Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
ஜூலை 2007

பாலம் தலித் முரசு கலை இலக்கிய விருது 2007


Paalam தலித் மக்களின் விடுதலையை வென்றெடுக்க சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் ‘தலித் முரசு' இதழும், ‘பாலம்' அமைப்பும் தம்மால் இயன்ற பங்களிப்பைத் தொடர்ந்து செய்து வருகின்றன. கலை இலக்கியத் தளங்களில் நின்று போராடி வரும் தலித் எழுத்தாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் தோள் கொடுக்க விருதுகளை வழங்க வேண்டும் என்பது ‘தலித் முரசு' மற்றும் ‘பாலம்' ஆகியவற்றின் நோக்கமாகும். அந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே இவ்விருது வழங்கப்படுகிறது. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சமூக மாற்றத்திற்கான அவாவுடன் பவுத்தம் அம்பேத்கரியம் பெரியாரியம் ஆகிய கொள்கைகளைத் தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு, களப்பணியாற்றியதோடு மட்டுமின்றி, 25 நூல்களை தலித் இயக்கத்திற்கான கொள்கைப் படைக்கலன்களாக தோழர் ஏபி. வள்ளிநாயகம் அவர்கள் எழுதியிருக்கிறார். ‘தலித் முரசு' இதழில் வரலாற்று ஆசிரியர்களால் புறக்கணிக்கப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட தலைவர்களைப் பற்றிய வரலாற்றை - ‘விடுதலை இயக்க வேர்களும் விழுதுகளும்' என்ற தலைப்பில் அகழ்ந்தாய்ந்து அவர் பதிவு செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திற்கு அருகில் உள்ள ஆறுமுகநேரியில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்த ஏபி. வள்ளிநாயகம் அவர்கள், இளம் வயது முதலே திராவிடர் கழகத்திலும் அதற்குப் பிறகு ஈழ விடுதலை இயக்கங்களிலும் இணைந்து செயலாற்றியவர் ஆவார். பிறகு பாட்டாளி மக்கள் கட்சியில் தத்துவ அணிச் செயலாளராகவும் நீண்ட காலமாக செயலாற்றி வந்தார். எந்த இயக்கத்தில் அவர் பங்கேற்றாலும் தன்னுடைய கொள்கையை அவர் எங்கும் விட்டுக் கொடுத்தவர் அல்லர். ஒடுக்கப்பட்டோர் விடுதலையும், பவுத்தமும், பெண்ணியமும், சமூக நீதி விழுமியங்களும் அவர் எழுத்தின் அடிப்படையாக இருந்தன.

அச்சிந்தனைகளே அவரை இயக்கின. அவருடைய எழுத்து எளிமையான மொழியில், முழுமையான சித்திரத்தை அளிக்கும் நோக்கில், ஆழமான அடிப்படைகளைக் கொண்டு உருவானது. அவருடைய நூல்களில் ‘மானுடத்தில் அழகானவர்கள் தீண்டத்தகாதவர்கள்', ‘அடிமைகளின் தலைவர் அய்யன்காளி', ‘சமநீதிப் போராளி இம்மானுவேல் சேகரன்', ‘இந்துத்துவ வேரறுக்கும் உயிராயுதமும், முதற்குடிகளும்', ‘மகாத்மா புலேவுக்கு முன் மகராசன் வேதமாணிக்கம்', ‘புரட்சியாளர் அம்பேத்கர்' ஆகிய நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.

ஓர் எழுத்தாளன் கருத்தியல் தளத்தில் நின்று எழுதுவதோடு மட்டுமின்றி, போராட்டக் களத்திலும் பங்கேற்று - அடக்குமுறைகளுக்கும் அரசுக்கும் எதிராக இயங்க முடியும் என்பதற்குச் சான்றாக தோழர் வள்ளிநாயகம் தமிழகம் எங்கும் சுற்றுப் பயணம் செய்து ‘நாங்கள் இந்துக்கள் அல்லர்' என்ற விழிப்புணர்வுப் பிராச்சாரப் பயணத்தை வெற்றிகரமாக நடத்தினார். இது அவருடைய துணிச்சலுக்கு சான்றாகத் திகழும். தன்னலமற்ற, கொள்கை சமரசமற்ற, சுயமரியாதை வீரராகவும் சமூக மனிதராகவும் இறுதிவரை வாழ்ந்து மறைந்த தோழர் ஏபி. வள்ளிநாயகத்திற்கு அவருடைய மறைவுக்குப் பிறகு 16.6.2007 அன்று ‘பாலம் தலித் முரசு கலை இலக்கிய விருது 2007' வழங்கப்படுகிறது. அவருடைய கருத்தியல் தெளிவுமிக்க எழுத்துக்காகவும், தலித் வரலாற்றை அகழ்ந்தெடுத்த ஆற்றலுக்காகவும், சமரசமற்ற கொள்கைப் பிடிப்புக்காகவும் ‘தலித் முரசு' இதழும் ‘பாலம்' அமைப்பும் இவ்விருதினை அவருடைய மறைவுக்குப் பிறகு வழங்கி பெருமை கொள்கிறது.நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com