Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
K.R. Narayanan
டிசம்பர் 2005
அய்.நா. அவையில் நிரந்த இடம் கோரும் இந்திய அரசு

கையால் மலமள்ளும் இந்திய மக்கள்


"கையால் மலம் அள்ளுவதை முற்றாக ஒழிப்பதற்கு, அந்தக் கொடிய வழக்கத்தை ஒரேயடியாக ஒழிப்பதைத் தவிர அதற்கு மாற்றோ, தீர்வோ இல்லை'' இப்படிச் சொல்பவர், இம்மக்களிடையே இருபதாண்டுகளாகப் பணியாற்றி வரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெசவாடா வில்சன். இவருடைய பின்னணி குறித்தும், அவர் கையால் மலமள்ளுவதை ஒழிப்பதற்கு மேற்கொண்ட பணிகள் குறித்தும் கீதா ராமசாமி எழுதியுள்ள "இந்தியா நாறுகிறது' என்ற ஆங்கில நூலிலிருந்து ஒரு பகுதியை இங்கு வெளியிட்டுள்ளோம். தேசியம் / வர்க்கம் / மொழி/ ஜனநாயகம் / நலம்/ தத்துவம் குறித்துச் சிந்திப்போரின் முக்கிய கவனத்திற்கும், தலித் இயக்கங்கள் இவ்வழக்கத்தை ஒழிப்பதைத் தங்கள் செயல் திட்டத்தில் இணைத்து, அதற்காகத் தீவிரமாகப் போராட வேண்டும் என்பதற்காகவுமே இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

Bezwada Wilson ஆந்திரப் பிரதேசத்தில், கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் பற்றிப் பேச வேண்டும் எனில், அது பெசவாடா வில்சனின் மிகச் சிறப்பானப் பங்களிப்பைக் குறிப்பிடாமல் முழுமை அடையாது. 38 வயதுடைய இவர், கையால் மலமள்ளும் தொழிலாளர்களின் ஒப்பாரும் மிக்காரும் அற்றத் தலைவராவார். வில்சனைப் பற்றி கோலார் தங்கவயலைச் சேர்ந்த, கையால் மலமள்ளும் தொழிலாளர் சங்கத்தின் ஆர்வலர் டி. பாபுலால் இப்படிச் சொல்கிறார் : “எமது மக்களுக்காக இரவு பகல் பாராது பணியாற்றும் வில்சன் அவர்களைப் பற்றி எண்ணும்போது, அவர் கையால் மலமள்ளும் தொழிலாளர்களின் அம்பேத்கர் என்று அழைக்கப்பட வேண்டும்.'' இக்கட்டுரை, வில்சனுடன் பல நாட்கள் கலந்துரையாடியதன் அடிப்படையில் எழுதப்படுகிறது.

கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் உள்ள மாதிகா குடும்பத்தில் பிறந்தவர் வில்சன். கோலால் உள்ள பெரும்பான்மை மாதிகா சமூகத்தினர், திறந்தவெளிக் கழிப்பிடங்களைத் தூய்மைப்படுத்துகின்ற பணியாளர்களாகவே நியமிக்கப்பட்டிருந்தனர். 236 திறந்தவெளிக் கழிப்பிடங்களை உள்ளடக்கிய கோலார் தங்கவயலே வில்சனின் சிந்தனையை நெறிப்படுத்தியது. 1870 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கர்நாடகத்தில் உள்ள கோலார் தங்கவயல் நிறுவப்பட்டாலும், அது பெரும்பாலும் தமிழ் தலித் தொழிலாளர்களின் ஆளுகைக்கு உட்பட்டே இருந்தது. 1960களிலும் 1970களிலும், கோலார் தங்கவயலில் 76,000 தொழிலாளர்கள் இருந்தனர். சுரங்கங்களில் கடும் பணியாற்றும் தன்மைக்கு ஈடு கொடுக்கும் வகையில், பெரும்பான்மைத் தொழிலாளர்கள் தலித்துகளாகவே இருந்தனர்.

ஆசியாவிலேயே கோலார்தான் 1902 ஆம் ஆண்டில், முதல் முதலாக மின்சாரமயமாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள், அவர்களின் அரசியல் தலைமை இடமான டெல்லியையோ அதன் பொருளாதாரத் தலைமை இடமான பம்பாயையோ மின்சாரமயமாக்கவில்லை. அவர்களின் தங்கச் சுரங்கமான கோலாரைத்தான் மின்சாரமயமாக்கினர். இதன் மூலம் ஆங்கிலேயர் ஆட்சிக்கு பெருமளவு வருவாய் கிட்டியதால், கோலாருக்கு மின்சாரம் அளிப்பதில் முன்னுரிமை வழங்கப்பட்டது. ஆனால், பொது சுகாதாரத்திற்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை.

1966 இல் வில்சன் பிறந்தபோது, கோலார் நகரியத்தின் மக்கள் தொகை இரண்டு லட்சமாக இருந்தது. இந்நகரத்தில் துப்புரவுப் பணி மட்டும், நிர்வாகத்தால் தொடர்ந்து அலட்சியப்படுத்தப்பட்டே வந்தது. தனிநபர்களுக்கென அங்கு கழிவறைகள் இல்லை. மாறாக, திறந்தவெளி சமூகக் கழிப்பிடங்களையே கட்டிக் கொடுத்தனர். இத்தகைய கழிப்பிடங்களை எல்லாம் வில்சனின் குடும்பத்தாரைப் போல, ஆந்திராவில் இருந்து வந்தவர்கள்தான் பராமரித்து வந்தனர்.

1,500 பேருக்கு 236 திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இருந்தன. கையால் மலமள்ளும் 236 தொழிலாளர்கள் இதைப் பராமரித்து வந்தனர். இதில் 108 பேர், கோலார் தங்கவயலின் நிரந்தரப் பணியாளர்கள். கையால் மலமள்ளுவோர், வெறும் கூடைகளை மட்டும் பயன்படுத்தவில்லை; அதிலிருந்து பெரிய தொட்டிகளில் கொட்ட அவர்களுக்கு வாளி தேவைப்பட்டது. அதற்குப் பிறகு இதை, ஊருக்கு வெளியே இருக்கும் பகுதியில் கொட்டுவதற்கு எடுத்துச் செல்வர். இந்தக் கழிவுகளை விவசாயிகள் உரமாகப் பயன்படுத்திக் கொள்வர். எனவே, இக்கழிவுகளை ஒரு கணிசமான தொகைக்கு கோலார் நகராட்சி விற்று வந்தது என்று வில்சன் கூறுகிறார்.

Arunthathiyar தமிழ் மற்றும் தெலுங்கு தொழிலாளர்களுக்கு இடையில் அங்கு அடிக்கடி உரசல் இருந்திருக்கிறது. தெலுங்கு தொழிலாளர்கள் "தோட்டி' என இழிவாக அழைக்கப்பட்டுள்ளனர். பள்ளியில் படிக்கும் தமிழ்க் குழந்தைகள் வில்சனை அவ்வப்போது கேலி செய்ததால், இளம் வில்சன் தனது சமூகம் இந்த வேலையை இனி செய்யவே கூடாது; அவர்கள் தொழிலை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார். வீட்டு வேலை செய்து வந்த அவருடைய தாய் ரேச்சல் பெசவாடா, வில்சன் மீது தனிக் கவனம் செலுத்தினார். தனது மகன் ஒரு பாதிரியாராக வர வேண்டும் என்று வில்சனின் தாயார் விரும்பினார். வில்சனின் தந்தை, 1935இல் கோலார் தங்கவயலில் நிரந்தரப் பணியாளராகச் சேர்ந்தவர்.

வில்சனின் அண்ணன், 4 ஆண்டுகள் இந்திய ரயில்வேயில் பணியாற்றினார். பிறகு அவரும் கோலார் தங்கவயலில் வேலைக்குச் சேர்ந்தார். ரயில்வேயிலும் கோலார் தங்கவயலிலும் அவர் துப்புரவுத் தொழிலாளியாகத்தான் இருந்தார். இச்சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அங்கு வேறு வேலை கிடைக்கவில்லை. இளைஞர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, சாதியைக் குறிப்பிட்டாக வேண்டும். அவர்களுக்கு எவ்வளவு பெரிய கல்வித் தகுதி இருப்பினும், அவர்கள் கையால் மலமள்ளும் தொழிலாளர் பணிக்குதான் தேர்வு செய்யப்படுவர். வில்சன் எஸ்.எஸ்.எல்.சி. படித்த பிறகு, வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு விண்ணப்பித்தபோது, அவருக்கு இதே பணியைச் செய்யவே வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவருடைய இரண்டாவது அண்ணன் உறுதியாக நின்று, தங்கச் சுரங்கத்தில் வேலை செய்தார்.

வில்சன், ஆந்திராவில் உள்ள குப்பம் என்ற இடத்தில் ஒரு தலித் விடுதியில் இருந்து தனது தொடக்கக் கல்வியைப் பயின்றார். அவருடைய பிற்காலக் கல்வி, கோலாலும் அய்தராபாத்திலும் இருந்தது. அவர் தனது முதுநிலை பட்டப் படிப்பை (அரசியல்) பெங்களூர் பல்கலைக் கழகத்திலும், இறையியல் இளநிலைப் பட்டப்படிப்பை பெங்களூரின் "யுனைடெட் தியாலஜிகல் கல்லூரியிலும் படித்தார். அவருடைய அம்மாவின் விருப்பம் ஒருபுறம் இருந்தாலும், தனது சமூகம் தேவாலயத்தின் மூலம் வரும் மாற்றத்தையும், சீர்திருத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் என்று வில்சன் நம்பினார். 1982 இலிருந்து அவர் தேவாலயம் தொடர்புடைய சமூகச் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

குழந்தைகளுக்கான ஞாயிறு வேதாகமப் பள்ளி நடத்துதல், தெருவை தூய்மைப்படுத்தும் பிரச்சாரம் செய்தல், மரம் நடுதல், முதியோர் கல்வி, குடிகாரர்களைத் திருத்துவது, கோலார் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது போன்ற வேலைகளைத் தொடர்ந்து செய்து வந்தார். அங்குள்ள குழந்தைகள், ஆறு அல்லது ஏழாவது வகுப்பு வரை படித்துவிட்டு, பிறகு தேர்வில் தோல்வி அடைந்தவுடன் படிப்பைக் கைவிட்டுவிடுவர். அவர்கள் வேலைக்காக வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை. அவர்கள் கோலார் தங்கவயலுக்குச் சென்றால்,அங்கு உடனடியாக கையால் மலமள்ளும் வேலை கிடைத்துவிடும்; அல்லது கொஞ்சம் நாகரீமுகமான தெரு பெருக்கும் வேலை கிடைத்துவிடும். இக்குழந்தைகளை எப்படியாவது பத்தாவது வரை படிக்க வைத்து விட்டால், அதற்குப் பிறகு அவர்களை ஏதாவது ஒரு தொழிற்படிப்பு படிக்க வைத்து அதன் மூலம் அவர்கள் கையால் மலமள்ளும் தொழிலைச் செய்வதிலிருந்து தடுத்துவிட முடியும் என்று வில்சன் நினத்தார்.

குடிகாரர்களைத் திருத்தும் பணியில் வில்சன் ஈடுபட்டாலும், கையால் மலமள்ளும் பிரச்சினையில்தான் அவர் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. ஏனெனில், அவர்கள் இந்த வேலையைச் செய்வதால்தான் குடிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவதாகக் கூறினர். எனவே, வில்சனின் ஆர்வம் அதிகரித்தது. அப்படி என்ன வேலை செய்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினார். கழிவறைகளிலிருந்து வெளிவரும் கழிவுகள், நாள்தோறும் பெரிய தொட்டிகளில் கொட்டப்படும். இதைக் குறைந்தபட்சம், பார்க்க விரும்புவோரின் பார்வைக்கு வைக்க வேண்டும். ஏனெனில், இதை ஒருறை பார்த்தாலே போதும்; அவர்களின் நினைவைவிட்டு அது ஒருபோதும் அகலாது. தனது சமூகத் தொழிலாளர்களின் அனுபவங்களைத் தெரிந்து கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும் வில்சன் விரும்பினார். அவர்களுடன் வருவதாக வில்சன் சொன்னாலும், அவர்கள் அவரைத் தவிர்த்து விடுவார்கள். ஆனால், வில்சன் அவர்களை விடுவதாக இல்லை. இறுதியில், அவர்கள் என்ன மாதிரியான வேலையை செய்கிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டார். இது நடந்தது 1989இல்.

ஒரு தொழிலாளர், திறந்தவெளிக் கழிப்பிடத்தில் உள்ள தொட்டியில் இருக்கும் கழிவுகளைத் தன் கையாலேயே சுத்தம் செய்து கொண்டிருந்தார். இதை எடுத்துச் செல்ல வரும் டிராக்டர், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும் என்பதால், திறந்தவெளிக் கழிப்பிடங்களில் உள்ள கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு தொட்டிகளில் நிரப்பப்படும். தொட்டியில் கட்டியாகி விட்டிருக்கும் கழிவுகளை வாளியின் உதவியுடன் உடைத்து, அந்த வாளி உள்ளே விழுந்து விடாதபடி அந்தத் தொழிலாளி தனது ஒரு கையில் வாளியைத் தூக்கிக் கொண்டு, தனது மறு கையால் அதைச் சுத்தம் செய்வார். ஒரு கணப்பொழுதில் இதைக் கவனித்து விட்டார் வில்சன். அந்தத் தொழிலாளி அந்த வாளியை எப்படி வெளியில் எடுக்கிறார் என்று சொல்லும்போதே அவர் கதறிக் கதறி வெடித்து அழுகிறார்.

“நான் அந்தக் குழிக்குப் பக்கத்திலேயே விழுந்து அழுது புரண்டேன். நான் பார்த்த அந்தக் காட்சிக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை. நான் சாக விரும்பினேன். நான் தொடர்ந்து அழுதேன். முதலில் அந்தத் தொழிலாளர்களுக்கு நான் ஆறுதல் சொன்னேன். இப்பொழுது அவர்கள் எனக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மிகவும் வருத்தப்பட்டு, எனக்கு என்ன ஆனது? ஏன் அழுகிறாய்? என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அவர்களின் கேள்விகள் என்னை மேலும் மேலும் அழ வைத்தன. என்ன நடந்தது? நான் அந்தக் காட்சியைப் பார்த்த பிறகு, எனக்கு உலகமே தலைகீழாக மாறிவிட்டிருந்தது. நான் செத்துவிட வேண்டும் என்று சொன்னேன். அவர்கள் இந்த வேலையை செய்யக் கூடாது; நிறுத்திவிட வேண்டும் என்று சொன்னேன். என்னுடைய துயரம் அவர்களைப் பாதித்துவிட்டதாக நினைக்கிறேன். முதல் முறையாக, இந்த வேலை தங்களையும் பாதிப்பதாக அவர்கள் சொன்னார்கள். ஆனால், அவர்கள் என்ன செய்ய முடியும்? அவர்கள் இந்த வேலையைச் செய்ய மறுத்தால், வேலையில் இருந்து தூக்கியெறியப்படுவார்கள். அவர்கள் வீட்டில் எப்படி உலை வேகும்?''

Bezwada Wilson பிறகு வில்சன் தன்னை அமைதிப்படுத்திக் கொண்டார். “என்னால் சாப்பிட முடியவில்லை; தூங்க முடியவில்லை. எனக்கு இரண்டு வழிகளே இருந்தன : ஒன்று, நான் சாக வேண்டும் அல்லது இந்தக் கொடிய வழக்கத்தை நிறுத்த நான் ஏதாவது செய்தாக வேண்டும். முதலில் சொன்னது எளிதானது. இரண்டாவது கடினமானது. நான் செத்துப் போவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.'' தனது குடும்பத்தினரின் ஆதரவுடன் வில்சன் சொன்னார் : “இனி இது என்னுடைய சொந்தப் பிரச்சினை. நான் கோலார் தங்கவயல் தலைமை அலுவலகம் முன்பு ஒரு மறியலில் ஈடுபடப் போகிறேன். எனக்கு ஆதரவு தெரிவிப்பதாக இருந்தால் தெரிவியுங்கள். இல்லை எனில், நான் என் வழியில் செல்வதைத் தடுக்காதீர்கள்.''

நீண்ட நாட்களாக வில்சனுக்குள் இருந்து கொண்டிருந்த அந்த வேட்கை வெளிப்பட்டது. அவர் தனக்குள்ளேயே முடிவு செய்து கொண்டார். எனது அண்ணன் இந்த வேலையைச் செய்ய அனுமதிக்க மாட்டேன்; எனது உறவினர்களும் இதைச் செய்ய அனுமதிக்க மாட்டேன். தன்னுடைய சமூகத்தினன் முக்கிய பிரச்சினை மது அருந்துவதோ, வறுமையோ, வேலையின்மையோ, கல்வியறிவு இல்லாததோ அல்ல. மனிதர்களின் மலத்தைக் கையால் அள்ளும் தொழிலை, அவர்கள் மீது சுமத்துவதுதான் மிக முக்கியப் பிரச்சினை என்பதை அவர் தெளிவாகப் புரிந்து கொண்டார். அதைத் தொடர்ந்து, வில்சனும், கையால் மலமள்ளும் தொழிலாளர் சங்கம் இது குறித்து சமரசமற்ற நிலைப்பாட்டை எடுத்தனர் : இத்தொழிலையே அடியோடு ஒழிக்க வேண்டும்.

பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசு ஆணையங்கள், கையால் மலமள்ளும் தொழிலாளர்களின் "மறுவாழ்வு' குறித்தும், அவர்கள் நிலையில் இருந்து "மேம்படுத்த' நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் பேசுகின்றனர். காந்தி இந்தத் தொழில் உயர்வானது என்றார். இருப்பினும், "கையால் மலமள்ளும் தொழிலாளர் சங்கம்' திறந்தவெளிக் கழிப்பிடங்களை ஒழிப்பதைத் தவிர, வேறு எந்தத் திட்டத்தையும் ஏற்கத் தயாராக இல்லை. இந்தியாவின் எந்தப் பகுதியிலும், ஒரேயொரு திறந்தவெளிக் கழிப்பிடம்கூட இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், இங்குள்ள ஜாதி அமைப்பு உடனடியாக மலமள்ளும் ஜாதியைத் தோற்றுவித்துவிடும் என்று இச்சங்கத்தினர் உறுதியாகச் சொல்கின்றனர்.

கையால் மலமள்ளும் தொழிலாளர்கள், ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்களும், சில தலித் குழுக்களும் கோரி வருகின்றனர். இது சரியான தீர்வாகாது என்கிறார் வில்சன். “நாம் ஏன் அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்? அவர்களின் வாழ்நிலையையும் வேலையையும் உயர்த்துவதற்காகவா? நான், நிறுவனத்திற்கும் அமைப்புக்கும் எதிரான கருத்து கொண்டவன் என்று விமர்சிக்கப்படுகிறேன். ஆனால், கையால் மலமள்ளுபவர்கள் ஓர் ஆற்றல் மிகுந்த அமைப்பாக மாறுவதால் அவர்கள் வலிமை உள்ளவர்களாக ஒருபோதும் மாற மாட்டார்கள். கையால் மலமள்ளுபவர்களே இல்லாதபோதுதான் நாம் வலிமை உள்ளவர்களாக ஆக முடியும்.'' வில்சனைப் பொறுத்தவரை, கையால் மலமள்ளுவோர் சங்கத்தின் அடிப்படைக் குறிக்கோளே அதை ஒழிப்பதுதான். ஒரு வலிமை மிக்க அமைப்பை உருவாக்கி, அத்தொழிலை நீடித்து நிலைக்க வைப்பதல்ல.

கையால் மலமள்ளுவதை ஒழிப்பதில் குடிமைச் சமூகம் அரசியல்வாதிகளும் அக்கறையின்றி இருப்பதால், இதை மலமள்ளுபவர்கள்தான் செய்ய வேண்டும் என்கிறார் வில்சன். அவர் இந்தப் பிரச்சினையை ஆழமாகப் புரிந்து கொண்டிருப்பதால்தான் இந்த முடிவுக்கு வருகிறார். இருபது ஆண்டுகளாக கோலார் தங்கவயல் மக்கள், கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்களையே தங்களின் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்து வருகின்றனர். கோலார் தங்கவயல் தொழிலாளர்கள்தான் இடதுசாரி இயக்கங்களின் அடித்தளமாகவும் இருக்கிறார்கள். 1962இல் கோலார் தங்கவயல் தனித் தொகுதியாக மாற்றப்பட்ட பிறகு, இந்தியக் குடியரசுக் கட்சியின் ஒரு பிரிவுதான் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியும், இந்தியக் குடியரசுக் கட்சியும் மக்களின் பிரச்சினைகளை உள்வாங்கிக் கொள்வதிலும், அவர்களுக்காகப் பணியாற்றுவதிலும் அக்கறையின்றி நடந்து கொள்கின்றன. ஒட்டு மொத்த சமூகமே, மனிதத் தன்மைக்கு முற்றிலும் புறம்பாக மலமள்ளும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது குறித்து இவ்விரு கட்சிகளுமே பொறுப்பற்று நடந்து கொள்கின்றன.

Arunthathiyar வில்சன் 1982 மே மாதம், தேவாலயங்களின் மூலம் பணியாற்றத் தொடங்கினார். ஏனெனில், அவர் மதக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டிருந்தார். அதுமட்டுமல்ல, அவர் சார்ந்திருக்கும் சமூகம், வேறு எந்த அமைப்பைக் காட்டிலும் தேவாலயத்தின்பால் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளதும் ஒரு காரணமாகும். “ மலமள்ளும் இறையியலை தேவாலயம் ஏற்றுக் கொள்வதில்லை. தேவாலயம் அதன் பாதிரிமார்களும் இனிவரப்போகும் சொர்க்கத்திற்காக ஜெபிக்கிறார்கள். ஆனால், இன்று நாங்கள் நரகத்தில் வாழ்வது குறித்து அவர்களுக்குக் கவலை இல்லை'' என்கிறார் வில்சன். கையால் மலமள்ளும் தொழிலாளர்கள் இந்த மோசமான தொழிலைச் செய்வதால், சில பாதிரியார்கள் அவர்களுக்காக ஜெபிப்பதற்குக்கூட மறுக்கிறார்கள்.

இருப்பினும், தன்னந்தனியாக தமக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை நோக்கிப் பயணமானார் வில்சன். சில தன்னார்வ நிறுவனங்களும், தலித் அமைப்புகளும் இணைந்து 1991இல் சித்தூலிருந்து அய்தராபாத் நோக்கி நடைபெற்ற சைக்கிள் பேரணியில் வில்சன் கலந்து கொண்டார். மிகவும் மெதுவாக அவருடைய கோரிக்கைக்கு வெற்றி கிட்டத் தொடங்கியது. கையால் மலமள்ளும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி, கோலார் தங்கவயல் தலைமை அலுவலகத்திற்கு அவர் தொடர்ந்து கடிதங்கள் எழுதினார்.

1991 ஆம் ஆண்டு, கர்நாடக முதல்வருக்கும், பிரதமருக்கும் அவர் கடிதம் எழுதினார். அதே ஆண்டு, இத்தொழில் செய்யப்படும் முறை குறித்தும், அதைக் கண்டித்தும் ஒரு துண்டறிக்கை வெளியிட்டார். 1993 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் இத்தொழிலைத் தடை செய்து சட்டம் இயற்றியவுடன் அது தமக்குக் கிடைத்த வெற்றியாகவே வில்சன் கருதினார். இதைத் தொடர்ந்து, நடைமுறையில் உள்ள திறந்தவெளிக் கழிப்பிடங்களைப் புகைப்படங்கள் எடுத்து, கோலார் தங்கவயல் நகராட்சியின் மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பி, திறந்தவெளி கழிப்பிடங்கள் நீடித்தால் இச்சட்டத்தின் மூலம் நான் நடவடிக்கை எடுப்பேன் என்று எழுதினார்.

அவருடைய இடையறாத முயற்சிக்கு 1994 இல்தான் பெருமளவில் பயன் கிடைத்தது. பெங்களூரில் இருந்து வெளிவரும் "டெக்கான் ஹெரால்டு' நாளேடு, கோலார் தங்கவயலில் உள்ள திறந்தவெளிக் கழிப்பிடங்களைப் பற்றி செய்தியும் புகைப்படம் வெளியிட்டது. அதன் பிறகு நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து, கர்நாடகத்தைச் சேர்ந்த சில அமைச்சர்களும், சட்ட மன்ற உறுப்பினர்களும் அரசியல் லாபம் கருதி கோலாரில் உள்ள வில்சனின் வீட்டை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். 1994 ஏப்ரல் 16 அன்று அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டி, திறந்தவெளிக் கழிப்பிடங்களை எல்லாம் தண்ணீர் விட்டுக் கழுவும் கழி வறைகளாக மாற்றவும், கையால் மலமள்ளுபவர்கள் அனைவரையும் வேறு பணிக்கு மாற்றவும் முடிவு செய்தனர்.

1994 இல் கோலாரில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் மாற்றம் பெற்று, உண்மையான மறுவாழ்வு அவர்களுக்குக் கிடைக்கத் தொடங்கியதும் வில்சன் ஒரு கதாநாயகராக மாறிவிட்டிருந்தார். அதன் பிறகு அவர் கோலாரைவிட்டு வெளியேற முடிவு செய்தார். பெங்களூர் ஒய்.எம்.சி.ஏ.வில் அவர் வட்டார ஒருங்கிணைப்பாளராக இரண்டு ஆண்டுகள் பணியில் இருந்தார். கர்நாடகாவில் உள்ள கையால் மலமள்ளுபவர்களை ஒருங்கிணைக்கும் ஒரே நோக்கத்தோடு அவர் செயல்பட்டார். இவ்வேலை செய்பவர்களைத் தேடி, அம்மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயணமானார். அதன் பிறகு, ஆந்திர மாநிலத்தில் உள்ள சில தலித் அமைப்புகளோடு தொடர்பு ஏற்பட்ட பிறகு தென்னிந்தியாவில் அதிகளவு திறந்தவெளிக் கழிப்பிடங்கள் உள்ள ஆந்திராவில், தனது பணியைத் திறம்படச் செய்ய 1996 ஆம் ஆண்டு முதல் அங்கு பணியாற்றி வருகிறார்.

தமிழில் : புலேந்திரன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com