Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu width=
 width=ஜனவரி 2008

மோடியின் "வளர்ச்சி' மாயை!

நரேந்திர மோடி குஜராத்தில் பெற்ற வெற்றிக்கு காரணம், அவர் அம்மாநிலத்தில் கொண்டு வந்த வளர்ச்சித் திட்டங்களே என அனைத்து ஊடகங்களும் கூச்சமின்றி எழுதுகின்றன. நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுவிட்ட தோற்றத்தை அவை ஏற்படுத்துகின்றன. ஆனால் உண்மை நிலை என்ன? அரசின் அதிகாரப்பூர்வத் தகவல்களே உண்மை நிலையை வேறென உரைக்கின்றன.

Gujarath people நரேந்திர மோடி தனது மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 12 சதவிகிதம் என ஓயாமல் கூறி வருகிறார். அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதமான 9 சதவிகிதத்தைவிட, தனது மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் அதிகம் என்பது அவர் கூற்று. ஆனால், 2006-07 ஆம் ஆண்டில், குஜராத் மாநிலத்தின் சமூக, பொருளாதார நிலையை ஆய்வு செய்து குஜராத் அரசு அளித்த அறிக்கை வளர்ச்சி விகிதம் 8.11 என்கிறது. அதைவிட முக்கியமாக, இந்தியாவிலேயே மிக அதிகமாக கடன்பட்டிருக்கக் கூடிய மாநிலமாக குஜராத் திகழ்கிறது.

2005 ஆம் ஆண்டு 70,228 கோடி ரூபாயாக இருந்த கடன், இந்த ஆண்டு 95,000 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதன்படி 5 கோடி மக்கள் தொகையுள்ள குஜராத்தின் ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் 19,000 ரூபாய் கடன் இருக்கிறது.
அகமதாபாத்தில் பணியாற்றும் பொருளாதாரப் பேராசிரியர் தர்ஷினி மகாதேவியா, "அண்மைக் காலங்களில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்கு ஈடாகவே குஜராத்தின் வளர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது என்கிறார்.

“குஜராத்தின் நடுத்தர வர்க்கத்தினர் மோடி மாநிலத்தை எடுத்துச் செல்லும் பாதையை நினைத்து மகிழ்ச்சியடையலாம். ஆனால், உழவர்கள் மத்தியிலும் ஏழைகள் மத்தியிலும் உண்மை நிலை வேறாக உள்ளது” என்கிறார் அவர். தேசிய குடும்ப நல ஆய்வு, குஜராத்தில் ரத்த சோகையும், சத்துக் குறைவும் 60 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சொல்கிறது. இந்த அழகில், பொது சுகாதார கட்டமைப்புகளை தனியார்மயமாக்குவதில் குஜராத் தான் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது.

வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க மிக எளிதான ஒரு வழியை குஜராத் அரசு கையாண்டுள்ளது. உலகளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட வரம்பு, ஒரு நாளைக்கு ஒரு அமெரிக்க டாலர். அதாவது மாதத்திற்கு 1,200 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிக்கும் அனைவரையுமே வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களாகக் கருத வேண்டும் என அய்க்கிய நாடுகள் அவையின் அறிக்கை கூறுகிறது. ஆனால், குஜராத் அரசு நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டிற்கான வரம்பை மறு நிர்ணயம் செய்துள்ளது.

அதன்படி குஜராத்தின் நகர்ப்புறத்தில் நீங்கள் மாதம் 514.16 ரூபாய்க்கு குறைவாக சம்பாதித்தால் மட்டுமே வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவராக நீங்கள் கணக்கிடப்படுவீர்கள். கிராமப்புறங்களில் இன்னும் குறைவாக மாதம் 353.93 ரூபாய்க்கு குறைவாக சம்பாதிப்பவர்கள் மட்டுமே வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களாகக் கணக்கிடப்படுகிறார்கள். மற்ற மாநிலங்களில், ஜார்க்கண்ட் போன்ற மிகவும் பின் தங்கிய மாநிலங்களில்கூட, இந்த வரம்பு மிக அதிகமாகவே உள்ளது.

குஜராத் மாநில அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையால் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கென வகுக்கப்படும் நலத்திட்டங்களின் பலன்கள் அதற்குரிய பலருக்கும் போய் சேருவதில்லை.

மேலும் வளம் பெறும், "ஏற்கனவே வளம் மிக்க' மாநிலமாகப் பறைசாற்றப்படும் குஜராத்தில்தான், நாட்டில் உள்ள 100 பின்தங்கிய மாவட்டங்களில் 3 இருப்பதாக திட்டக் குழு அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. மின்சார உற்பத்தியை தேவைக்கு அதிகமாகவே மேற்கொள்ளும் ஒரே மாநிலமென குஜராத் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறது. தங்கள் தேவைக்குப் போக எஞ்சியுள்ள மின்சாரத்தை விற்பதாகவும் சொல்கிறது. ஆனால் உண்மையில், பல கிராமங்களில் ஒரு நாளைக்கு 45 மணி நேரம் மட்டுமே மின்சாரம் பெறுகின்றனர்.

இதனால் உழவர்கள் மிக அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். சனவரி 2006 முதல் சனவரி 2007 வரை உள்ள காலப் பகுதியில் குஜராத்தில் 148 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று முதல்வர் நரேந்திர மோடியே சட்டப் பேரவையில் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 500 உழவர்கள் தற்கொலை செய்துள்ளனர். 2002 மதக்கலவரத்தில் வீடிழந்த 1,50,000 பேரில் ஏறத்தாழ 21,800 பேர் இன்னும் வீடு திரும்ப இயலவில்லை.

மாநிலத்தின் உண்மை நிலை இவ்வாறிருக்க, தான் ஏதோ குஜராத் மாநிலத்தை மிகப் பெரும் வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றி விட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த நரேந்திர மோடி முயல்கிறார். அதற்கு ஊடகங்களும் துணைபுரிவது வேடிக்கையானது!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com