Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
 width=
 width=ஏப்ரல் 2008

பாபாசாகேப் பேசுகிறார்

நான் எதிர்த்ததால்தான் என் பெயர் சேர்க்கப்பட்டது -II

Ambedkar எனது காலத்தில் ஓர் அமைச்சரிடமிருந்து மற்றொரு அமைச்சருக்கு துறைகள் மாற்றம் செய்யப்பட்டு வந்தன. நான் எப்போதுமே ஒதுக்கப்பட்டே வந்தேன். பல அமைச்சர்களிடம் இரண்டு அல்லது மூன்று துறைகள் கொடுக்கப்பட்டன. என்னைப் போன்றே மற்றவர்களும் கடும் பணிகளை செய்யக் காத்திருந்தனர். யாரேனும் ஓர் அமைச்சர் சில நாட்களுக்கு வெளிநாடு சென்றிருக்கும்போது, அவரது துறை தற்காலிகமாகக் கூட எனக்குத் தரப்படுவதில்லை, அரசாங்கப் பணிகளை அமைச்சர்களிடம் பகிர்ந்தளிப்பதில் என்ன அடிப்படைக் கோட்பாட்டை பிரதமர் பின்பற்றுகிறார் என்பதைப் புரிந்து கொள்வதே எனக்கு கடினமாக இருந்தது. அது திறமையா? நம்பிக்கையா? நட்பு முறையா? செல்வாக்கா? வெளியுறவுத்துறைக் குழு அல்லது பாதுகாப்புத் துறைக் குழு போன்ற அமைச்சரவையின் முக்கியமான குழுக்களில் ஓர் உறுப்பினராகக்கூட நான் நியமிக்கப்படவில்லை.

பொருளாதார விவகாரக் குழு அமைக்கப்பட்ட போது பொருளாதாரம் மற்றும் நிதித் துறைகளில் நான் குறிப்பாகப் பெரிதும் தேர்ச்சிப் பெற்றவன் என்ற கண்ணோட்டத்தில், இக்குழுவில் எனக்குப் பணி தரப்பட்டு அமர்த்தப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் பின்னுக்குத் தள்ளப்பட்டேன். பிரதமர் இங்கிலாந்திற்குச் சென்றிருந்தபோதுதான் நான் அப்பணியில் அமைச்சரவையில் அமர்த்தப்பட்டேன். ஆனால் அவர் திரும்பி வந்தபோது, அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அதில் அவர் என்னைத் தவிர்த்துவிட்டார். இதற்குப் பின்னர் நடைபெற்ற புனரமைப்பில் எனது பெயரும் சேர்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நான் எதிர்த்ததால்தான் கிடைத்தது.

இது தொடர்பாக நான் ஒருபோதும் பிரதமரிடம் புகார் எதையும் கொடுக்கவில்லை என்பதை அவரே ஒப்புக் கொள்வார் என்று உறுதியாக நம்புகிறேன். அமைச்சரவைக்குள் நடைபெறும் அரசியல் அதிகாரப் போட்டிகளிலோ, காலி இடங்கள் ஏற்படும்போது அத்துறைகளை அபகரித்துக் கொள்ளும் விளையாட்டிலோ நான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. எனினும் ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதாவது இந்த விஷயத்தில் எனக்கு தவறு இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் உணராதிருப்பது, மனிதத் தன்மையற்றதாக இருந்திருக்கும்.

அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொள்ளச் செய்த மற்றொரு விஷயத்தை இப்போது குறிப்பிட விரும்புகிறேன். அது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியல் சாதியினருக்கு இழைக்கப்பட்ட கொடுமை தொடர்பானதாகும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக எந்தவிதப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசியல் சாசனம் முன்வைக்கவில்லை என்பது கண்டு மிகவும் வருத்தமடைந்தேன். குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படவுள்ள ஓர் ஆணையத்தின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு நிர்வாக அரசாங்க சாசனத்தை நாம் அங்கீகரித்து ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், அரசாங்கமோ ஓர் ஆணையம் அமைப்பது குறித்து சிந்தித்துப் பார்க்கக்கூட இல்லை. நான் பதவியிலிருந்து வெளியேறிய 1946ஆம் ஆண்டு எனக்கும், பட்டியல் சாதியினரிலே தலைமையை ஏற்றிருந்த உறுப்பினர்களுக்கும் மிகப் பெரிய கவலையை அளித்த ஓர் ஆண்டாக அது இருந்தது.

பட்டியல் சாதியினருக்கான அரசியல் சட்ட ரீதியான பாதுகாப்புகள் குறித்த விஷயத்தில், தாங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்புகளிலிருந்து பிரிட்டிஷார் பின்வாங்கி விட்டனர். மேலும் தங்களுக்காக அரசியல் நிர்ணய சபை என்ன செய்யும் என்பது பற்றி பட்டியல் சாதியினர் எதையும் அறிந்திருக்கவில்லை. கவலையளித்த இக்காலகட்டத்தில் அய்க்கிய நாடுகள் அவைக்கு வழங்குவதற்காக, பட்டியல் சாதியினரின் நிலை குறித்து ஓர் அறிக்கையை நான் தயாரித்திருந்தேன். ஆனால் அதை நான் அய்.நா. அவையில் சமர்ப்பிக்கவில்லை. அரசியல் நிர்ணய சபையும் வருங்கால நாடாளுமன்றமும் இந்த விஷயம் குறித்து ஒரு முடிவுக்கு வரும் வரை காத்திருப்பது உகந்தது என்று நான் உணர்ந்தேன்.

பட்டியல் சாதியினரின் நிலையைப் பாதுகாப்பதற்காக அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்டிருந்த வழிவகை ஏற்பாடுகள் எனக்கு நிறைவளிக்கவில்லை. இருப்பினும் அரசாங்கம் அவற்றை பயனுறுதியுடையதாக்க ஓரளவு முயற்சி செய்யும் என்ற நம்பிக்கையில் அவற்றை நான் ஏற்றுக் கொண்டேன். பட்டியல் சாதியின் நிலை இன்றைக்கு எப்படி இருக்கிறது? எனக்குத் தெரிந்தவரை அது பழைய நிலையிலேயே இருக்கிறது. அதே பழைய கொடுங்கோன்மை, அதே பழைய கொடுமை, பாரபட்சம் காட்டும் அதே பழைய நிலை ஆகியவை முன்பு இருந்தது போலவே, இன்றளவும் இருந்து வருகின்றன. டில்லி மற்றும் பக்கத்திலுள்ள இடங்களைச் சுற்றியுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் என்னிடம் வந்து, சாதி இந்துக்கள் தங்களுக்கு இழைத்து வரும் கொடூரங்கள், இது தொடர்பான தங்களது புகார்களைப் பதிவு செய்ய மறுத்து வரும் காவல் துறையினரின் விபரீத போக்கு குறித்தும் உள்ளம் உருக்கும் சோகக் கதைகளைக் கூறினர். இத்தகைய நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளை என்னால் கூற முடியும்.

- தொடரும்


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 14(2), பக்கம்: 1318


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com