Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu width=
 width=ஜனவரி 2008

இந்தியாவின் “பொது எதிரிகள்” -IV

பூங்குழலி

Crying Women "எத்தனை சாட்சியங்கள் கொண்டு வந்தால் என்ன? எவ்வளவு ஆதாரங்களை எடுத்துக் காட்டினால்தான் என்ன? இத்தனை ஆண்டுகளாக நாங்களும் எத்தனையோ சிரமங்களுக்கு இடையில் எண்ணற்ற ஆதாரங்களை கண்டுபிடித்து காட்டிவிட்டோம். இந்த அரசமைப்புச் சட்டத்தில், இந்த அரசியல் சூழலில், ஒட்டுமொத்தமாக சீரழிந்திருக்கும் இந்த சமூகத்தில் எதற்கும் பயன் இருக்கப் போவதில்லை.''

குஜராத் கலவர வழக்குகளை தொடக்கத்திலிருந்தே கையிலெடுத்து, தீவிரமாகப் போராடி வரும் மனித உரிமையாளர் தீஸ்தா செடல்வாட், குற்றவாளிகளின் வாக்குமூலங்களை அண்மையில் ‘தெகல்கா' வெளியிட்டபோது வேதனையோடு சொன்ன சொற்கள் இவை.

‘தேர்தல் நெருங்கும் நேரத்தில் நரேந்திர மோடிக்கு எதிராக மிக வலுவான ஆதாரங்கள் (‘தெகல்கா' புலனாய்வு) வெளிவந்த போதும், அவர் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டாரே?' என்று படித்த - படிக்காத பாமரர்களால் சொல்லப்படுகிறது.

ஆனால், பல்வேறு மாய்மாலங்களை செய்து தேர்தலில் வெற்றி பெறுவதாலேயே - அவர்கள் செய்த படுகொலைகள் எல்லாம் ‘சரி' என்றாகி விடுமா? அரசியல்வாதிகள் கிரிமினல்மயமாகி வருவதையும், தேர்தல்கள் அவர்களைப் புனிதப்படுத்துவதையுமே இது காட்டுகிறது. தேர்தல் அரசியல் கெட்டதிலிருந்து கழிசடைக்குச் செல்கிறது என்பதைத் தவிர, இதில் சொல்வதற்கு வேறொன்றுமில்லை.

விடுதலைப் புலிகளின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான சு.ப. தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்டதற்கு நான்கு வரிகளில் இரங்கல் கவிதை ஒன்றை தமிழக முதல்வர் எழுதினார். உடனே பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று அவர் மீது ஆவேசமாகப் பாய்ந்து, ஆட்சியையே கலைக்க வேண்டும் என்று கூக்குரலிட்டு பெரும் ஆர்ப்பாட்டத்தை காங்கிரசும் ஊடகங்களும் செய்தன
.
ஆனால், ஒரு பெரும் மதக் கலவரத்தைத் தூண்டி 2000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட காரணமாக இருந்த ஒரு பயங்கரவாதியே முதலமைச்சராகப் பொறுப்பு வகிப்பதை (நரேந்திர மோடி) கண்டித்து - ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கோடியில் ஒருவர் கூட குரல் எழுப்பவில்லையே! இன்னும் சொல்லப் போனால், மோடி காங்கிரசுக்கு எதிர்நிலையில் இருப்பவர்; கருணாநிதியோ கூட்டணியில் அங்கம் வகிப்பவர்.

பார்ப்பனிய சமூக அமைப்பிற்கு குந்தகம் விளைவிக்காமல் இருந்தால் ஆளும் வகுப்பு அமைதி காக்கும்; குந்தகம் விளைவித்தால் பதறும்!

இந்திய விடுதலைக்கு முந்திய காலகட்டத்தில், காங்கிரஸ் மாநாடுகளின் ஒரு பகுதியாகத்தான் இந்து மகாசபை மாநாடுகள் நடத்தப்பட்டன. அன்றிலிருந்து இன்று வரை பல்வேறு காலகட்டங்களில் காங்கிரசும் தனது இந்துத்துவ முகத்தை அவ்வப்போது வெளிக்காட்டிதான் வந்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு மற்றும் குஜராத் கலவரத்தை முன்வைத்து அரசியல் ரீதியாக பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக, இன்று வரை வலுவான நெருக்கடியை காங்கிரஸ் உருவாக்கியதில்லை. சொல்லப்போனால், பாரதிய ஜனதா கட்சி அவற்றை தனது சாதனையாகப் பறைசாற்றிக் கொள்ளும் சூழல்தான் நிலவுகிறது. இதனால்தான், குஜராத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ""குஜராத் பரிசோதனையை நாடெங்கும் நடத்துவோம்'' என பாரதிய ஜனதா இறுமாப்புடன் கூறுகிறது.

அரசியல் கட்சிகள் அமைதி காக்கின்றன. ஊடகங்களோ ஒரு படி மேலே சென்று, இது மோடிக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் குஜராத் மாநிலத்தில் செயல்படுத்தியிருக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், அதையே நாடெங்கும் செயல்படுத்துவோம் என்று பாரதிய ஜனதா கட்சி சொல்வதாகப் பூசி மெழுகுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி ஒரு பரிசோதனை முயற்சியை இந்துத்துவ அமைப்புகள் தமிழகத்தில் தொடங்கிவிட்டன என்பதற்கு கோவை கலவரமும், குண்டு வெடிப்புமே சான்று.

தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை நகருக்கு அத்வானி வரும் சூழலில்தான் கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அது அத்வானியை குறிவைத்து நிகழ்ந்ததாகவே பாரதிய ஜனதா கட்சியும் ஊடகங்களும் கூறின. ஆனால் அன்றைய முதல்வர் கருணாநிதி அதனை மறுத்து, ""குண்டு வெடிப்பு உள்ளூர்ப் பிரச்சினையின் வெளிப்பாடே'' என அறிக்கை வெளியிட்டார். உடனடியாக யாரும் கைது செய்யப்படவில்லை.

ஆனால் அந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. உடனடியாக குண்டு வெடிப்பு வழக்கில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. உள்ளூர்ப் பிரச்சினை என்று கூறிய அதே முதல்வர் கருணாநிதி, இந்த குண்டு வெடிப்பு அத்வானியை குறி வைத்தே நடந்தது என அறிவித்தார். சடசடவென பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். "அல் உம்மா' இயக்கம் தடை செய்யப்பட்டது. இதில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய செய்தி என்னவெனில், இதுவரை கோவை கலவரத்தில் ஈடுபட்டதற்காக எந்தவொரு இந்து அமைப்பும் தடை செய்யப்படவில்லை.

ஆக, இந்திய அரசியலில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் இந்துத்துவத்தை வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ ஆதரிக்கின்றன; அல்லது அப்படி ஆதரிக்கும் கட்சிகளின் தயவு வேண்டி அக்கட்சிகளின் இந்துத்துவ செயல்பாடுகளை கண்டும் காணாமல் இருக்கின்றன. அதற்கும் மேலாக, அவர்களைப் பாதுகாக்கவும் செய்கின்றன. ஆனால் அதே நேரம், இந்துத்துவத்தின் அடிப்படையில், இந்து மதத்தின் அடிப்படையில் ஒன்றிணைப்பது ஒன்றே இந்து மதத்தையும், அதன் மூலமே சாதியத்தையும் நிலை பெறச் செய்ய முடியும் என்பதை இந்துத்துவவாதிகள் தெளிவாக அறிந்தே வைத்துள்ளனர். இதன் காரணமாகவே "ந்துக்களாக ஒன்றுபடுங்கள்'' என்ற முழக்கத்தை முன் வைக்கின்றனர்.

அந்த முழக்கத்தின் உண்மையான பொருள் ""இந்துக்களாக ஒன்றுபடுங்கள்; சாதிகளாக வேறுபடுங்கள்'' என்பதே!

இந்துக்களாக ஒன்றுபடுவதற்கு செய்ய வேண்டிய அத்தனையையும் திட்டமிட்டு செயல்படுத்துகின்றனர். அதன் ஒரு திட்டமே, மாற்று மதத்தினரை எதிரிகளாக முன்னிறுத்துவது. பொதுவான எதிரி என்று அடையாளம் காட்டுவதன் மூலம் மக்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக அத்திசையில் திருப்பி, மக்களை சிந்திக்க விடாமல் செய்வதே அவர்களின் நோக்கம். இந்துக்களுக்கான எதிரிகளாக மட்டுமின்றி, இந்தியாவிற்கே அவர்கள்தான் எதிரிகள் என்று கூறுவதன் மூலம் - இதனை எதிர்ப்பவர்கள் அனைவரையும் தேச விரோதிகளாக சித்தரிக்க முடிகிறது.

உண்மையில் அவர்களின் நோக்கம் முஸ்லிம்களை ஒழிப்பதோ, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதோ அன்று.

மாறாக முஸ்லிம்களை பலிகடாவாக்கி அதன் மீது இந்துத்துவத்தை உறுதியாகக் கட்டமைத்து, சாதியப் படிநிலை சமூகத்தை நிலை பெறச் செய்வதே. இந்த செயல் திட்டத்திற்கு இந்நாட்டின் சிறுபான்மை மக்களை பொது எதிரிகளாக சித்தரிக்கின்றனர். அந்த இலக்கினை நோக்கியே தங்களின் அடுத்த நகர்வை ஒரிசாவில் தொடங்கியிருக்கின்றனர்.

குஜராத் கலவரமோ, பாபர் மசூதி இடிப்போ திடீரென்று ஒரே நாளில் நடந்த நிகழ்வு அல்ல. பல காலமாக இந்த நிகழ்வை நோக்கிய திட்டமிடல்களை அவர்கள் செய்தே வந்திருக்கின்றனர். திட்டமிடுதல் என்பது அந்த நிகழ்வை எப்படி நடத்துவது என்பது மட்டுமல்ல. அதைவிட முக்கியமாக, அந்நிகழ்விற்கான எதிர்வினைகளை மழுங்கடிப்பது. அதிலும் குறிப்பாக மக்கள் மத்தியில் இதற்கான ஆழமான எதிர்வினைகள் எழாத வண்ணம் இந்துத்துவ நஞ்சை லாவகமாக விதைத்து வந்துள்ளனர்.

குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு எத்தனை ஆழமானது என்பது கட்டுரையின் முதல் பகுதியிலேயே சொல்லப்பட்டிருந்தது. முஸ்லிம்களின் கடைகளில் பொருட்களை வாங்குவதோ, முஸ்லிம்களுக்கு பொருட்களை விற்பதோ, முஸ்லிம்களுக்கு வீட்டை வாடகைக்கு விடுவதோ, முஸ்லிம்கள் வீட்டில் வாடகைக்கு இருப்பதோ – இதுபோன்ற எந்த கலந்து பழகும் செயல்களுமே அங்கு வேறாகப் பார்க்கப்படுகின்றன.

முஸ்லிம்களுமே இந்துக்கள் தங்களிடம் வந்து உறவாடுவதை சந்தேகத்தோடும், அச்சத்தோடுமே பார்க்கும் நிலையில் உள்ளனர். இது நிச்சயமாக கோத்ராவிற்குப் பின் அல்ல; அதற்கு முன்பே இந்நிலை நிலவியதால்தான் கோத்ரா சாத்தியமானது என்பதுதான் முக்கியமான உண்மை.

அத்தகையதொரு மனநிலைக்கு மக்களை நகர்த்துவதில் பன்னெடுங்காலமாக திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர் என்பது இதன் மூலம் தெரிகிறது. இது போன்ற கண்ணுக்குத் தெரியாத நச்சுப் பரப்பல் நடவடிக்கைகள் தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டுதான் உள்ளன.

man
குஜராத்:இத்த்கைய கொடுரங்களை இனியும் அனுமதிக்க போகீறோமோ?


இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனம் செய்த பொழுது, ஜெயப்பிரகாஷ் நாராயண் அதனை எதிர்த்து நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து மக்கள் இயக்கம் கட்டினார். அதற்கு ஆதரவு கேட்டு அவர் காமராசரை சந்தித்த போது, காமராசர் அவரிடம் கேட்ட கேள்வி மிக ஆழமானது: “ஏன் உங்கள் போராட்டத்தில் ஜன சங்கத்தையும் இணைத்துக் கொண்டுள்ளீர்கள்? இந்த மதவாத சக்திகள் பல்வேறு வடிவங்களில் மக்களிடம் வந்தபோதும் மக்கள் அவர்களை நிராகரித்து விட்டனர்.

ஆனால், அவர்கள் அங்கீகாரம் வேண்டி இன்று உங்கள் பின்னால், உங்கள் தியாகத்திற்குப் பின்னால் நின்று வர முயல்கிறார்கள். மதவாத சக்திகளை வளர்த்து விட்டீர்களானால், அதற்கான விளைவை நமது அடுத்த தலைமுறையினர் அனுபவிக்க வேண்டிய நிலை வந்துவிடும். அதனால் அவர்களை விலக்கியே வையுங்கள்'' என்றார்.

இன்றும் அதே நிலை நீடிக்கிறது. அவர்கள் பல்வேறு வடிவங்களில் நம்முன் வந்து கொண்டே உள்ளனர். ஈழத் தமிழர்களுக்காக உணவுப் பொருட்கள் திரட்டுகிறார்கள்; மலேசிய தமிழர்களுக்காக உருகுகிறார்கள். இவையெல்லாமே அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றபோடும் முகமூடிகளே. அதிலும் அவர்கள் மிகத் தெளிவாகவே இவற்றை மதப்பிரச்சனையாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

நரேந்திர மோடி மிகத் துணிச்சலாக தமிழகத்திற்கு வருகிறார். முன்னாள் முதல்வர் அவருக்கு விருந்தளிக்கிறார். தொகாடியா ராமேசுவரத்திற்கு வந்து மாநாடு நடத்துகிறார். அனைவருக்கும் சூலம் அளிக்கிறார். இவர்கள் வந்து செல்லும் வரை தமிழக அரசு தனது காவல் துறை மூலம் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. உச்சக்கட்டமாக, தமிழக முதல்வரின் தலையை வெட்ட வேண்டுமென சொல்லியதற்குக் கூட பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை.

ஆங்கில கால்வாய் என்பது போல, சேது கால்வாய்த்திட்டத்திற்கு "தமிழன் கால்வாய்' எனப் பெயரிட வேண்டும் என தமிழ் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துக் கொண்டு காத்திருக்க, எந்தவித வேண்டுகோளும் வைக்காமல், "ராமர் சேது கால்வாய்' என்று தங்கள் விருப்பத்திற்கான சொல்லாடலை மிக எளிதாகப் பரப்ப இவர்களால் எப்படி முடிந்தது? பெரியார் பிறந்த மண்ணில் மதவாதத்திற்கு இடமில்லை என்று நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இன்று பெரியாரையே அவமதிக்கும் துணிச்சல் அவர்களுக்கு வந்திருக்கிறது. அதிலும் பெரியாரின் வழி வந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் ஆட்சியிலேயே இதனை அரங்கேற்றி உள்ளனர். பெரியாரை அவமதித்தவர்களுக்கும் அதனை எதிர்த்தவர்களுக்கும் "சமத்துவமாக' தேசிய பாதுகாப்புச் சட்டம் போடப்படுகிறது.

தமிழகம் கண்டிராத பிள்ளையார் ஊர்வலங்கள் நடப்பதும், ஆண்டுதோறும் அதில் பங்கேற்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிலும் குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாவதும் தற்செயலானது அல்ல.

ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் ஊர்வலங்களை முஸ்லிம்கள் வாழும் பகுதி வழியாகவே கொண்டு செல்ல வேண்டும் என்று இந்து அமைப்புகள் அடம்பிடிப்பதும், அந்த வாரம் முழுவதும் நகரமே ஒரு வித பதட்ட நிலையில் இருப்பதும், காவல்துறையினரின் அணிவகுப்புகள் நடப்பதும் தமிழகம் இதற்கு முன்பு கண்டிராதவை. சென்னை நகரில் மட்டுமே நடந்த அந்த ஊர்வலங்கள், ஆண்டுதோறும் விரிவுபடுத்தப்பட்டு பல நகரங்களிலும், சின்னஞ்சிறு ஊர்களிலும் நடக்கத் தொடங்கியுள்ளன.

ஓர் அரசியல் கட்சியாக தமிழகத்தில் வேரூன்றி பலம் பெறாத நிலையிலேயே அவர்களால் தமிழகத்தில் இந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்த இயலுமெனில், அவர்களின் திட்டமிட்ட ஊடுருவலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இனியும் நாம் விழித்துக் கொள்ளாவிட்டால், பின்னர் அவர்கள் தங்கள் பரிசோதனை முயற்சியில் வெற்றி பெற்ற பிறகு நாம் வேதனையோடும், பெரியாரின் மண்ணில் இத்தகைய மதவாதத்திற்கு இடம் கொடுத்ததற்காகவும் அவமானத்தில் தலை குனிந்தே நிற்க வேண்டும்.

-நிறைவடைகிறது


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com