Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
 width=
 width=பிப்ரவரி 2009

மாற்றுப்பாதை
யாழன் ஆதி

தலித் இலக்கியம் தமிழில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவுபெற இருக்கிறது. இந்த 20 ஆண்டுகளில் வலுவானதும் குறிப்பிடத்தகுந்ததுமான ஆக்கங்கள் உருவாகியிருக்கின்றன. கவிதை, கதை, கட்டுரை, நாவல், ஓவியம், நாடகம், இசைப்பாட்டு எனப் பல்வேறு துறைகளில் தலித் இலக்கியம் வலுவாகத் தடம் பதித்திருக்கிறது. தமிழக அளவில் மட்டுமின்றி, இந்திய அளவிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை செய்த எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். இத்தகு எழுத்தாளர்களின் ஆக்கங்கள் தமிழ் மொழியைக் கடந்து ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பிற மொழிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

N.T.Rajkumar இந்த 20 ஆண்டு கால இலக்கியச் செயல்பாட்டை நாம் இரண்டு வகையாகப் பகுக்கலாம்: கருத்தியல் தாக்கம், இலக்கியத் தாக்கம் என இவற்றின் எதிர்வினைகளைப் பிரித்து அலசலாம். கருத்து நிலைகளில் அளப்பரிய மாற்றத்தை தலித் இலக்கியம் உருவாக்கியிருக்கிறது. இலக்கியத் தளத்திலும் புதிய முகத்தை, வீச்சை, பாய்ச்சலை தமிழ் இலக்கியத்திற்கு வழங்கியிருக்கிறது. சொல்லப் போனால், தமிழ் இலக்கியத்தை அடுத்த கட்ட நகர்வுக்கு தலித் இலக்கியம் கொண்டு சென்றிருக்கிறது.

இத்தனையாண்டுகள் கழிந்த பிறகும் இவ்வாக்கங்களை சரியான பார்வையில் மதிப்பிட்டு, தமது கருத்துக்களை தமிழ் இலக்கிய விமர்சகர்கள் வழங்கத் தவறியுள்ளனர். தமிழ் விமர்சகர்கள் மட்டுமின்றி, அறிவுஜீவிகளும் இப்பணியை செய்ய மறுத்திருக்கிறார்கள். 20 ஆண்டுகளில் பிற்கால தலித் ஆக்கங்கள் ஒருவிதமான தேக்கநிலையை எட்டியிருக்கின்றன என்றும் சொல்லலாம். தொடக்க காலத்தைப் போல உத்வேகத்தோடும், உணர்வெழுச்சியோடும் ஆக்கங்கள் இன்று வரவில்லை. இத்தருணத்தில் புதிய எழுத்தாளர்கள் எவரும் எழுத வரவில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு "தலித் முரசு' தொடர்ச்சியாக தலித் இலக்கியத் தளத்தில் இயங்கி வரும் எழுத்தாளர்களை அடையாளப்படுத்த எண்ணுகிறது. இப்பகுதியில் இதுவரையில் வந்த ஆக்கங்களையும், எழுத்தாளர்களையும் தொடர்ந்து "தலித் முரசு' பட்டியலிடும். இதன் உள்ளடக்கமாக வைத்திருக்கும் நிலைப்பாடுகள் இவைதான்: தலித் இலக்கியத்தை அம்பேத்கரியப் பார்வையோடு உள்வாங்கிக்கொண்டு – சாதி ஒழிப்பையும், சமூக மாற்றத்தையும், தலித் பெண்ணியத்தையும், இந்து மத எதிர்ப்பையும், பார்ப்பனிய விமர்சனத்தையும், மனித உரிமைகளை இழைகளாகக் கொண்டு தமது ஆக்கங்களை முன்வைத்திருக்கிற எழுத்தாளர்கள்; ஒன்றிரண்டு தொகுப்புகளையாவது வெளியிட்டிருக்கிற எழுத்தாளர்கள்; பிறப்பாலோ, உணர்வாலோ தங்களை தலித் என்று பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிற எழுத்தாளர்கள் ஆகியோரை இப்பகுதியில் அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

இந்த அறிமுகத்தில் வயது மூப்பு, ஆக்கங்களின் தரம் போன்றவற்றை கணக்கில் கொள்ளுவதற்கில்லை. இலக்கியத்தளத்திலும், கருத்தியல் தளத்திலும் ஒருவர் ஏற்படுத்தியிருக்கும் அலைகள், அவருக்கு இருக்கும் முனைப்பு, அக்கறை, ஆர்வம் ஆகியவையே கணக்கில் கொள்ளப்படும். மிகச்சரியாக சொல்ல வேண்டுமெனில், ஏற்கனவே தமது வலுவான ஆக்கங்கள் மூலம் கவனத்திற்கு வராமல் இருக்கின்ற தலித் எழுத்தாளர்களை வெளிக்கொணர்ந்து அறிமுகம் செய்வதற்கு மட்டுமின்றி, புதியதாக எழுத வர அல்லது எழுதத் தொடங்குகின்ற தலித் எழுத்தாளர்களுக்கு உத்வேகத்தையும், அடையாளத்தையும் உண்டாக்கித் தரவேண்டும் என்கின்ற நோக்கத்தின் அடிப்படையில்தான் இப்பகுதி வெளிவருகிறது.

என்.டி. ராஜ்குமார், கம்பீர குரலில் கவிதையைப் பாடும் வன்மை பெற்றவர். மலையாளத்தில் கவிதை வாசிப்பு என்பதைவிட, கவிதையை இசையோடு பாடுவது என்பது ஒரு மரபாக இருக்கிறது. தமிழில் தற்பொழுது அப்படி கவிதையினைப் பாடுபவர்களைக் காண்பது அரிது. அத்தகு திறன் பெற்றவர் என்.டி. ராஜ்குமார். முதலில் குரலிசைக் கலைஞராக, பாட்டுக்கட்டுபவராக அறிமுகமாகிய இவர் "தெறி' என்னும் தொகுப்பின் மூலம் தலித் எழுத்தாளராக அடையாளம் காணப்பட்டார்.

“ஒரு கலயம் கஞ்சிக்காய்
தீண்டல் துணி கழுவியும்
யோனியைப் பறிகொடுத்தும்
பூப்புவரி கட்டியும்
மாராப்புப் போட முடியாமல்
மானங்கெட்டுச் செத்தயெங்கள் பெண்டுகளும்
திருகியெறியப்பட்ட முலைதேடி
வதைபட்டு செத்தவர்களும்தான்
எங்கள் தலைமூத்த அம்மைகள்
இவர்களின் விந்துகளில் விழுந்த
வெட்டுகளும் கீறல்களுமாய்
பிறப்புரிமைத் தேடியலையும்
நாங்களும்
எங்கள் இனியும்''
– என்று தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர். சாதி தன்னை இக்காலத்திற்கு ஏற்ப வைதிக நிலையில் முகம் மாற்றிக் கொண்ட நுட்பத்தை வெளிப்படுத்த, அதன் எதிர்நிலையில் நின்று சமூக எதார்த்த வாழ்வியலை உருவாக்கும் எழுத்து என்.டி. ராஜ்குமாருடையது.

“வேட்டையாடி தின்றுகொண்டிருந்த
வேலனுக்குத் தெரியும்
தேவயானையைக் காண்பித்து
ஆருடத்தை தட்டிப் பறித்த கதை
இப்போது குறத்தி சொல்வது குறி
சுப்ரமணியர்கள் சொல்வது
ஜோஸ்யம்''

இக்கவிதை நம்முள் விதைப்பது, இந்துத்துவமயமாகிவிட்ட இந்திய பொதுப்புத்தி, தனியான இனக்குழுக்களின் பண்பாட்டைச் செரித்து விட்டு இன்று ஏகமாக மாறுவதற்கு தன்னை தயார்படுத்துகிறது என்பதைத்தான்.

அவரின் கவிதைகள் உக்கிரத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களின் கோபம் மிகுந்த குரலாக ஒலிப்பவை. சாதிய சமூகத்தின் மரபான அல்லது நவீனமான எத்தகைய வடிவத்தையும் தன்னுடைய "பேயை' அவிழ்த்து அவற்றை ஏவி துவம்சம் செய்யக்கூடியன அவரின் கவிதைகள். “இப்போது என் எழுத்துக்களில் நான் வாதைகளை ஏவி விட்டிருக்கிறேன்'' என்று "ரத்த சந்தனப் பாவை'யில் அவர் எழுதியிருப்பது அதை உறுதியாக்கும். தலித் கவிதை பரப்பைக் கடந்து பொதுத்தளத்திலும் பல உத்திகளை உருவாக்கியவர் என்.டி. ராஜ்குமார்.

அவருடைய ஆக்கங்களில் இருக்கும் கோபம், ஏமாற்றப்பட்ட தம் முன்னோர்களிடம் பெறப்பட்டது. குலசேகரத்தை பூர்வீகமாகக் கொண்ட அவரின் நிலம் சார்ந்த, வாழ்வு சார்ந்த பின்புலம்தான் அவரின் கவிதைகளின் பலம். தன் தந்தையுடன் அவர் வாழ்ந்த இளம் பருவம், அவர் தந்தையின் "மாந்ரீகங்கள்' ஆகியவை இவருடைய கவிதைகளை உருவாக்கும் களமாக இருக்கின்றன. முன்னோர்களின் வாழ்க்கையை, அவர்களைக் கொடூரமாக ஏமாற்றிய சூழ்ச்சியை, தன் அகநிலையிலிருந்து கவிதைக்குள் கொண்டுவந்து புறச்சூழலில் பொருத்தும் வல்லமை என்.டி. ராஜ்குமாருக்குச் சொந்தமானது. இத்தகைய பின்புலமே அவரை பிற எழுத்தாளர்களிடமிருந்து தனித்துக் காட்டுகிறது.

பண்டைய நம் மூதாதையர்களின் ஆயுதங்கள் எவற்றையும் அறியாதவன்கள்தான் நமக்கு குருவாகி, நம் விரல்களைப் பறித்துக் கொண்டனர். அப்பன் தெரச்சிமீன் வாலெடுத்து சுழற்றும் ஆற்றல் கொண்டவன். அப்பனுக்கு அப்பன் மான் கொம்பெடுத்து வீசி அடவு சொல்லிக் கொடுத்த வாத்தியார். அந்த போர்க்குணத்தையும் மானத்தையும் மிஞ்சி தன் கவிதைகளில் வரவைப்பது என்.டி. ராஜ்குமாரின் திறன்.

பூனைக்கறி, நெய்மீன் முதுகு எண்ணெய், நண்டுச் சாறு, நெத்திலிக் கருவாட்டின் பொடி, பசுமாட்டின் வால் சூப், பண்ணி நெய், கட்டக்காலி "சூப்', "பீப்' இறைச்சியால் நிறைந்து கிடக்கும் ஞாயிற்றுக் கிழமை வீடுகள் என்று ஒரு கவிதையில் சொல்லி, அவை குணப்படுத்தும் நோய்களையும் சொல்லியிருப்பார். உணர்வையே ஒரு பண்பாடாக – இதைத்தான் உண்ண வேண்டும்; இதை உண்ணக் கூடாதென வலியுறுத்தும் பார்ப்பன சூழ்ச்சியின் உச்சந்தலையில் தெரச்சிமீனின் வாலெடுத்து அடித்திருப்பார். பார்ப்பனியத்திற்கு எதிராக நிற்கும் அவரின் எழுத்துச் சம்மட்டிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

இவரின் "தெறி', "ஒடக்கு', "ரத்த சந்தனப் பாவை', "காட்டாளன்', "கல்விளக்கு' ஆகிய தொகுப்புகள் தமிழில் மிக முக்கியமான கவிதைத் தொகுப்புகளாகக் கருதப்படுகின்றன. தலித் இலக்கியப் பரப்பில் என்.டி. ராஜ்குமார் அவர்களின் இருப்பு குறிப்பிடத்தகுந்தது.

“பண்டொரு நாள் உனது சொருகுவாளில் குத்தேறிச் செத்த
உயிர்த்த வளையின் கடைசி ஓலம்
உன்மீது பெரும் சாபமாய் படிந்தபோது
எங்கள் மரபுகளிலிருந்து நீ
புறக்கணிக்கப்பட்டாய்
எங்களின் நிழலிந்த
பூமியில் விழாத நடு இரவில்
நிலவோடும் இரவோடும் கூத்திட்டு கொண்டாடினோம்
பிறகெப்படியோ மீண்டும் வந்து
தொற்றிக் கொண்டதிந்த வியாதிகள்
சுடலை ஆடுகிறான்
வாதை துடியாய் துடிக்கிறான்
பேய்மகள் துள்ளுகிறாள்
சறும்பா குறும்பா
வாகாயிருக்குதேடா வாளும் வல்லயமும்
கள்ளத்தனமாய் வந்து உள்ளே புகுந்திருக்கும்
வைதிகச் சிலைகளெல்லாம்
தூக்கியொரு சாக்கிலிட்டு கொட்டடா
கொட்டந்த மலக்கிடங்கில் கொட்டடா தட்டி
கொட்டடா கொட்டந்த மேளத்தை''


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com