Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu width=
 width=டிசம்பர் 2007

அரண்மனையில் அவதூறு

அருந்ததி ராய் / தமிழாக்கம் : அ. முத்துக்கிருஷ்ணன்

அவுட்லுக்' ஆங்கில வார இதழில் அருந்ததி ராய் நீதிமன்றங்கள் குறித்து எழுதிய கட்டுரையின் இறுதிப் பகுதியை இவ்விதழில் வெளியிடுகிறோம்

Arunthathi Rai கடந்த ஆண்டு (2006) தில்லியில் வசிப்பவர்களுக்கு கடினமானதாகவே இருந்தது. உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தொடர் ஆணைகளால் இந்த நகரத்தின் முகமே மாறிப்போனது. சுயமாகவே கடந்த நூற்றாண்டுகளாக வளர்ந்த நகரம், எதிர்பாராமல் சட்டங்களைக் கடந்தும் பல திசைகளில் விரிந்து வளர்ந்தது. பழைய வரைவுத் திட்டங்களுக்கு மாறாக குடியிருப்புப் பகுதிகளில் இயங்கி வந்த ஆயிரக்கணக்கான வர்த்தக நிறுவனங்கள், கடைகள், வீடுகள், வளாகங்கள் என அனைத்தையும் "சீல்' வைக்கும்படி அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் தலைமையிலான நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

ஆனால், இதில் பல நிறுவனங்கள் கடந்த பத்தாண்டுகளாக இயங்கி வந்தவை. பழைய வரைவுத் திட்டத்தின் நிலப் பயன்பாட்டு தீர்மானங்களுக்கு மாறாக, இந்த வணிக நிறுவனங்கள் இயங்கி வந்தது உண்மைதான் என்றாலும், அந்தப் பகுதியின் உள்ளாட்சி அமைப்புகள் அவர்களின் திட்டப்படி வணிக வளாகங்களை உருவாக்கவில்லை. அதில் கால் பங்குதான் கட்டப் பட்டிருந்தது. அதனால்தான் மக்களே இந்த வர்த்தக வசதிகளை உருவாக்கிக் கொண்டார்கள். அதை அவர்கள் வேடிக்கைப் பார்த்தார்கள் (அவர்களின் வாழ்வையும், சேமிப்புகளையும் இதில் முடக்கினார்கள்). திடீரென தில்லி வளர்ந்து வரும் வல்லரசின் தலைநகரமாக மாறிப்போனது. அதனால் புதிய ஆடைகளை உடுத்தி, அந்த கதாபாத்திரத்தை ஏற்பதற்கான ஆயத்தம் வேண்டும்தானே. இதற்கு எளிதான வழி, சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுவதே.

இந்தக் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கை, பல லட்சம் மக்களின் வாழ்வுரிமையைப் பாதித்தது. நகரம் தீப்பற்றி எரிந்தது. எதிர்ப்புகளும் கொள்ளையும் சமமாய் நிகழ்ந்தன. காவல் துறையின் துரித நடவடிக்கைப் படை பணியில் அமர்த்தப்பட்டது. சீற்றத்தைக் கண்டு கலக்கம் அடைந்த தில்லி அரசு, முடிவை மறுபரிசீலனை செய்யும்படி உச்ச நீதிமன்றத்திடம் மன்றாடியது. உடனே ‘2021 மாஸ்டர் திட்ட’த்தையும் அதற்கான புதிய வரைவையும் உருவாக்கியது. அதில் நிலப்பயன்பாடு பகிரப்பட்டிருந்தது. பல குடியிருப்புப் பகுதிகளில் வணிக நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. இருப்பினும், நீதிபதி சபர்வாலிடம் எந்த அசைவும் இல்லை. அவர் தலைமை வகித்த உச்ச நீதிமன்ற அமர்வு, மீண்டும் கடைகளுக்கு "சீல்' வைக்கும் ஆணைகளைப் பிறப்பித்தது.

Sweeping அதே வேளையில், உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வு மன்றம் நங்க்லா மச்சீ மற்றும் வேறு பல ஜுக்கி குடியிருப்புகளைத் தகர்த்தெறிய ஆணையிட்டது. இதனால் ஆயிரக்கணக்கான ஏழைகள் வீடுகளின்றி தவித்தனர். அவர்களின் சொந்த குடியிருப்புகளின் சிதிலங்களின் மீதே வாழத் தொடங்கினர். அதுவும் சுட்டெரிக்கும் இந்த (மே மாதம்) வெயிலில். மற்றொரு அமர்வு மன்றம், தில்லி நகரத்தில் உரிமங்கள் பெறாத தெருவோர வியாபாரிகளை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டது. இவ்வாறு தில்லியில் ஏழைகளை அப்புறப்படுத்தும் ஒரு மாபெரும் வேலை நடைபெறும் அதே வேளையில், ஒரு புதிய வகை நகரம் நம்மைச் சுற்றி அரும்பத் தொடங்கியுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட ‘மால்’கள், ‘மல்டிப்ளக்ஸ்’கள் (மாபெரும் வணிக வளாகங்கள்) என ஜொலிக்கும் நகரம் உருப்பெறுகிறது.

‘சீல்’ வைக்கப்பட்ட லட்சக்கணக்கான கடைகளில் வசதி படைத்தவர்கள் மட்டும் மிகத் துரிதமாக இப்புதிய ‘மால்’களில் இடம் பிடிக்க நீண்ட வரிசையில் அணிவகுத்தனர். விலைகள் கிடுகிடுவென ஏறின. வணிக வளாகத் தொழில் கொழித்தது. இது நகரத்தின் புதிய ஆட்டம். தன்னகத்தே சிறு நகரங்களாக உருவாகிய இந்த "மால்'களும் எல்லா விதிமுறைகளையும் மீறி சட்டத்துக்குப் புறம்பாகக் கட்டப்பட்டவை. ஆனால் வேறு ஒரு கண்ணாடி வில்லை வழியாக இவற்றைப் பார்த்த உச்ச நீதிமன்றம், இதை சிறு குற்ற மாகக் கருதி கண்டு கொள்ளாமல் இருந்தது. திருதிருவென முழித்துக் கொண்டு கண்களை சிமிட்டிக் கொண்டே சட்டத்தின் ஆட்சி சிறிய தேநீர் இடைவேளைக்குச் சென்றது.

வசந்த் குஞ் மால் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட பேராணை மனுவின் தீர்ப்பை அக்டோபர் 16, 2006 அன்று (அதில் கட்டுமானப் பணிகள் தீர்க்கமாக நடைபெற அனுமதியளிக்கப்பட்டது) வழங்கிய நீதிபதிகள் அரிஜித் பசாயத் மற்றும் எஸ்.எச். கபாடியா பின்வருமாறு கூறினர் : “இது போன்றவர்கள் (பெரும் பணக்காரர்கள்/பன்னாட்டு நிறுவனங்கள்/இந்தியப் பெரு வணிகக் குழுமங்கள்) தில்லி வளர்ச்சி ஆணையத்திடம் அனுமதி வாங்கவில்லை என்று இந்த முன்குறிப்பு தெரிவிக்கிறது. இத்தனை பெரும் தொகையை முதலீடு செய்தவர்கள், எப்படி அனுமதி வாங்காமல் இருப்பார்கள்? எங்கெல்லாம் சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதோ, அவற்றை எல்லாம் இடித்தே தீர வேண்டும் என்கிற நடைமுறை -இந்த வழக்கிற்குப் பொருந்தாது. அதிலும் குறிப்பாக ஒத்துவராத சூழலில் சில தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் -இது போன்ற சிறு மீறலில் ஈடுபட்டிருக்கும்பொழுது, இத்தகைய பெரும் ‘கார்ப்பரேட்’ நிறுவனங்கள் அனுமதியோ, உரிமமோ வாங்கவில்லை என்பது போன்ற கேள்வியே எழவில்லை.”

இது சற்றே குழப்பமானது என்பது எனக்கும் தெரியும். நானும் எனது நண்பரும் இந்த வாக்கியங்களை எளிய மொழிக்கு மாற்ற முயற்சி செய்தோம். அது அடிப்படையான ஆங்கிலத்தில்தான் (தமிழில் என வாசிக்கவும்).

இந்த வழக்குப்படி, இந்தக் கட்டுமானங்களை அனுமதி பெறாமல், சட்டவிரோதமாகக் கட்டியிருந்தாலும், இதில் பெரும் தொகை முதலீடு செய்யப்பட்டிருப்பதால், இதை இடிப்பது தீர்வாகாது 2. தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் அரசாங்கத்தால் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; அவர்கள் விதிமுறைகளை மீறியிருக்கலாம். இவர்கள் பெரும் நிறுவனங்கள், மாபெரும் கட்டுமானங்கள், இவர்கள் விதிமுறைகளைப் பெற பல தவறான நடைமுறைகளைப் பின்பற்றினார்கள் என்கிற கேள்வியையே கேட்க இயலாது.

அனுமதியைப் பெற, அரசாங்கத்திடம் இடங்களைப் பெற இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறினார்கள்; தகாத வழிமுறையில் ஈடுபட்டார்கள் என்கிற கேள்விக்கே இடமில்லை. இவ்வாறு மிக வெளிப்படையாகவே உச்ச நீதிமன்றம் தெரிவிக்கிறது.

வெளியே தெருக்களில் பிடிவாதமாய் தங்கள் குரல்வளை கிழிய போராடுபவர்களிடம் நாம் என்ன சொல்லப் போகிறோம்? நவீன கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தின் சோதனைச் சாவடியாக உச்ச நீதிமன்றம் விளங்குவதாக அவர்கள் விமர்சிக்கிறார்கள். அவர்களை நாம் முற்றாக ஒதுக்கிவிடலாமா? இல்லை எனில், இப்படியும் கூறலாம் ‘என்ரான் வாழ்க’? ‘பெக்டல், ஹாலிபர்டன் வாழ்க’? "டாடா, பிர்லா, மிட்டல், ரிலையன்ஸ்,வேதான்தா, அல்கான் வாழ்க'? ‘ச்கோக்கோ கோலா' முன்னேறு, நாங்கள் உங்களோடு தோள் கொடுப்போம்'?

சபர்வால் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிகழ்ந்த போது, இதுபோன்ற தத்துவார்த்த தட்பவெப்பம்தான் அங்கு நிலவியது. இந்த இடத்தில் ஒன்றை நாம் தெளிவுபடுத்தியாக வேண்டும். அதாவது, நீதிபதி சபர்வால் பிறப்பித்த ஆணைகளுக்கும் எந்த சர்ச்சையிலும் விவகாரத்திலும் ஈடுபடாத, எந்த குற்றங்களும் சுமத்தப்படாத மற்ற நீதிபதிகள் பிறப்பித்த ஆணைகளுக்கும் மிகப் பெரிய முரண் எதுவுமில்லை, ஒவ்வாதிருக்கவில்லை. நீதிபதியின் தத்துவார்த்த சாய்வுக்கும், சபர்வால் சொந்த நலன்களுக்காக ஆணைகள் பிறப்பித்ததும் வேறு வேறானவை. இதுதான் கதையின் கரு. சனவரி 2007இல் ஓய்வு பெறும் நாளில் இறுதியாக ஊடகங்களை சந்தித்த சபர்வால், "கடைகள் சீல் வைப்பு ஆணைதான் தனது நீதித்துறை வாழ்வின் மிகக் கடினமான முடிவாக இருந்ததாக'த் தெரிவித்தார். கட்டாயமாக அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். தீவிரக் காதல் எளிதல்லவே!

Sabarwal மே 2007 இல் "மிட் டே' (ஆங்கில) மாலை நாளிதழின் தில்லி பதிப்பு, இந்த நீதிமன்ற நடைமுறை குளறுபடி தொடர்பான தனது விரிவான புலனாய்வுக் கட்டுரைகளை (கேலிச் சித்திரத்தையும்) வெளியிட்டது. இதில் தலைமை நீதிபதி சபர்வால் தொடர்புடைய விரிவான அவதூறுகள் அடக்கம். அந்தக் கட்டுரைகளை நீங்கள் தற்பொழுதும்கூட இணையத்தில் வாசிக்கலாம். ‘மிட் டே’ நாளிதழ் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள், ஏற்கனவே நீதித்துறை செயல்பாடுகள் கண்காணிப்புக் குழுவால் வலியுறுத்தப்பட்டவையே. இந்தக் குழு நம் நாட்டில் உள்ள வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர் எனப் பல உறுப்பினர்களை உள்ளடக்கியது. குற்றச்சாட்டுகளை சுருக்கமாகப் பார்க்கலாம் :

1. ஒய்.கே. சபர்வாலின் மகன்களான சேத்தன் மற்றும் நித்தின் மூன்று நிறுவனங்களை சொந்தமாக நடத்தினார்கள். ‘பவன் இம்பெக்ஸ்', ‘சப்ஸ் எக்ஸ்போர்ட்ஸ்' மற்றும் ‘சுக் எக்ஸ்போர்ட்ஸ்' இந்த மூன்று நிறுவனங்களின் பதிவு பெற்ற முகவரி அவர்களது இல்ல முகவரியான 3/81, பஞ்சாபி பூங்கா. அது பின்னர் அவர்களது தந்தையின் அதிகாரப்பூர்வ இல்லமான 6, மோத்திலால் மார்க்குக்கு மாற்றப்பட்டது.

2. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்றதற்கு முன்னால் அவர் நீதிபதியாக இருந்த காலத்தில்தான், அவர் தன் விருப்பத்துடன் தில்லி வணிக வளாகங்கள் சீல் வைப்பு வழக்கை எடுத்து விசாரித்தார் (இது போன்று தன் விருப்பத்துடன் வேறு அமர்வில் உள்ள வழக்கை கேட்டு விசாரிக்கும் அதிகாரம், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உள்ளது. இதுவே தவறான நடைமுறை).

3. மிகச் சரியாக இந்த காலகட்டத்தில்தான் நீதிபதி சபர்வாலின் மகன்கள், இரு பெரும் "மால்' உரிமையாளர்கள் மற்றும் வணிக வளாகக் கட்டுமான நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தனர். புருஷோத்தம் பகேரியா (Square 1 Mall) மற்றும் கபூல் சாவ்லா (Business Park Town Planners) இந்தக் கூட்டு, நீதிபதி சபர்வால் சீல் வைப்பு ஆணையின் விளைவு. வியாபாரி களை கட்டாயப்படுத்தி அவர்களது வியாபாரத் தளங் களிலிருந்து வெளியேற்றி மால்களில் குடியேற்றினார்கள்; விலைகளை தம் விருப்பம் போல் ஏற்றினார்கள். இதனால் பல்வேறு வகையில் பயனடைந்தவர்கள் நீதிபதி சபர்வாலின் மகன்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள்.

4. நீதிபதி சபர்வாலின் மகன் நடத்திய ‘பவன் இம்பெக்ஸ்' நிறுவனத்துக்கு யூனியன் வங்கி 28 கோடி ரூபாய் கடன் வழங்கியது. அதற்கு அவர்கள் வழங்கிய பிணைக் காப்பு சொத்து போலியானது. அந்த பத்திரப்படி ஒரு சொத்தே இருந்திருக்கவில்லை (நீதிபதி சபர்வால் தன் மகன்களுக்கு ரூபாய் 75 கோடி வரை கடன் வசதிகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்).

5. வெளிப்படையான காரணங்களுக்காகவே இந்த வழக்கிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள, அவர் இந்த விசாரணையில் ஈடுபட்டிருக்கக் கூடாது (மாறாக, தன் விருப்பமாக இந்த வழக்கை தன் அமர்வுக்கு கேட்டுப் பெற்றார்).

6. அமர்சிங் தொலைபேசி (ஒட்டுக் கேட்பு) வழக்கை நீதிபதி சபர்வால் விசாரித்துக் கொண்டிருந்த நேரம், அவரது மகன்களின் நிறுவனத்துக்கு முலாயம் சிங் அரசு நோய்டா பகுதியில் ஏராளமான தொழிற்சாலை/வணிக வளாக மனைகளை, நம்ப முடியாத மலிவான விலைக்கு வழங்கியது (இந்த தொலைபேசி உரையாடல்கள் வெளியிடப்படக் கூடாது எனத் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது).

7. அவரது மகன் மகாராணி பூங்காவில் ரூ. 15.46 கோடிக்கு வீடு ஒன்று வாங்கினார். அதற்கான பணம் எங்கிருந்து வந்தது என இதுவரை கணக்கு தெரிவிக்கப்படவில்லை. அதற்கானப் பதிவு ஆவணங்களில் அவர்களது தந்தையின் பெயரை யோகேஷ் குமார் எனக் குறிப்பிட்டுள்ளனர் (நடத்தை கெட்ட கூச்சமற்ற இந்த பையன்கள், தங்களது தொழிலை எல்லாம் தங்கள் தந்தையின் அதிகாரப்பூர்வ அரசு இல்லத்திலிருந்தே நடத்தினார்கள்).
மேற்கூறிய எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் மிகப் பொருத்தமான, மறுக்கவியலாத ஆவணங்கள் பின்புலத்தில் உள்ளன. பதிவுப் பத்திரங்கள், ஆவணங்கள், மத்திய தொழில் அமைச்சகத்தின் பதிவு, பல நிறுவனங்களின் பத்திரங்கள், பங்குதாரர்களின் பட்டியல், நித்தின் -சேத்தனின் பங்கு அளவு குறித்த ஆவணங்கள், வருமான வரித் துறையின் சான்றுகள், குறுந்தகட்டில் பதியப்பட்ட புலனாய்வில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் நீதிபதி சபர்வால் ஆகியோரிடையே நிகழ்ந்த தொலைபேசி உரையாடலின் பதிவு.

இந்த ஆவணங்களிலிருந்து மிகத் தெளிவாகப் புலப்படுவது என்னவென்றால், தில்லி நகரமே தீப்பற்றி எரிந்த பொழுது, ஆயிரக்கணக்கான கடைகள் “சீல்” வைக்கப்பட்டபோது, பல கடை உரிமையாளர்கள் மற்றும் வேலை பறிபோன ஊழியர்களின் வாழ்வுரிமை நிர்மூலமாக்கப்பட்டபோது, நீதிபதி சபர்வாலின் மகன்களும் அவர்களது கூட்டாளிகளும் பணத்தைக் குவித்துக் கொண்டிருந்தனர். இது, நவீன இந்தியா எவ்வாறு இயங்குகிறது என்பதற்கான கையேடு போல் உள்ளது.

இந்தத் தகவல்கள் பொதுவெளிக்கு வந்த அதே நேரம், இன்னொரு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான ஜே.எஸ். வர்மா, கரன் தாப்பருடன் சி.என்.பி.சி. தொலைக்காட்சியில் ‘இந்தியா டுனைட்’ நிகழ்ச்சியில் தோன்றினார். முழுமையான பாதுகாப்புணர்வு மற்றும் செயலறிவுடன் தனது வார்த்தைகளை கட்டமைத்தார் நீதிபதி வர்மா, “... இந்தத் தகவல்கள் உண்மையானால், அது தவறான நடைமுறையின் உச்சம்... (இந்த ஜனநாயக நாட்டில்) அரசுப் பதவிகளில் அமர்ந்திருப்பவர் யாராக இருந்தாலும், நாம் மக்களுக்கு பதில் கூற பொறுப்புடையவர் ஆவோம். உங்கள் அதிகாரம் எவ்வளவு கூடுகிறதோ, அவ்வளவு பொறுப்புணர்வும் கூடுகிறது.” நீதிபதி வர்மா மேலும் விரிவாகக் கூறினார் : “ஒருவேளை இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், இந்த மொத்த வழக்கும் மீண்டும் புதிதாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இதுதான் விஷயத்தின் உயிர். இதுதான் அவதூறுகளுக்கு அரிக்கும் தன்மையை வழங்குகிறது. ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கை நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. இது இழிவானதொரு தீர்ப்பு என நிரூபணமாகும் பட்சத்தில் உடனடியாகப் புதிய முடிவுகள் எடுத்தாக வேண்டும்.”
ஆனால், இந்த விவரங்கள் உண்மையானவையா?

அதிகாரம் படைத்தவர்கள் மற்றும் பிரபலங்கள் மீதான அவதூறுகள் பல நேரங்களில் உள்நோக்கம் கொண்டதாக, கேடு விளைவிக்கக் கூடியதாக, உண்மைக்குப் புறம்பானதாகக்கூட இருக்கலாம். கடவுளுக்குத் தெரியும் நீதிபதிகளுக்கு உயிருக்கு ஊறு விளைவிக்க கூடிய எதிரிகள் இருக்கிறார்கள் என்று. அவர்கள் தீர்ப்பளிக்கும் ஒவ்வொரு வழக்கிலும் ஒருவர் வெற்றி பெறுகிறார்; ஒருவர் தோல்வியைத் தழுவுகிறார். நீதிபதி சபர்வாலுக்கு அவரது பங்கிற்கான எதிரிகள் இருக்கத்தான் செய்வார்கள். அவரது இடத்தில் நான் இருந்தால், என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லாத பட்சத்தில் நானே விசாரணையை வரவேற்றிருப்பேன். நானே உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் சென்று ஒரு விசாரணை கமிஷன் அமைக்குமாறு மன்றாடியிருப்பேன். நானே எனக்கு எதிராக ஆதாரங்களை தயாரித்தவர்களை உடன் அழைத்து விசாரித்து, இவை எல்லாம் வெற்று அவதூறுகள் என நிரூபிக்குமாறு வலியுறுத்தியிருப்பேன்.

நான் எதை செய்திருக்க மாட்டேன் என்றால், எனக்கு ஆதரவாகவும், வழக்கு மற்றும் அவதூறு பற்றியும் யாரையும் சமாதானப்படுத்தாத கட்டுரையை எழுதியிருக்க மாட்டேன் ("டைம்ஸ் ஆப் இந்தியா'வில் செப்டம்பர் 2, 2007 அன்று சபர்வால் கட்டுரை எழுதினார்).
அதே நேரம், ஒருவேளை நான் தலைமை நீதிபதியாகவோ அல்லது நீதித்துறையின் மாண்பை உயர்த்திப் பிடிக்கும் நோக்கம் கொண்டவராகவே இருந்தால் (சத்தியமாக அது என் வேலையில்லை), குப்பைகளை, அழுக்கை கம்பளத்தின் கீழ் மறைக்க மாட்டேன் அல்லது விமர்சகர்களின் வாயை அடைக்க முயன்றிருக்க மாட்டேன். ஏனெனில், அவை எதிர் விளைவுகளைத் தான் ஏற்படுத்தும். அந்த நடவடிக்கைகளில் நான் உடன் களமிறங்கவில்லையெனில், துரித உத்தரவுகள் பிறப்பிக்காவிட்டால், எனக்கு தெரியும் ஒரு தனி மனிதர் மீதான அவதூறு உடனே மொத்த நீதித்துறையின் மீதான அவதூறாக மாறிவிடும். ஆனால், அனைவரும் இதுபோல் அவதானிப்பதில்லை.

“மிட்டே” நாளிதழ் இந்த தகவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த சில நாட்களிலேயே, தில்லி உயர் நீதிமன்றம் “மிட்டே” நாளிதழின் ஆசிரியர், பதிப்பாளர் மற்றும் கேலிச்சித்திர ஓவியருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு கோருகிற அரசறிக்கையை வெளியிட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 11, 2007 அன்று நீதிமன்ற அவமதிப்பு நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர்களை செப்டம்பர் 21, 2007 அன்று கைது செய்ய ஆணை பிறப்பித்தது.

“மிட்டே” நாளிதழின் குற்றமென்ன? எல்லோரும் தயக்கம் கொள்ளும் சூழலில் தனது வீரத்தை வெளிப்படுத்தியதா? உச்ச நீதிமன்ற உத்தரவுகள், அவதூறுகளின் துல்லியம் குறித்து வாய் திறக்கவில்லை. நீதிபதி சபர்வால் மீதான குற்றங்கள் பற்றி ஒரு வார்த்தைகூட முணுமுணுக்கவில்லை. முற்றிலும் மாறாக ஏய்க்கும் நடவடிக்கையில் அது களமிறங்கியது. “மிட்டே” நாளிதழின் குறி சபர்வால் அல்ல; அவருடன் அந்த அமர்வில் இருந்த மற்ற நீதிபதிகள்தான் எனப் புதிய பாதையில் அது பயணப்பட்டது. அந்த நீதிபதிகள் நடப்பில் உச்ச நீதிமன்றத்தில் சேவை புரிந்து வருபவர்கள் (அதனால் இது கிரிமினல் அவமதிப்பாக உயர்வு பெற்றது).

“இந்தப் பிரச்சனை முன்னிறுத்தப்பட்ட விதத்தைப் பார்க்கும் பொழுது ஏதோ உச்ச நீதிமன்றமே அதன் உறுப்பினர் ஒருவருக்காக ஒத்துழைத்தது போல் உள்ளது. அவதூறுகளின் தன்மை மற்றும் சூழல் ஏதோ ஒரு முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நோக்கியதாக இருப்பினும், அது மொத்த உச்ச நீதிமன்றத்தின் மாண்பையும் குலைக்கிறது. அதனால் மக்கள் நீதிமன்றங்களின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு அது ஊறுவிளைவிக்கிறது. உச்ச நீதிமன்றம் அமர்வுகளாகப் பிரித்து தனது வேலைப் பிரிவை அமைத்துள்ளது. அதனால் அந்த அமர்வில் ஒருவர் மீது நீங்கள் குற்றம் சுமத்தும் பொழுது அது தவறான சமிக்ஞையை பரப்புகிறது. அதாவது அமர்வில் மற்ற உறுப்பினர்கள் அதிகாரமற்ற போலிகள் அல்லது உடனிருந்தவரின் திட்டங்களுக்கு ஒத்துழைத்தவர்கள் என்கிறது.”

அந்த “மிட்டே” கட்டுரைகளில் வேறு எந்த நீதிபதியும் குறிப்பிடப்படவில்லை. அதனால் அந்த இதழியலாளர்கள் கற்பனையான அவமானத்திற்காக கூண்டில் ஏற்றப்பட்டிருக்கிறார்கள். இது எதனை கூறுகிறது என்றால், ஓர் அமர்வில் பல நீதிபதிகள் உள்ளனர், அவர்களில் ஒருவருக்கு எதிராக உங்களிடம் சான்றுகள் உள்ளன. அவர் அவதூறான வகையில் தீர்ப்பு வழங்கியுள்ளார் அல்லது அவருக்கு தனிப்பட்ட முறையில் விருப்பமான வழக்கில் தீர்ப்பு வழங்கியிருக்கிறார் என்றாலும் அது போதுமானதல்ல. அந்த அமர்வில் உள்ள அனைவரையும் ஊழல் பேர்வழிகள் என நிரூபிக்கும் சான்று இருந்தால் அல்லது அனைவரும் இணைந்து முக்கிய சாட்சியத்தை விட்டு விட்டார்கள் என்றால் மட்டுமே அது வழக்காக ஏற்கப்படும். பார்க்கப் போனால் இதுவும் போதுமானதல்ல. நீங்கள் உங்கள் வழக்கை எந்தவித சொந்த பழித் தூற்றுதல்களுமின்றி நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டும் (பரிசுத்தமாக இது வாதத்திற்கு மட்டுமே : அமர்வில் உள்ள இரு நீதிபதிகள் சூழற்சி முறையில் அவதூறுகளில் ஈடுபட முடிவு செய்தால் என்னவாகும்? நாம் அப்பொழுது என்ன செய்வோம்?)

அதிகாரம் செய்கின்ற ஒரு புதிய நீதிமன்ற அவமதிப்பு சிந்தனையில் நம் மனங்கள் பொறுத்தப்பட்டுள்ளன. பெயரற்ற நீதிபதிகளுக்கு எதிராக கற்பனையான அவமானங்கள் மனக்கொந்தளிப்புடைய விளக்கங்கள் வியப்பாக உள்ளன! நாம் வேடிக்கை நிறைந்த தேசத்தில் வாழ்கிறோம். லா... லா... லாலலா...

“மிட்டே” நாளிதழில் கட்டுரைகள் எழுதிய பத்திரிகையாளர்கள் வீரத்திற்குரிய செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த விஷயத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சில நாளிதழ்கள் அந்தக் கட்டுரைகளை மறுபதிப்பு செய்திருக்கிறார்கள். ஏராளமான ஆர்வலர்கள் முன்வந்து கூட்டாக கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்கள். இதை கிரிமினல் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கோருகிற மனு இணையத்தளத்தில் உள்ளது. அரசாங்கமோ, நீதிமன்றமோ உடனடியாக ஒரு விசாரணைக்கு ஆணையிட்டால் மூத்த வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள் கூட்டாக இணைந்து மக்கள் நீதிமன்றம் அமைத்து இதனை விசாரிப்போம். நம்முன் அந்த சாட்சியங்கள் அனைத்தும் உள்ளன. எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. காலம் கனிந்து விட்டது. நேரம் நெருங்கிவிட்டது.

தலித்துகளுக்காக தனிமனிதராய் போராடி சாதனைகள் பல செய்து வரும் புரட்சியாளர் சின்னச்சாமியிடம் உரையாடிப் பெருமூச்சு விட்டு நன்றியோடு விடைபெறும்போது, அவர் எம்மை நிறுத்திப் பணிவோடு கேட்டுக் கொண்டார் : “சார் எனக்காக ஜெபம் செய்து கொள்ளுங்கள். இந்த விரோதிகளால் எனக்கு சாவு வரக் கூடாது. நான் வாழும் இந்த சமூகமும் முன்னேற முடியும் என்பதை நான் உலகத்திற்குக் காட்டிய பிறகு தான் எனக்கு சாவு வரவேண்டும்.”

- எஸ். மகிக்குமார், எஸ்.எ. துரை


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com