Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu width=
 width=பிப்ரவரி 2009

பெரியார் பேசுகிறார்

இஸ்லாம் - இந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது - I


Periyar தோழர்களே! எனது 18.3.47ஆம் தேதி திருச்சி சொற்பொழிவையும், தலையங்கத்தையும் "குடி அரசில்' படித்த தோழர்கள் பலரில் சுமார் 10,15 தோழர்கள் வரை கடிந்தும், கலகலத்தும், தயங்கியும், தாட்சண்யப்பட்டும், மிரட்டியும், பயந்தும், கண்டிப்பாயும், வழவழா என்றும் பலவிதமாய் ஆசிரியருக்கும், எனக்கும் கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள். நேரிலும் சிலர் வந்து நீண்ட சொற்போர் நடத்தினார்கள். ஆதலால் அவற்றிற்குச் சமாதானம் சொல்லும் முறையிலும், நேரில் பேசிய தோழர்களுக்குச் சமாதானம் தெரிவிக்கும் முறையிலும் இதை எழுதுகிறேன். கோபப்படாமல், ஆத்திரப்படாமல், மத மயக்கம் இல்லாமல் சிந்தித்துப் பாருங்கள்.

இன்று முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு உள்ள வெறுப்புக்குக் காரணம், இஸ்லாம் மத வெறுப்பேயாகும். இஸ்லாம் மதமானது ஆரிய மதத்திற்கு (இந்து மதத்திற்கு) எதிரானதாக இருப்பதாலேயே இஸ்லாத்தை இந்துக்கள்(ஆரியர்கள்) வெறுக்கிறார்கள். ஏன் எதிராய் இருக்கின்றது என்றால், இஸ்லாம் இந்து மதத்தின் அடிப்படையையே தகர்த்து விடுகிறது.

இந்து மதம் என்னும் ஆரிய மதத்திற்குப் பல கடவுள்கள், உருவக் கடவுள்கள் உண்டு. உருவங்களும் பல மாதிரியான உருவங்களாகும். மக்களுக்குள் ஜாதி பேதங்கள் உண்டு. பிறவியிலேயே ஜாதி வகுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் (பறையன்) என்ற உயர்வு – தாழ்வு கொண்ட ஜாதியினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொள்கைக்கு நாம் ஆளாகி அவற்றுள் கீழ் ஜாதியாய் இருக்கிறோம்.

இஸ்லாம் மதத்தில் ஒரு கடவுள் தான் உண்டு; அதுவும் உருவமற்ற கடவுள். இஸ்லாத்தில் ஜாதிகள், பேதங்கள், உயர்வு – தாழ்வுகள் கிடையாது. பிறவி காரணமாகப் பாகுபாடு, மேன்மை – இழிவும் கிடையாது. இஸ்லாத்தில், பிராமணன் (மேல் ஜாதி), சூத்திரன் (கீழ் ஜாதி) பறையன், பஞ்சமன் (கடை ஜாதி) என்பவர்கள் கிடையாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இஸ்லாம் ஒரு கடவுள், ஒரு ஜாதி அதாவது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அடிப்படையைக் கொண்டது. இந்த அடிப்படை திராவிடனுடையதே; திராவிடனுக்கு வேண்டியது என்றும் சொல்லலாம்.

இஸ்லாம் மதத்தை எல்லா மக்களும் அனுசரித்தால், பிராமணர் என்கின்ற ஜாதியே, சமுதாயமே இராது. பல கடவுள்களும், விக்கிரக் (உருவ) கடவுளும் இருக்க மாட்டா. இந்த விக்கிரக் கடவுள்களுக்குப் படைக்கும் பொருள் வருவாயும் நின்று போகும். இதனாலேயே இஸ்லாம் ஆரியரால் வெறுக்கப்படுகிறது. வெகு காலமாய் வெறுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் மீது பல பழிகள் சுமத்தி, மக்களுக்குள் வெறுப்புணர்ச்சி ஊட்டப்பட்டும் வருகிறது. ஆகவே இந்தப்படி இஸ்லாம் மதம் வெறுக்கப்படுவதினால், இஸ்லாமியரும் ஆரியரால் வெறுக்கப்பட்டும், ஆரிய மத அடிமையான சூத்திரர் (திராவிடர்))களாலும் வெறுக்குமாறும் செய்யப்பட்டு விட்டது. ஆகவேதான் இஸ்லாத்தின் மீது உள்ள வெறுப்பினாலேயே, திராவிட இந்துக்கள் என்பவர்களும் இஸ்லாமியர்களான முஸ்லிம்களை வெறுத்துப் பழகிவிட்டார்கள் என்கிறேன்.

இஸ்லாத்தைப் போல் கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், பவுத்த சமாஜம் முதலியவை இந்துக்களால் வெறுக்கப்படுவதில்லை. ஏன் என்றால், கிறிஸ்து, சீக்கிய முதலிய மதங்களும், இஸ்லாத்துக்கு ஓர் அளவுக்கு விரோதமானவையானதால், அவை இஸ்லாத்தின் பொது விரோதிகள் என்கின்ற முறையில் – இந்து, கிறிஸ்துவர், சீக்கியர் ஆகிய மூவரும் விரோதமில்லாமல், கூடிய வரையில் ஒற்றுமையாகவும் இருக்கிறார்கள். அனேக பார்ப்பனர்கள்கூட, கிறிஸ்துவ மதத்தைத் தழுவி இருக்கிறார்கள். பல பார்ப்பனர்கள் கிறிஸ்துவ மத ஸ்தாபனங்களில் சிப்பந்திகளாகவும் இருக்கிறார்கள். கிறிஸ்துவ மதத்தைத் தழுவுகிற இவனும் இங்கு இந்த ஜாதி முறையைத் தழுவ அனுமதிக்கப்படுகிறான்.

சீக்கியனும் அநேகமாக இந்து மதக் கொள்கைப்படிதான் கடவுளை வணங்குகிறான். ஆனால், உருவ கடவுளுக்குப் பதிலாக புஸ்தகத்தைக் கடவுள் உருவாய் வைத்து, இந்து பிரார்த்தனை முறையில் வணங்குகிறான். சீக்கியர்களும் இந்துக்கள் போலவே (அவ்வளவு இல்லாவிட்டாலும்) ஓர் அளவுக்கு ஜாதிப் பாகுபாடு அனுசரிக்கிறார்கள். சீக்கியரில் தீண்டப்படாத, கீழ் சாதி மக்கள் என்று ஒரு கூட்டம் இருக்கச் செய்யப்பட்டு இருந்து வருகிறது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமைகூட அதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. தனித்தொகுதிப் போராட்டமும், சீக்கிய வகுப்புக்குள் இருந்து வருகிறது. ஆனால், ஆரியப் பத்திரிகைகள் இதை வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றன. நான் பஞ்சாப்புக்குச் சென்றபோது நேரில் அறிந்த சேதி இது!

எனவே இஸ்லாம் மதம், பார்ப்பனர்களால் சுயலாபம் – வகுப்பு நலம் காரணமாக வெறுக்கப்பட்டதாக இருப்பதால், இஸ்லாமியர்கள் (முஸ்லிம்கள்) பார்ப்பன – ஆரிய அடிமைகளாலும் வெறுக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இன்றும் இந்து மதத் தலைவர்களுக்கு முஸ்லிம்களை வெறுக்கச் செய்வதல்லாமல், இந்து மதப் பிரச்சாரத்தின் முக்கியத் தத்துவம், கொள்கை, பணி என்ன என்று யாராவது சொல்ல முடியுமா?

– தொடரும்

('இழிவு நீங்க இஸ்லாம்' என்ற தனது திருச்சி உரைக்கு வந்த பல அதிருப்தி குறிப்புகளுக்கு பெரியார் அளித்த பதில். 'குடி அரசு' 5.4.1947)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com