Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu width=
 width=ஜனவரி 2009

இடம்பெயரும் இடஒதுக்கீடு - 5
வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே! எங்களிடம் வராதீர்கள்
அய். இளங்கோவன்


boy நன்றாகப் படித்த, நாகரிக பார்வை கொண்ட, மனித உரிமைகளைப் போற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் ஜனநாயக நாட்டில் வாழ்கிற அரசு அலுவலர்களுக்கு, இடஒதுக்கீட்டு விதிகள் மட்டும் வெறுப்புக்கு உரிய ஒன்றாக இருப்பது ஏன்? இந்த வினாவுக்கு ஒரே விடைதான் இருக்கிறது. அது சாதிய மனநிலை. என்னுடைய பல்லாண்டு கால பொதுப்பணியில், பல்லாயிரம் தருணங்களில் சாதிய மனநிலையின் கொடூர முகத்தினைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலான இந்தியர்கள் ஒவ்வொருவரும் சாதிப் பேய் பிடித்த இரட்டை "ஆவி'களைக் கொண்ட மனிதர்களாகத்தான் வாழ்கிறார்கள்.

அண்ணல் அம்பேத்கர் இதற்கான மாற்று வழியை சிந்தித்ததன் விளைவாகத்தான் சட்ட உரிமைகளை உருவாக்கியிருக்கிறார். சமூகப் புரட்சிக்கான வாய்ப்புகளை முற்றிலும் தடை செய்ய வேண்டுமென்றால், கல்வி கற்பதற்கான உரிமையையும், ஆயுதம் ஏந்துவதற்கான உரிமையையும் முற்றிலும் தடை செய்துவிட வேண்டும். இந்து சமூகம் தாழ்த்தப்பட்டோருக்கு அதைதான் செய்திருக்கிறது என்கிறார் அம்பேத்கர். கல்விக்கான உரிமை மறுக்கப்படுகிறபோது, தனது நிலையின் காரணத்தை அம்மனிதனால் உணரமுடியாமல் போய்விடுகிறது. அவன் "விதி'யை நம்பத் தலைப்பட்டு விடுகிறான். இந்த உரிமைகளை மறுப்பதற்கான மனநிலை சாதிய நோயினால் பீடிக்கப்பட்டிருக்கும் மனநிலைதான். இந்த மனநிலையில் வெடி வைக்க வேண்டுமானால், தலித்துகளுக்கான உரிமைகளை சட்டப்படியானதாக மாற்றிவிட வேண்டும். ஏனெனில், அரசுக்கு கட்டுப்படும் மனோநிலை சாதி இந்துக்களிடம் உண்டு என்று அம்பேத்கர் எண்ணினார்.

“இந்துக்கள், உண்மையில் தீண்டத்தகாதவர்களின் நோக்கங்களையும் நலன்களையும் எதிர்க்கின்றனர். தீண்டத்தகாதோர் மத்தியில் செயல்பட்டு வரும் நட்பு சக்திகளிடம் அவர்கள் இரக்கம் காட்டுவதில்லை, ஆர்வ விருப்பங்களையும் அவர்கள் கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை. அவர்களுடைய விருப்பங்களுக்கு எதிராகவே இருக்கின்றனர். அவர்கள் தீண்டத்தகாதவர்களுக்கு நிச்சயமாக நியாயம் வழங்க மாட்டார்கள். அவர்களிடம் பல வகைகளிலும் பாரபட்சமுடன் நடந்து கொள்வார்கள். மதத்தின் ஆதார பலம் அவர்களுக்கு இருப்பதால், தீண்டத்தகாதவர்களிடம் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்ள அவர்கள் சிறிதும் தயங்கவோ, மயங்கவோ மாட்டார்கள்.

அதற்காக வெட்கித் தலை குனியவும் மாட்டார்கள். இந்துப் பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மைக்கு எதிராக, அரசியல் சட்டத்திலேயே தீண்டத்தகாதவர்களின் அரசியல் உரிமைகள் உறுதி செய்யப்படுவதுதான் - இத்தகைய மக்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கான வழியாகும். தீண்டத்தகாதவர்கள் கோரும் இந்தப் பாதுகாப்பை மிகையான கோரிக்கை என்று எவரேனும் கூற முடியுமா?'' (அம்பேத்கர் தமிழ் நூல் தொகுதி 17; பக்.47)

ஓர் இந்துவை நான் நம்ப மாட்டேன் என்று சொல்வதற்கு, ஒரு தீண்டத்தகாதவருக்கு அத்தனை முகாந்திரங்களும் இங்கே இருக்கின்றன. அம்பேத்கரின் விருப்பப்படியே சட்டங்கள் உருவாகிவிட்டன. ஆனால் நிலைமை மட்டும் முழுமையாக மாறவில்லை. அவ்வாறெனில் அம்பேத்கர் ஏமாந்து விட்டாரா? அவர் ஏமாந்து போனதாக சொல்வதற்கு இடமில்லை. ஆனால் அவருடைய சிந்தனை இன்றளவும் மக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை. ஒரு தலித் தனது சட்டப்படியான உரிமைகளைப் பெறுவதற்கு என்று முழுமையாக ஒன்று சேர்கிறானோ, அன்றுதான் அவர் கனவு முழுமை பெறும். ஆனால் பல்வேறு திட்டங்களும் உரிமைகளும் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.

மூன்றாம் வகுப்பிலிருந்து அய்ந்தாம் வகுப்பு வரை படிக்கிற ஆதி திராவிடர் பெண் குழந்தைகளுக்கு, மாதம் அய்ம்பது ரூபாய் ஊக்கத் தொகை வழங்கிட வேண்டும் என்று ஓர் அரசாணை இருக்கிறது. இதன்படி, ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ஆண்டொன்றுக்கு 500 ரூபாய் வழங்க வேண்டும். தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இதைப் பெற்றுத்தர வேண்டும். பெரும்பாலானவர்கள் இதைப் பெற்றுத் தருவதில்லை. இத்திட்டம் அப்படியே ஏட்டளவில் இருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் 2007 - 2008 கல்வியாண்டில், இத்திட்டத்துக்கு உரிய 69 லட்சம் ரூபாய் பயன்படுத்தப்படõமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

சுகாதாரக் குறைவான பணிகளை செய்கின்ற பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு, அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்கள் இத்தொகையைப் பெறலாம். 2006ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டு வரை இந்த உதவித்தொகை வழங்கப்படவில்லை. ஒருவேளை துப்புரவுப்பணி வேலூர் மாவட்டத்தில் அறவே ஒழிந்து விட்டதாக அரசு எண்ணுகிறதா என்று தெரியவில்லை. கல்வித் திட்டத்தில் மட்டுமல்ல,

எல்லா துறைகளிலும் இதே நிலைதான் தொடருகிறது.

அண்மையில் இந்த நிலைக்கு உச்சம் வைத்ததுபோல ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அது ஓர் அதிர்ச்சிகரமான அனுபவம். வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினராக நான் இருப்பதால் சனவரி 26, 2009 அன்று, "தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்துண்ணலுக்குப்' போக வேண்டி இருந்தது. இந்த விருந்துண்ணலுக்கு அரசு ஓர் ஆணையை 1990லேயே வெளியிட்டது. “ஒவ்வொரு குடியரசு நாள் அன்றும் தீண்டாமை ஒழிப்பு நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தலித் மக்கள் ஆலயப் பிரவேசம் செய்வதைத் தடுக்கும் நிலை இன்னும் நிலவுவதால், அந்த நிலையைப் போக்க அன்று ஆலயங்களில் சமபந்தி விருந்துண்ணல் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இவ்விருந்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையேற்க வேண்டும்'' என்று அந்த அரசாணை கூறுகிறது. இவ்வாணைப்படிதான் இந்த சமபந்தி விருந்து நடைபெறுகிறது என்பதை நினைத்தபோது உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தது.

வேலூர் காட்பாடி சாலையில் இருக்கும் அருள்மிகு சொர்ணமுக்கீஸ்வரர் ஆலயத்தில்தான் சமபந்தி விருந்து நடைபெற்றது. (கோயில்கள்தான் ஜாதியின் தோற்றுவாய். இன்றளவும் இக்கோயில்களில் பிறப்பால் பார்ப்பனர் அல்லாத எவரும் இக்கோயில்களின் கருவறைக்குள் நுழைய அனுமதி இல்லை. "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்று அரசாணைகள் மற்றும் சட்டமன்றத் தீர்மானங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டும், அவை இன்றும் உச்ச நீதிமன்ற வாயிலில் மண்டியிட்டுக் கொண்டிருக்கின்றன. சாதி - தீண்டாமையை நிலைநிறுத்தும் இக்கோயில்களில் "சமபந்தி போஜனம்' நடத்துவதே முரண்நகை. சாதி பாகுபாட்டுக்கு ஆட்படும் ஒடுக்கப்பட்ட மக்கள், முற்றாக இந்து கோயில்களைப் புறக்கணித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் - ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய மோசடிகள் அங்கு அரங்கேற்றப்படுகின்றன).

மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் கண்காணிப்பாளர் வேலூர் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.வை சேர்ந்த முகமது சகி, வேலூர் மேயர், காட்பாடி நகராட்சித் தலைவர், வட்டாட்சியர், கழிஞ்சூர் பேரூராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போன்ற சிறப்பு அழைப்பாளர்கள் இதில் பங்கேற்றனர். விருந்துண்ண வந்திருந்தவர்கள், அதிகாரிகளுடன் சேர்ந்து 20 பேருக்கு இருந்தனர். விருந்து தொடங்கியதும் இந்த அலுவலர்கள் சிறப்பு அழைப்பாளர்களோடு, அக்கோயிலின் வெளியே காத்திருந்த பிச்சைக்காரர்கள் அழைத்து வரப்பட்டு நலக்குழு உறுப்பினர்கள் நால்வருடன் அமர வைக்கப்பட்டனர். 2ஆவது பந்திக்கு, கோயிலின் எதிரே நடைபெற்றுக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி விழாவுக்கு அழைத்து வரப்பட்டிருந்த மகளிர் கூட்டம் வந்து அமர்ந்தது. அவர்களுக்கு இதற்கென "டோக்கன்' வழங்கியிருந்தனர். அவ்வளவுதான். தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்துகிற சமபந்தி விருந்து முடிந்துவிட்டது.

ambed இந்த விருந்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சித் தலைவர், தீண்டாமை ஒழிப்பு பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்த விருந்து எதற்காக நடக்கிறது என்றே அறியாத ஓர் அலுவலர், “சார், இன்றைக்கு அன்னதானம் சார்! இது இந்து அறநிலையத்துறையோட வேலை சார். ஆனா ஆதிதிராவிடர் நலத்துறையை செய்ய வச்சுட்டாங்க'' என்றார். இந்த அறியாமையை வெளிப்படுத் திக் கொண்டே அவர் மற்றொரு உண்மையை சொல்லி விட்டார். வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஏழு ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிக் காப்பாளர்கள் தலையில் விருந்து செலவுகளைச் சுமத்தி விட்டிருக்கிறது ஆதிதிராவிடர் நலத்துறை. ஆனால், விருந்து செலவுக்கான பற்றோ அதிகாரிகளின் பைகளுக்குப் போய்விடும்.

தீண்டாமையை ஒழிக்க போடப்பட்ட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தும் அழகு இதுதான். தமிழகம் முழுமைக்கும் மட்டுமின்றி, இந்தியா முழுமைக்குமே கூட நிலைமை இதுவாகத்தான் இருக்கும். தலித் மக்கள் விடிவு பெறுவதற்காகவும், கல்வி, பொருளாதார நிலைகளிலும், சமூக நிர்வாகப் பங்கேற்பிலும் உயர்வு பெற போடப்பட்டுள்ள எல்லா திட்டங்களும் இப்படித்தான் இருக்கின்றன.

இந்தத் திட்டங்கள் இவ்வாறு அலட்சியமாகவும், பொறுப்பற்றும், கடமை உணர்வு இன்றியும் செயல்படுத்தப்படுவதற்கான அடிப்படைக் காரணம் சாதி மனோபாவம் அன்றி வேறில்லை. இத்திட்டங்களை செயல்படுத்தும் இடத்தில் இருக்கிற சாதி இந்து அதிகாரிகள், சாதியையும், ஊழல் சிந்தனையையும் உள்வாங்கி "கவர்மெண்ட் பார்ப்பனர்'களாகிவிட்ட தலித் அதிகாரிகள் ஆகியோரே இதற்குக் காரணம். இத்தகைய சாதிய மனோநிலைதான் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி நிர்வாகத்திலும் இருக்கிறது.

இந்த மனநிலை இருப்பதால்தான், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை; சைவ பானு கல்லூரி, அருப்புக்கோட்டை; சீதையம்மாள் ஆறுமுகம் பிள்ளை கல்லூரி, திருப்பத்தூர்; கிருஷ்ணம்மாள் (ம) கல்லூரி, கோவை; கோன் யாதவ்(ம) கல்லூரி, மதுரை; என்.கே.டி. நேஷனல் (கல்) கல்லூரி, சென்னை; சிறீமத் சிவஞான கலைக்கல்லூரி, மைலம்; ராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி ஆகியவற்றில் ஒரே ஒரு தலித் ஆசிரியர் கூட இல்லை. அரசு உதவி பெறும் 160 தனியார் கல்லூரிகளில் இன்றைக்குக் கூட ஒரு கல்லூரியிலும் ஒரு தலித் முதல்வராக இல்லை என்பதும் இச்சாதிய மனநிலையால் தானே? இவர்கள் அரசியல் சாசனத்திற்கு நேர் எதிராகத்தானே நடந்து கொள்கிறார்கள்? தீண்டாமை ஒரு குற்றம், தீண்டாமை ஒரு பாவச்செயல் என்றெல்லாம் கற்பித்துக் கொண்டு, தலித்துகளை பணியில் சேர்க்காதிருப்பதும் தீண்டாமைக் குற்றம்தானே? சட்டப்படி தவறுதானே!

தனியார் கல்லூரிகள் தலித் ஆசிரியர்களை உள்ளே வரவிடாமல் தடுக்க, பல வகையான தந்திரோபாயங்களை கையாளுகின்றன. லஞ்சம் வாங்குவதை மிக நேர்த்தியான தொழில் நுணுக்கத்துடன் செய்வது போலத்தான் இதுவும். மேலோட்டமாகப் பார்த்தால் இந்த நடவடிக்கைகள் தலித் விரோத நடவடிக்கைகளாகத் தெரியாது. அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி நிர்வாகங்களின் ஒப்புதலோடு, ஆசிரியர் கள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு இடப் பெயர்வு (Migration) செய்து கொள்ளலாம். இந்த இடப்பெயர்வுப் பணியிடங்களில் இடஒதுக்கீட்டை கடைப்பிடிக்க வேண்டியதில்லை என்பதால், இடப்பெயர்வு மூலம் இடஒதுக்கீட்டை இடப்பெயர்வு செய்துவரும் வேலை நடைபெறுகிறது.

தலித் பணிநியமனத்துக்கு என வரும் சுழற்புள்ளி (Roster) காட்டப்படுவதில்லை. சிலர் இந்த தவறுகளை தொழில் நேர்த்தியுடன் செய்துவிடுவதுண்டு. வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து இக்கல்லூரியில் பணியாற்றுவதற்கு தகுதியுடைய தலித் நபர் இல்லை என்று ஒரு சான்றிதழை வாங்கி வைத்துக் கொண்டு, தலித் இடங்களை பிறரைக் கொண்டு நிரப்பிவிடுவர். சில கல்லூரிகள் மேலும் கொஞ்சம் தாராளமாக நடந்து கொள்ளும். தலித் பணி நாடுநர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலுக்குப் பிறகு வந்தவர்களில் யாரும் எதிர்பார்க்கும் அளவுக்குப் போதிய தகுதியுடன் இல்லை என்று சொல்லித் திருப்பி அனுப்பப்படுவர். கோப்பு மூடப்படும்.

இத்தனியார் நிதியுதவிக் கல்லூரிகளைக் கண்காணிக்க, தமிழகத்தில் ஏழு மண்டல கல்லூரிக்கல்வி இயக்குநர்கள் இருக்கிறார்கள். சென்னை (2), வேலூர், திருச்சி, கோவை, திருநெல்வேலி, மதுரை ஆகிய நகரங்களில் இருக்கும் இவர்கள்தான் - இக்கல்லூரிகளின் பணி நியமனங்களுக்கு ஒப்புதல் அளிப்பார்கள். இனச்சுழற்சி முறை (Roster turn) எனப்படும் இனச்சுழற்றிப் புள்ளிகளையும் நிர்ணயிப்பவர்கள் இவர்கள்தான். ஆனால் கையூட்டு மூலம் இவர்கள் கைகள் முடக்கப்படும். இப்படியான உத்திகள் மூலம் தொடர்ந்து தலித் விரோத போக்குடன் இக்கல்லூரிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் ஏற்படும் எந்த ஆட்சி மாற்றமும் இந்த நிலையை மாற்ற முயல்வதில்லை. தலித் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற அரசியல் அமைப்புகளுக்கு ஓட்டு வாங்குவதற்கான களப்பணிகளை ஆற்ற வேண்டியுள்ளதால், இவற்றையெல்லாம் அவர்களின் வேலைத் திட்டத்திற்குள்ளேயே அனுமதிப்பதில்லை. தலித் மக்களுக்கு மறுக்கப்படும் சமூக நீதி மட்டுமன்று இந்த இடஒதுக்கீட்டு மறுப்பு. வேறு ஒரு வகையில் பார்த்தால், தலித் மக்களின் பெயரைச் சொல்லி செய்து வரும் ஒரு திருட்டுத்தனமும் கூட.

student தலித் மக்களுக்கு என்று வழங்கப்படும் சிறப்பு உட்கூறு திட்டத்துக்கான நிதி செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதை நாம் அறிவோம். 1999 - 98இல் 594.53 கோடி, 98-99இல் 509.07 கோடி, 99 - 2000இல் 169.07 கோடி ரூபாய்களை திருப்பி அனுப்பியிருக்கிறது அரசு என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்கால புள்ளிவிவரங்கள் கிடைத்தாலும் அவையும் இதையேதான் சொல்லும். அதே வகையில்தான் இத்தனியார் கல்லூரி நிர்வாகங்களும் தலித் மக்கள் பணியிடங்களுக்குரிய நிதியை அம்மக்களுக்கு வழங்காமல், தலித் அல்லாத சாதி இந்துக்களுக்கு வழங்கி வருகின்றன.

கடந்த 9 ஆண்டு புள்ளி விவரங்களின்படி, அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் ஊதியத்திற்காக அரசிடம் இருந்து 1496.26 கோடி ரூபாயை பெற்றுள்ளன. இதில் 14.96 கோடி பழங்குடியின பணியாளர் ஊதியத்திற்கும், 269.15 கோடி தலித் பணியாளர் ஊதியத்திற்கும் போயிருக்க வேண்டும். மொத்தத்தில் 284.10 கோடி ரூபாய் தலித்துகளுக்கு ஊதியமாகப் போயிருக்க வேண்டும்.

ஆனால் 134.58 கோடி ரூபாய் மட்டுமே தலித் பணியாளர்களின் ஊதியமாகச் சென்றடைந்துள்ளது. பழங்குடியினருக்கு ஒரு பைசா கூட ஊதியமாகப் போய்ச்சேரவில்லை. மொத்தத்தில் 149.53 கோடி ரூபாய் தலித் மக்களுக்கு ஊதியமாகப் போய்ச் சேரவில்லை. அவ்வாறெனில், இத்தொகையை இக்கல்லூரி நிர்வாகங்கள் அரசியல் சாசனத்திற்கு எதிராக, சாதிய மனநிலையோடு, திருட்டுத்தனமாக தலித் அல்லாதவருக்கு வழங்கியுள்ளன. இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாததற்கான இன்னொரு காரணம் நமக்கு இப்போது புரிகிறது.

தலித்துகளைப் பொருளாதார ரீதியாக முன்னேற்ற விடாமலும், உயர் கல்வி நிறுவனங்களில் சமூக மாற்றத்திற்கான கல்வித்திட்டத்தில் தலித்துகளுக்கு எந்தப் பங்கும் இருக்கக்கூடாது என்ற திட்டமிட்ட சதியே இந்நிலைக்குக் காரணம்.

- அடுத்த இதழிலும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com