Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
ஜூலை 2006

சகோதரத்துவமே மக்களாட்சியின் ஆணிவேர்

கிருத்துதாசு காந்தி

Christhudoss Gandhi மாணவர்களின் / மாணவிகளின் உரிமையும், பொறுப்பும் எனும்போது, ஏதோ உரிமை என்ற ஒன்று தனித்தும், பொறுப்பு என்ற ஒன்று அதிலிருந்து தனித்தும் இருப்பது போலவும், இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டதாகவும் கருதிக் கொள்கின்றனர். உரிமை என்பது சுதந்திரத்திலிருந்து பிறப்பது என்றும், மாணவர் உரிமையைக் கிளத்தும் பொறுப்பான பக்குவம் இல்லா பருவத்தினர் என்றும், மூத்தோர் பாவித்துக் கொண்டு - அந்த இளைய தலைமுறையினர்க்குப் பொறுப்புகளைப் பற்றிச் சொல்லித் தர வேண்டும் என்று மூத்தோர்களாக வகுத்துக் கொள்ளும் சிலர், தர்ம நீதிகளைச் சுமத்துவது வாடிக்கையாக உள்ளது. இந்த வாடிக்கை வாசகத்தில், "படிப்பது உனது கடமை' என்ற வசனம் மாணவருக்கு வாசிக்கப்படுகிறது.

நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்வேன். குடியாட்சியின் உச்சத்தில் வைத்து மெச்சத்தக்க உனக்கு உரிமை உன் வசத்தது. அந்த உரிமையைக் கையாளும் பொறுப்பும் உன் வசத்ததே. உரிமை வேறு, பொறுப்பு வேறல்ல. உன் உரிமையை நீ துய்த்துக் கொள்வதற்கு ஆன கருவிதான் பொறுப்பென்பது. கல்வி உமது உரிமை. அந்தக் கல்வியை முறையாகப் பெற்றுக் கொள்வது உமது பொறுப்பு. உடுக்கை உமது உரிமை. எப்படி பொறுப்போடு உடுத்துக் கொள்வது என்பதும் நீங்கள் உணர்ந்தது தான். கல்வி உமது உரிமை. தேர்வுகள் என்பது உம்மீது சுமத்தப்படும் கடமை. உடுத்துவது நுமது உரிமை. சீருடையும், இன்ன உடைதான் அணிய வேண்டுமென்பதும் சுமத்தப்படும் கடமை. அரசியல் நுமது உரிமை. மாணவப் பருவத்தில் தேர்தலில் நிற்காதீர் என்பது ஒருவித கடமைக் கட்டுப்பாடு.

சுதந்திரக் குடியாட்சியில் பிறந்தவர் தாம் நாமெல்லாம். அய்ம்பதைத் தாண்டிய எம்போன்றோர், இந்திய அரசியல் வளர்ச்சியில் பலவித மாற்றங்களைக் கண்டு வந்துள்ளோம். உங்கள் வயதொத்தவர் கடந்த 1520 ஆண்டுகளாகக் கண்டுவரும் அரசியல் என்ன நிலையில் இருக்கிறது என்பது, உங்களுக்கு நன்றாகவே தெரிகிறது. என்ன தெரிகிறது? தற்போது நடப்பது கட்சிகளின் குடியாட்சி (Party Democracy) என்பது தெரிகிறது. ஆனால், "கட்சிகளுக்குள் குடியாட்சி' (Democracy) ஊன்றியிருக்கிறதா என்பது புலரவில்லை. ஆகவேதான் நேற்று வரை கட்சிப் பணியிலே இல்லாதவர் கூட, கட்சித் தலைவராக, மாநில முதல்வராக, நாட்டுப் பிரதமராக ஆக்கப்படுவதற்கான சூழ்நிலைகள் உருவாக்கப்படுகின்றன. இது ஏன் நிகழ்கிறது? எல்லா வகையான ஆட்சிமுறைகளை விடவும், முடியாட்சியை விடவும், எதேச்சதிகாரத்தை விடவும், சர்வாதிகாரத்தை விடவும், வாரிசுவய ஆட்சியை விடவும், மதஞ்சார் இறையரசுகளை விடவும், பொதுவுடைமை ஆட்சிகளை விடவும், குடியாட்சிக்கு ஒப்பில்லை என்றபோதும், இந்தியக் குடியாட்சியில் முண்டு முடிச்சுகள் உருவாவது ஏன்?

குடியரசின் உச்சிக் குடுமியரான மாணவர்களாகிய நீவிர் இதை உற்றுணர வேண்டும். ஆனால், நம்மை வளர்த்தெடுக்கும் இரு பெரும் நிறுவனங்களான குடும்பம், கல்வி நிறுவனம் - இரண்டும் குடியாட்சியின் தத்துவப் பூங்காக்களாக இல்லை என்பதையும் நீங்கள் மனத்தில் இருத்தல் வேண்டும். குடும்பம் ஒரு வகையில் ஒரு பாசச்சிறை. கல்வி நிறுவனங்களும் அறிவுச் சிறையாகவே அமைகின்றன. கல்லூரிகள் நுமக்கு அறிவூட்டலாம். ஆனால், குடியாட்சியின் வேரடிகளான சுதந்திரக் கூற்று, சமத்துவச் சாற்று, நேயத் திரட்டு (Liberty, Equality & Fraternity) இவை குலாவும் கூடல் மாநகரங்களல்ல கல்லூரிகள். இங்கு சுதந்திரத்தை நீங்கள் பழகி உணர முடியாது. மாணவர் மனத்தில் ஊறுவதை உரைக்க வைப்பதில்லை கல்வி; இவர்கள் தாங்களாக எதிர்பார்ப்பதை எழுதுவதில்லை
தேர்வு; இவர்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறதோ, அதை மட்டுமே எழுத வைக்கும் எதேச்சதிகாரமே தேர்வு. குடும்பம் என்பதோ பாசப்பிணைப்பாலும், தாய் தந்தையரின் தலைமையதிகாரங்களாலும், மரபுத் தளைகளாலும் சிந்தனை வெளிப்பாட்டை செகுத்து வைக்கும்.

ஆகவே, இந்த நெருடலான வளர்ப்பில் உருவாகும் நீங்கள் குடியாட்சியின் பக்குவத்தை உணர்வதற்குச் சற்று விரிந்த வெளிக்குள் வெளிச்சம் தேடவேண்டி வரும். குடியாட்சியின் சாரத்தை நீங்கள் துலக்கமாக உள்வாங்க வேண்டுமானால், நீங்கள் அண்ணல் அம்பேத்கரை வாசியாமல் ஆகாது. ஜெப்பர்சன், ஸ்டூவர்ட் மில் போன்றோரின் வாசிப்பு, அந்தந்த அயல்நாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஆனால், இந்திய மண்ணில் குடியாட்சி நடைமுறைக்குப் பொருத்தமான விளக்கவுரைகளை அம்பேத்கரை விட்டால் எடுத்துரைத்தார் யாருமில்லை. ஆகவே, இந்த நாட்டின் குடியாட்சி முறையையும், தேர்தல் நடப்புகளையும் ஒரு நெறிவழிக்குக் கொண்டு வருவதில் உங்கள் பங்களிப்பை நீங்கள் அளிக்க முனைவதற்கு முன் அம்பேத்கரை ஒரு முறைக்கு மூன்று முறை வலம் செய்து வாருங்கள். நீங்கள் உன்னதமான குடியாட்சியின் உரிமை பெற்ற பொறுப்பாளராக உலா வருவீர்கள். உலகைத் திருத்துவீர்கள்.

மக்களாட்சி என்பது, பெரும்பான்மையரின் கும்பல் கூச்சலல்ல. மாறாக, சிறுபான்மையராயினும் சரி, மெலியவராயினும் சரி, அவர்களது குரலுக்கும் இடமளிக்கும் அமைப்புமுறைதான் மக்களாட்சி. ஆட்சியைக் கைப்பற்றியவர்க்கு என்று மட்டுமல்லாமல், எதிர்க் கட்சிக்கும் ஓர் ஆளுமையைத் தருவது மக்களாட்சி; மக்களாட்சி மட்டுமே. வேறெந்த ஆட்சி முறைகளிலும் ஆள்பவர்களல்லாமல் வேறெவர்க்கும் அதிகாரப் படைப்போ, எடுத்துரைக்கும் குரலோ வழங்கப்படுவதில்லை. இந்த அடிப்படைகளைப் புரிந்து கொண்டால், குடியாட்சியைக் கொண்டாடுவது எப்படி என்பது துலங்கிப்போம். குடியாட்சி என்பது, வெறுமனே பெரும்பான்மையரின் அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றுபவரின் மீக்கூறும் சுதந்திரக் கொட்டம் இல்லை என்பது புலரும்.

குடியாட்சியை உண்மையான மக்கள் ஆட்சியாக மலர வைப்பதற்கு அடிப்படையானது சமூக நீதி. ஒரு நாட்டின் சமூக மக்களிடையே சமத்துவமும், பாகுபாடின்றி உரிய வாய்ப்புகளும் மறுக்கப்படின், அந்த நாட்டின் மக்களாட்சி, கட்சிகளின் ஆட்சியாகத்தான் இருக்கும்; கட்சிகள் ஆதிக்க சமூகத்தினரின் கூடாரமாய்ப் போகும். இந்தியாவின் வளர்ச்சி 8 சதவிகிதத்தைத் தாண்டி நடையை எட்டிப் போட்டுக் கொண்டு போகிறது. எனினும் சிலர் மட்டும் வளர்ச்சியோ வளர்ச்சி என்று குதூகலிப்பதும், பலர் இன்னும் தளர்ச்சியான தளர்ச்சி என்று தத்தளிப்பதும் குடியாட்சியில் ஏன் நிகழ்கிறது? மக்களது ஆட்சியில் ஏன் மக்கள் தவிக்கின்றனர்? அரசியலில் ஏன் எளிய மக்களுக்குச் சமபங்கு கிடைப்பதில்லை?

இது ஏதோ அரசியல் கட்டமைப்புத் தத்துவத்தில் ஓட்டைகள் இருப்பதனால் நிகழ்கிறது என்று கூற முடியாது. ஓட்டை அங்கல்ல; ஒட்டடை படிந்திருப்பது சமூகத் தளத்தில். சமனற்ற, நீதியற்ற, கூட்டுறவு அற்ற, தனி மனிதரை விதந்து, கூட்டு நன்மையைத் துறந்த இந்த இந்திய சமூக மேடு பள்ளங்களில்தான் இந்தியக் குடியாட்சி தடுக்கி விழுகிறது. இந்த மேடுபள்ளங்களைச் சமட்டிச் சீராக்கும் சம்மட்டியராய் மாணவராகிய நீங்கள் உருவாக வேண்டும். அப்போதுதான் குடியாட்சியின் எதிர்கால வெளிச்சங்களாக நீங்கள் வரமுடியும்.

வெறுமனே ஏட்டுப் படிப்பில் முதல்வராக வருவதனால் மட்டும் எதிர்கால முதல்வர்களாக நீங்கள் வரலாகாது. மதிக்கூர்மை மட்டும் சமூகச் சிறப்பைக் கொண்டு வராது; மதிக்கூர்மையை விட குடிப்பார்வை மிகுதியும் தேவை. குடிப்பார்வையுள்ள அமைச்சர் மதிக்கூர்மை இல்லாமல் போனாலும், மதிக் கூர்மையுள்ள அதிகாரிகள் அவருக்கு அதை வழங்க முடியும். ஆனால், மதிக் கூர்மையுள்ள அமைச்சருக்கு குடிப்பார்வை இல்லை எனில், மதிக் கூர்மையுள்ள அதிகாரிகளுடன் கூட்டுச் சதி செய்து, குடிகளைக் கவர்பவராக அல்ல, குடிகளிடம் கவருவராக மாறிப்போவதை நாம் கண்டு வருகிறோம்.

சமூகத்தில் சமத்துவம் திகழும் போது, அரசியலிலும் அது தவழும்; இல்லாத போது குடியாட்சி கலங்கும். இந்திய நாட்டில் ஓரங்கட்டப் பட்டிருக்கும் பட்டியல் இனத்தவரில் ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர்களைக் கல்லூரிப் பட்டம் பெறவைப்பதற்கு (10,000 மருத்துவர், 50,000 பொறியாளர் உட்பட) வெறுமனே 2000 கோடி ரூபாய்தான் தேவை. மக்கள் தொகையில் 1/6 ஆக இருக்கும் இந்த மக்களுக்கு, பட்ஜெட்டில் 1/250 பங்கு கூட இந்த இன்றியமையா கல்விக்காகக் கிட்டாமல் போனால், குடியாட்சி எப்படிப் பொருள்படும்? அதேவேளை சொகுசுக் கார்களில் செல்வந்தர்கள் மேனி குலுங்காமல் ஊர்ந்து செல்லவும், வாணிபர்கள் விசுக்கென்று பொருளை ஈட்டிக் கொள்ளவும், நெடுஞ்சாலைகள் அமைக்க 4 லட்சம் கோடி ரூபாய்களை இந்தக் குடியாட்சியில் பெற முடிகிறது என்றால், குடிகளுக்காக குடிகளால் அமையும் ஆட்சி என்று எப்படிப் பொருள்படும்? 4 லட்சம் கோடி ரூபாய் ஒரு சாரார்க்குச் சல்லிசாகக் கிட்டும்போது, சல்லிக்காசான 2000 கோடி ரூபாய் தேவையானவர்க்குக் கிடைக்காமல் போவது ஏன்?

Ambedkar மக்களாட்சியில் இந்தப் பட்டியல் இன மக்களின் கல்விக்காக 2000 கோடி ரூபாய் இருக்கிறதா இல்லையா? ("இருக்கிறது இருக்கிறது'' அவையினர்), 2000 கோடி ரூபாய் பட்டியல் இனத்தவர்க்குக் கிடைக்க வேண்டுமா வேண்டாமா? ("வேண்டும் வேண்டும்'' அவையினர் உரத்த குரலில்).

இந்த சமூக நீதியை நீங்கள் உங்கள் வகுப்பறையில் ஆசிரியர்கள் சொல்லித் தராமலே கற்றுக் கொள்ள முடியும். முதல் ரேங்க் வாங்கும் மாணவரிடம் "நீ அந்தக் கடைசி ரேங்க் வாங்கும் மடையனுடன் பழகாதே' என்பதுதான் பொதுவான ஆசிரியரின் அறவுரையாக இருக்கும். திருவள்ளுவரின் ஒப்புரவையும், அம்பேத்கரின் ஒப்பரிய சமத்துவ விளக்கத்தையும், வள்ளலாரின் "ஒத்தாரும், உயர்ந்தாரும், தாழ்ந்தாரும், எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்த வேண்டும்' என்ற மனித நேய ஒருமைப்பாட்டு உரிமையை உணர்ந்தவர்களாக நீங்கள் இருப்பின், முதல் ரேங்க் வாங்குபவரும் கடைசி ரேங்க் வாங்குபவரும் இணைபிரியா நண்பர்களாக இருக்கப் பழகிக் கொள்ள முடியும். நூறு மதிப்பெண் வாங்குபவர்க்கும், நாற்பது மதிப்பெண் வாங்குபவர்க்கும் ஒரே மதிப்பைத் தருவது என்ன என்பது விளங்கிப் போகும். "ஒரு மனிதன் ஒரு மதிப்பு'' என்று அம்பேத்கர் தந்த குடியாட்சி இலக்கணம் துலங்கிப் போகும்.

"மெரிட்'டில் வருபவரை மட்டும் திரட்டு. மற்றவரையெல்லாம் அடித்து விரட்டு' என்ற தகுதிப் பாடத்தை ஊட்டும் கல்லூரிகள், "மெரிட்டை' உங்கள் "பொறுப்பாக' ஆக்கப் பார்க்கிறது. "திறமை'க்கு மட்டும் நீ "பொறுப்பாகி' விட்டால், பிற தோழர்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உனக்கு எந்தவொரு பொறுப்பும் கிடையாதா என்ன? உன் கல்லூரியோ, குடும்பமோ, சாதியோ, பெரும்பான்மையோ இந்த உணர்வுகளை ஊட்டுமா என்பது நிச்சயமில்லை. அம்பேத்கர் புகட்டிய மனித நேயமும் சகோதரத்துவமும் நிச்சயமாக இதை ஊட்டும்; உரத்தோடு ஊட்டும்.

"சிலர் மக்களாட்சியை சமத்துவத்துடனும், சுதந்திரத்துடனும் சமன்படுத்திப் பார்க்கின்றனர். சமத்துவமும் சுதந்திரமும் மக்களாட்சியின் மிக முக்கிய கவனத்திற்குரியவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சமத்துவத்திற்கும் சுதந்திரத்திற்கும் எது ஆதாரமாக இருக்கிறது என்பதே முக்கிய கேள்வி. அரசின் சட்டமே சமத்துவத்திற்கும் சுதந்திரத்திற்கும் ஆதாரமாக இருக்கிறது என்று சிலர் சொல்லலாம். இது உண்மையான பதில் அல்ல. சமத்துவத்திற்கும் சுதந்திரத்திற்கும் சகோதர உணர்வே ஆதாரம். இதைத்தான் பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் சகோதரத்துவம் என்று அழைத்தனர். சகோதரத்துவம் என்ற சொல், இதன் முழு பொருளை வெளிப்படுத்தக் கூடியதாக இல்லை. புத்தர் சொன்னதுபோல "மைத்ரி' (அர்த்தமுள்ள கருணை) என்பதே இதற்கான சரியான சொல்லாகும். சகோதரத்துவம் இல்லையெனில், சுதந்திரம் சமத்துவத்தை அழித்துவிடும்; சமத்துவம் சுதந்திரத்தை அழித்து விடும். மக்களாட்சியில் சுதந்திரம் சமத்துவத்தையும், சமத்துவம் சுதந்திரத்தையும் அழிக்காமல் இருப்பதற்கு இவ்விரண்டின் அடிநாதமாக சகோதரத்துவம் இருப்பதே காரணம். எனவே, சகோதரத்துவமே மக்களாட்சியின் ஆணி வேராகும்.''
- டாக்டர் அம்பேத்கர்

நேயமிக்க குடியாட்சிக்குப் பொறுப்பான உரிமையாளர்களாக நீங்கள் மிளிர்ந்து வர வாழ்த்துகிறேன்.

19.3.2006 அன்று சென்னை லயோலா கல்லூரியில் "மக்களாட்சியில் மாணவர் உரிமையும் பொறுப்பும்' என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் ஆற்றிய உரையின் சாரம்.நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com