Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
ஜனவரி 2006

நீதியைத் தேடும் மேலவளவு
பொ. ரத்தினம்

காலம் கடந்த நீதி, நீதியே அல்ல. மேலவளவு வழக்கில் அதுதான் நடந்திருக்கிறது. மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன் உட்பட ஆறு தலித்துகள் கொல்லப்பட்டது, மிகக் கொடூரமானதொரு குற்றம். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது முதல் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கியது வரை, இவ்வழக்கில் சாதி இந்துக்களுக்கு எதிராக நெடிய தொடர் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில், ஒரு முன்னாள் பிரதமர் கொல்லப்பட்டதாக அணுகிய அரசும் நீதித் துறையும், சமூகத்தின் விளிம்பில் வாழும் தலித்துகள் கொல்லப்பட்டதை வெறும் கொலை வழக்காகக்கூட, பார்க்கத் தவறுவது ஏன்? சாதியப் பாகுபாடு குற்றங்களிலும் தொடர்வது துயரமானது. நன்கு அறியப்பட்ட மேலவளவு வழக்கின் நிலையே இதுவென்றால், நாள்தோறும் நடைபெறும் தலித்துகள் மீதான அடக்குமுறையை அரசும் நீதித் துறையும் எப்படித் தடுக்கும்?

Murugesan "வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி, இவ்வழக்கில் தண்டனை வழங்க முடியாது' என்றது சேலம் நீதிமன்றம். காஞ்சி சங்கராச்சாரி வழக்கில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கே.டி.எஸ். துள்சி அரசுத் தரப்பில் வாதாடியதை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், மேலவளவு வழக்கில் மூத்த வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான கே.ஜி. கண்ணபிரான் வாதாடுவதை ஏற்றுக் கொள்ளாதது ஏன்?

வழக்கறிஞர் ரத்தினம் தலைமையிலான வழக்கறிஞர் குழுவின் விடா முயற்சியும் அர்ப்பணிப்பு நிறைந்த போராட்டமும் மேலவளவு வழக்கில் நீதியை நிலைநாட்டும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. இந்தப் போராட்டத்தின் பதிவை அறிந்து கொள்வதும், அநீதிக்கு எதிராக உரக்க குரல் எழுப்புவதும் மனித உரிமைகளின் அடிப்படையாகும்.

தலித் மக்கள் மீதான சாதி தீண்டாமை வெறித் தாக்குதல்கள், தமிழகத்தில் ஒரு கொடூர வரலாற்றுப் போக்கையே உருவாக்கி உள்ளன. கீழ் வெண்மணி போன்ற கொடூரங்களை நாம் மறந்து விடக் கூடாது. விடுதலை உணர்வை வலுவாக்கவே நடப்புகளைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது. மேலவளவு வழக்கு பற்றிய செய்தியை ஏடுகள், தமிழகத்தில் பரவலாக எடுத்துச் சென்றுள்ளன. ஆனால், முக்கிய அம்சங்கள் வெளிப்படுத்தப்படாத நிலையே இதில் உள்ளது. பல பகுதிகளிலிருந்து வழக்கு பற்றி தெரிந்து கொள்ளும் அக்கறை வெளிப்படுகின்றது.
எனவேதான் இது குறித்த தகவல்களைத் தொகுத்து வருகிறோம்.

1996 : மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலவளவு கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, தலித் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 10.9.96 : திரு. முருகேசன் மற்றும் சிலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 13.9.96 : முருகேசன் உட்பட வேட்பு மனு செய்தவர்கள், ஆதிக்க சாதியினர் சிலரின் மிரட்டலுக்குப் பயந்து, மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். 26.9.96 : மேலூர் வட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சமாதானக் கூட்டத்தில், தலித் மக்கள் சார்பிலும் கள்ளர் இனத்தினர் சார்பிலும் அரசு ஆணைக்குக் கட்டுப்படுவதாக எழுத்து மூலம் உறுதி அளித்தனர். 9.10.96 : அறிவிக்கப்பட்டவாறு தேர்தல் நடைபெறவில்லை. பயத்தின் காரணமாக தலித் மக்கள் பங்கேற்க மறுத்தனர். 28.12.96 : மறு அறிவிப்பின்படி தேர்தல் நடைபெற்றது. முருகேசன் உட்பட 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அன்று கலவரக்காரர்கள் மக்களைத் தாக்கி ஓட்டுப் பெட்டிகளைத் தூக்கிச் சென்று விட்டனர். எனவே, தேர்தல் தடைபட்டது.

31.12.96 : மீண்டும் தேர்தல் நடைபெற்றது. அதே 8 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்கள் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டனர். காவல் துறையின் கூடுதல் பாதுகாப்போடு தேர்தல் நடந்தது. வாக்களிப்பில் தலித் மக்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மாற்றுச் சாதியினர் தேர்தலைப் புறக்கணித்தனர். முருகேசன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊராட்சி மன்ற அலுவலகம் கள்ளர் சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் இருப்பதால், முருகேசனால் அங்கு செல்ல முடியாத சூழல் தொடர்ந்தது. ஆனால், படிப்படியாக தலைவர் முருகேசனிடம் மாற்றுச் சமூகத்தினர் பழகி வந்தனர். ஊராட்சி மன்ற ஒப்பந்தப் பணிகளைப் பெற்று, அவர்கள் முருகேசனுடன் இயல்பாகப் பழகி வந்தனர்.

30.6.1997 : மேலவளவு தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து பலவிதச் சிக்கல்களை தலித் மக்கள் சந்தித்து வந்தனர். 10.9.96 இல், மூன்று தலித்துகளுடைய வீடுகள் தீயிடப்பட்டன. இதற்கு நிவாரணம் பெற, முருகேசன் பாதிக்கப்பட்டவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அன்று மாவட்ட ஆட்சியர் இல்லாததால் அவரது உதவியாளரைப் பார்த்தனர். அங்கு வந்திருந்த மேலவளவு மனோகரன் (செட்டியார் சமூகம்), இவர்கள் எந்தப் பேருந்தில் ஊர் திரும்புவார்கள் எனக் கேட்டு, கே.என்.ஆர். பேருந்தில் முருகேசன் உட்பட மற்றவர்களும் ஊர் திரும்ப உள்ளதைத் தெரிந்து கொண்டார். அவ்வாறே அந்தப் பேருந்தில் புறப்பட்டனர். மேலூர் வந்ததும் குற்றவாளிகள் சிலரும் தலித் சமூகத்தைச் சார்ந்த சிலரும் பேருந்தில் ஏறிக் கொண்டனர். வண்டி அக்ரகாரம் பழைய கள்ளுக்கடை மேடு அருகே வந்ததும், பேருந்தில் வந்த துரைப்பாண்டி என்பவர், ஓட்டுநரை வண்டியை நிறுத்தும்படி கூச்சல் போட்டார். அதே நேரம், சென்னகரம்பட்டி ராமர் தலைமையில் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் வண்டியை ஆயுதங்களுடன் சூழ்ந்து கொண்டது.

பேருந்தில் வந்த முருகேசன், ராஜா, செல்லத்துரை, சேவகமூர்த்தி, மூக்கன் (ஊராட்சி மன்ற துணைத் தலைவர்), பூபதி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். முருகேசன் தலையை உடம்பிலிருந்து தனியாக வெட்டி எடுத்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிணற்றில் போட்டனர். கொல்லப்பட்டவர்களில் முருகேசன் மற்றும் ராஜா இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்.

25.9.97 : வழக்குப் பதிவு செய்யப்பட்டு மா. சுப்பிரமணியன் என்ற துணைக் கண்காணிப்பாளர் புலன் விசாரணையை மேற்கொண்டார். அவருக்கு உதவியாக காவல் துறையின் குழுக்கள் செயல்பட்டன. 85ஆவது நாளில் 25.9.97 அன்று குற்றப் பத்திரிகை 41 பேர் மீது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. (90 நாட்கள் முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதிருந்தால், கைதானவர்களை ஜாமீனில் தவிர்க்க முடியாமல் விட்டாக வேண்டும் என்பது சட்ட விதி) குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜெயராமன், பாம்பு கடித்து இறந்து விட்டார். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களது பட்டியலில் 40 பேர் காட்டப்பட்டனர்.

9,27.3.98 : உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் மனு போட்டிருந்தனர். நீதிபதி திரு. ஆர். ராமமூர்த்தி முன்னதாக பெரும்பான்மை மனுக்களில் உத்தரவிட்டார். கடைசி மனுவில் ஜாமீன் அளித்து நீதிபதி திரு. கே. நடராஜன் உத்தரவு வழங்கினார். சிலருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் கொடுக்கப்பட்டது. அவர்கள் ஊருக்கே சென்று தங்கிக் கொள்ள வழி செய்திருந்தது. தலித் மக்கள் பீதியும் பயமும் அடைந்தனர்.

24.9.98 : இந்தச் சூழலில், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 75 பேர் கையெழுத்திட்டு ஜாமீனை ரத்து செய்ய விசாரணை நடத்தும்படி தலைமை நீதிபதி திரு. மன்மோகன் சிங் லிபரான் அவர்களிடம் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்தனர். அவரும் அந்த மனுவை இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வழக்குப் பட்டியலில் சேர்த்தார். ஆனால், அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் திரு. ஜெயராம் சவுத்தா மற்றும் திரு. வி. பக்தவச்சலு ஆகியோர் மனு ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என 24.9.1998 அன்று முடிவு செய்து தள்ளுபடி செய்தனர். அரசுத் தரப்பிலும் ஜாமீனை ரத்து செய்யத் தேவை இல்லை எனவும், வழக்கு விசாரணையைத் தொடங்க ஏற்பாடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பின் மீது இந்தியத் தலைமை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் திரு. கே.டி. தாமஸ், டி.பி. மோஹபத்ரா ஆகியோர் அடங்கிய தலைமை நீதிமன்ற பெஞ்ச் 8.2.2000 அன்று, உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது முறையல்ல என்றது. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி 75 வழக்கறிஞர்கள் கொடுத்த மனுவை தன்னிச்சையாக செய்யும் அதிகாரத்தின்கீழ் நீதிமன்ற விசாரணைக்குப் பட்டியலில் சேர்த்தது சரிதான் என்று தீர்ப்பளித்தது. அத்துடன் மீண்டும் அந்த மனுவை விசாரித்து ஜாமீனை ரத்து செய்யலாமா? அல்லது கூடாதா? எனத் தகுதி அடிப்படையில் முடிவு செய்யவும் மனுவைத் திருப்பி உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது.

10.12.99 : பேருந்தில் பயணம் செய்து வெட்டுக்காயம் பட்ட கிருஷ்ணன் என்ற தலித், வழக்கில் முதல் தகவல் அறிக்கைக்கான புகார் செய்திருந்தார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து அவர் பெயரில் உயர் நீதிமன்றத்தில் சி.பி.அய். விசாரணை கோரி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. காவல் துறையினர் அவரிடம் எதுவும் எழுதாத 7 வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, அப்பாவிகளின் பெயர்களைக் குற்றம் செய்ததாக எழுதிக் கொண்டனர் என்று ரிட் மனுவில் சொல்லியுள்ளார். எனவே, சி.பி.அய். விசாரித்தால் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த ரிட் மனுவில் காஞ்சிவனம் என்ற சாட்சியின் மனு பாதிக்கப்பட்டோர் சார்பாக தாக்கல் செய்யப்பட்டது. கிருஷ்ணனுக்கு எதிர்த் தரப்பினர் சிலவற்றை செய்து கொடுத்து லாபம் பெற்றுள்ளதாலும், பயத்தாலும் அப்படி தவறான ரிட் மனுவைப் போட உடன்பட்டுள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டது. அந்த ரிட் மனுவை தகுதியற்றது என்று உயர் நீதிமன்றம் டிசம்பர் 1999 இல் தள்ளுபடி செய்தது.

14.12.2000: வழக்கை மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்றி சாட்சிகளை விசாரித்தால்தான் பயமின்றியும் பாதுகாப்பாகவும் சாட்சியம் அளிக்க வாய்ப்பாக அமையும் என முருகேசனின் அண்ணன் கருப்பையா, உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அத்தோடு ஈரோடு வழக்கறிஞர் திரு. திருமலை ராஜனை அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கக் கொடுத்த மனுவை அரசு முடிவு செய்யாமல் இருந்ததால், அவரை நியமிக்க உயர் நீதிமன்றம் உத்தர விடவும் மனுத் தாக்கல் செய்திருந்தார். இரு நீதிபதிகளடங்கிய பிரிவு, வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து மாற்றி, சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அத்துடன் ஈரோடு வழக்கறிஞர் திரு. திருமலை ராஜனை அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கக் கோரும் மனுவில் நியாயம் இருப்பதாகச் சுட்டிக்காட்டியது. இதனை ஏற்று அரசு அவரை சிறப்பு வழக்கறிஞராக மேலவளவு வழக்கை விசாரணை நீதிமன்றத்தில் நிடத்த அரசாணை வெளியிட்டது.

5.2.2001 : சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் (பட்டியலில் கண்ட சாதியினர் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினர் (வன் கொடுமைத் தடுப்பு) சட்டம் 1989 இன் கீழ் அறிவிக்கப்பட்ட நீதிமன்றம்) வழக்கு ஆவணங்கள் பெறப்பட்டு வழக்கு எண். எஸ்.சி.10/2001 கொடுக்கப்பட்டது. 19.3.1001 : சாட்சிகள் மேலவளவில் இருந்தால் ஆபத்து எனக் கருதி, நாமக்கல் பகுதிக்கு வந்து தங்கி இருந்தனர். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அக்கறையாளர்களும், வழக்கறிஞர்களும் செய்து கொடுத்தனர். அவர்கள் உணர்வு ரீதியாகத் தங்களை தயார் செய்து கொண்டனர். பயம் நீங்கி பாதுகாப்பான சூழலில் தெளிவாகி இருந்தனர்.

19.3.2001இல் சேலம் நீதிமன்றத்தில் விசாரணை என நாள் குறிக்கப்பட்டது. ஆனால், அன்று சாட்சிகள் நீதிமன்றம் செல்ல முடியவில்லை. நீதிமன்றம் 2.4.2001க்கு விசாரணையைத் தள்ளி வைத்தது. 2.4.2001 : இடைப்பட்ட நாளில் சாட்சிகள் மேலவளவு சென்றிருந்தனர். அவர்களில் ஒருவரது மனநிலையை மாற்றி இருந்தார்கள். விசாரணையில் சாட்சி சொல்ல அழைத்து வருவதில் சிரமம் ஏற்பட்டது. ஒரு வழியாக சமாளிக்க முடிந்தது. முதல் 3 சாட்சிகள் நின்றாக சாட்சியம் அளித்தனர். 3.4.2001 : 4ஆவது சாட்சி சம்பவத்தை மாற்றிச் சொன்னார். அவர் பிறழ் சாட்சியாகக் கருதப்பட்டார். சாட்சிகள் 5 முதல் 10 வரை சம்பவம் குறித்து நல்ல முறையில் சாட்சியம் அளித்தனர். 11ஆவது சாட்சி மாற்றிச் சொல்லி பிறழ் சாட்சியானார். சம்பவத்தைப் பார்த்த கண்ணுற்ற சாட்சிகளாக 11 பேர் சாட்சியம் அளித்தனர். அரசுத் தரப்பு சாட்சிகளாக மொத்தம் 50 பேர் (அதிகாரிகள் உட்பட) சாட்சியம் அளித்தனர். எதிர்த் தரப்பில் 2 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 13.6.2001 அன்று புலன் விசாரணை அதிகாரியின் சாட்சியம் முடிந்தது. இத்தோடு அரசுத் தரப்பு விசாரணை முடிந்தது. அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞரான திரு. பி. திருமலை ராஜன், வழக்கறிஞர் திரு. ப.பா. மோகன் ஆகியோரது பங்களிப்பு, விசாரணை நீதிமன்றத்தில் சிறப்பாக இருந்தது. பல பகுதிகளிலிருந்தும் வழக்குரைஞர்கள் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் ஒத்துழைத்தனர்.

26.6.2001: அன்று அரசு சாட்சி 1 கிருஷ்ணன் எதிர்த் தரப்பினரது கோரிக்கையின்படி, நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டு மீண்டும் விசாரிக்கப்பட்டார். அதே போல் சாட்சி 3 சின்னைய்யாவும் வரவழைக்கப்பட்டார். இருவரும் 2.4.2001இல் மிரட்டப்பட்டதால் மாற்றிச் சொன்னதாக குறிப்பிட்டதால், பிறழ் சாட்சியாகக் கருதப்பட்டனர். விசாரணை நீதிமன்றம் இவர்களது சாட்சியத்தை முழுமையாக நம்பத் தகுதியற்றவை என ஒதுக்கிவிட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் வழக்கின் வலு ஓரளவு பாதிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் சாட்சிகள் புலன் விசாரணையில் சொல்லியுள்ளவற்றை ஏற்றுக் கொள்ளலாம் என்றும், நாட்கள் கடந்த பின் வரவழைக்கப்பட்டு, சாட்சிகள் மாற்றிச் சொல்வதை ஏற்கத் தேவையில்லை, முன்னர் அளித்த சாட்சியத்தை நம்பலாம் எனவும் தலைமை நீதிமன்றத் தீர்ப்புகள் சில உள்ளன.

26.7.2001 : விசாரணை நீதிமன்றம் நீதிபதி திரு. ஏ.ஆர் ராமலிங்கம் (தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றுகிறார்) 17 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுத்தார். மற்ற 23 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சதித் திட்டத்தை செயல்படுத்திய குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனத் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. அதே போல், பட்டியலில் கண்ட சாதியினர் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் 1989 இன் பிரிவின் கீழான குற்றம் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு குறித்து எதுவும் தீர்ப்பில் சொல்லப்படவில்லை.

ஆகஸ்ட், செப்., 2001 : ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்ட 17 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் விடுதலையாகியுள்ள 23 பேர் சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாடு அரசு இந்த வழக்கில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விடுதலையாகியுள்ளவர்கள் சம்பந்தமாக அரசு மேல் முறையீடு செய்ய சட்ட ரீதியான அடிப்படை ஏதும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. 27.8.2001 : ஆயுள் தண்டனை பெற்ற 17 பேரின் ஜாமீன் மனுவில் முதல் மனுவை நீதிபதிகள் திரு. ஜெகதீசன் மற்றும் திரு. மலை சுப்ரமணி ஆகியோரடங்கிய பிரிவு விசாரித்தது. காவல் ஆய்வாளர் புகாரைப் பதிவு செய்த முறையில் முரண்பட்ட போக்கு உள்ளதாக விரிவாக உத்தரவில் விவாதித்து ஜாமீன் கொடுத்தது. பின்னர் மற்றவர்களுக்கு நீதிபதிகள் திரு. என். தினகரன் மற்றும் திரு. பக்தவச்சலு அடங்கிய பெஞ்சு ஜாமீன் கொடுத்தது. தண்டிக்கப்பட்ட 17 பேரும் ஜாமீனில் வந்தனர்.

இந்த ஜாமீன் உத்தரவுகள் மீதான மேல் முறையீட்டை மனுதாரராக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 12 பேர், இந்தியத் தலைமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவர்களில் இருவருக்கு மிரட்டல் கடிதங்கள், தனித்தனியாக மேலவளவு அஞ்சல் நிலைய முத்திரையுடன் வந்தன. அந்தக் கடிதங்களில் தலைமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை திரும்பப் பெறாவிட்டால், சென்னைக்கு வந்து கொலை செய்வது தங்களுக்கு சுலபமான வேலைதான் எனத் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது. இவற்றை காவல் துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 11.2.2005 அன்று இந்தியத் தலைமை நீதிமன்றப் பிரிவொன்றின் நீதிபதிகள் திரு. பி.என். அகர்வால் மற்றும் திரு. பி.கே. பாலசுப்ரமணியன் ஆகியோர் தண்டனை அளிக்கப்பட்ட 17 குற்றவாளிகளுக்கு மேல்முறையீடு காலத்தில் ஜாமீன் வழங்கப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டனர். அதனடிப்படையில், ஜாமீனில் இருந்த 17 பேரும் சரணடைந்து தற்போது சிறையில் உள்ளனர்.

7.10.2004 : முருகேசனின் அண்ணன் கருப்பையா, தமிழ் நாடு அரசுக்கு 10.8.2001 தேதியிட்ட மனு மூலம் திரு. கே.ஜி. கண்ணபிரானை (ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ளவர்) மேலவளவு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ள மேல்முறையீடு மனுக்கள், மற்ற மனுக்கள் ஆகியவற்றில் அரசு சிறப்பு வழக்கறிஞராக செயல்பட நியமிக்க கேட்டுக் கொண்டார். அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால், கருப்பையா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அரசுக்கு தக்க உத்தரவிட கேட்டுக் கொண்டார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி திரு. அசோக்குமார், இந்த வழக்கில் சட்டப் பிரச்சனை இருப்பதாகவும் அரசுக்கு நிறைய செலவாகும் எனவும் குறிப்பிட்டு, தலைமை நீதிபதிக்கு (நீதிபதி திரு. பி. சுபாஷன் ரெட்டி) வழக்கை மாற்றி அனுப்பி வைத்தார். தலைமை நீதிபதி, நீதிபதிகள் திரு. பி. சதாசிவம் மற்றும் திரு. எஸ்.ஆர். சிங்காரவேலு ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றப் பிரிவு விசாரிக்கும்படி உத்தரவிட்டார். தமிழ் நாடு அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் திரு. அய். சுப்பிரமணியம், இந்த வழக்கைத் திறமையாக நடத்தும் தகுதி பெற்றவர்; அரசுத் தரப்பு வழக்கறிஞர் மற்றும் அவரது அலுவலகமும் முழுத் தகுதியையும் போதுமான வசதிகளையும் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டு, மனுவின் மீதான விசாரணை முடிக்கப்பட்டது.

9.8.2005 : உயர் நீதிமன்றத்தில் மேலவளவு வழக்கில் தண்டிக்கப்பட்டோரது மேல்முறையீடு மனுக்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர் சார்பான மனுக்கள் ஆகியவை இரு நீதிபதிகளடங்கிய பெஞ்சின் (நீதிபதிகள் திரு. எம். கற்பக விநாயகம் மற்றும் திரு. எஸ்.ஆர். சிங்காரவேலு) வழக்குப் பட்டியலில் காட்டப்பட்டிருந்தது. நீதிபதி திரு. கற்பக விநாயகத்தின் சகோதரர் வழக்கறிஞர் திரு. எம். பாலசுப்பிரமணியம் மேல்முறையீட்டு மனுவில் ஒருவருக்கு வழக்கறிஞராக ஆஜர் ஆவதற்கான ஆவணத்தை 9.8.2005இல் தாக்கல் செய்துள்ளார். எனவே, அந்த நீதிபதிகள் இந்த வழக்கைத் தாங்கள் விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், வழக்குப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.

16.11.2005 : அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞராக இருந்த மூத்த வழக்கறிஞர் திரு. அய். சுப்பிரமணியம் விலகிக் கொண்டார். மூத்த வழக்கறிஞர் திரு. கே. துரைசாமி, அரசுக் குற்றவியல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் மனு மீதான அரசுத் தரப்பு விவாதத்தை நடத்த தலைமை நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ள திரு. கே.டி.எஸ். துள்சி, டில்லியிலிருந்து அழைத்து வரப்பட்டார். கோவையில் நடைபெற்ற கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட திரு. ஜான் பாண்டியன் உட்பட 11 பேரின் மேல்முறையீடு மனுவில் அரசு சார்பில் வாதிட, டில்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் திரு. நாகேஸ்வரராவ் அழைத்து வரப்பட்டார். இவற்றைச் சுட்டிக்காட்டி, வழக்கறிஞர் குழு 16.11.2005 அன்று தமிழ் நாடு அரசு உள்துறை செயலாளரிடம் திரு. கே.ஜி. கண்ணபிரானை அரசு சிறப்பு வழக்கறிஞராக மேலவளவு வழக்கில் நியமிக்க மனுவைக் கொடுத்தனர். மூத்த வழக்கறிஞர் திரு. கே. துரைசாமியும் அரசு வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகிக் கொண்டதையும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

23.11.2005 : நீதிபதிகள் திரு. ஆர். பாலசுப்பிரமணியன் மற்றும் திரு. எம். தணிகாச்சலம் ஆகியோரடங்கிய பெஞ்ச் வழக்கு, பட்டியலில் மேலவளவு வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர் தரப்பு மனுக்கள் காட்டப்பட்டிருந்தன. இத்தோடு பாதிக்கப்பட்ட தலித் மக்கள் சார்பில் போடப்பட்ட இரு ரிட் மனுக்களும் இடம் பெற்றிருந்தன. குற்றவியல் நிடைமுறைச் சட்டத்தில் பிரிவு 401(3) (criminal procedure code 1973) உயர் நீதிமன்றம் கீழ் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டவர்களை, சாட்சியங்கள் இருந்தாலும் தண்டனை கொடுக்க முடியாது என்கிறது. எனவே, உயர் நீதிமன்றம் வழக்கை கீழ் நீதிமன்றத்திற்கு மீண்டும் விசாரித்து முடிவெடுக்க திருப்பி அனுப்பி வைப்பதைத் தவிர வேறு வழி இல்லை. அரசு மேல் முறையீடு செய்தால், விடுதலையானவர்கள் பற்றிய சாட்சியங்கள் இருக்கும் பட்சத்தில் உயர் நீதிமன்றம் தண்டனை கொடுக்கலாம் என்கிறது சட்டப் பிரிவு. ஒரு வழக்கின் ஆவணங்களை வைத்து அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் விடுதலையானவர்களுக்குத் தண்டனை கொடுக்க சட்டப் பிரிவு வழி செய்கிறது. ஆனால், பாதிக்கப்பட்டோர் அதே ஆவணங்ளை வைத்து மனுப்போடும் பட்சத்தில், உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பு எதிர் மறையாக்கப்பட்டுள்ளது. மேலவளவு வழக்கில் அரசுத் தரப்பில் விடுதலையானவர்களுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டோர் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, பிரிவு 401 (3) கு.நி.ச. அரசியல் சட்டப் பிரிவுகளுக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி, இரு ரிட் மனுக்கள் போடப்பட்டுள்ளன. இந்த இரு மனுக்களையும் நீதிபதிகள் வழக்குப் பட்டியலில் இருந்து நீக்கி விட்டனர்.

6.12.2005 : 16.11.2005 நாளிட்ட மனுவின் அடிப்படையில் பொதுநில வழக்காக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி திரு. ஏ.பி. ஷா மற்றும் நீதிபதி திரு. இப்ராகிம் கலிபுல்லா ஆகியோரடங்கிய முதல் பெஞ்சு இந்த மனுவை விசாரித்தது. அரசுத் தரப்பில் குற்றவியல் மூத்த வழக்கறிஞரை நியமிக்க வேண்டிய பின்னணி இந்த வழக்கிற்கு இருப்பதாகச் சுட்டிக்காட்டி, ஒரு வார காலம் விசாரணையை முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது. 6.12.2005 அன்று தமிழ் நாடு அரசின் அட்வகேட் ஜெனரல் திரு. என்.ஆர். சந்திரன், மேலவளவு வழக்கு மனுக்களில் உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் ஆஜர் ஆவார் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து ரிட் மனுவை முதல் பெஞ்ச் தள்ளுபடி செய்தது.

மேலவளவு வழக்கில் தலித் மக்களுக்கு உரிய நீதி கிடைப்பதற்காக தளர்வின்றிப் பணிகளைத் தொடர வேண்டி உள்ளது. இந்தப் பணியில் அக்கறையுள்ள வழக்கறிஞர்கள் மட்டு மல்லாமல் தலித் அமைப்புகள், சமூக அக்கறையாளர்கள், சமூக நீதிக்கான குழுக்கள் போன்றவை பங்கேற்கிறார்கள். சட்டவரையறைகள் சமூக நீதிக்கு எதிராக இருக்கும் பட்சத்தில், அதனை மாற்றி அமைக்க கவனம் காட்டப்படுகிறது. சமூக நீதிக்கான நீதிமுறையை வளர்த்தெடுக்கும் பார்வையோடு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை வெறும் வழக்காக மட்டும் பார்க்காமல், தலித் மக்களது விடுதலைக்கானப் பணிகளில் முக்கியமான அம்சமாகவே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com