Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
டிசம்பர் 2008


வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே! எங்களிடம் வராதீர்கள்
சிறுபான்மையினர் அல்லாதோர் கல்லூரிகளின் சிறுமைப் போக்கு - 4

அய். இளங்கோவன்

இக்குறுந்தொடர் குறித்துப் பலர் அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், "சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளில் தலித் கிறித்துவர்களுக்குப் பணி நியமனம் தந்திருப்பதை கணக்கில் கொள்ள வேண்டாமா?' என்ற வினாவையும் சிலர் எழுப்பி வருகின்றனர். சட்ட ரீதியாக தலித் கிறித்துவர்கள், பட்டியல் சாதியில் இடம் பெற முடியாது. தலித் கிறித்துவர்களின் இடையறாத போராட்டத்திற்குப் பிறகும் மய்ய அரசு, தலித் கிறித்துவர்களைப் பட்டியல் சாதியில் சேர்த்துக் கொள்ள மறுக்கிறது. எனவே, தலித் கிறித்துவ ஆசிரியர்களை / பணியாளர்களை சிறுபான்மையினர் கல்லூரிகளில் நியமித்திருப்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. மேலும், தலித் கிறித்துவர்களுக்கு அக்கல்லூரிகளில் தலைமைப் பதவிகளை வழங்க மறுக்கும் அநீதியை என்னவென்று சொல்வது?

V.P.Singh அய். இளங்கோவன்

என் மின்னஞ்சல் முகவரிக்கு அண்மையில் அனுப்பப்பட்ட கட்டுரை, நெடுநேரத்துக்கு என்னை சலனமற்றவனாக ஆக்கிவிட்டது. வி.பி. ரவாத், வி.பி.சிங் அவர்களைப் பற்றி எழுதிய ஒரு நினைவுக் கட்டுரை அது. "வறியவனாக இறந்து போன ஒரு ராஜா' என்று தலைப்பிடப்பட்டிருந்த அக்கட்டுரை, வி.பி. சிங் அவர்களின் மாபெரும் பணிகளை நினைவு கூர்ந்திருந்தது. கட்டுரையின் தலைப்பே ஆழமானது. இந்தியாவில் சமூக நீதி, தலித் முன்னேற்றம் என்று பேசுகிறவர்கள் எல்லோருமே மேல்நிலையில் இருப்பவர்களுக்கு இணையாக தலித்துகளை உயர்த்துவதைப் பற்றிய கருத்து நிலையோடுதான் பேசுகிறார்கள். "மேல்நிலை' என்பது ஆதிக்கக் கருத்து நிலை. மேலிருப்பவர்களெல்லாம் கீழிறங்கி வந்து தலித்துகளுடன் அய்க்கியமாவதே "சமநிலை'. வி.பி.சிங், சாகுமகாராஜ் போன்றவர்களின் பணிகள் இதை மெய்ப்பிக்கின்றன.

வி.பி. சிங் இறந்த செய்தி அறிந்த உடனே, அவரின் அளப்பரிய பணியால் அரசியல் வயப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் நாடு முழுவதும் துக்கம் கொண்டாடித் தீர்ப்பார்கள்; வீதிக்கு வீதி வி.பி. சிங்கிற்கு வீர வணக்கக் கூட்டம் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் ஒன்றுமே நடக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நிகழ்ச்சிகள் நடந்தன. சென்னையில் முதல்வர் கருணாநிதி அவர்கள் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் "தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்' என்று சொன்ன வி.பி. சிங் அவர்களின் கனவை நனவாக்குவோம் என்று பேசியிருக்கிறார் (தி.மு.க. வி.பி. சிங் மறைவுக்கு 3 நாள் துக்கம் கடைப்பிடிப்பதாக அறிவித்தது. ஆனால் எத்தனை உடன்பிறப்புகள் துக்கம் கடைப்பிடித்திருப்பார்களோ தெரியவில்லை). "கார்ப்பரேட் செக்டார்களில்' இடஒதுக்கீடு வேண்டும் என்று வி.பி.சிங் தன் உரைகளில் பல முறை வலியுறுத்தியிருக்கிறார். அதையே தான் முதல்வரும் குறிப்பிட்டிருந்தார்.

நாம் தொடர்ந்து எழுப்பி வரும் குரல்களுக்கு ஆதரவாக, நமது முதல்வரின் குரலும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிற ஒன்றுதான். ஆனால் அந்த மகிழ்ச்சியை முழுமையாக்கிட வேண்டுமானால், அவர் இன்னும் சிலவற்றைச் செய்தாக வேண்டும்.

அரசு உதவி பெறும் சிறுபான்மை இனத்தவர் அல்லாத 100 தனியார் கல்லூரிகளைக் குறித்தும் நாம் இத்தொடரில் அலசி வருகிறோம். இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் சிறுபான்மை இனத்தவர்களின் கல்லூரிகளின் நிலை தான் இக்கல்லூரிகளின் நிலையும். தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டவிதி பிரிவு 11(அ)இன்படி, சிறுபான்மை இனத்தவர் அல்லாத தனியார் கல்லூரிகள் இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும். ஆனால் இச்சட்டவிதியோ இக்கல்லூரிகளின் குப்பைக் கூடையில். இடஒதுக்கீட்டினை இக்கல்லூரிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது (W.P..26832/2008).

Shahu_Maharaj இதற்குப் பாரிய நியாயங்கள் இருக்கின்றன. அதை நமக்குக் கிடைத்த புள்ளிவிவரங்களும் உறுதி செய்கின்றன. வகைக்கொரு எடுத்துக்காட்டுடன் நாம் இதை அலசினாலே இந்தக் கல்லூரிகளில் நடந்து வரும் அநீதிகள் புரிபடும். வள்ளல் பச்சையப்பன் அறக்கட்டளை நடத்தும் கல்லூரிகள் அனைத்துமே பட்டியலில் உள்ள நூறு கல்லூரிகளில் தான் வருகின்றன. சென்னையிலே மட்டும் பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி கல்லூரி, செல்லம்மாள் மகளிர் கல்லூரி என மூன்று கல்லூரிகள் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு இருக்கின்றன. கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியும், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர், மகளிர் கல்லூரிகளும் கூட இந்த அறக்கட்டளையால் நடத்தப்படுபவை. இக்கல்லூரிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படவில்லை. இக்கல்லூரிகள் ஆறிலும் இருக்க வேண்டிய 324 விரிவுரையாளர் பணியிடங்களில் சுமார் 63 இடங்கள் தலித் மக்களுக்கானவை. இதில் 31 இடங்களே நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 32 இடங்களை அந்த அறக்கட்டளை நிரப்பாமல் விட்டு வைத்திருக்கிறது.

வெள்ளைத் துரைகளிடம் "துவிபாஷி'யாக (மொழி பெயர்ப்பாளராக) இருந்த பச்சையப்பருக்கு கணக்கற்ற சொத்துக்கள் இருந்தன. அவருடைய மறைவுக்குப் பிறகு இரு மனைவிகளின் சார்பானவர்களும் மோதிக்கொண்டு திரிந்தனர். 1828 இல் சென்னையில் இருந்த அட்வகேட் ஜெனரல் ஜார்ஜ் நார்ட்டன் அவர்களால் சிக்கல் முடிவுக்கு வந்தது. ஆண்டுக்கு 4200 ரூபாய் கல்விக்கென ஒதுக்கப்பட்டது. 1828இல் இது பெரும் தொகையாகும். உடனே ஓர் அறக்கட்டளை அமைக்கப்பட்டு, பள்ளிகளும் கல்லூரிகளும் தொடங்கப்பட்டன. அறக்கட்டளையில் பிள்ளைமார் இருவரும், நாயக்கர்கள் இருவரும், மூன்று முதலியார்களும், ஒரு செட்டியாரும் அன்று இருந்தனர்.இப்படியான சாதி இந்துக்களின் ஆதிக்கம் அறக்கட்டளையில் இன்றுவரை தொடரும் என்றே தோன்றுகிறது. ஆனால் இது ஒரு பொது அறக்கட்டளை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஈகை குணம் கொண்டிருந்த பச்சையப்பர், தன் சொத்துக்களில் கணிசமான தொகையை வறியவர்களுக்கு உணவிடவே செலவழித்து இருக்கிறார். இந்த அறக்கட்டளை தொடங்கிய பிறகு 1846இல் நடைபெற்ற கல்லூரி கால்கோள் விழாவில், “பச்சையப்பரின் உதவிகளைக் கொண்டு மிக்க ஏழைகளும், ஆதரவற்றவர்களும் கல்வி பெற்று அரசுப்பணிகளில் சேர தகுதி பெற வேண்டும்'' என்று நார்ட்டன் பேசியிருக்கிறார். ஆனால் ஏழைகளிலும், வறியவர்களிலும், ஆதரவற்றவர்களிலும் தலித்துகள் வரமாட்டார்கள் என்று அறக்கட்டளையில் இன்று உள்ளவர்கள் நினைக்கிறார்களோ, என்னவோ!

பச்சையப்பன் கல்லூரிகளில்தான் இந்த நிலை என்றில்லை. சமூக நீதிக்காகப் பாடுபட்ட நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான சர். தியாகராயரின் பெயரில் இயங்கும் கல்லூரியிலும் இதே கதைதான். எட்டு தலித் விரிவுரையாளர்கள் இருக்க வேண்டிய அங்கு அய்ந்து பேர்தான் இருக்கிறார்கள். பெரியாரால் தொடங்கப்பட்ட ஈரோடு சிக்கைய்ய நாயக்கர் கல்லூரியில்கூட முழுமையாக இடஒதுக்கீட்டை செயல்படுத்தவில்லை. இக்கல்லூரியில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததால், மாணவர்கள் அண்மையில் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். அதனால் கொஞ்சம் இடங்கள் நிரப்பப்பட்டன. அப்படி நிரப்பியதில் தலித்துகள் எத்தனை பேர் என தெரியவில்லை. அக்கல்லூரியில் 12 தலித் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே தான் விடப்பட்டுள்ளன.

கோவை பூ.ச.கோ. கலை அறிவியல் கல்லூரியில் சுமார் 22 தலித் விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இக்கல்லூரிக்கு நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகுதி அளிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. அப்படி ஆகிவிட்டால் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படாமல் போய் விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால் இந்த 22 இடங்களும் தலித்துகளுக்கு கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை.

கோவில்களுக்கு உள்ளே வரவிடாமல் தலித்துகளை தடுத்துக் கொண்டிருக்கும் இந்துமடக் கூடாரங்கள் நடத்தும் கல்லூரிகள் பல தமிழகத்தில் உண்டு. சிறீமத் சிவஞ்ஞான பாலசாமிகள் தமிழ்க் கல்லூரி, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி, தருமபுரம் ஆதீனம் கல்லூரி, திருப்பனந்தாள் கல்லூரி ஆகிய மடக்கல்லூரிகளில் ஏழு தலித் விரிவுரையாளர் இடங்கள் நிரப்பப்படவில்லை. "தலித் மக்கள் நீச மொழி பேசுகிறவர்கள்' என்று சங்கர மடம் சொல்கிறது. அதனால் அவர்களுக்கு இடமில்லை என மடங்கள் சொல்கின்றன. இந்தக் கருத்தை அரசு பொறுப்பிலிருக்கும், இந்து அறநிலையத் துறை கல்லூரிகளும் அப்படியே பின்பற்றுகின்றன. பழனியிலும், பூம்புகாரிலும் இயங்கும் இத்துறையின் 3 கல்லூரிகளும் நிதியுதவி பெறும் பட்டியலில் வந்தாலும் அரசின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பவை. இவற்றின் தாளாளர்களாக அவ்வப்பகுதிகளில் பணியிலிருக்கும் வட்டாட்சியர்களே உள்ளனர். இவ்வளவு இருந்தும் இங்கும் இடஒதுக்கீடு இல்லை. சுமார் 21 தலித் பணி இடங்களை இக்கல்லூரிகள் நிரப்பாமல் வைத்திருக்கின்றன. அரைகுறையாக நிரப்பியுள்ள இடங்களை இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இந்த நூறு கல்லூரிகளிலும் மொத்தமுள்ள 5874 பணியிடங்களில் 1124 இடங்கள் தலித்துகளுக்கானவை. அவற்றிலோ 557 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.

இது, அப்பட்டமான விதிமீறல் ஆகும். சிறுபான்மையினர் அல்லாதோரால் நடத்தப்படும் 100 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஒன்பதில் ஒரே ஒரு தலித் விரிவுரையாளர் கூட இல்லை. 7 கல்லூரிகளில் ஒரே தலித் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கூட இல்லை.

மனித உரிமை, சமூக சீர்த்திருத்தம், தலித் விடுதலை பேசும் காலம் இன்று நேற்று தொடங்கியதல்ல. நூறாண்டுகளுக்கும் மேல் அந்தப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த அழுத்தங்களையும், சூழல்களையும் புறக்கணித்து பழமையின் கூடாரங்களாகவும், விலங்காண்டிக் கூடங்களாகவும் பல அரசு உதவி பெறும் கல்லூரிகள் இன்றும் இயங்கி வருகின்றன. இதை மாற்ற வேண்டும் என்பதே நமது கருத்தும் செயலும். வி.பி. சிங் கூட்டத்தில் தமிழக முதல்வர் பேசிய தனியார் துறை இடஒதுக்கீட்டுக்கு இப்போது வருவோம். தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பேசும் முதல்வர் ஒன்று செய்ய வேண்டும். அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீடு வேண்டும் என்று தொடரப்பட்டுள்ள பொது நல வழக்கில், அரசுத் தரப்பு வழக்குரைஞரை இடஒதுக்கீட்டுக்கு எதிராக வாதிடாமல், அப்பணியிடங்களை நிரப்ப இக்கல்லூரிகளை வலியுறுத்துமாறு சொல்ல வேண்டும். அப்படிச் செய்வாரா முதல்வர்?
- அடுத்த இதழிலும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com