Keetru Dalithmurasu
Dalithmurasu width=
 width=ஆகஸ்ட் 2007

சாதிய தேசியப் போர்

அழகிய பெரியவன்

இன்னுமொரு ஆகஸ்டு 15. இம்மாதம் முழுக்கவும், இந்த ஆண்டு முழுக்க வும் கொண்டாட்டங்கள் இருக்கும். அன்றிலிருந்து இன்று வரை, இந்த இந்தியத் திருநாட்டை கட்டிக் காப்பாற்றி வருவதாக சொல்லி, உரிமை கொண்டாடி வரும் காங்கிரஸ் பேரியக்கம் - நாடெங்கிலும் மேடை போட்டு முழங்கும்! இப்போதே அதன் தலைவர் சோனியா அதைத் தொடங்கிவிட்டார். அவர் 1857 புரட்சியின் நினைவிடங்களுக்குச் சென்று வீர முழக்கமிட்டதை, பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. 1857க்கும் முந்தைய 1806 புரட்சி நடைபெற்று 201 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழகத்தில் வேலூர் கோட்டையில் இப்புரட்சி நடந்ததால், வரலாற்று ஆசிரியர்கள் அதனை கணக்கில் கொள்வதில்லை. வேறொரு காரணம், அப்புரட்சி திப்புவின் மகன் பதே ஹைதரை மன்னனாக்க நடந்தது. ஒருவேளை மங்கள் பாண்டே போல ஓர் "உயர் சாதி' வீரன் அப்புரட்சியில் ஈடுபட்டிருந்தால், வரலாற்று ஆசிரியர்களின் கருணைமிக்க பார்வை திரும்பியிருக்கக் கூடும்!

Hindu 1857 புரட்சி நடந்து 150 ஆண்டுகள் ஆகின்றன. நாடு விடுதலையைப் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன. இப்படி - எல்லா ஆண்டு கணக்குகளும் கூட்டிக் கழித்துப் பார்க்க - சரியாக வரவே தொடங்குகின்றன கொண்டாட்டங்கள். காங்கிரஸ்காரர்களை யடுத்து, இடதுசாரிகள்கூட தயாராக இருக்கிறார்கள். தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழை மக்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்ததற்கான ஏராளமான சான்றுகள் இருக்கின்றன! பகத்சிங் உள்ளிட்ட பல தோழர்களின் வீரம் செறிந்த வரலாறுகள் இருக்கின்றன.

பா.ஜ.க.வும் தனக்கான பங்கை கொண்டிருக்கிறது. வெள்ளையர்கள் இந்த நாட்டைவிட்டு மூட்டை கட்டும்போதே தம்மை அழைத்து, இந்த நாட்டை ஆள சுத்தப் பார்ப்பனர்களான உங்களால்தான் முடியும் என்று சொல்லி, விடுதலைப் பத்திரத்தை தந்துவிட்டுப் போய்விடுவார்கள் என்று நம்பி காத்திருந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள். எனவே, நிறைவேறாத அந்த ஏக்கத்தை இதுபோன்ற தருணங்களில் பேசியாவது ஆற்றிக் கொள்ளலாம். (ஆனால், உண்மையிலேயே இது நிறைவேறாத ஆசையல்ல. பார்ப்பனர்கள்தான் ஆள்கிறார்கள். ஆனால், வெள்ளையனே சொல்லிவிட்டுப் போயிருந்தால் கவுரவமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறார்களோ என்னவோ!) இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த நாட்டில் ஆளுகின்ற மற்றும் இடைநிலை சாதி யினராய் இருக்கின்ற எல்லா மக்களுக்கும் ஏதோ ஒரு வகையில் விடுதலைப் போராட்டத்தை உரிமை கொண்டாட வழி இருக்கிறது. ஆனால், தலித்துகள் எவ்வகையில் இதை உரிமை கொள்வது? அவர்களுக்கு இதில் இடமே இல்லையா? அவர்கள் வழக்கம் போலவே, கொடியேற்றும்போது போய் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்து விட்டு மிட்டாய் வாங்கிக் கொண்டு வந்துவிட வேண்டியதுதானா? அசலாரின் திருமணத்துக்கு அழையாதவரைப் போல போய் நின்று, கூட்டத்தில் பேந்தப் பேந்த விழித்துவிட்டு வந்து விடுவதா?

இந்திய விடுதலைப் போராட்டத்தை தேசியப் பார்வையில் புரிந்து கொள்வதைப் போல, மக்கள் போராட்டத்தின் பார்வையிலேயும் - ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற பார்வையிலேயும் புரிந்து கொள்வதைப் போல, தலித் பார்வையிலிருந்தும் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான தேவை இன்று அதிகரித்துள்ளது. அதற்கான அணுகுமுறைகளையும், ஆவணங்களையும் திரட்டி - ஒன்றிணைக்க வேண்டியுள்ளது. தலித்துகள் எவ்வகையிலும் குற்ற உணர்ச்சி கொள்வதற்கோ, பிறரால் விமர்சிக்கப்படுவதற்கோ இந்த வரலாற்றில் துளியும் இடமே இல்லை. இந்த நாட்டின் வேறெந்த மக்கள் திரளைக் காட்டிலும் பெருமிதம் கொள்ளத்தக்கப் பணியினை அவர்கள் ஆற்றியிருக்கிறார்கள். சாதிய ஒடுக்குமுறை என்ற உள்நாட்டு ஆதிக்கத்தையும், அந்நிய ஒடுக்குமுறை என்ற ஏகாதிபத்தியத்தையும் ஒரு சேர எதிர்த்துப் போரிட்ட மக்கள் தலித்துகளன்றி வேறல்லர். போர்க் களத்தில் தன்னைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளோடு, எதிரியுடன் சமர் புரிந்த வீரனின் தீரம் இது.

இந்தியாவில் ஆளும் சாதிகளும், ஆளப்படும் சாதிகளும் எப்போதுமே வேறுவேறாக இருந்திருக்கின்றன. பார்ப்பனர்களும், சத்திரியர்களும் இணைந்திருந்த இந்தக் கூட்டில் தலித் மக்களுக்கு இடமில்லை. காலங்காலமாகத் தொடர்ந்து வந்த இந்த விலக்கம், ஆட்சியாளும் உரிமை அடிப்படையிலான அந்நிய உணர்வினை, தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்டோர் மனதிலே உருவாக்கி வைத்திருந்தது. ஆரியர்கள், முகலாயர்கள், வெள்ளையர்கள் என்ற தொடர் வரிசையிலமைந்த காலனியாதிக்கத்தின்போது, காலம் நெடுகிலும் நடந்த அரசுரிமைப் போர்களில் - வெகுமக்களுக்கு கிஞ்சித்தும் பலன் இருக்கவில்லை. மாறாக, அம்மக்கள் தம்மை ஆள்வோர்க்குச் சாதகமாக நின்று இங்கு ஊடுறுவியோரை தடுத்துப் போரிட்டும், அவர்களின் கொடுங்கோல் ஆட்சி விதிகளை அனுபவித்தும் மடிந்தவாறே இருந்தனர். ஆரியர்களின் காலனியாதிக்கத்தின்போது உருவாகி நிலைப்படுத்தப்பட்ட சாதியம் - முகலாயர்களாலோ, வெள்ளையர்களாலோ நிர்மூலமாக்கப்படவில்லை. சாதிய அமைப்பு தமக்கு உதவி செய்யும் தன்மை வாய்ந்தது என்பதை உணர்ந்து கொண்ட அவர்கள், அதை ஒழிப்பதற்கு எந்தவிதமான பணிகளையும் மேற்கொள்ளவில்லை.

முகலாயர்கள் காலத்திய (கி.பி. 700 1700) சமூக நிலையைப் பற்றிய குறிப்புகள் பல கிடைக்கின்றன. அவற்றில் முக்கியமாக அல்பெருனியின் (கி.பி. 1030) குறிப்புகள், அன்றைய சமூக நிலை இந்து சாதிய சமூக நிலையாகவே நீடித்ததை காட்டுகிறது. "ஹாதி, டோமா, சண்டாளா போன்ற சாதிகள் இழிவானவையாகக் கருதப்பட்டன. கிராமத்தை துப்புரவு செய்வது போன்ற அசுத்தமான பணிகளே அவர்களுக்கு வழங்கப்பட்டன. அவர்கள் சூத்திர ஆணுக்கும், பார்ப்பனப் பெண்ணுக்கும் முறை தவறி பிறந்தவர்களாகக் கருதப்பட்டனர்.'' (அல்பெருனியின் இந்தியா - இ.சி. சாச்சா. தொகுதி 1, பக் : 101) இக்குறிப்பை சுட்டிக்காட்டும் ஜேம்ஸ் மாசே, மற்றொரு குறிப்பையும் தன் கட்டுரை நூலொன்றில் சுட்டிக்காட்டுகிறார்.

"பார்ப்பனர்கள் தாம் எழுதிய வேதங்களை சத்திரியர்களுக்கு கற்பித்தனர். சத்திரியன் அதை கற்றுக் கொள்ளலாம். ஆனால், கற்பிக்கக் கூடாது. ஒரு பார்ப்பனனுக்கே கூட அவ்விதம் செய்யக் கூடாது. வைசியர்களும், சூத்திரர்களும் அதை கேட்கவோ, உச்சரிக்கவோ கூடாது. அப்படி ஒரு செயல் நிரூபிக்கப்படுமானால், பார்ப்பனன் அந்த சூத்திரனை நீதிபதியின் முன்னால் இழுத்துக் கொண்டு போய் நிற்க வைத்து, அக்குற்றவாளியின் நாக்கினை துண்டித்திடும் தண்டனையைப் பெற்றுத் தருவான்.''

இதே நிலைதான் வெள்ளையர்கள் ஆட்சியின்போதும் நீடித்தது. அவர்கள் இந்தியாவை சீர்த்திருத்தவோ, தலித்துகளை காப்பாற்றவோ இங்கு வரவில்லை. வாணிபம் செய்யவும், அதைத் தொடர்ந்து இங்கு இருக்கும் சமூக அமைப்பு தமக்கு சாதகமாக இருப்பதைக் கண்டு அதிகாரம் செலுத்தவும், இந்தியாவின் வளத்தினை முடிந்தவரை சுரண்டவுமே வந்தனர். வெள்ளையர்கள் இங்கே அதிகாரம் செலுத்த முடிந்ததற்கு அடிப்படையான காரணம், அரசு வர்க்கத்திற்கும், மக்களுக்கும் இடையே இருந்த மிகப்பெரும் இடைவெளியே. 1599 இல் லண்டனில் தொடங்கப்பட்ட கிழக்கிந்திய கம்பெனி முதல் 150 ஆண்டுகளுக்கு, வணிகத்தை மட்டுமே கவனித்து வந்தது. 1744க்குப் பிறகே ராபட் கிளைவ் அதை ஒரு ராணுவ பலம் கொண்ட அமைப்பாக மாற்றினார். இந்த ராணுவத்துக்கும் இந்தியாவில் ஆங்காங்கே இருந்த சமஸ்தானங்கள் மற்றும் அரசுகளின் ராணுவத்துக்கும் அவ்வப்போது நிகழ்ந்து வந்த மோதல், 1800களின் தொடக்கத்தில் தீவிரமடைந்தது. இது 1857இல் ஒரு பெரும் கலகமாக உருவெடுத்தது.

படித்த, ஒரே மொழி பேசக் கூடிய, கீழ்ப்படிந்திருக்கும் தன்மை கொண்ட சிப்பாய்களாகப் பணியமர்த்த வேண்டும் என்ற நோக்கில் - அதிகப்படியான பார்ப்பனர்களை முதல் நிலை ராணுவப் படையில் வெள்ளையர்கள் அப்போது சேர்த்திருந்தனர். கல்வி என்பது பரம்பரை சொத்தாக மதிக்கப்பட்ட அக்காலத்தில் பார்ப்பனர்களே படித்திருந்தனர். அதிலும் குறிப்பாக அவர்கள் ஒரே மொழியைப் படித்திருந்தனர். எனவே, வெள்ளையர்களின் வங்காளப்படையில் ஹிந்துஸ்தானி பேசும் பார்ப்பன சிப்பாய்களின் ஆதிக்கமே அதிகம் இருந்தது. இதனால் சாதிய வேறுபாடுகள் ராணுவத்தில் நீக்கமற நிறைந்திருந்தன. துப்பாக்கியில் பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்ட பசுவின் கொழுப்பும், பன்றியின் கொழுப்பும் மட்டுமல்லாமல் - சிப்பாய்களிடையேயும், குட்டி அரசுகள் மற்றும் ஜமீன்தார்கள் இடையேயும் இருந்த சாதி மதக் கொழுப்பும்தான் கலகங்களுக்குக் காரணம். காலங்காலமாக வழக்கத்தில் இருந்துவந்த மரபு வழிபட்ட ஆதிக்க அனுகூலங்கள் பறிபோனது. சாதி வழக்கங்களுக்கும், மதத்துக்கும் ஆபத்து வந்துவிட்டதாக அஞ்சியது. பஞ்சம், வேலையில்லா திண்டாட்டம் போன்றவைகளும் இந்த கலகத்தின் காரணங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.

நேரு, 1857 புரட்சியை "பண்ணையாரிய எழுச்சி' என்று குறிப்பிட்டிருக்கிறார். அதற்கேற்றார் போல மீரட், தில்லி, கான்பூர், லக்னோ, ஜான்சி ஆகிய இடங்களிலே மய்யம் கொண்டு பரவிய இப்புரட்சியிலே நானா சாகிப், ஜான்சிராணி, தாந்தியா தோபே, பகதூர் ஷா உட்படப் பல சிறிதும் பெரிதுமான நிலப்பரப்பின் மன்னர்கள் பங்கெடுத்ததோடு, ஜக்திஷ்பூரின் இரு பண்ணையார்களான (ஜமீன்தார்கள்) குன்வார் சிங், அமர் சிங் போன்ற பலரும் பங்கெடுத்திருக்கிறார்கள். வேலை பறிபோனதினால் நெசவாளர்களும், தொழிலாளர்களும், விவசாயிகளும் ஆங்காங்கே பங்கேற்றுள்ளனர். வெள்ளை அரசை விரட்டுவதற்கு நடந்த இந்த எழுச்சியின் பயனாகத்தான் விடுதலைப் போராட்டத்தில் சாதி ரீதியாகத் திரள்வதும் நடந்திருக்கிறது. 1857 போராட்டம், சாதி அடிப்படையில் தம்மைப் போராட்டத்தில் அடையாளப்படுத்திக் கொள்வதற்கு, ஆதிக்கச் சாதிகளுக்கு மிகவும் உதவியிருப்பதாக நவீன ஆய்வுகள் இன்று வெளிச்சம் போடுகின்றன.

இந்தப் போரின் நீட்சியாக இங்கிருக்கும் வெள்ளை அரசின் அதிகாரம், அரசி விக்டோரியாவின் கரங்களுக்கு 1858 முதல் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. வெள்ளை அரசு தமது நிர்வாக சபையின் மூலம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கை முடிவினை, சட்டப்பூர்வமாக எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலைப்பாடு சாதியை மறைமுகமாக ஆதரிக்கவும், பாதுகாக்கவும் உதவுகின்ற சூழலை வெள்ளையர்களுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது. எனவே, வெள்ளையர்கள் நேரடியாக எப்போதும் சாதி ஒழிப்பில் ஈடுபடவில்லை. ஆனால், சீர்திருத்தம் என்ற அடிப்படையில் அவர்கள் சில அணுகுமுறைகளை மேற்கொண்டனர். மறை பணியாளர்களாக இங்கே வந்த அவர்களில் சிலரும், அதே வகையான சீர்த்திருத்த நடவடிக்கைகளையே செய்யத் தலைப்பட்டனர்.

1857க்குப் பிறகு ஏற்பட்ட வெள்ளையரசின் முக்கியமான மாற்றங்களில் ஒன்று, 1858 டிசம்பரில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட "இந்தியாவின் சிறந்த அரசாங்கத்திற்கான சட்டம்' ஆகும். இது எதேச்சதிகாரம், ரகசியம், பொறுப்பின்மை ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்டவை என்கிறார் அம்பேத்கர். இதன்படி இந்திய அரசு நிர்வாக அதிகாரம் - வெளியுறவுத் துறை அமைச்சர், கவர்னர் ஆகியோரிடம் குவிக்கப்பட்டிருந்தன. இந்த கவர்னர்களும், அதிகாரிகளும் தமக்கு விருப்பமான முடிவுகளை எடுத்தனர். அதோடு தீண்டத்தகாதவர்கள் குறித்த அணுகுமுறையை யும் வேறுவேறாகவே கொண்டிருந்தனர். இதனால்தான் லின்லித்கோ பிரபுவுக்கு அம்பேத்கர் 1942 அக்டோபர் 29 ஆம் தேதி கடிதம் எழுதும்போது, "நீங்கள் போவதற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட சாதியினரின் குறைகளுக்குப் பரிகாரம் காணப்பட்டுவிடும் என்று நம்புகிறேன். அடுத்த ஏப்ரலில் நீங்கள் பதவியிலிருந்து விலகுகிறீர்கள் என்பதைப் படித்து மெய்யாகவே வருத்தமடைந்தேன். உங்களுக்குப் பிறகு யார் இந்தப் பதவிக்கு வரப் போகிறார்? தாழ்த்தப்பட்ட சாதியினரின்பால் அவர் என்ன விதமான மனப்போக்கைக் கடைப்பிடிப்பார் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது...'' என்று குறிப்பிடுகிறார்.

எனவே, அதிகார வர்க்கத்துக்கு உரிய பண்புகளோடு நடந்து கொண்ட வெள்ளையர்கள் மேற்கொண்ட சில சீர்த்திருத்தப் பணிகளும், அவர்கள் அளித்த சட்டங்களும், அவர்களின் ஆட்சி இருப்பும் "உயர் சாதி'யினருக்கு எரிச்சலைக் கிளப்பின என்பதே உண்மை. வெள்ளையர்களை மிலேச்சர்களாகவும், பஞ்சமர்களாகவும் கருதிய "உயர் சாதி'யினர் அவர்களை விரட்டுவதற்கானப் போராட்டங்களில் தலைமையேற்றனர். இந்தியத் தாயை காளியாகவும், இந்து பூமியாகவும் சித்தரிக்கும் கருத்தாக்கங்கள் அன்று முதன்மை பெற்றிருந்ததை - எல்லா தேசியக் கவிகளின் பாடல்களிலும் பார்க்கலாம்.

விடுதலைப் போராட்டம் என்பது சனாதன மரபைக் காப்பாற்றவும், இந்திய (இந்து புனித) மண்ணைக் காப்பாற்றவும் மேற்கொள்ளப்படும் போராட்டம் என்பது ஒரு சாராரிடம் இருந்தது. இந்திய விவகாரங்களை கவனிக்கும் அமைச்சரின் உதவியாளராக இருந்த சர் கர்சன் பிரபுவை, மதன்லால் திங்கரா என்ற பஞ்சாப் சத்திரியன் லண்டனில் சுட்டுக் கொன்றான். தூக்குத் தண்டனை பெற்ற அவனின் வாக்கு மூலம் வ.வே.சு. அய்யரால் இங்கே வெளியிடப்பட்டது. அதில் திங்கரா இப்படி சொல்கிறான் : "என்னுடைய தேசத்துக்குச் செய்யப்படும் ஒவ்வொரு தீமையையும் என் கடவுளை அவமானப்படுத்தினதாக இந்துவாகிய நான் உணர்கிறேன். தேசமாதாவினுடைய கட்சியிலிருந்து நான் செய்வதெல்லாம் சிறீராமனுடைய திருப்தி; அவளுக்கு நான் செய்யும் கைங்கர்யங்கள் சிறீ கிருஷ்ணனுக்குச் செய்யும் கைங்கர்யங்கள்...'' (வ.வே.சு. அய்யர் - ரா.அ. பத்மநாபன், 1991 - பக். 71)

"நான்கு வர்ணங்களின் தர்மங்கள்', "இந்து ஒழுக்கம்' உள்ளிட்ட தலைப்புகளில் தொடர் கட்டுரைகள் வெளியிட்டு வந்த "தர்மம்' பத்திரிகையின் துணை நின்றவரும், வாஞ்சிநாதனின் திட்டத்துக்கு உதவி செய்தவருமான வ.வே.சு. அய்யர், அரவிந்தர், பாலகங்காதர திலகர், மங்கள் பாண்டே, வீர் சாவர்க்கர் என்று விடுதலைப் போராட்ட வீரர்கள், தலைவர்களின் பட்டியலை நாம் தயாரித்தால், அதில் எல்லோரும் பார்ப்பனர்களாகவும், சத்திரியர்களாகவுமே இருப்பார்கள். 1911 சூலை 17இல் மணியாச்சி ரயில் நிறுத்தத்தில் வாஞ்சிநாதன், ஆஷ் என்ற வெள்ளையரை சுட்டுக் கொன்றார். வாஞ்சியின் சட்டைப் பையில் இருந்த கடிதம், "இந்த பாரத நாட்டில் பசு மாட்டு மாமிசம் உண்ணும் ஒரு மிலேச்சனுக்கு (பஞ்சமன் அய்ந்தாம் ஜார்ஜ்) முடி சூட்டுவிழா நடத்த ஆங்கிலேயர்கள் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்...'' எனவே தன்னால் இயன்ற அளவு ஒரு வெள்ளையனையாவது கொல்வது, இந்த நாட்டுக்கு செய்யும் தொண்டு என்று குறிப்பிடுகிறது. 1857இல் நடைபெற்ற முதல் விடுதலைப் போரில் கைது செய்யப்பட்டு, தூக்கில் இடப்பட்ட பல பார்ப்பனப் புரட்சியாளர்களும் கீதையின் சுலோகத்தை சொல்லிக் கொண்டும், கீதையை வைத்துக் கொண்டும்தான் தூக்கு மேடை ஏறியிருக்கிறார்கள் (சரஸ்வதி ராம்நாத் - "விடுதலை வீரர்கள்').

தீவிர இந்து சனாதனப் பார்வையோடு இப்படி சிலர் இருந்த அதே வேளையில்தான், ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியை அடிப்படையாகக் கொண்டு பகத்சிங் போன்றோரும், தன்னெழுச்சியாக ஆங்காங்கே எழுந்த மக்கள் திரளும் வெள்ளை அரசை எதிர்த்திருக்கிறார்கள். இப்போராட்டங்களின் நடுவே வெள்யைர் ஒருவரால் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ், ஒரு பெரும் இடத்தினை எடுத்துக் கொண்டது, விடுதலைப் போராட்டத்தின் பிற்கால வரலாறு. "காங்கிரஸ் ஒரு சாராரின் சாதி, மத வகுப்பு நன்மைகளை மட்டும் கருதியதில்லை'' என்றும் "காங்கிரஸ் மகா சபையில் ஜாதி மத பேதங்களும், வேறு விதமான வித்தியாசங்களும் தலைகாட்டாமல், அது ஓர் உண்மையான தேசிய நிறுவனமாக விளங்கி வருகிறது'' என்றும் இரண்டாம் வட்டமேசை மாநாட்டின்போது காங்கிரஸ், காந்தியாரால் விளக்கப்பட்டது.

ஆனால், அதன் தலைவர்களோ, 1885 இல் மும்பையில் நடைபெற்ற அதன் மகா சபையின் தலைவரான உமேச சந்திர பானர்ஜி முதல் 1904இல் மும்பையில் நடந்த மாநாட்டின் தலைவரான ஹென்றி காட்டன் வரையிலான தலைவர்களோ ஒருவராகிலும் தலித்துகளாய் இல்லை. காங்கிரஸ் தீண்டாமை ஒழிப்பு பேசினாலும் அது ஒரு போலியான அணுகுமுறையை சாதிய விஷயத்தில் கடைப்பிடித்தது. வ.வே.சு. அய்யரின் குருகுலத்தில் பார்ப்பன சிறுவர்களுக்கும், பார்ப்பனர் அல்லாதார் சிறுவர்களுக்கும் தனித்தனி பந்தி இருந்தபோது எழுந்த சிக்கலில், காந்தி தன் நிலைப்பாட்டினை 1925 ஏப்ரல் 15 நாளிட்ட "யங் இந்தியாவில்' தெரிவித்திருக்கிறார். அந்த நிலைப்பாடுதான் காந்தி மற்றும் காங்கிரசின் நிலைப்பாடு என்று கூற இடமிருக்கிறது.

Ambedkar and Rajaji "இந்த சமபந்தி பிரச்சனை தொல்லை பிடித்தது. இதுபற்றி கண்டிப்பான விதிகள் ஏதும் செய்ய முடியாது என்பது என் கருத்து. இது அவசியமான சீர்திருத்தம் தானா என்றுகூட என்னால் சொல்ல முடியாது. அதே சமயம் இந்த பேதத்தை முற்றிலும் தகர்த்தெறிய விருப்பம் பெருகுவதை நான் உணர்கிறேன். ஒருவர் இன்னொருவருடன் சேர்ந்து சாப்பிட மறுப்பது பாவம் எனக் கருத மாட்டேன்; சமபந்தி போஜனம் செய்வது பாவம் என்பதை யும் ஏற்க மாட்டேன்.'' (வ.வே.சு. அய்யர், ரா.ம. பத்மநாபன் - 1991).

பல்வேறு நிலைப்பட்ட இப்போராட்டங்களில் தலித்துகள் பங்கேற்கவே இல்லை என்று காங்கிரஸ் தொடக்கம் முதலே குற்றம் சாட்டி வந்திருக்கிறது. அம்பேத்கர் அவர்களும் இக்கேள்வியினை எதிர் கொண்டிருக்கிறார். தலித் மக்களை தம்மோடு இணைத்துக் கொண்டு, அவர்களுக்கு தலைமைப் பொறுப் பினை அளித்துப் போராடுவதற்கு மனமில்லாத, அரசியல் தீண்டாமையை கடைப்பிடிக் கின்ற ஆதிக்க சக்திகளின் குற்றச்சாட்டு இது. இந்த மனநிலையின் வெளிப்பாடும், தலித் மக்கள் தீண்டாமை மற்றும் சாதிக்கெதிரான விடுதலைக்கு வெள்ளையர்களை அணுகியதால் உருவான காழ்ப்புணர்வும், சினமுமே இக்குற்றச்சாட்டுகளின் அடிப்படை.

தலித்துகள் விடுதலைக்காகப் போராடியதற்கு ஒண்டிவீரன், வெண்ணிக்காலடி, சுந்தரலிங்கம் என்று தமிழகத்தில் வரலாறு இருக்கிறது. இந்திய அளவிலே மாநிலந்தோறும் இப்படியான பலர் இருக்கின்றனர். இவர்களின் வரலாறுகள் தொகுக்கப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் இயக்கத்திலும், வேறு சில அமைப்புகளிலும், தன்னிச்சையாகவும் தம்மை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்ட எண்ணற்ற தலித்துகளின் படை இருக்கிறது. அம்பேத்கர் அவர்களுக்கு இணையாக, வேறொரு பாதையினைப் பின்பற்றி விடுதலைக்குப் போராடியவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் பலரின் வரலாறுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டதுடன், மறைக்கவும் பட்டிருக்கின்றன. வாய்மொழி வரலாறுகளால் சில தங்கியிருக்கின்றன. முறையான விடுதலைப் போராட்ட வரலாற்றுப்பதிவு இல்லை. இருக்கின்ற வரலாறுகள் ஒரு சார்பானவைகளாகவும். விடுதலைக்குப் பின் 60 ஆண்டுகள் கடந்த இந்த நீண்ட காலத்தில் அப்போராட்டத்தில் ஈடுபட்ட உயிருள்ள வரலாறுகளான தியாகிகள் மறைந்தும் போயினர்.

"விடுதலைப் போராட் டத்தில் நம் ஊர் மக்கள் பங்கேற்கவில்லையா?'' என்று நான் என் பாட்டி - குழந்தையம்மாளை எப்போதாவது கேட்பதுண்டு. "கலந்து கொள்வார்கள். சாதிக்காரர்கள் காந்தி வாழ்க என்று கோஷம் போட்டபடி ஊர்வலம் போனால், நம்ம ஊர்க்காரர்களும் தனியாக அதே மாதிரி ஒரு ஊர்வலம் போவார்கள்'' என்பார் அவர். சாதி வேறுபாடு போராட்டத்திலேகூட, இந்தியர்களை ஒன்றிணைக்கவில்லை என்பது அப்பட்டமான ஓர் உண்மை. இதே போன்ற ஒரு வாய்மொழிப் பதிவு அரவிந்த மாளகத்தியின் சுயசரிதையான "கவர்ன்மென்ட் பிராமணன்' நூலில் உண்டு. மாளகத்தியின் அப்பா ஒரு சுதந்தரப் போராட்டக்காரர். ராஷ்டிரிய தளத்தில் சேர்ந்து போராடியவர். கதர் உடுத்துபவர். 1947, ஆகஸ்டு 15 அன்று அதிகாலையிலேயே "ஏ... நமக்கு சுதந்திரம் கெடைச்சிடுச்சி... ஹேளிகை செய்...'' என்று ஓடி வந்தார். அன்று சேரியிலிருப்பவர்களுடன் ஹேளிகை (இனிப்பு) பகிர்ந்து கொண்டதும் சேரியில் இருக்கும் இளைஞர்களை சேர்த்துக் கொண்டு குடங்களோடும், கயிற்றோடும் ஊருக்குள் போனார். ஆட்டம் பாட்டத்துடன் ஊரிலிருந்த கிணற்றிலிருந்து தண்ணீரை மொண்டு மொண்டு கீழே ஊற்றினார். ஊரில் இருக்கிற எல்லா கிணற் றிலும் இப்படியே நடந்தது. ஊரில் உள்ள "மேல் சாதி'க்காரர்கள் ஆச்சரியத்தோடும், கோபத்தோடும் பார்த்தபடி இருந்தனர்.

ஆனால், மறுநாள் மாளத்தியின் அப்பாவையோ, சேரி இளைஞர்களையோ கிணற்றுக்கு அருகில்கூட வரவிடவில்லை. விடுதலைக்கு முன்பாக அம்பேத்கர் நடத்திய போராட்டமொன்றில் அவர் பொதுக்குளத்தில் இறங்கி நீர் பருகியது, சமத்துவ உரிமையைக் கோருவதாக இருந்தது. மாளகத்தியின் அப்பா செய்த செயலோ பழைய நீரை வெளியேற்றி, புதிய நீரை ஊற்றெடுக்கச் செய்யும் குறியீட்டு வடிவிலான புது உரிமையை குறித்தது. இருவேறு அணுகுமுறைகளும், போராட்டங்களுமாக இவை இருந்தாலும் இரண்டுமே ஒன்றாக அர்த்தம் கொள்வதை நம்மால் உணர முடியும்.

இப்போராட்டங்களில் அம்பேத்கர் அவர்களின் போராட்டம் ஒரு புதிய பொருளினையும், அணுகுமுறையினையும் கொண்டு விளங்குகிறது. தலித்துகளின் விடுதலைப் போராட்டங்களுக்கு ஒரு சரியான பாதை யையும், போராட்டத்தின் நோக்கத்தையும் அம்பேத்கர் உருவாக்கித் தருகிறார். அம்பேத்கரின் போராட்டம் நேரடியான விடுதலைப் போராட்டமன்று. அது சாதி ஒழிப் புக்கானப் போராட்டம். அவர் ஏகாதிபத்தியத்தை தன் ஆழ்ந்த அறிவினைக் கொண்டு பகுத்தாய்ந்து ஓர் உண்மையை கண்டடைகிறார். ஏகாதிபத்தியம் என்பது அடிப்படையில் ஆதிக்கம் செலுத்துகின்றதும், சுரண்டுகின்றதுமான ஒரு கோட்பாடு தான். அவ்வகையில் அது சாதி அமைப்புக்கு இணையானது. எனவே ஏகாதிபத்தியமும் சாதியமும் இருவேறு பக்கங்களைக் கொண்ட ஒரே அடக்குமுறை ஆயுதம் என்பது அவரின் கருத்து. இப்பார்வை அன்றைய இந்தியாவில் அம்பேத்கரைத் தவிரவும் புலே, பெரியார் போன்ற வெகு சிலரைத் தவிரவும் வேறு யாரிடமும் இல்லை.
- வளரும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com