகப்பெரிய மனிதர். அவர் சாதாரணமானவர். ஆனால், அவர் செயல்பாட்டால் மிகப்பெரிய மனிதராக நம்மிடையே இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். தலித் மக்களில் நிறைய பேர் பிஎச்.டி. பட்டம் எல்லாம் பெற்றிருக்கிறார்கள்.

I.Ilangovan அறிவாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் படித்த படிப்பெல்லாம் அவர்களுக்கு உத்தியோகத்திற்கும், சம்பள உயர்வு கிடைப்பதற்காகவும் பயன்பட்டிருக்கிறது. வரலாற்றுப் பேராசிரியர்கள், தலித் பேராசிரியர்கள், பொருளாதாரப் பேராசிரியர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். மொழிப் புலமை பெற்ற பேராசிரியர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எதுக்கையா நீங்க பிஎச்.டி. படிச்சீங்க? அவர்கள் எல்லாம் ஆய்வுப் படிப்பை பட்டம் பெறுவதற்காக மட்டுமே படித்தவர்கள். சமூக அவலங்களைப் பற்றி படித்தவர்கள் யாராவது இருக்காங்களா? எம்.எஸ்., எம்.டி. படிச்சவங்க நோய் பத்தியெல்லாம் கண்டுபிடிச்சிருக்காங்க. மருந்து போடுறாங்க, எல்லாம் செஞ்சிட்டிருக்காங்க. ஆனால், சமூக நோய்க்கான காரணங்கள், சமூகக் கொடுமைகளைத் தீர்ப்பதற்கான ஆராய்ச்சிகளை செய்து, இன்று நம்மிடையே வரலாற்று நாயகராக வள்ளிநாயகம் விளங்குகிறார். அவருக்கு வரலாற்றில் அழிக்க முடியாத ஓரிடம் இருக்கிறது.

‘வரலாற்றைப் படிக்காதவர்களால் வரலாற்றை உருவாக்க முடியாது' என்று அய்யா அவர்கள் சொன்னார். மக்களுக்காக சேவை செய்தவர்களைப் பற்றிய பதிவுகளை விட்டுச் சென்றிருக்கின்ற தோழர் வள்ளிநாயகம் அவர்கள் நம்மிடையே என்றும் அழியாத மனிதராக இருக்கிறார். அவர் எழுதிய புத்தகங்கள் இதற்கு சான்று பகரும். ஏனெனில், அவர் சமூகத்தைப் பற்றி கவலைப்பட்ட ஒரு சமூக நீதி எழுத்தாளர் என்பதால்தான் அவருக்கு வீரவணக்கம் செலுத்த இங்கே வந்திருக்கின்றீர்கள். ‘தலித் முரசு'ம், ‘பாலம்' அமைப்பும் அவருக்கு ஒரு விருதும் வழங்க இருக்கிறார்கள். நீங்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தின் இறுதிவரை இருந்து, தோழர் வள்ளிநாயகம் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய வீரவணக்கத்தைச் செலுத்தி, இதேபோல நம் ஒவ்வொருவரும் வள்ளிநாயகத்தைப் போன்று சமூக அக்கறை உள்ளவர்களாக, சமூகத்தைப் பற்றிக் கவலைப்படுபவர்களாக மாற வேண்டும்.

தோழர் வள்ளிநாயகம், தளபதி பள்ளிகொண்டா கிருஷ்ணசாமியைப் பற்றி ஒரு புத்தகம் எழுதினார். இதற்காக ஏறக்குறைய மூன்று மாதங்கள் வடஆற்காடு மாவட்டத்திலே அவர் கால்படாத இடமே இல்லை. எங்கேயாவது யாராவது பள்ளிகொண்டா கிருஷ்ணசாமியைப் பற்றி பேட்டி கொடுத்தார்களேயானால், அடுத்த நபர் அவர் சொல்லக்கூடிய ஆள் எங்கே என்று போய் ஏறக்குறைய மூன்று மாதங்கள் அங்கேயே முகாமிட்டு, அவர் அந்தப் புத்தகத்தை எழுதினார். இதெல்லாம் யாருக்கும் தெரியாது. அவர் ஏறக்குறைய சாப்பிடாமலே கூட எழுதியிருக்கிறார்.

வள்ளிநாயகம் இறப்பிற்குப் பிறகு புனித பாண்டியனிடம் கேட்டேன், வள்ளிநாயகம் உடலை என்ன செய்யப் போகிறார்கள் என்று. ‘அவரை புதைக்கணும் என்று சொன்னாங்க. புதைக்கறதுக்கு இடம் இல்லை. அதனால் எரிச்சுதான் ஆகணும் என்று சொன்னாங்க' என்றார். அதைக் கேட்டவுடன் மிகவும் வேதனையாக இருந்தது. ஏனென்றால், அவர் மிகப்பெரிய பகுத்தறிவுவாதி. இறந்தும்கூட அவர் பல உடல்களிலே வாழ்ந்திருக்க முடியும்.

ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை. நாமெல்லாம் கூடிப் பேசியிருக்கலாமே; அம்பேத்கரிஸ்ட், பெரியாரிஸ்ட் எல்லோருமே நாம் இறந்துபோனால், என் கண்கள் அடுத்தவருக்குப் பயன்பட வேண்டும், நான் இறந்து போனால் எனது தோல் அடுத்தவருக்குப் பயன்பட வேண்டும். நான் இறந்துபோனால் எனது கிட்னியை அடுத்தவருக்கு வழங்க வேண்டும். நான் ஒரு பகுத்தறிவுவாதி. நான் இறந்த பிறகு என்னை எரியூட்டக் கூடாது. என்னைப் புதைக்கக் கூடாது. நான் இறந்தும் இந்த சமூகத்துக்குப் பயன்பட வேண்டும் என்ற உறுதிமொழியை நாம் ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாம் இந்த செய்தியை, இந்த தகவலை இந்த நாளிலே மனதிலே உறுதி கொள்வோம். நான் இறந்து போனால் எனது உடலை இந்த சமூகத்திற்கு மருத்துவமனைகள் மூலம் தானமாகத் தர வேண்டும். நான் இறந்தும் பயன்பட வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கருத்தை வள்ளிநாயகம் அவர்கள் ‘தலித் முரசு' அலுவலகத்திலே உள்ள நூலக அறையிலே என்னிடம் பேசிக் கொண்டிருக்கும்போது சொன்னார்கள். தோழரே! நான் என் அம்மாவிடம் பேசிக்கிட்டிருந்தேன். அவர்களுக்கு 80 வயது. எங்க அம்மா இறந்து போனால் எங்க அம்மாகிட்டயே சொல்லிட்டேன்.

சி.எம்.சி. மருத்துவமனைக்கு உங்க உடலைக் கொடுத்துவிடுவேன் என்று சொன்னேன். அதற்கு அவர் நானும் அதே சிந்தனையில்தான் இருக்கிறேன் என்று 3 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னார். நாமெல்லாம் அப்படித் தான் செய்ய வேண்டும் என்று சொன்னார். எனவே, இந்த அரங்கத்திலே இருந்து நாம் வெளியே செல்லும்பொழுது, நாம் இறந்தும் இந்த சமூகத்துக்குப் பயன்பட வேண்டும். வள்ளிநாயகம் அவர்கள் விட்டுச் சென்ற பணியை நாம் தொடர வேண்டும் என உறுதி ஏற்போம்.''

பூங்குழலி : "இறப்பு ஏற்படுத்தும் ஆற்றாமைதான் மிகக் கொடுமையானது. இன்று அத்தகைய ஒரு ஆற்றாமையை சுமந்த நிலையில்தான் நாம் இங்கு கூடியிருக்கிறோம். வள்ளிநாயகம் அய்யா அவர்களுடன் எனக்கு நேரடியான பழக்கம் என்பது மிகமிகக் குறைந்த காலம்தான். எனக்கு அறிமுகம் எல்லாம் அவருடைய எழுத்துகள்தான். ஆனால், அவருடன் நேரடியான அறிமுகமும் அவருடன் பழகுவதற்கான வாய்ப்பும் கிடைத்தபோது, பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்படிப்பட்ட பக்குவப்பட்ட நட்பு நமக்கு கிடைத்திருக்கிறது, தோழர்கள் கிடைத்திருக்கிறார்கள், நமக்கு வழிகாட்டுவதற்காக நட்பு கிடைத்திருக்கிறது என்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அந்த ஆதங்கத்தில்தான் நான் இங்கு நிற்கிறேன்.

Poonguzhali பொதுவாக ஒரு நூலை எழுதுபவர்கள் அந்த நூலை யாரை வைத்து வெளியிடலாம் என்று யோசிக்கும்போது, தன்னைவிட உயர்ந்தவராக யாரை நினைக்கிறாரோ அவரை வைத்து வெளியிடுவது தங்களுக்கு கவுரவம் என்று நினைப்பது வழக்கம். ஆனால், வள்ளிநாயகம் அய்யா தான் எழுதிய ‘தாத்ரி குட்டி' நூலை முன்பின் நேரடியாக சந்திப்புகூட இல்லாத, அறிமுகமே இல்லாத, அனுபவத்திலும் சரி, வயதிலும் சரி, எந்த வகையிலும் அவருக்கு அருகில்கூட நெருங்க முடியாத என்னை வைத்து வெளியிடச் சொன்னபோது, அவர் எனக்கு மிகப்பெரிய கவுரவம் அளித்ததாகவே நான் நினைத்தேன்.

எவ்வளவோ மறுத்துக் கூறியபோதும் அவர் கண்டிப்பாக நான்தான் வெளியிட வேண்டும் என்று சொன்னார். தன்முனைப்பற்ற அவருடைய தன்மையைத்தான் அது காட்டுகிறது. பெண்களை முன்னிறுத்த வேண்டும்; அவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற அவருடைய சிந்தனை, அவருடன் பழகிய நாட்கள் முழுவதிலும் நான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு கட்டத்திலும் சின்ன சின்ன விஷயத்திலும், மாற்றுப்பத்திரிகையாளர் பேரவை ஆரம்பித்த போதும் சரி, வயதில் இளையவர்களான எங்களை முன்னிலைப்படுத்துவார், எங்களை பேசும்படி தூண்டுவார். எங்களை அவை முன்னிறுத்திப் பேச வைத்துக் கேட்பார்.

ஆனால், தன்னை ஒரு பெரிய சிந்தனையாளராகவோ, அறிவுஜீவியாகவோ முன்னிறுத்திக் கொள்ளாமல் - தனக்கு முன்னோடி களாக இருந்தவர்களை எல்லாம் தேடிக் கண்டுபிடித்து, அவர்களைப் பற்றிய செய்திகளை எல்லாம் எங்களைப் போன்ற இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அதை ஓர் ஆவணமாக்கிச் சென்றிருக்கிறார். அதுதான் மிக முக்கியமானது. சமூக அக்கறையுள்ள பல தலைவர்களை, மனிதர்களை நாம் பார்க்கிறோம். ஆனால், பெண்ணியம் என்று வரும்போது இங்கே ஒரு தயக்கத்தை நாம் கண்கூடாகப் பார்க்க நேர்கிறது. அதிலும் எவ்வளவோ பெரியாரிய சிந்தனை பேசுபவர்களும் சரி, அம்பேத்கரின் எத்தனையோ கொள்கைகளை எடுத்துச் சொல்கிறவர்களும் சரி, பெண்ணியம் என்று வரும்பொழுது ஒருவித தயக்கத்தோடுதான் இருக்கிறார்கள். அது வெளிப்படையாக ஒப்புக் கொள்ள வேண்டிய ஒரு உண்மை. அந்த சூழலில் ஒரு நேர்மையான பெண்ணியவாதியாக நான் அவரைப் பார்த்து வியந்திருக்கிறேன்.

அடுத்து, அவர் தன் உடல்நலன் பற்றி சிறிதளவும் அக்கறை கொள்ளாமல் ஒரு நாடோடியாகவே வாழ்ந்தார். எல்லா இடத்துக்கும் செல்வார், தன் உடல்நலனைப் பற்றியெல்லாம் யோசிக்க மாட்டார். சுற்றிக் கொண்டே இருப்பார். இதை ஒரு நேர்மறையான செய்தியாகப் பார்ப்பதைவிட, என்னைப் பொறுத்தவரை இதை மிக வேதனையான செய்தியாகத்தான் நான் கருதுகிறேன். ஏனெனில், அவர் உடல்நலனைப் பற்றி அக்கறை கொள்ளாததால் ஏற்பட்ட இழப்பு, அந்த இழப்பினால்தான் நாம் இங்கு கூடி இருக்கிறோம். அந்த இழப்பு என்பது அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்ல, இங்கு கூடியிருக்கும் அவரை நேரடியாக அறிந்து பழகிய நண்பர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்துக்கான இழப்பு.

அவர் சிறிதளவு தன் உடல் நலன் மீது அக்கறை கொண்டிருந்தால், எவ்வளவோ நமக்கு இன்னும் அதிகமான பயன்கள் கிட்டியிருக்குமே என்று தாங்க முடியாத ஆற்றாமையாகத்தான் இருந்தது. பொதுவாக சமூக அக்கறை யுள்ளவர்கள், சமூகத்திற்காகப் போராடிக் கொண்டிருப்பவர்கள் அனைவருமே உடல் நலனைப் பேணாதிருப்பதை, ஏதோ உடல் நலன் மீது அக்கறை கொள்ளாமல் செல்வதை தங்களுடைய வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். சமூக அக்கறையுள்ளவர்கள் இந்த சமூகத்திற்கு மட்டுமல்ல, எங்களைப் போன்ற இளைய தலைமுறைகளுக்கும் வழிகாட்ட வேண்டிய தேவையிருக்கிறது. நீங்களெல்லாம் எங்களுக்கு கண்டிப்பாக வேண்டும், நிறைய நாட்கள் வேண்டும். அதனால் அய்யாவுடைய வாழ்க்கையை இறுதிவரை ஒரு படிப்பினையாக, அவருடைய இறப்பை ஒரு படிப்பினையாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடல்நலனைப் பேணுவதும் சமூக அக்கறையின் ஒரு பகுதிதான். அது உங்கள் வாழ்க்கையில் சுகபோகங்களை அனுபவிப்பதற்காக அல்ல. உண்மையில் சமூகத்திற்குப் பயன்பட, நம் உடல் நலத்தைப் பேண வேண்டிய தேவை இருக்கிறது. அவர் விட்டுச் சென்ற செய்திகளில் ஒன்றாக சமூக அக்கறையுள்ளவர்கள் உடல் நலத்தைப் பற்றியும் அக்கறை கொள்ள வேண்டும்.''

- உரைகள் அடுத்த இதழிலும்

ஏபி. வள்ளிநாயகத்தின் நூல்களை நாட்டுடைமையாக்குக!

சமநீதி எழுத்தாளர் ஏபி. வள்ளிநாயகத்தின் நூல்கள் அனைத்தையும் தமிழக அரசு நாட்டுடைமையாக்க வேண்டும் என புதுக்கோட்டையில் அபெகா நூலக வளாகத்தில், அறிவியல் கலை இலக்கிய மன்றம் சார்பில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்திற்கு ‘ஞானாலயா' பி. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.

அறிவியல் கலை இலக்கிய மன்றத் தலைவர் மருத்துவர் நா. ஜெயராமன், கடந்த இருபதாண்டுகளாக வள்ளிநாயகத்துடன் இருந்த நட்பை விளக்கியும், அவருடைய சமூகப் பணிகளை எதிர்கால இளைய சமூகம் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஏபி. வள்ளிநாயகத்தின் துணைவர் ஓவியா, மாணவர் பருவம் முதற்கொண்டு அவர் ஆற்றிய பணிகளையும், திராவிடர் கழகத்தில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனையாளராகவும், டாக்டர் அம்பேத்கர், மார்க்ஸ், தலித்தியம், பெண்ணியம், பவுத்தம் போன்றவற்றில் அவர் எடுத்துச் சென்ற பணிகளையும் விளக்கினார். நிகழ்ச்சியில் டோரதி கிருஷ்ணமூர்த்தி கே.எம். ஷரீப், க. சதாசிவம், டி.எஸ்.எஸ். மணி ஆரோக்கியசாமி, குருமூர்த்தி, ஜீவா, மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்று தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

ஏபி. வள்ளிநாயகம் - தமிழகத்தின் வசந்த் மூன்

தமிழ் நாடு மாற்றுப் பத்திரிகையாளர் எழுத்தாளர் பேரவை சார்பில் ஏபி. வள்ளிநாயகத்தின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி, 3.6.2007 அன்று சென்னையில் நடைபெற்றது. சக்திதாசன், கொடிக்கால் ஷேக் அப்துல்லா முன்னிலையில் தொடங்கிய இக்கூட்டத்தில் சி. மகேந்திரன், விடுதலை ராசேந்திரன், தமிழேந்தி, சரசுவதி, அரங்க. குணசேகரன், இன்குலாப், மு.பா. எழிலரசு, எழில் இளங்கோவன், ஜவகர், அ. மார்க்ஸ், தீத்தன், அ. வினோத், மு. பாலன், புனித பாண்டியன் மற்றும் யாக்கன் உள்ளிட்டோர் தங்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

சிறப்புரை நல்கிய வே. ஆனைமுத்து, "பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் சிந்தனைகள் அனைத்தையும் அரிய சொத்தாகத் தொகுத்து வழங்கியவர் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த வசந்த் மூன் அவர்கள். அவரைப் போலவே, தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு ஓயாது பணியாற்றிய பெருமக்களின் வாழ்க்கையை - மறைக்கப்பட்ட மண்ணின் மைந்தர்களின் வரலாற்றை, தன்னந்தனி மனிதராய்ச் சுற்றிச் சுழன்று, அவற்றைத் தமிழ் நாட்டு மக்களுக்கு வழங்கிய பெரும் சாதனையாளர் வள்ளிநாயகம். அவரைத் ‘தமிழ் நாட்டின் வசந்த் மூன்' என்று நாம் பெருமையோடு அழைக்கலாம்'' என்றார். இந்நிகழ்வில் ஓவியா அவர்களிடம் குடும்ப நல நிதியாக பேரவை சார்பில் ரூ. 25,000க்கான காசோலை வழங்கப்பட்டது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com