Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
K.R. Narayanan
டிசம்பர் 2005

மக்களாட்சி : சாதியத்தின் முகமூடி

ஜனநாயக இருள்
- யாக்கன்

மூல உண்மைகளிலிருந்து எவ்வளவு மாறுபட்டிருப்பினும் ஒரு சமூகம், அது ஏற்றுக் கொண்டிருக்கும் கொள்கைகள், ஒழுங்குகள் நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் சிந்திக்கிறது; செயல்படுகிறது. தெளிவாகிவிட்ட உண்மைகளையுங்கூட ஏற்க மறுக்கிற சமூகம், மூடநம்பிக்கைகளும் அறியாமையும் மிகுந்ததாகவே கருதப்படும். ஏனெனில், உண்மைகளைப் புரிந்து கொள்வதன் மூலம்தான், அது அறிவின் வழி பயணிக்க முடியும். இந்தியச் சமூகம், வர்ண - சாதி ஒழுங்குகளையே கொள்கைகளாகவும் நம்பிக்கையாகவும் கொண்டிருக்கிறது. இன்று வரையிலும் சமூக பேதங்களுக்கு எதிரான மாற்றுச் சிந்தனைகளுக்கு, இந்தியச் சமூகம் மதிப்புத் தரவில்லை. அதே போல், மக்களாட்சி குறித்த மக்களின் நம்பிக்கைகளும் கொள்கைகளும், ஒழுங்குகளும் அதன் மூல உண்மைகளுக்கு எதிராக இருக்கின்றன.

சமூக, அரசியல் மற்றும் ஆட்சிமுறை குறித்த பூர்வ பவுத்த மதிப்பீடுகளைப் புதைத்து, பார்ப்பனியத்தால் வெற்றிகொள்ளப்பட்ட இந்தியச் சமூகத்திற்கு, நவீன மேற்கத்திய சிந்தனைகள்தான் மீள் வழி காட்டின. நவீன சிந்தனை முறையை மட்டுமல்ல, பிரதிநிதித்துவ ஆட்சிமுறை குறித்த அடிப்படையான அறிவையும், சட்டம், நீதி, நிர்வாகம் ஆகியவற்றின் நவீன வடிவங்களையும்கூட, காலனி ஆட்சிமுறையின்போதுதான் இந்திய மக்கள் பெற முடிந்தது. வெள்ளையர் ஆட்சிமுறைதான், இந்திய சமூக ஒழுங்கைச் சிதைத்து, நவீன மனித மதிப்பீடுகளை இந்திய மண்ணில் விதைக்க முயன்றது.

Athens intellectual forum 1773 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் நாடாளுமன்றம், இந்தியாவில் நடைமுறைப்படுத்திய ‘இந்திய ஒழுங்குமுறைச் சட்டம்'தான் முற்றிலும் புதிய ஆட்சிமுறையை இந்தியச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தியது. மொகலாயப் பேரரசின் கடைசி மன்னரான ஷா ஆலம், கிழக்கிந்தியக் கம்பெனியுடன் கூட்டுச் சேர்ந்து நடத்திக் கொண்டிருந்த ஆட்சியை அச்சட்டம் ஒழித்துக் கட்டியது. அதன் மூலம், ஆயிரக்கணக்கான ஆண்டுகால மன்னராட்சி வரலாறு முடிவுக்கு வந்தது.

மன்னர் ஷா ஆலமுடன் சேர்ந்து ‘இரட்டை ஆட்சி' நடத்திக் கொண்டிருந்த கிழக்கிந்தியக் கம்பெனியரின் தான்தோன்றித்தனமான ஆட்சிமுறையையும், நீதி பரிபாலனையையும் கட்டுப்படுத்தியது, இந்திய ஒழுங்குமுறைச் சட்டம். இது, இந்தியா முழுவதிலும், ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட நவீன நிர்வாக முறையைக் கொண்டு வந்தது. உச்ச நீதிமன்றம் கல்கத்தாவில் உருவாக்கப்பட்டது. மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. அன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஆட்சி, நிர்வாக, நீதி பரிபாலனை முறைகள்தான் இன்றும் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தை உருவாக்கியதன் மூலம், இந்து சாதிய சமூகத்தின் நீதிமுறை, உலகளாவிய மனித மதிப்பீடுகளின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டது. ஆட்சி, நிர்வாகம், கட்டமைப்புகள் உலகளாவிய தன்மையைப் பெற்றன. அனைத்துமே இந்திய மக்களுக்கு முற்றிலும் புதிதாய் இருந்தன.

அதன் பிறகு, ஏராளமான சட்ட வடிவங்களை, விதவிதமான ஆட்சி முறைகளை, ஆச்சரியமளிக்கும் உள்கட்டமைப்புகளை அறிமுகப்படுத்தியது வெள்ளையர் ஆட்சி. பழமையும் மூடத்தனமும் அறியாமையும் நிறைந்து வழிந்த இந்தியா, நவீன வடிவம் பெறத் தொடங்கியது. அதனால், ஆட்சியை, அதிகாரத்தை, சமூக அரசியல் பொருளாதார மேலாண்மையை இழந்து நின்ற குறுநில மன்னர்கள், ஜமீன்கள், பார்ப்பனர்கள், ஆண்டைகள் போன்றவர்களால்தான், வெள்ளையர் ஆட்சிக்கு எதிரான கலகங்கள் நடத்தப்பட்டன. மக்கள் தன்னெழுச்சியால் அவை நடத்தப்படவில்லை. காங்கிரஸ் போன்ற நவீன அரசியல் இயக்கங்கள் உருவாக்கப்பட்ட பிறகுதான், வெள்ளை ஆட்சிக்கு எதிராக, நவீன போராட்ட வடிவங்களும், வழிமுறைகளும் பின்பற்றப்பட்டன. மக்கள் திரட்சியின் மூலம்தான் ஓர் அரசை எதிர்கொள்ள முடியும் என்ற உலகளாவிய தன்மை கொண்ட அரசியல் நெறிமுறையை, இந்திய சாதி ஆதிக்க சமூகம் புரிந்து கொண்டது.

இந்திய மக்களை ஆங்கில அரசுக்கு எதிராகத் திரட்டுவது, காங்கிரசுக்குப் பெரும் சவாலான பணியாக இருந்தது. அதோடு, ஆங்கிலேயர்களை விரட்டிவிட்டு பின்னர் நாட்டை என்ன செய்வது; யார் ஆள்வது; எப்படி ஆள்வது என்ற பெரும் கேள்விக்குறியுடன் குழம்பி நின்றனர் காங்கிரஸ் தலைவர்கள். 1906 ஆம் ஆண்டில்தான் காங்கிரஸ் ‘சுயராஜ்ஜியம்' என்ற முழக்கத்தை எழுப்புகிறது. ஆங்கில ஆட்சிக்கு எதிராக, உண்மைக்குப் புறம்பான, சதி நிறைந்த பிரச்சாரங்களை, அறியாமை மிகுந்த இந்தியர்களிடம் கொண்டு செல்வதில் வெற்றியடைந்தனர் காங்கிரஸ் தலைவர்கள். வர்ண சாதிக் கட்டமைப்புகளுக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் கிளர்ந்தெழுந்து விடாதபடி, இந்தியர் மீது அந்நியர் கற்பிதங்கள் உருவாக்கப்பட்டன. இந்து மதவெறி உணர்வு பெருந்தீயாக வளர்த்தெடுக்கப்பட்டது. காந்தி போன்றவர்கள் அதில் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். ‘தேசியம்' என்ற பொய்மை பேரெழுச்சியாகத் திரண்டது. காங்கிரசை நடத்திய பார்ப்பன, பனியா மேலாதிக்கவாதிகளின் பின்னால் ‘குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த' கதையாக, சாதி மத அடிப்படையில் இந்திய மேல்தட்டு சமூகத்தால் ஒடுக்கப்பட்ட பரிதாபத்திற்குரிய ஏழை மக்கள் திரண்டனர்.

ஏன் வெள்ளையர்கள் விரட்டப்பட வேண்டும்? இந்தியர் ஆட்சி எதற்கு வரவேண்டும்? எந்த வகை இந்தியர்கள் ஆளப்போகிறார்கள்? எப்படிப்பட்ட ஆட்சியாக அது இருக்கும்? பலகோடி தீண்டத்தகாத மக்களை எப்படி மீட்கப் போகிறோம்? வறுமையை அறியாமையை ஒழிக்க, காங்கிரஸ் கைவசம் உள்ள திட்டங்கள் என்ன? ஆயிரம் ஆண்டுகாலம் மக்களைப் பிளவுபடுத்தி வைத்து பலகோடி மக்களை இழிவுபடுத்திய இந்து மதத்தை என்ன செய்வது? வர்ண சாதிகளை என்ன செய்வது? போன்ற கேள்விகள் எதுவுமற்ற இந்திய மக்களை மந்தைகளாக தனக்குப் பின்னால் நிறுத்திக் காட்டியது காங்கிரஸ். விடுதலைக்குப் பின்னும் அந்தக் கொடுமை தொடர்ந்தது.

அடிமை உளவியலும் கவர்ச்சிக்கு மயங்கும் அறியாமையும் உடைய இந்திய மக்களை, அதே வழிகளில் அரசியல் அடிமைகளாக்கியது காங்கிரஸ். ‘இந்து மதவெறி', ‘சுதேசி' என்ற சூத்திரங்களைப் பயன்படுத்தியது காங்கிரஸ் என்றால், இஸ்லாம் மத உணர்வைக் கொண்டு, பிரிவினை முழக்கத்தைக் கொண்டு மக்களைத் திரட்டியது முஸ்லிம் லீக். போலி வாக்குறுதிகளும், கவர்ச்சிமிகு கொள்கைகளும் மக்களை அடிமைப்படுத்தப் பயன்படும் நவீன அரசியல் ஆயுதங்களாக மாறின.

விடுதலைக்குப் பிறகு, தாங்கள் ஏற்கனவே மந்தைகளாகத் திரட்டி வைத்திருந்த மக்கள் அளித்த தேர்தல் வாக்குகளால், காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சியாளர்களாக மாறினர். எனவே, ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்ற காங்கிரஸ் வகுத்துத் தந்த பாதையை மேலாதிக்க வகுப்பு நன்கு கண்டு கொண்டது. மந்தைகளை அதிகமாகக் கொண்டிருக்கும் ‘காங்கிரசே' ஆட்சியில் அமர முடியும் என்ற கணக்குப் புரிந்தது. எண்ணிக்கையில் அடங்காத அளவிற்குப் பல பெயர்களில் ‘காங்கிரஸ்கள்' உருவாகின; உருவாகிக் கொண்டே இருக்கின்றன. மந்தை உளவியல், இந்திய சமூகத்தின் பாரம்பரிய பார்ப்பனச் சாதியக் கட்டமைப்பின் தொடர்ச்சிதான். சாதியச் சமூகம் உருவாக்கியிருந்த படிநிலை ஏற்றத்தாழ்வும், வறுமையும், அறியாமையும் அரசியல் தளத்தில் வெளிப்பட்டன. சமூகத்தில் மேலாண்மை செலுத்திய சக்திகளே அரசியல் தளத்திலும் ஆதிக்கம் செய்தன. பல லட்சம் கிராமங்களில் வாழ்ந்த கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்கள், அரசியல் தளத்தில் ஆண்டைகளுக்கு அடிபணிய வேண்டியவர்களாக இருந்தனர். ஆண்டைகள் பார்ப்பனர்களின் ஏவலாட்கள் என்பதால், ஒட்டுமொத்த அரசியல் செயல்பாடுகளும் பார்ப்பன, பனியா போன்ற மேல் தட்டு வர்க்கத்தின் பிடியில் சிக்கியது. மீதமிருந்த மக்கள், விடுதலை குறித்த மறுமலர்ச்சி எதுவுமின்றி மந்தைகளாய் பொது நீரோட்ட அரசியலின் பின்னால் சென்றனர். எனவேதான், இந்தியப் பொது நீரோட்ட அரசியல், மந்தை அரசியலாக, அதன் மக்களாட்சி மந்தையாட்சியாக இருந்து வருகிறது.

இந்தியா கற்றுக் கொண்ட மேற்கத்தியச் சிந்தனை முறைகளில், மிகவும் முக்கியமானதாகவும் அதே நேரத்தில் வீணடிக்கப்பட்டதாகவும் இருப்பது ‘மக்களாட்சி' நெறிமுறைகள்தான். அறிந்து கொள்ளப்பட்டபடி, மக்களாட்சித் தத்துவத்தின் மூல உண்மைகளுக்கு மதிப்பளிக்கும்படி அது இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதன் மேற்கத்திய தன்மையிலிருந்து இந்திய சாதிய சமூகச் சூழலுக்கு ஏற்றபடி மாற்றியமைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதைச் செய்வதற்கு காங்கிரசுக்கும், அதன் தலைவர்களுக்கும் துப்பில்லை. அதற்கு அவர்கள் எங்கும் அலைந்திருக்கத் தேவையில்லை. அது, அவர்களின் காலடியிலேயே புதைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த மண்ணுக்கேற்ற மக்களாட்சி ஒளியை நெஞ்சில் சுமந்து அவர்களிடையே அலைந்து கொண்டிருந்தவர் புரட்சியாளர் அம்பேத்கர் மட்டுமே. ஆனால் அவரது கனவுகளுக்கு மாறாக, ஆட்சியிலிருக்கும் இந்திய மேலாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதிகளுக்கு, மக்களாட்சி ஒரு முகமூடியாய் இருந்து வருகிறது.

"சாதி, மத பேதங்கள் என்ற நம்டைய பழைய எதிரிகளுடன், பலதரப்பட்ட எதிரெதிர் நோக்கமுடைய அரசியல் கட்சிகள் பலவற்றை நாம் சந்திக்கப் போகிறோம். அவைகளின் நேர்மையான செயல்பாடுகள்தான் நமது அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்யும்'' என்றார் டாக்டர் அம்பேத்கர். என்ன நடக்கப்போகிறது என்று அவர் உணர்ந்து அச்சப்பட்டாரோ அது நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் அரசின் அனுமதியோடு, ஆட்சியைப் பிடிப்பதற்காகவே செயல்படுகின்றன. பல்வேறு கொள்கைகள், விதவிதமான முழக்கங்கள், சாத்தியமற்ற போலி வாக்குறுதிகள், கவர்ச்சித் தன்மையுடன் செயல்பட்டு வரும் கட்சிகள் - அதிபயங்கர ஊழல் மய்யங்களாக, குற்றத் தளமாக அவை விளங்கி வருகின்றன.

சிந்திக்கும் திறன் அற்ற மூடர்களையும், இரக்கமற்ற மனிதர்களையும் சுரண்டிப் பிழைக்கும் ஏமாற்றுப் பேர்வழிகளையும், சாதிவெறியர்களையும் மத பயங்கரவாதிகளையும் தேர்ந்தெடுக்கும்படி மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன அவை. இவர்கள்தான், தேர்தல் காலங்களில் கற்பனைக்கு எட்டாத பேரங்கள், பகட்டு விளம்பரங்கள், குற்றச் செயல்களுக்குக் காரணமாக இருக்கின்றனர். நேர்மையற்ற மனிதர்களின் கூடாராமாக நாடாளுமன்றம் விளங்குகிறது. கட்சி அரசியல் மூலம் நடைபெறும் மக்களாட்சியில், மக்களிடையே சமத்துவம் நிலவ முற்றிலும் சாத்தியமில்லை. எனவேதான் இந்திய மக்களாட்சி சீரழிந்து நிற்கிறது.

Platto ‘ஏழைகளின் எழுச்சியே மக்களாட்சி’ என்றார் பிளாட்டோ. மக்களாட்சியின் மூல உண்மைகளைத் துல்லியமாக வெளிக்கொண்டு வந்துள்ளன அவரது வார்த்தைகள். இந்திய மக்களாட்சிக்கு அவரது வார்த்தைகள் பொருந்துகின்றனவா? இந்தியாவில் எழுச்சி என்று ஒன்று ஏற்பட்டிருந்தால், அது ஆங்கில ஆட்சிக்கு எதிராக நடந்ததுதான். வெள்ளையர்களுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரசால் நடத்தப்பட்டப் போராட்டங்களை ஏழைகளின் எழுச்சி' என்று யாராவது சொல்ல முடியுமா? இந்திய மக்களாட்சி அரசியல் எழுச்சி பெற்ற ஏழைகளின் பிரதிநிதிகளாலே உருவாக்கப்பட்டதல்ல. எனவேதான் அது ஏழைகளுக்காக இயங்கும் வகையில் அமைக்கப்படவில்லை. நடுத்தர, மேல்தட்டு, ஆண்டைச் சாதியினரால் நிரம்பி வழியும் காங்கிரசால் ஏற்படுத்தப்பட்ட மக்களாட்சி, அதன் எஜமானர்களின் நலன்களுக்காகவே நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

"வேறுபாடுகளையும் ஒழுங்கின்மையையும் கொண்டு, சமமானவர்களுக்கும் சமமற்றவர்களுக்கும் ஒரேவித சமத்துவத்தை அளிக்கும் கவர்ச்சி மிக்க அமைப்பே மக்களாட்சி'' என்று வர்ணிக்கிறார் பிளாட்டோ. ஆனால், இந்திய சமூகத்தின் சீரழிவுகளையும் அதன் சாதிய ஒடுக்குமுறைகளையும் வெளி உலகிற்குத் தெரியா வண்ணம் மூடி மறைக்கவே மக்களாட்சி உதவுகிறது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளை ஏற்றுக் கொண்ட நாடு என்ற மாயையையும் மக்களிடையேயும் நாட்டிற்கு வெளியேயும் உருவாக்குவதன் மூலம் மிகப் பெரும் மோசடி, மக்களாட்சியின் பெயரால் இங்கு நடந்து கொண்டிருக்கிறது.

தேர்தல் காலங்களில் மட்டுமே பயன்படும் வாக்கு எந்திரங்களாக ஏழைகளை மாற்றி வைத்திருக்கிறது, இந்திய மக்களாட்சி. வாக்களித்து முடிந்ததும், பரிதாபத்திற்குரிய இந்திய ஏழை மக்களுக்கு என்ன வேலையிருக்கிறது பசியிலும் இழிவிலும் வாழ்வதைத் தவிர. வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அவர்களின் பிரதிநிதியாலேயே நசுக்கப்படுகிறார்கள் அம்மக்கள். ஆனாலும் இந்தியாவில் மக்களாட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது!

இந்திய மக்களாட்சி, அதன் குடிகளுக்குத் தரும் அதிகப்படியான சுதந்திரமே அவர்களை அரசியல் அடிமைகளாக்கி வைத்திருக்கிறது. சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முறைகேடுகளைப் பற்றி அக்கறையற்றவர்களாக மக்கள் இருப்பதற்கு பிளாட்டோ வேறு காரணத்தைச் சொல்கிறார். "மக்களாட்சி தரும் சுதந்திரமானது, மக்களை சோம்பேறிகளாக்கும்'' என்கிறார். "சுதந்திரத்தில் கட்டுக்கடங்காத ஆசை கொள்ளுதலும், ஏனையவற்றைப் புறக்கணித்தலுமே ஜனநாயகத்தில் எதிர் விளைவுகளை உருவாக்குகிறது. அதுவே ஜனநாயகத்தில் கொடுங்கோன்மை உருவாகும் சூழலை ஏற்படுத்துகிறது'' என்று விவரிக்கிறார் பிளாட்டோ. இந்திய மக்களாட்சி இந்த ஆபத்தை நோக்கித்தான் விரைவாகச் சென்று கொண்டிருக்கிறது.

இன்னும் ஒரு பேராபத்து, இந்திய ஜனநாயத்தை சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறது. அரசியல், தொழிற்துறை, ராணுவம் ஆகியவற்றில் மட்டும் ஆர்வமாகச் செயல்பட்டு வரும் இந்தியாவில், மூலதனமும், பொதுவுடைமையும், சமூக ஜனநாயகமும் எல்லாம் உயர் நடுத்தர வகுப்பினருக்கானதாக மாற்றப்பட்டு வருகின்றது. ஆதிக்கம் செலுத்தும் அதிகார வர்க்கமும், தொழிலதிபர்களும், பன்னாட்டுப் பெருமுதலாளிகளும் அரசுக்கு ஆலோசனையும், உத்தரவும் இடக்கூடிய நிலை உருவாகி விட்டிருக்கிறது. இன்னும் கூர்மையாகக் கவனித்தோமானால், தொழில் துறையில் ஆதிக்கம் செலுத்துவோரும் பெருதலாளிகளுமே நேரடியாக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம்விட, புற்றீசலைப்போல ஒரு புதிய வர்க்கம் புறப்பட்டு வந்திருக்கிறது. கடந்த அய்ம்பதாண்டு காலமாக மக்களாட்சியைக் கேலிக்கூத்தாக்கிய அதிகார வர்க்கத்தின் வாரிசு அது. வரும் காலங்களில், ஏழை எளிய மக்களின் பெரும் எதிரியாக மாறவிருக்கும் அந்தப் புதிய வர்க்கம் எது?

ஜனநாயக இருள் விரியும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com