Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
பிப்ரவரி 2007
விடுதலை இயக்க வேர்களும் விழுதுகளும் - 44

அம்பேத்கரின் ஆசான் புத்தர்
- ஏ.பி. வள்ளிநாயகம்

தமிழுக்கு - தமிழனுக்கு நவீனத்துவமாக வரவானவர் பண்டிதர் அயோத்திதாசர். அவரே திராவிடத்தின் தமிழ்த் தேசியத்தின் முன்னோடி ஆவார். அயோத்திதாசரின் பூர்வத் தமிழொளியாம் புத்தரது ஆதிவேதம், பவுத்தநெறி நூல்களான திரிபிடகங்கள் ஆகியவற்றின் தமிழ்ப் படைப்புகள், தென்புலத்தில் பவுத்தநெறி மறுமலர்ச்சி அடைவதற்கு அடிப்படையாக அமைந்தன. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தென்னிந்திய சாக்கியப் பவுத்த சங்கத்தை தளிர்நடைபோடவிட்ட அயோத்திதாசர், அம்பேத்கருக்கும் முந்தைய பவுத்த முன்னோடி ஆவார். அம்பேத்கரின் பவுத்தத் தேடல், தென்னிந்திய பவுத்த சங்கத்தோடு தொடர்பு கொள்ள வைத்தது. தென்னிந்திய பவுத்த சங்கப் பொறுப்பாளர் வி.பி. மணியர் மூலம் அயோத்திதாசரின் நூல்களைப் பெற்று அம்பேத்கர் அவற்றை மொழிபெயர்க்கச் செய்தார். பண்டிதரின் தலை மாணாக்கரும், சென்னை கிறித்துவக் கல்லூரிப் பேராசிரியருமான லட்சுமி நரசு ‘பவுத்தத்தின் சாரம்' (The Essence of Buddhism) என்னும் நூலினை 1907 இல் எழுதி வெளியிட்டார். இதன் இரண்டாம் பதிப்பினை அம்பேத்கர் தனது முன்னுரையுடன் 1948 இல் வெளியிட்டார்.

Budha பேராசிரியர் லட்சுமி நரசு எழுதி வெளியிடாமல் கிடந்த அவருடைய ‘பவுத்தம் என்றால் என்ன?' (What is Buddhism), ‘நவீனகால புத்தரின் மதம் (Religion of Modern Buddhist) ஆகிய நூல்களை அவருடைய மறைவுக்குப் பிறகு அம்பேத்கர் அவர் இல்லம் வந்து பெற்றுச் சென்றார். இவற்றை அடிப்படையாகக் கொண்டே அம்பேத்கர், ‘புத்தரும் அவர் தம்மமும்' (Buddha and his Dhamma) என்னும் பவுத்த மறையைப் படைக்கத் துணிந்தார்; பவுத்தம் பற்றியும், புத்தர் பற்றியும் நூல்கள் எழுதுவதில் முனைந்தார். ‘இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்', ‘புத்தரும் காரல் மார்க்சும்' ஆகியவற்றுடன் ‘இந்து மதத்தின் புதிர்கள்' என்னும் நூலை உருவாக்குவதிலும் உழைத்து வந்தார். அம்பேத்கருக்குத் துணையாகக் கையெழுத்துப் படிகளைச் சரிபார்த்தும், தட்டச்சுப் படியெடுத்தும் அவருடைய உதவியாளர் நானக்சந்த் ரட்டும் பிரகாசு சந்தன் என்பவரும் உதவி புரிந்தனர்.

பவுத்தம் பற்றிய அவருடைய நூல், தனிச்சுற்றுக்காக ‘புத்தரும் அவர் தம் கொள்கையும்' (The Buddha and hist Gospel) என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டது. இது, 50 பேர்களுக்கு கருத்தறிவதற்காக அனுப்பப்பட்டது. அத்துடன் 1956 பிப்ரவரியில் ‘கடவுள் இல்லை', ‘ஆத்மா இல்லை' என்ற இரு படலங்களும் சேர்க்கப்பட்டன. அம்பேத்கர் இவற்றை முடிப்பதற்காக நாள்தோறும் எழுதிக் கொண்டேயிருந்தார். 1955 மே மாதம் முதற்கொண்டு அம்பேத்கரின் உடல் நலம் மேலும் வேகமாக நலிவுறத் தொடங்கியது. மருத்துவ ஆலோசனையின் பேரில், இதற்கு முன்பே, அவருடைய பற்கள் அகற்றப்பட்டு விட்டன. வீட்டில் எழுந்து நிற்பதற்கும், நடப்பதற்கும்கூட மற்றவர்களின் உதவி அவருக்குத் தேவைப்பட்டது. மூச்சு விடுவதிலும் அவருக்குத் தொல்லை ஏற்பட்டது. அதனால் ‘ஆக்சிஜன் சிலிண்டர்' ஒன்று வாங்கப்பட்டது. பிறகு வாரத்தில் இரண்டு நாட்கள் அம்பேத்கருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. குளிர் காலத்தில் மின் கணப்பின் உதவி கொண்டு அவருடைய உடலுக்கு கதகதப்பு ஊட்டப்பட்டது; சில நேரங்களில் அவருக்கு மின்னொளிக்குளியல் அளிக்கப்பட்டது. அவருடைய உடலின் எடை மிகவும் குறைந்துவிட்டது. கம்பீரமான அவருடைய தோற்றம், இப்போது இடுப்புக்கு கீழே சுருங்கி மெலிந்து விட்டது. உடல் நலிவுற்றிருந்த காலத்தில், இறுதி நாட்களில், பேராசை கொண்டவர்களும் சதிகாரர்களுமே அம்பேத்கரைச் சூழ்ந்து முற்றுகையிட்டிருந்தனர். அவருடைய உடல் நலனை ஆய்வு செய்வதற்காக, ஒரு மருத்துவர் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்ற அவருடைய நெருங்கிய நண்பர்களின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது.

லண்டன் வானொலி நிலையத்தில் (பி.பி.சி.) 1956 மே மாதம் அம்பேத்கரை உரையாற்றும்படி அழைப்பு வந்தது. பவுத்தம் பற்றிய உரையில் அவர், “நான் பவுத்தத்தைத் தெரிவு செய்வதற்குக் காரணம், அதில் மூன்று கொள்கைகள் ஒன்று சேர்ந்திருப்பதே. மூடநம்பிக்கைகளுக்கும் இயற்கைக்கும் அப்பாற்பட்ட ‘தெய்வ சக்தி'க்கு எதிரான அறிவுணர்வையும் (பிரக்ஞை), அன்புணர்வையும் (கருணை), சமத்துவ உணர்வையும் (சமத்தா) பவுத்தம் புகட்டுகிறது. வேறு எந்த வழிமுறைகளிலும் அறிவு, அன்பு, சமத்துவம் ஆகிய மூன்றும் இணைந்திருக்கவில்லை. ஒருவரின் சிறப்பான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவையே அடிப்படைத் தேவைகள் ஆகும். கடவுளோ, ஆத்மாவோ மனித சமுதாயத்தைக் காப்பாற்ற ஒருபோதும் பயன்படாது. பவுத்தமே காரல் மார்க்சுக்கும் அவரின் கொள்கைக்கும் சரியான மாற்று ஆகும். பவுத்தப் பொதுவுடைமை, குருதி சிந்தாப் புரட்சியின் மூலம் பொதுவுரிமை பொதுவுடைமையை ஏற்படுத்த விரும்புகிறது. மக்கள் மேற்கொள்ள வேண்டியதெல்லாம் புத்தரின் கொள்கைகளுக்குச் சரியான ‘அரசியல் வடிவம்' அளிக்க வேண்டியதே. சிறுமையினால் உரிமை பலியிடப்பட்டு விடக்கூடாது. பவுத்தம் - மக்கள் சமூக மேம்பாட்டுக்கான ஒரு வாழ்க்கை நெறி என்பதை உணரத் தொடங்கிவிட்டால், பவுத்த மறுமலர்ச்சி மனித சமுதாய மறுமலர்ச்சியாக நிலைத்து நிற்கும்'' என்று விரிவாகக் குறிப்பிட்டார்.

பம்பாய் நாரே பூங்காவில், 1956 மே 24 அன்று நடைபெற்ற புத்தர் பிறந்த நாள் விழாவில் அம்பேத்கர் பங்கேற்று, எதிர் வரும் அக்டோபர் மாதத்தில் பவுத்த நெறியில் இணையப் போவதாக அறிவித்தார். அப்போது அவர் இந்துத்துவ விரிப்பு மூலம் அகண்ட பாரதம் கனவு காண்பவர் ஆன வீரசாவர்க்கரை விளாசித் தள்ளினார். வீர சாவர்க்கர் தனது கட்டுரையொன்றில் பவுத்தம் பற்றி உளறி வைத்தமை குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார். “பவுத்தம் இந்து மதத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்து மதம் கடவுளை நம்புகிறது; பவுத்தம் கடவுளை நம்புவதில்லை. இந்து மதம் ஆத்மாவை நம்புகிறது; பவுத்தக் கொள்கையின்படி ‘ஆத்மா' என்று ஒன்றில்லை. இந்து மதம் நால்வர்ண அமைப்பையும் சாதி முறையையும் நம்புகிறது; பவுத்தத்தில் நால்வர்ணத்திற்கும் சாதிமுறைக்கும் இடமில்லை'' என்றார்.

“ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் முன்னேற்றத்திற்கு உழைப்பவர்களுக்கு மட்டுமே அவர்களைத் திறனாய்வு செய்வதற்கான உரிமையும் இருக்கிறது. என்னைக் குறை கூறுவோர் என்னைப் பற்றி எதுவும் சொல்லாமல் விட்டுவிட வேண்டும். படுபள்ளத்தில் விழுவதே என்றாலும் அப்படி விழுவதற்கும் என் மக்களுக்கு உரிமை இருக்க வேண்டும். என்னால் வழிநடத்தப்படும் என் மக்கள் ஆடுகளைப் போன்றவர்களே; நானே அவர்களின் நல்ல மேய்ப்பன். என்னைப் போன்ற வழிகாட்டி அவர்களுக்கு வேறு எவருமிலர்; அவர்கள் என்னைப் பின்பற்றியே வரவேண்டும்; அப்போதுதான் அவர்கள் மெல்ல மெல்ல அறிவு வெளிச்சம் பெறுவார்கள்'' என்றும் அவ்விழாவில் குறிப்பிட்டார்.

“புத்தரும் அவர் தம்மமும்' என்னும் நூல் விரைவில் வெளிவரும். (நடைமுறை) பவுத்த அமைப்புகளிலுள்ள ஓட்டைகளை அடைத்து விட்டேன். இப்போது பவுத்தத்தை நான் வலுப் படுத்தி இருக்கிறேன். இனி, இந்தியாவில் பவுத்தத்திற்கான ஏற்ற நிலை குன்றாமலிருக்கும். பொதுவுடைமைவாதிகள் பவுத்தத்தைப் பயில வேண்டும். அப்போதுதான் மாந்த வாழ்வின் துன்பங்களை அகற்றுவது எப்படியென்பதை அறிந்து கொள்வார்கள்'' என்று அவர் மேலும் விளக்கினார். அவர் தொடர்ந்து பேசுகையில், எகிப்திலிருந்து தன் மக்களை விடுவித்து, பாலஸ்தீனத்திற்கு வழிநடத்திச் சென்ற மோசசுடன் தன்னை ஒப்புமைப்படுத்திக் கொண்டார்.

ஒரு மார்க்கம் வீழ்ச்சியடைவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. அழிவில்லாத மெய்ம்மங்கள் இல்லாமை; பல் துறைகளிலும் அறிவார்ந்த மக்களை வென்றெடுக்கும் நாவாற்றல் கொண்டவர்கள் இல்லாமை; எளிதில் விளங்கிக் கொள்ளும் வகையில் கொள்கைகள் சொல்லப்படாமை ஆகியவையே அம்மூன்று காரணங்கள் ஆகும். புத்தருக்கு விரைவில் மிகச் சிறந்ததொரு நினைவகம் கட்டப்படும் என்று பேசி முடித்தார். அம்பேத்கர் பங்கேற்ற கடைசிப் பொதுக்கூட்டம் இதுவேயாகும்.

அம்பேத்கர் தன் மக்களுடன் பவுத்தம் தழுவ தேர்ந்தெடுக்கப்பட்ட நாகபுரியின் சிரத்தானந்தர் பேட்டையின் 14 ஏக்கர் திறந்தவெளி, பெருஞ்செலவில் விழாக் கோலம் பூண்டிருந்தது. வடக்குப் பகுதியில் பெருமேடைக்கு அருகில் சாஞ்சி ஸ்தூபியைப் போலொரு குறுமாதிரி மேடையை இணைத்து, பெண்களுக்கும் ஆண்களுக்குமான பிரம்மாண்டமான பந்தல் போடப்பட்டது. பவுத்தக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தன. பதாகைகள், பாங்கான தோரணங்கள், சோடனைகள் நிரம்பி வழிந்தன. அம்பேத்கர் பவுத்தம் தழுவ இருக்கும் முந்தைய நாள் அதாவது அக்டோபர் 13 ஆம் நாளன்று பத்திரிகையாளர்களுக்கு நேருரை அளித்தார் : “நான் தழுவவிருக்கும் பவுத்தம் புத்தர் புகட்டியபடி இருக்கும். பண்டைய நாளில் ஏற்பட்ட ஈனயானம், மகாயானம் ஆகிய கருத்துச் சண்டைகளில், வழிமுறைச் சண்டைகளில் நான் மக்களை ஒருபோதும் ஈடுபடுத்த மாட்டேன். என்னுடைய பவுத்தம், புத்தரின் அசலான ஒரு புதிய பவுத்தம் (நவயானம்) ஆக இருக்கும்'' என்றார்.

1956, அக்டோபர் 14 - அம்பேத்கரும் அவர்தம் மக்களும் பவுத்தம் தழுவிடப் போகும் நிகழ்வரங்கின் பந்தலுக்குள் அடங்க முடியாமல் மக்கள் திரள் திமிறிக் கொண்டிருந்தது. விழாக் குழுவினர் அம்பேத்கரை வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றனர். நோயின் வீரியத்தால் இயலாமைக்கு ஆளாக்கப்பட்ட அம்பேத்கர், மனப்பொலிவோடு ஒரு கையில் தடியூன்றியவாறும் ஒரு கையை தன் உதவியாளர் ராட்டுவின் தோளைப் பற்றியவாறும் மேடையேறினார். மக்கள் கையொலி விண்ணைக் கிழித்தது. மேடையில் ஒரு மேசையின் மீது இருபுலிகள் காவல் காத்து நிற்பது போல புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அம்பேத்கரைப் புகழ்ந்து ஒரு பெண்மணி பாடிய பாடலுடன் பவுத்தம் தழுவும் நிகழ்ச்சி தொடங்கியது. குசினராவிலிருந்து வந்திருந்த இந்தியாவின் மூத்த பிக்குவான மகாஸ்தவிர் சந்திராமணி, தம் தொண்டர்கள் நான்கு பிக்குகளுடன் அம்பேத்கருக்கு பவுத்தம் தழுவும் உறுதிமொழியை செய்து முடித்தார். பிறகு அம்பேத்கர் தானே தயாரித்திருந்த 22 உறுதி மொழிகளை ஏற்றார். புத்தரின் சிலைக்கு வீர வணக்கம் செலுத் தினார். அவ்வளவுதான், அம்பேத்கர் பவுத்த நெறியில் இணைந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

குழுமியிருந்த மக்கள் “புத்தர் பெருமான் வாழ்க!'' “பாபாசாகேப் அம்பேத்கர் வாழ்க!'' என்று விண்ணதிர முழங்கினர். பவுத்தரான அம்பேத்கர், மக்களை நோக்கி பவுத்தம் தழுவ விரும்பு வோரை எழுந்து நிற்குமாறு கேட்டுக் கொண்டார். அங்கே குழுமியிருந்த அனைவரும் எழுந்து நின்றனர். மூன்று சரணங்களையும், அய்ந்து நன்னெறிகளையும், தாம் தயாரித்து வைத்திருந்த உறுதிமொழிகளையும் அம்பேத்கர் சொல்லச் சொல்ல, மக்கள் திருப்பிச் சொல்லவும் அனைவரும் பவுத்தம் தழுவியதாக அறிவிக்கப்பட்டது. ஏறத்தாழ அய்ந்து லட்சம் பேர் அம்பேத்கருடன் பவுத்தம் தழுவினார்கள்.

அம்பேத்கர் இரண்டு மணி நேரம் வரலாற்று மதிப்புடைய ஆவேசமான சொற்பொழிவை நிகழ்த்தினார். ஊசி விழுந்தால்கூட ஓசை கேட்கும் அளவிற்கு மக்கள் அமைதியாக அப்பேச்சைக் கேட்டனர். அவர் தனது கம்பீரமான குரலில் பவுத்தத்தைத் தழுவியதற்கான காரணங்களை விளக்கினார். பவுத்த மார்க்க வரலாற்றில் அம்பேத்கரின் வரவு மாபெரும் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தது என்றால் அது மிகையாகாது. மக்களுக்கான மன்னர் அசோகச் சக்கரவர்த்திக்குப் பிறகு லட்சக்கணக்கான மக்களை பவுத்தத்தில் அய்க்கியப்பட வைத்த ஒரே மனிதர் அம்பேத்கர்தான்.

5.12.1956 அன்று ராட்டு காலையில் முன்னதாகவே எழுந்து, அம்பேத்கர் இன்னும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். காலை எட்டே முக்கால் மணிக்கு அம்பேத்கர் கண் விழித்தார். ராட்டு விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டுச் சென்றார். அன்று மாலை 5.30 மணியளவில் ராட்டு தலைவரிடம் வந்தார். அம்பேத்கர் பெரிதும் தளர்ச்சி யுற்றுக் காணப்பட்டார். கையெழுத்துப் படிகளையெல்லாம் தட்டச்சு செய்யும்படி பணித்தார். இரவு எட்டு மணியளவில் சமணக் குழுவினர் மறுநாள் தங்கள் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தனர். அச்சமணக் குழுவினர்தான் அம்பேத்கரை இறுதியாகச் சந்தித்தவர்கள்.

ராட்டு அம்பேத்கரின் கால்களை அமுக்கி விட்டுக் கொண்டிருந்தார். எண்ணெய் தேய்த்து விட்டார். ஒரு புத்துணர்ச்சி தோன்றியிருக்கும் போலும்! மென்மையானதொரு பாட்டொலி! அம்பேத்கர் கண்களை மூடியவாறு பாடிக் கொண்டிருந்தார். கைகள் மெல்லத் தாளம் போட்டுக் கொண்டிருந்தன. பாட்டு தெளிவாகவும் இனிதாகவும் கேட்டது. அது, “புத்தம் சரணம் கச்சாமி!'' பின் தனக்கு விருப்பமான இசைத் தட்டினைப் போடுமாறு கேட்டு இசையில் ஒன்றிவிட்டார். சமையல்காரர் சுதாமன் இரவு உணவுண்ண அம்பேத்கரை அழைத் தார். சிறிதளவு சோறு தவிர வேறெதுவும் வேண்டாம் என்று கூறினார். நூலகத்திலிருந்து சில நூல்களை எடுத்தார்; ஒரு முறை நோக்கினார். அவற்றைப் படுக்கையறை மேசை மீது வைக்குமாறு ராட்டுவிடம் கூறினார். பின்னர் உணவறை சென்றார். சிறிதளவே உண்டார்.

Ambedkar தலையை நீவி விடுமாறு ராட்டுவைக் கேட்டுக் கொண்டார். பின் எழுந்து கைத்தடியை ஊன்றியவாறே, ‘யாரையும் என்ன சாதி என்று கேட்காதே' என்று அறிவுறுத்திய கபீரின் “ஆழ்கடல் போல் ஆழ்ந்தவை உன் அரிய இனிய சிந்தனைகள்'' என்னும் பாடலைப் பாடியவாறே அம்பேத்கர் படுக்கையறையில் நுழைந்தார். நூலகத்திலிருந்து எடுத்து வந்த நூல்களைச் சிறிது நேரம் புரட்டிக் கொண்டிருந்தார்; பின் அவற்றை மேசையின் மீது வைத்தார்; அப்படியே படுக்கையில் சாய்ந்தார். கால்களை மெல்ல அழுத்தி விடுமாறு ராட்டுவைப் பணித்தார். இரவு மணி 11.15 இருக்கும். முதல் நாள் இரவும் ராட்டு தன் இல்லம் செல்லவில்லை. தலைவரைத் தூங்க வைத்துவிட்டு வீடு திரும்ப எண்ணினார். அவருடைய கவனத்தை திருப்புவதற்காக மேசை மீதிருந்த புத்தகங்களை இடம் மாற்றி நகர்த்தினார். அம்பேத்கர் நிமிர்ந்து பார்த்தார். ராட்டு அப்போது விடை பெற்றுக் கொண்டார். வெளி வாயிலை அடைவதற்குள் சமையல்காரர் சுதாமன் ஓடிவந்து, பாபாசாகேப் மீண்டும் அழைப்பதாகத் தெரிவிக்க, படுக்கையறை வந்தார்.

அம்பேத்கர் அப்போது, ‘புத்தரும் அவர் தம்மமும்' என்னும் நூலின் கைப்படிகள், ஆத்திரே, ஜோசி ஆகியோருக்கு எழுதப்பட்ட கடிதங்கள், பர்மா அரசுக்கு எழுதிய கடிதம் ஆகியவற்றைத் தன் மேசையின் மீது வைக்குமாறு கூறினார். அவ்வாறே எடுத்து வைத்த ராட்டு, இல்லம் புறப்பட்டுச் சென்று விட்டார். 1956, டிசம்பர் 6 அன்று காலை ஆறரை மணியளவில் எழுந்த சவீதா, தன் கணவர் படுக்கையின் மீது பார்வையைச் செலுத் தினார். அவர் கால்கள் படுக்கையிலிருந்து பிறழ்ந்து திண்டு மீது கிடப்பதைக் கண்டார். அம்பேத்கர் இறந்துவிட்டார் என்பதை அறிந்து அலறினார். ராட்டுவை அழைத்துவர ஆள் அனுப்பினார். ராட்டு அலறியடித்துக் கொண்டு வந்தார். தன் தலைவரை உண்மையிலும் உண்மையாக நேசித்த ராட்டு, அம்பேத்கருடைய கால்களைத் தேய்த்துவிட்டும், வாயில் சிறிதளவு வெறியம் ஊற்றி விட்டும் நெஞ்ச ஓட்டத்தைத் தூண்ட முயன்றார். முயற்சிகள் யாவும் பயனற்றவை ஆயின. அம்பேத்கர் உறங்கும்போதே சாக்காட்டை எய்தி விட்டார்!

அம்பேத்கருக்கு நீரிழிவு நோயால் நரம்பு மண்டலம் தாக்குண்டிருந்தது. இருபது ஆண்டுகளாக மெலிவுற்று வந்த அவர் தம் மக்களை விட்டு உடலால் பிரிந்து விட்டார்! ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை வாழ்வுக்காய் ஓடியாடி உழைத்த கால்கள், தமது ஓட்டத்தை நிறுத்திக் கொண்டன. கடும் சிந்தனையின்போதும் ஓய்வில்லாது எழுதிக் கொண்டிருந்த கைகள் ஓய்ந்துவிட்டன! எண்ணியும் எழுதியும் பேசியும் மக்களைத் திரட்டி அமைப்பாக செயல்பட வைத்த மூளை, தன் ஊற்றுக் கண்ணை மூடிக் கொண்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதைக்காய், முழு விடுதலைக்காய் துடித்துக் கொண்டிருந்த நெஞ்சம் தன் துடிப்பைத் துண்டித்துக் கொண்டது.

அம்பேத்கரின் மறைவுச் செய்தி அனைத்துலகுக்கும் அறிவிக்கப்பட்டது. அலிப்பூர் சாலையை நோக்கி மக்கள் அணியணியாய்த் திரண்டு வந்தனர். மக்கள் பார்வைக்கென டில்லி அலிப்பூர் சாலையிலுள்ள இல்லத்தில் அவருடைய புகழுடல் வைக்கப்பட்டது. காட்டுத் தீ போல் டில்லி மாநகரெங்கும் செய்தி பரவியது. தளபதியரும், தொண்டர்களும், மக்களும் அவருடைய இல்லம் நோக்கித் திரண்டு வந்தனர். தங்கள் மாபெரும் தலைவரை இறுதியாக ஒருமுறை காண்பதற்காக மக்கள் திரள் அம்பேத்கரின் இல்லத்தின் முன் பொங்கிப் பெருகியது. அவருடைய புகழுடல் வானூர்தி மூலம் பம்பாய்க்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர் 7, பின்னிரவு 2 மணிக்கு பம்பாய் சாந்தா குருசு வானூர்தி நிலையத்தில் மக்கள் வெள்ளம் அம்பேத்கரின் புகழுடலைக் காத்துக் கிடந்து பெற்றுக் கொண்டது. வானூர்தி நிலையத்திலிருந்து பம்பாய் தாதர் பகுதியிலிருந்த அம்பேத்கரின் இல்லமான ராஜகிருகத்திற்கு அமைதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தங்கள் மேய்ப்பரை மீட்பரை தலைவரை தந்தையை நவீன புத்தரைக் காண லட்சக்கணக்கில் வழியெங்கும் காத்திருந்து விழிநீரால் வீரவணக்கம் செலுத்தினர்.

ராஜகிருகத்தில் இறுதி வீர வணக்கம் செலுத்துவதற்காக ஏறத்தாழ அய்ந்து லட்சம் பேர் கூடியிருந்தனர். அன்று பகல் 1.40 மணியளவில் மக்கள் தங்கள் மாத்தலைவரின் புகழுடலை அனுப்பி வைக்க இறுதி ஊர்வலம் புறப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு இறுதி ஊர்வலம் தாதர் சுடுகாட்டை அடைந்தது. வடக்கு பம்பாய் முழுவதும் 5 மணி நேரம் போக்குவரத்து முற்றிலுமாக நின்றுவிட்டது. வழி நெடுகிலும், மரக்கிளைகளிலும், மாடி வீடுகளிலும் மக்கள் வெள்ளம். இரண்டு மைல் நீளம் இறுதி ஊர்வலம் நீண்டிருந்தது. சுடுகாட்டில் ஒழுங்கு செய்ய காவல் துறை நிறுத்தப்பட்டிருந்தது.

பாதாந்த ஆனந்த கவுசல்யாயன் தலைமையில் நான்கு பிக்குகள் இறுதி வழி முறையினை நிறைவேற்றி வைத்தனர். இரவு 7.30 மணியளவில் அம்பேத்கரின் ஒரே மகன் யசுவந்த்ராவ் அம்பேத்கர் தீ மூட்ட, குழுமியிருந்த மக்கள் கதறியழுதனர். அகில இந்திய பட்டியலினக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தாதாசாகேப் கெய்க்வாட், தனது இரங்கல் உரையில் பவுத்தம் தழுவுவோருக்கு அழைப்பு விடுத்தார். பவுத்தம் தழுவியவர்களுக்கு ஆனந்த கவுசல்யாயன் ‘தீட்சை' நடத்தி வைத்தார். அன்று மட்டும் பவுத்தம் ஏற்றவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம்.

9.12.1956 அன்று சிவாஜி பூங்கா சுடுகாட்டில் ஆனந்த கவுசல்யாயன் தலைமையில் நிகழ்ந்த ‘எரிமேடை' இரங்கலில் இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர். அம்பேத்கரின் புகழுடல் சுட்டெரிக்கப்பட்ட சாம்பல் (அஸ்தி) கலசங்களில் எடுக்கப்பட்டு, ஊர்வலமாக ராஜகிருகம் கொண்டு செல்லப்பட்டது. அன்று மாலை தாதர் சிவாஜி பூங்காவில் இரங்கல் பொதுக் கூட்டமும் நடைபெற்றது. ஒரு வாரம் கழித்து அம்பேத்கரது புகழுடலின் அஸ்தியில் ஒரு பகுதி டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்த அஸ்தியை சாட்சியாக வைத்து முப்பதாயிரம் தொண்டர்கள் பவுத்தம் ஏற்றனர். அதே அஸ்தி பிரிக்கப்பட்டு, அதில் ஒரு பகுதி ஆக்ரா நகரத் தொண்டர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை ஆக்ராவில் சாட்சியாக வைத்து பவுத்தம் தழுவும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பவுத்தம் ஏற்றவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சம்.

அம்பேத்கர் இறந்த பதினோராம் நாள் (17.12.1956) அவரின் இறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அம்பேத்கரின் தளபதியர் டில்லியில்கூடி, அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். யசுவந்த்ராவ் அம்பேத்கர், தம் தந்தையின் இறப்பு குறித்து டில்லி காவல் துறையில் வழக்கு ஒன்றினைப் பதிவு செய்தார். அம்பேத்கரின் இறப்பு குறித்து இறவாத அய்யப்பாடு இன்றும் நிலவி வருகிறது. இந்து சமூகத்தின் எல்லா வகையான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான புரட்சியின் சின்னமாக விளங்கிய அம்பேத்கரை, ‘இந்துத்துவமே இந்தியா' எனும் முழக்கத்தை தூக்கிப் பிடித்த வீர சாவர்க்கரின் தம்பி பாபா சாவர்க்கர் என்னும் பார்ப்பனர், அம்பேத்கர் உண்ணும்போது உணவில் நஞ்சு வைத்துக் கொல்ல முயன்றதாக ‘மராத்தியன்' என்னும் நாளிதழில் பி.கே. ஆத்திரே என்பவர் எழுதியுள்ளார். இது, பவுத் தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் நடந்து வரும் யுத்தத்தின் பார்வையில் கவனம் கொள்ள வேண்டிய விசயமே ஆகும்.

14.10.1956 அன்று நாகபுரியில் நடைபெற்ற மாபெரும் பவுத்தம் தழுவும் நிகழ்ச்சியைப் போன்ற நிகழ்வுகள், எவ்விதத் தடையுமின்றி மிக வேகமாகத் தொடர்ந்து நடைபெற்றன. 1956 டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கி 1957 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் நாள் வரை பம்பாய், டெல்லி, ஆக்ரா மட்டுமின்றி மகாராட்டிர மாநிலத்தின் எல்லைக்குட்பட்ட இருபது நகரங்களில் பவுத்தம் தழுவும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் விளைவாக, நாகபுரியிலும் சந்தா நகரிலும் அம்பேத்கரின் எண்ணப்படி பவுத்தம் தழுவியோர் எண்ணிக்கை நாற்பது லட்சத்தைத் தாண்டியது. 1957 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பவுத்தம் தழுவும் நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. தேர்தலுக்குப் பின்னர் பவுத்தம் தழுவும் நிகழ்ச்சிகளைத் தொடர்வதெனவும் வேகப்படுத்துவதெனவும் முடிவும் செய்திருந்தனர். ஆனால், அவ்வாறு ஏதும் நடைபெறவில்லை. உண்மையில் தேர்தலுக்குப் பின்னர் மிகப் பெரிய தொய்வையே சந்தித்தது. 1957, ஏப்ரல் 13 ஆம் தேதி அலிகார் நகரில் இரண்டு லட்சம் மக்கள் பங்கேற்ற பவுத்தம் தழுவும் நிகழ்ச்சி மட்டுமே நடைபெற்றது.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில், 1957 ஆம் ஆண்டு இறுதியில் மிகப் பெரிய பவுத்த மாநாடு வேலூரில் தளபதி கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. அதில் இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் தந்தை என். சிவராஜ், அன்னை மீனாம்பாள், இந்திய பவுத்த சங்கத் தலைவராகயிருந்த யசுவந்தராவ் அம்பேத்கர் எனப் பல தலைவர்கள் பங்கேற்றனர். அதில் பவுத்தம் தழுவும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதன் தாக்கமும் வீச்சும் 1960 வரை தமிழகத்தில் நிலவியது. ஆனால், 1960க்குப் பின்னர் அம்பேத்கர் விரும்பிய பவுத்தம் தழுவும் நிகழ்வுகள் குறிப்பிடும் வண்ணம் மகாராட்டிரம் உட்பட எங்கும் நடைபெறவில்லை.

அம்பேத்கர், ‘ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த விடுதலைக்கும் இந்து மதத்தை விட்டொழித்து பவுத்தத்தை ஏற்பதே ஒரே தீர்வு' என்றும், ‘இந்தியாவுக்கு சுயாட்சி எந்த அளவிற்கு இன்றியமையாததோ அதேபோல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பவுத்தம் ஏற்றலும் மிகமிகத் தேவையானதே' என்றார். ‘நிரந்தர மகிழ்வுக்கு இந்து மதத்தை விட்டொழிப்பதே வழி; பவுத்தம் தழுவுவதற்காக அரசியல் உரிமைகளைத் தியாகம் செய்ய வேண்டும் என்ற நிலை வந்தாலுங்கூட எவரும் தயங்கக் கூடாது' என்றும் ‘மனித சமத்துவத்தை அடைய, விடுதலைக்காக பவுத்தம் தழுவுங்கள்' என்றும் அம்பேத்கர் வலியுறுத்தி உள்ளார். சாதியக் கட்டமைப்பில் தாழ்த்தப்பட்டோரை மூளைச் சங்கிலியால் இன்னும் கட்டி வைத்திருக்கும் இந்து மதத்தை விட்டொழிப்பதே - அம்பேத்கர் பவுத்தம் தழுவிய இந்தப் பொன்விழா யுகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழிகாட்டும் தலைவர்களுக்கு, தளபதியருக்கு, சிந்தனையாளர்களுக்கு, செயல்பாட்டாளர்களுக்கு முதலும் முடிவுமான கடமையாக இருக்க முடியும்.

அம்பேத்கர் நவீனத்துவ வெளிச்சத்தில் பவுத்தத்தை (அசலான) மறுபடைப்புக்கு அவர் தம் ஒடுக்கப்பட்ட மக்களுக் கெனவே கொண்டு வந்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பவுத்தமே மூல, முழுபலம் என்பதை நிரூபணம் செய்தார். உலகின் எல்லா வழிகாட்டிகளைவிட, புத்தரை கம்பீரத்திலிருந்து மேன்மையின் தொடர்ச்சியாக்கினார். புத்தரின் எளிமை, மனித ஆளுமை களின் பன்முகத் தன்மை, உயிர்ப்புமிக்க மனித அழகியலே அம்பேத்கர் புத்தரை உயர்த்திப் பிடிக்கும் உள்ளடக்கம் ஆகும்.

பார்ப்பனிய மதமான இந்து மதத்தை விட்டொழித்த அம்பேத்கரின் நவீன விழைவின் குறியீடே பவுத்தம். அம்பேத்கரின் நவயானம் - அறியாமை, சாதி ஆதிக்க, வர்க்க ஆதிக்க, ஆணாதிக்க நிலைமைகளுக்கு எதிரானது. அம்பேத்கரின் நவயானம் பெறுகிற பரிமாணங்கள், பார்ப்பனியம் ஊடுருவிய பவுத்தச் சீரழிவிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. அது சாமான்ய மனிதர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய படைப்புக் கவனத்தோடு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய முதன்மைப் படைப்பாளர்களுள் முதன்மையானவராக புத்தரை அம்பேத்கர் அவதானித்தார். மக்களுக்கு தலைமை தாங்கும் தனக்கும் ஒரு தலைவர் வேண்டும் என்ற அவசியத்தின் அடிப்படையில்தான் புத்தரை தன் ஆசானாக ஏற்றுக் கொண்டார்.

புத்தர் மரணப்படுக்கையில் இருக்கின்றார். தலைமைத் தோழர் ஆனந்தன் உட்பட அனைத்து தோழர்களும் புத்தரை துயரத்தோடு சூழ்ந்து நிற்கின்றனர். அப்போது ஆனந்தன் புத்தரிடம் கேட்கின்றார், “அய்யன்மீர், தங்களுக்குப் பிறகு எங்களை யார் வழி நடத்துவார்கள்? இந்த சங்கத்திற்கு யார் தலைமை ஏற்பார்கள்?'' அதற்கு புத்தர், “இது நாள் வரை நான் உங்களுக்கு போதித்த ‘தம்மம்' உங்களைத் தலைமையேற்று வழிநடத்தும். தம்ம பாதையே நீங்களும் சங்கமும் செல்ல வேண்டிய பாதை'' என பதில் அளிக்கிறார்.

எனக்குப் பின் யார் வழிகாட்ட முடியும்? அம்பேத்கர் சொல்கிறார் : “என்னைப் போல் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள் என் மக்கள். என்னை மனதார நினைப்பதற்கும், என் வழியைத் தொடர்வதற்கும் என்னுடைய நூல்களே உதவும்.'' இதில் அம்பேத்கரின் மரண சாசனம் ‘புத்தரும் அவர் தம்மமும்.'

முற்றும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com