Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
டிசம்பர் 2008


நஞ்சு கக்கும் ‘தினமணி'
ம. மதிவண்ணன்

உள் ஒதுக்கீடு சாத்தியமா என்று "தினமணி' 25.11.2008 அன்று ஒரு செய்திக் கட்டுரையை வெளியிட்டது. அதில் வழக்கம் போல செ.கு.தமிழரசன், மத்திய அரசுதான் வழங்க முடியும்; ஆந்திராவில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்று பஜனை பாடியிருந்தார். என்.வரதராஜன், சி.மகேந்திரன் போன்றவர்கள் உள் ஒதுக்கீட்டை வரவேற்றிருந்தார்கள். விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்ந்த ரவிக்குமார், "தலித் தலைவர்களை ஆணையம் கருத்து கேட்கவில்லை' என்று புகார் வாசித்து விட்டு, பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பி விட்டுதான் அருந்ததியர் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். பின்னடைவுப் பணியிடங்களை எல்லாம் அவர்தம் சாதியினரைக் கொண்டு நிரப்பி விட்டு, அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு என்று வெறுமனே வாயளவில் அறிவிக்கப்பட வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறாரோ என்னவோ?

thinamani. அதைவிட முக்கியமாக, "தினமணி'யின் பார்ப்பனிய தந்திரம் அர்ஜுன் சம்பத்தின் கருத்தாய் வெளியிடப்பட்டதில் தான் அடங்கியிருந்தது. "அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டுமென ஆறு ஆண்டுகளாக இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்திருக்கிறது. இப்போது நிறைவேற்றப்படுவதை வரவேற்கிறோம்' என்று பசப்பியிருந்தார் அவர். ஆறு ஆண்டு காலமாக அக்கோரிக்கையை அவரது கட்சி அலுவலகத்தில் உள்ள கழிவறைக்குள் போய், உள்ஒதுக்கீடு வழங்க வேண்டுமென முனகிக் கொண்டு அச்சுவரில் எழுதி வைத்து விட்டு வந்தார்களோ என்னவோ! அவர்களுக்கும், "தினமணி'க்கும்தான் வெளிச்சம்!

அதே நாளில் இன்னொரு பக்கத்தில் வெளியாகியிருந்த செய்தியில், "உள்ஒதுக்கீட்டின் பயன்களை உண்மையான இந்து அருந்ததியர் மட்டுமே அனுபவிக்க வேண்டும். பெயரளவில் இந்துக்களாக இருந்து கொண்டு, உண்மையில் கிறித்துவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அனுபவிக்காத வகையில் உரிய வழிவகை காணப்படவேண்டும்' என்று இல. கணேசய்யர் உபதேசித்திருந்தார். இந்துத்துவக்குரல் இதோடு முடிந்து விடுவதற்காகவா "தினமணி'யின் ஆசிரியராக வைத்தியநாதன் பொறுப்பேற்றிருக்கிறார்? 27ஆம் தேதி அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை பத்து சதவிகிதமாக வழங்க வேண்டும் என்று அர்ஜுன் சம்பத் கோரியதாக ஒரு செய்தியை "தினமணி' வெளியிட்டது.

இந்துத்துவவாதிகளின் குரலாக இருந்தாலும் அது அருந்ததியருக்கு ஆதரவாக அல்லவா வருகிறது. அந்தளவோடு விட்டுவிடலாமா? அதனால்தான் அதே நாளின் தலையங்கப் பக்கத்தில் ரா. சோமசுந்தரம் என்பவரின் கட்டுரையை வெளியிட்டு கணக்கைச் சரிசெய்து கொண்டது "தினமணி'. அருந்ததியர் உள் ஒதுக்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கும் நோக்கத்தோடு அமைச்சரவைக் கூட்டம் கூடுகின்ற நாளன்று பார்த்து இவ்வாறான கட்டுரை வெளியிடப்பட்டது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இந்நிலையில் அன்று (27.11.08) கூடிய அமைச்சரவையில் உள்ஒதுக்கீட்டின் செயலாக்கம் குறித்து ஆராய, அமைச்சரவைக் குழு ஒன்றை அமைப்பது என்று முடிவு எடுத்தது. பொறுக்குமா தினமணிக்கு? அடுத்த நாள் தலையங்கப் பக்கத்தில் உள்ஒதுக்கீடு விருந்தா? விஷமா? என்ற டாக்டர் கிருஷ்ணசாமியின் கட்டுரையை வெளியிட்டது.

அக்கட்டுரையில், “இந்தியா முழுவதும் மய்ய, மாநில அரசாங்கம் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் 10 லட்சம் பின்னடைவுப் பணியிடங்கள் உள்ளன. தமிழக அரசுப் பணியிலும் 4 லட்சம் பேர் இருக்க வேண்டிய இடத்தில் 1 லட்சம் பேரே பணியில் இருக்கிறார்கள். அருந்ததிய மக்களின் வாழ்க்கை நிலையே அவர்களின் வலைவாய்ப்புக்கான அடிப்படைக் கல்வியைப் பெற முடியாமல் ஆக்கிவிட்டது. இடஒதுக்கீடே ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படாத போது, உள் ஒதுக்கீட்டை எவ்வாறு அமுல்படுத்தப் போகிறார்கள்? உள்ஒதுக்கீட்டைப் பொறுத்த மட்டிலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அந்தப் பட்டியலில் இடம் பெறக்கூடிய அனைவரும் அவரவர்களின் திறமைக்கேற்பப் பங்கைப் பெற வேண்டும். 3 சதவிகிதம் பேருக்கு உள்ஒதுக்கீடு எனும் விருந்தை அளியுங்கள். அதே நேரத்தில் 18 சதவிகிதம் பேருக்கு (3 சதவிகிதம் போனால், 15 சதவிகிதம் இல்லையா?) உண்டான உரிமைகளையும் அளியுங்கள். இல்லையேல் 3 சதம் பேருக்கு விருந்தானது 18 சதம் பேருக்கு விஷமாக மாறும்'' என்று எழுதியிருந்தார்.

டாக்டர் கிருஷ்ணசாமியிடம் சில கேள்விகள் :

உள்ஒதுக்கீடு என்று பேசும் போதெல்லாம் பின்னடைவுப் பணியிடங்கள் என்று மிரட்டுகிறீர்களே! உள்ஒதுக்கீடு என்பது வேலைவாய்ப்பில் மட்டுமல்லாது கல்வியிலும் அளிக்கப் படுவதல்லவா? அவ்வாறு கல்வியில் உள்ள இடஒதுக்கீடு என்பது, ஒவ்வொரு ஆண்டும் முறையாக "கட்ஆப்' மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டுக் கொண்டு தானே வருகிறது. அதில் அருந்ததியருக்கு உரிய அளவு ஒருபோதும் கிடைக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களை எல்லாம் வழங்கியிருந்தோமே அதைப்பற்றி மட்டும் வாய் திறக்கமாட்டேன் என்கிறீர்களே! இந்தியா முழுமைக்குமான பின்னடைவுப் பணியிடங்கள் எல்லாம் அருந்ததியர் உள்ஒதுக்கீடு கேட்கும் போது மட்டும் ஏன் உங்களுக்கு நினைவுக்கு வருகின்றன? அவரவர் திறமைக்கேற்ப பங்கைப் பெற வேண்டும் என்கிறீர்களே - அப்படி உங்களை சொல்ல வைப்பது, அம்பேத்கரியமா? பார்ப்பனியமா? மேலும், “வளர்ந்து வரும் நாகரிக சமுதாயத்தில் எந்த வகுப்பினரும் வஞ்சிக்கப்படக்கூடாது. அந்த அடிப்படையில் உயர் வகுப்பின ஏழைகளுக்கும் இடஒதுக்கீடு என்ற கொள்கைக்கு நாம் எதிரானவர்கள் அல்ல'' ("தினமணி' 27.12.2008) என்று அவர் கூறியிருக்கிறார். டாக்டர் கிருஷ்ணசாமியின் வாதம், அருந்ததியர்கள் விஷயத்தில் மட்டும் ஏன் "அநாகரிக'மாகி விடுகிறது?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com