Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
பிப்ரவரி 2007
முதுநிலை மருத்துவக் கல்வியில் கானல் நீராகும் தலித் இடஒதுக்கீடு
ஜி.ஆர். ரவீந்திரநாத்

தமிழகத்தில் முதுநிலை மருத்துவக் கல்வி இடங்கள் ஏறத்தாழ 900 உள்ளன. இதில் 50 சதவிகித இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்குச் சென்று விடுகின்றன. அகில இந்திய ஒதுக்கீட்டில் இடஒதுக்கீடு எந்தப் பிரிவினருக்கும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் எஞ்சியுள்ள 50 சதவிகித இடங்களிலும் ஒரு பொதுத் தொகுப்பை முந்தைய அ.தி.மு.க. அரசு உருவாக்கியது. இதனால் தமிழகத்தில் முதுநிலை மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு, ஒட்டுமொத்த இடங்களில் 34.5 சதவிகிதம் மட்டுமே வழங்கப்படுகிறது. இது, சமூக நீதிக்கு எதிரானது.

முதுநிலை மருத்துவக் கல்வியில் 8 இடங்களோ, அதற்குக் குறைவான இடங்களோ உள்ள படிப்புகளில் இடஒதுக்கீட வழங்கப்படவில்லை. இதனால் எம்.டி. மனநல மருத்துவம்; எம்.டி. சமூக மற்றும் நோய் தடுப்பு மருத்துவம்; எம்.சி.எச். மூளை அறுவை சிகிச்சை (5 ஆண்டு படிப்பு), எம்.டி. கதிர் இயக்க மருத்துவம், பல்வேறு முதுநிலை பல் மருத்துவப் படிப்புகள் உள்ளிட்ட படிப்புகளில் - 8 இடங்களுக்கும் குறைவாக உள்ள இடங்களில் இடஒதுக்கீடு இல்லாமல் போய்விடுகிறது. மேலும், 50 சதவிகித இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்குச் சென்று விடுவதால், 16 இடங்களோ அதற்கும் குறைவாக இடங்களோ உள்ள படிப்புகளிலும் அவற்றின் எண்ணிக்கை எட்டாகவோ, அதற்கும் கீழாகவோ குறைந்து விடுகிறது. இதனால் முதுநிலை மருத்துவக் கல்வியில் உள்ள 38 படிப்புகளில் 24 படிப்புகளுக்கு இடஒதுக்கீடே இல்லாமல் போய்விடுகிறது. இதன் காரணமாக இடஒதுக்கீடு உரிமை பெற்ற மருத்துவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

குறிப்பாக, எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழக அரசு உடனடியாக வரும் கல்வியாண்டு முதல் எட்டு இடங்களுக்கும் குறைவாக உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புகளிலும் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதோடு, அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு இடங்களை வழங்குவதையும் கைவிட வேண்டும்.

குறைவான எண்ணிக்கையில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீட்டை சுழற்சி முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து முதுநிலை மருத்துவப் படிப்புகளிலும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்களை ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக வழங்கி, இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும். கேரளாவில் இது போன்ற முறை உள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற முறை கடைப்பிடிக்கப்படாததால் எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு பல முக்கியமான முதுநிலை மருத்துவப் படிப்புகளில் நீண்ட காலமாக இடம் கிடைக்காத நிலை உள்ளது. இன்றைய நிலையில் (வர்த்தக நோக்கில்) அதிக முக்கியத்துவம் இல்லாத டிப்ளமோ படிப்புகளிலேயே இடங்கள் கிடைக்கிறது. எனவே, இக்குறைபாடும் போக்கப்பட வேண்டும். இதன் மூலம் மட்டுமே முதுநிலை மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும்.

பொசுங்கியது ‘அவுட்லுக்' ஏடு

‘அவுட்லுக்' என்கிற ஆங்கில வார ஏடு (பிப்ரவரி 5, 2007), 'Smokers The New Outcasts - Growing middle class intolerance makes smokers feel like pariahs' - ‘புகைப்பிடிப்பவர்கள் பறையர்களைப் போல நடத்தப்படுகிறார்கள்; அவர்கள் தங்களை பறையர்களாக உணர்கிறார்கள்' என்று எழுதி தலித் மக்களை இழிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் புகைப்பிடிப்பவர்களின் பிரச்சனையை, தலித்துகளின் வாழ்வியல் மற்றும் மனித உரிமைப் பிரச்சினையோடு ஒப்பிட்டு கொச்சைப்படுத்தியுள்ளது.

இதைக் கண்டித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சமூக செயல்பாட்டு இயக்கம், 5.2.07 அன்று செங்கற்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் ‘அவுட்லுக்' இதழைக் கொளுத்தி கண்டனப் போராட்டத்தை நடத்தியது. போராட்டத்திற்கு சமூக செயல்பாட்டு இயக்கத்தின் தலைவர் ஜி. கருணாகரன் தலைமையேற்றார்; எஸ் தயாளன் முன்னிலை வகித்தார், துரை இதழைக் கொளுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ‘அவுட்லுக்' ஏட்டைக் கண்டித்தும் ஊடகங்களின் தலித் விரோதப் போக்கைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. யாக்கன், செல்லப்பன், கிருஷ்ணன், அருங்குணம், வியாகுலன், ரங்கநாயகி மற்றும் பலர் கண்டன உரையாற்றினர். இறுதியாக ‘அவுட்லுக்' இதழ் கொளுத்தப்பட்டது.

தலித்துகளை ‘பறையன்' என்ற சொல் மூலம் இழிவுபடுத்தியதற்காக ‘அவுட்லுக்' இதழ் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரவும், ‘அவுட்லுக் இதழ்' மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்போராட்டத்திற்கு முதலில் அனுமதி அளிக்க மறுத்த காவல் துறையை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலித்துகளை இழிவுபடுத்தும் இத்தகைய போக்குகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கு அடையாளமாக, செங்கல்பட்டில் முதல் தீ பற்றியிருக்கிறது.

தீ பரவட்டும்...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com