Keetru Dalithmurasu
Dalithmurasu width=
 width=ஆகஸ்ட் 2007

ஓவியங்களின் எதிர்வினை

கே.எஸ். முத்து

தாயின் கருவறைக்குள்ளிருந்தே சமூக இயங்கியலை, அறிவுசார் கூறுகளைக் கற்றுக் கொள்ளும் மனிதன், ஒரு காலகட்டத்தில் தன்னுடைய கோணத்திலிருந்து, தான் உள்வாங்கியவற்றிலிருந்து தனக்குள் கிளர்ந்தெழும் அகம் சார்ந்த உணர்வுகளைப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்த முனைகிறான். அவை கவிதை, கட்டுரை, புதினம், இசை, சிற்பம், ஓவியம்... என நீண்டு விரிகிறது. இவ்வாறு வெளிவரும் படைப்புகள் ஒரு நோக்கத்தை நிறைவு செய்யும் வகையிலும், படைப்பாளிகளின் விருப்பத்தை உள்ளடக்கியதாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றன. இவற்றில் எழுத்துகளின் வலிமையைவிட ஓவியம், சிற்பங்களின் படைப்பாக்கத் திறன் மக்களிடையே கூடுதல் கவனம் பெற்று விடுகின்றன. ஏனெனில், காட்சிப்படுத்தப்பட்ட ஓவியங்கள் மற்றும் சிற்பங்களைக் காணும்போது ஈர்ப்புத் தன்மை அதிகரிப்பதால், அவை மனித மனங்களில் நிலைத்து நிற்கின்றன. இந்திய ஓவியக் கலை மற்றும் சிற்பக் கலை மரபு தற்பெருமை கொள்வதற்கு, இதுவே அடிப்படை.

"இந்துத்துவம்' என்கிற பாசிச கருத்தாக்கம், இந்து சமூகத்தின் பொதுப்புத்தியில் இன்று வரை நீங்கா இடத்தைப் பிடித்திருப்பதற்கு - பல்லவ மன்னர்களின் சிற்பக் கலையும், சோழர் காலத்து மன்னர்கள் எழுப்பிய பிரம்மாண்டமான கோயில் கட்டடங்களும் சாட்சிகளாக உள்ளன. எடுத்துக்காட்டாக, மதுரை, நெல்லை, திருச்சி, திருவில்லிப்புத்தூர் நகர இந்துக் கோயில்களுக்குள் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களும், வரைந்திருக்கும் ஓவியங்களும் பாலுணர்வைத் தூண்டுபவையாகத்தான் இருக்கின்றன. இருப்பினும், அதைப்பற்றி தவறாக சிந்திக்கவோ, கேள்வி எழுப்பவோ இடமின்றி கோயிலுக்கு வரும் பக்தர்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். வழிபடுகின்ற இடத்தில் இத்தகைய ஓவியங்களும், சிற்பங்களும் ஆபாசத்தை வெளிக்காட்டுவதோடு அவையனைத்தும் இந்து புராண, இதிகாசக் குப்பைகளுக்கு உயிர்கொடுத்து வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, பக்தி போதையின் மயக்கத்தில் அசிங்கங்களைக்கூட சகித்து ஏற்றுக் கொள்ளும்படி, இந்து நிறுவனங்கள் மக்களை மூளைச் சலவை செய்துள்ளன.

இந்து மதம் விரித்திருக்கும் இம்மாய வலைக்குள் சிக்கி மீள முடியாத படைப்பாளிகள்கூட - மூடநம்பிக்கைகளையும், பிற்போக்கு கழிசடைத் தனங்களையும் உள்ளடக்கிய இந்து மரபின் உணர்வுகளைத் தாங்கிய ஓவியங்களையும், சிற்பங்களை யும் அழகியல் தன்மையோடு வடிப்பதை பெருமையெனக் கருதுகின்றனர். இந்தியாவில் இயங்கிவரும் காட்சி ஊடகத்துறை, அச்சு ஊடகத்துறை, இந்து புராணங்களையும், மநுதர்ம கருத்தாக்கங்களையும் பரப்புரை செய்யும் முகவாண்மைகளாகவே செயல்படுகின்றன. சாதிகளால் கட்டமைக்கப்பட்ட இந்திய கோபுரத்தை இடித்துத் தரைமட்டமாக்குவதைத் தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட புரட்சியாளர் அம்பேத்கர் -

"சாதிக் கோட்டையில் பிளவு ஏற்படுத்த வேண்டும் என்றால், பகுத்தறிவுக்கும் ஒழுக்கத்திற்கும் ஒரு சிறிதும் இடம் கொடுக்காத வேதங்களையும், சாஸ்திரங்களையுமே நீங்கள் வெடிவைத்துத் தகர்க்க வேண்டும். சுருதிகளையும், சுமிருதிகளையும் அடிப்படையாகக் கொண்ட மதத்தை, நீங்கள் அழித்தொழிக்க வேண்டும். வேறு எதுவும் பயன் தராது. இந்த விஷயத்தில் இதுவே என்னுடைய முடிவான கருத்தாகும்'' என்றார்.

இந்து மதத்தை எதிர்த்து தன் வாழ்நாளெல்லாம் பேசியும், எழுதியும் போராடிய பெரியார், "உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரமாகத்தான் அது இருக்க முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம்தான் சாதி ஒழிந்த இடம். ஏனெனில், சாதி என்பது இந்த நான்கில் இருந்தும் ஆக்கப்பட்டதே'' என்றார்.

ஆனால், புராணங்களும், சுமிருதிகளும் இன்று நவீன தொழில்நுட்பத் துணையுடன் பன்மடங்கு பலம் பெற்று, ஊடகங்கள் மூலம் மீண்டும் மீண்டும் உயிர்ப்புடன் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. இந்து மூலாதாரங்களை அழித்தொழிப்பதில் தொய்வும், மந்தமும் நிலவுகிற சூழலில், அவற்றை ஆதரித்து, பாதுகாத்துப் பரப்புரை செய்வோரின் எண்ணிக்கை பெருகியிருப்பது ஆபத்தானது. இதில் "படைப்பாளி'களின் பங்களிப்பு மிகவும் முதன்மை வாய்ந்த கொடுஞ்செயலாகவே அமைந்துள்ளது. ஏனெனில், மக்கிப் போன இதிகாச, புராணக் குப்பைகளுக்கு வண்ணத் தூரிகையாலும், சிற்றுளியாலும் புத்துயிரூட்டி, கட்டுக் கதைகளுக்கு நிஜத்தை தரிசிப்பது போன்ற பாவனைகளைக் கொடுத்து - இந்துக் கோயில்களின் சுவர்களிலும், மண்டபங்களிலும் வலிந்து புனையப்படுவதால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் ஆழ்மனங்களில் அத்தகைய படைப்புகள் வெகுமதிப் பையும், நம்பிக்கையையும் பெற்று விடுகின்றன. அவை காலத்திற்கும் அழிக்க முடியாத புனிதத் தன்மை பெற்ற ஆவணங்களாகி விடுகின்றன. இந்தப் போலி ஆவணங்கள் வழியே தலைமுறை பல உருண்டோடி, இந்துத்துவம் தழைத்தோங்க வழிகாட்டும் அடையாள பீடங்களாக மாறுகின்றன.

இந்து மரபில் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வரும் ஓவியங்களும், சிற்பங்களும் முதன்மையான அங்கீகாரம் பெற்று பாராட்டு தலுக்குட்படுவதால், அவற்றை உருவாக்குகின்ற படைப்பாளிகளும் அத்தகைய சமூக மதிப்பையும், பாராட்டுகளையும் பெறத் துடிக்கின்றனர். "இந்தியப் பண்பாடு' என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் சாதியப் பண்பாட்டை விட்டு விலகிவர படைப்பாளி களுக்கு துணிவில்லை. இடதுசாரி சிந்தனை களை உள்வாங்கிக் கொண்ட படைப்பாளிகள்கூட, மேற்கத்திய மற்றும் உலகளாவிய தாக்கங்களை வெளிப்படுத்தும் "நுனிப்புல் மேய்ந்த' செயல்பாடுகளில்தான் தங்களுடைய படைப்பாக்கத் திறனைப் பயன்படுத்துகிறார்களேயொழிய, இந்திய நாட்டின் முதன்மையான பிரச்சினையான சாதி தீண்டாமைக் கொடுமைகளை, தங்களுடைய படைப்புகளில் வெளிக்கொணர மறுக்கின்றனர்.

இந்திய ஓவியம் மற்றும் சிற்ப மரபு குறித்துப் பேசுகின்றவர்கள், பவுத்த மரபின் பெருமையை உலகமெங்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்களை அவ்வளவு எளிதாக மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. அஜந்தா மற்றும் எல்லோரா குகை ஓவியங்கள், இந்தியப் படைப்பாளிகளுக்கு பவுத்தம் வழங்கிய கொடை என்பதை உலகம் உள்ளவரை உணர்த்தும். காலத்தையும் விஞ்சி நிற்கும் ஆற்றல், பவுத்த பண்பாட்டிற்கு உண்டு என்பதற்கு இக்குகை ஓவியங்களே சாட்சி. இத்தகைய நெடிய பயணத்தில், பார்ப்பனிய பண்பாட்டு மரபும், பவுத்த மரபும் ஒன்றுக்கொன்று முரண்பட்டே காலம் கடந்து வந்திருக்கின்றன. தொன்மை வாய்ந்த செவ்வியல் மற்றும் மேற்கத்திய கலை இலக்கியப் படைப்புகள் உருவாக்கிய விழுமியங்கள், மானுட சமூகத்தை சமத்துவப் பாதையில் வழி நடத்தத் தவறிய தருணத்தில், பவுத்த வாரிசுகளான சமூகச் சக்கரத்தைத் தன் வியர்வையாலும் கடின உழைப்பினாலும் இயக்கிக் கொண்டிருக்கும் விளிம்பு நிலை மக்களின் கலை இலக்கியப் படைப்புகள் - தொலைந்துபோன மனித நேயத்தையும், சரிந்து விழும் சமூக நீதியையும் நிலைநிறுத்தும் முயற்சியில் களமிறங்கின.

இந்திய வரலாற்றில் தொடர்ந்தும், விட்டு விட்டும் தங்களுடைய எதிர்ப்புணர்வை பண்பாட்டு வடிவங்களில் வெளிப்படுத்திய விளிம்புநிலை மக்கள், புரட்சியாளர் அம்பேத்கரின் நூற்றாண்டு எழுச்சிக்குப் பிறகு புதுவிசையுடன் கலை இலக்கியத் தளங்களில் வேர் கொள்ளத் தொடங்கினர். அவ்வாறு வெளிவந்த கலை இலக்கியப் படைப்புகள், புரட்சியாளர் அம்பேத்கர் காட்டிய சாதி ஒழிப்பு அரசியலைத் தழுவி உருவாக்கப்பட்டனவா என்பதை இங்கு மீள்பார்வை செய்ய வேண்டியுள்ளது.

பவுத்த தம்மத்தையும், அம்பேத்கரியத்தையும் தாங்கிய கலை இலக்கியப் படைப்புகள், சமகாலத்தில் களம் காணுகின்ற தலித் படைப்பாளர்களிடமிருந்து வெளிவரவில்லையெனில் - தலித் விடுதலை எப்படி சாத்தியமாகும்? சாதி - தீண்டாமை ஒடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கம் கட்டி அதை ஒழிக்க நினைக்கும்போது, அம்மக்களை ஒடுக்குகின்ற சாதி இந்துக்களும் இயக்கம் கட்டி சாதி - தீண்டாமை ஒடுக்குமுறையை தீவிரப்படுத்த எண்ணுவது போல, தலித் அல்லாத படைப்பாளிகளும் இன்று சமூக விடுதலை, மனித உரிமைகள், குழந்தை உரிமைகள், ஜனநாயகம், பெண்ணுரிமை போன்ற சமூக சிக்கல்களை கலை இலக்கிய படைப்புகள் வழியே தீர்த்துக் கொள்ள அணி திரண்டுள்ளனர்.

ஆனால், அவமானத்தையும், இழிவை யும், ஒடுக்குதலையும் காலந்தோறும் சுமந்து பழகிப்போன தலித் படைப்பாளிகளோ, விடுதலைக்காகப் போராடுகின்ற அடித்தட்டு மக்களிடம் புரட்சிகர சிந்தனைகளைத் தூண்டும், விடுதலைத் தாகம் கொண்ட படைப்புகளை காலமறிந்து வெளியிடத் துணியாமலிருப்பது, படைப்பாளிகளின் பொறுப்பற்றத் தன்மையையே உணர்த்துகிறது. கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தில் வெளிவந்துள்ள தலித் கலை இலக்கியப் படைப்புகளை தலித் பார்வையில் ஆய்வு செய்தால், மிகப்பெரிய விமர்சனத்திற்கு அவை உள்ளாக்கப்படும் என்பது உறுதி. தலித் விடுதலைக்கு "சாதி ஒழிப்பு' அடிப்படையான கருதுகோள் எனில் - பவுத்தத்தையும், அம்பேத்கரியத்தையும் உள்வாங்காமல் படைப்புகள் வெளிவர முடியாது. ஆனால், அவ்வாறு நடந்திருக்கிறதா என்பதுதான் நம் முன் நிற்கும் சவால்.

தலித் விடுதலைக்கு வலு சேர்க்கும் கலை இலக்கியப் படைப்புகள், அத்திப் பூ பூத்தது போல எப்போதாவது மலர்ந்து கொண்டுதானிருக்கின்றன. அந்த வரிசையில் சென்னை, புதுவை, கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரிகளில் பயிலும் 25 தலித் ஓவிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் - கடந்த 10 ஆண்டுகளாக, சாதி ஆதிக்கத்தால் அரசியல் அதிகாரமும், ஜனநாயகமும் மறுக்கப்பட்ட பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் போன்ற இடங்களுக்கு நேரடியாகச் சென்று அங்கு வாழும் மக்களிடம் கலந்துரையாடி, நேர்நிலைகண்டு, அவர்களிடமிருந்து கிடைத்த அனுபவங்களை கருப்பொருளாக்கி ஓவியங்களைத் தீட்டினர். இதற்கென மதுரை தலித் ஆதார மய்யத்தின் சார்பில் ஓர் ஓவியப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு வாரம் நடைபெற்ற இப்பட்டறையில் ஓவிய மாணவர்கள், தங்களுடைய வண்ண மொழிப் புலமையில் வியப்பூட்டும் 50 ஓவியங்களாகத் தீட்டினர்.

நீண்ட அனுபவமோ, அகன்று விரிந்த சமூக அறிவோ இல்லாத தலித் ஓவிய மாணவர்கள் - அழகியலோடும், செய்நேர்த்தியோடும் தீட்டிய ஓவியங்கள் அனைத்தும் சென்னை லலித் காலா அகாதமியில் பார்வைக்கு வைக்கப்பட்டன. சூலை 19 முதல் 22 வரை நடைபெற்ற இவ்ஓவியக் காட்சியில் ஓவியர்கள் சந்ரு, தட்சிணõ மூர்த்தி மற்றும் சென்னைப் பேராயர் வி. தேவசகாயம், கிருத்துதாசு காந்தி, கண்ணகி பாக்கியநாதன், ஜி.சி. சிலுவப்பன், பி. லெனின், எஸ். நடராசன், அழகிய பெரியவன், பி. மோகன் லார்பீர், வி. கருப்பன், சார்லஸ் சவுந்திரராஜன், யாக்கன், ஜான் ஜெயகரன் ஆகியோர் பங்கேற்று விவாதங்களை முன்வைத்தனர்.

ஒடுக்குமுறைக்குள்ளான ஒரு மக்கள் கூட்டம் தங்களை விடுவித்துக் கொள்ள அணியமாகும்போது கலை, இலக்கியத் தளங்களிலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் வரலாறு அறிவுறுத்தும் பாடம். பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுக்காத எந்தவொரு சமூகமும் தங்களுடைய விடுதலையை வென்றெடுக்க முடியாது என்பதை, உலகளவில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்கள் இன்றளவும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன. நிறவெறிபிடித்த அமெரிக்க வெள்ளையர்களின் காலடியில் அடிமைகளாய் நசுக்கப்பட்ட கருப்பின மக்களின் அவலம் நிறைந்த 200 ஆண்டு காலப் போராட்ட வாழ்வை மீட்டெடுத்து எழுத முனைந்தார் அலெக்ஸ் ஹேலி. பன்னிரெண்டு ஆண்டுகள் இடைவிடாமல் உழைத்து, அய்ந்து லட்சம் மைல்கள் பயணம் செய்து, தங்களுடைய முன்னோர்களின் வாழ்வியல் குறித்த ஆதாரங்களைத் தேடியலைந்தார். ஒரு சின்னஞ்சிறு துப்புக் கிடைத்தாலும் அதை ஆதாரமாகக் கொண்டு, மாபெரும் வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொள்ள ஆவலோடு காத்திருந்தார். இறுதியில், வாஷிங்டன் டி.சி.யில் உள்ள தொல்பொருள் ஆய்வு நிலையத்தில் மைக்ரோ பிலிம் சுருள்களை புரொஜக்டரில் போட்டு, தங்களுடைய முன்னோர்களின் பெயர்களைத் தேடினார்.

அப்போது புரொஜக்டரில் வெளிப்பட்ட "டாம்முர்ரே - கருப்பினம், கருமரன்' என்ற பெயரை ஆதாரமாகக் கொண்டு அதன் மூலம், நூற்றாண்டு கால வரலாற்றையும் தெளிவாகப் பாடல் மூலம் சொல்லக்கூடிய கெப்பா கஜ்ஜி பொபனா என்ற சரித்திரப் பாடகனின் வழியே - தன்னுடைய கருப்பின மக்களின் போராட்ட வரலாற்றை மீட்டெடுத்து 'வேர்கள்' என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நூலை எழுதி முடித்தார். அந்நூல் கருப்பின மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் இன்றும் ஆவணமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது போல, சாதி இந்துக்களின் கொடிய அடக்குமுறைகளால் சேரிதோறும் அடிமைகளாய் வன்கொடுமைகளுக்கு ஆட்படும் தலித் மக்களின் போராட்ட வாழ்வை மீட்டெடுத்துப் புதிய வரலாறு படைக்க முயற்சி செய்யும் அந்த அலெக்ஸ் ஹேலியைப் போல, நாளைய தலித் ஆராய்ச்சியாளர் ஒருவருக்கு வண்ணத் தூரிகையால் தீட்டப்பட்ட இந்த ஓவியங்கள், ஒரு சின்னஞ்சிறிய ஆதாரமாக அமையும் என நம்பலாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com