Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruCinemaNews
தமிழில் வட்டார வழக்கு சினிமா?
- கு.பூ.கொ.பு.வும் முன்வைத்து-
ஆதி

தமிழில் யதார்த்தமான சினிமா சாத்தியமா என்ற கேள்வி நீண்டகாலமாகக் கேட்கப்பட்டு வருகிறது. சினிமாவில் எளிய மக்களின் வாழ்க்கைகூட செல்லுலாய்டு கனவுகளாக மாறி மேக்கப் பூசிக் கொள்கின்றன. கதையையும் களத்தையும் விடுத்து பாலிஷாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, சினிமா மனிதர்கள் பளபளக்கும் ஜிகினாவை ஆசையுடன் அள்ளி அப்பிக் கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். உலகம் முழுக்க சினிமா காத்திரமான கலை வெளிப்பாடாக இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் காலங்காலமாக "சினிமா என்பது பொழுதுபோக்குக்கானது, மக்கள் வாழ்க்கையை சினிமாவில் காட்டத் தேவையில்லை" என்ற கருத்து வலிந்து திணிக்கப்பட்டு வருகிறது.

Kunguma poovum konjum puravum புத்தாயிரம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் சினிமா மெல்ல மெல்ல மாற்றம் காண ஆரம்பித்திருக்கிறது. சமீப ஆண்டுகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் முயற்சிகள் புதிய நம்பிக்கையை வலுவாக ஏற்படுத்துகின்றன. அதை உறுதிப்படுத்துவது போல் கடந்த சில ஆண்டுகளி்ல் வெளியான மிகப் பெரிய ஹீரோக்களின் படங்கள் வரிசையாக படப்பெட்டிக்குள் சுருண்டன. யதார்த்தமான-இயல்பான சினிமா சாத்தியமாவதற்கான ஆரம்பப் புள்ளிகள் தெரிய ஆரம்பித்தன. இந்த வெளிச்சப் புள்ளிகளை ரசிகர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் யதார்த்தமான படங்களுக்கு பழக ஆரம்பித்துவிட்டார்கள் என்பதைத்தான் அடுத்தடுத்து வரும் படங்கள் உணர்த்துகின்றன. இந்த காலத்துக்குரிய நேர்த்தியான தமிழ் சினிமாவுக்கான இலக்கணங்கள் உருக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன என்றே சொல்லத் தோன்றுகிறது.

இலக்கியத்தில் நாட்டுப்புறக் கதைகள், வட்டார வழக்குக் கதைகள் வந்துள்ள மாதிரி, சினிமாவில் வட்டாரம் சார்ந்த கதைகள் தொடர்ச்சியாக வரத் தொடங்கியிருக்கின்றன. மீனவர்களின் வாழ்க்கையை சரியான பதிவுகளுடன் முன்வைக்கும் "ஆழி சூழ் உலகு" போன்ற தரமான நாவல்கள் இலக்கிய உலகில் வெளிவந்துள்ளன. அது போன்ற தீவிர முயற்சிகள் சினிமாவிலும் தேவை. யதார்த்த வாழ்வில் நிறைவேற சாத்தியம் குறைவாக உள்ள மீனவ கிராமத்து காதலர்களின் கதை "குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்".

இந்தப் படத்தின் முக்கிய அம்சங்கள்: ஒரு கடைக்கோடி மீனவ கிராமம், அங்கு வாழும் இயல்பான-எளிமையான மனிதர்கள், அம்மக்களின் வாழ்க்கை, பேச்சு. இந்த அம்சங்கள் அனைத்துமே அழகி, ஆட்டோகிராப், காதல், வெயில், பருத்திவீரன், சுப்ரமணியபுரம், பூ, வெண்ணிலா கபடிக் குழு உள்ளிட்ட படங்களில் தனித்தனியாக எடுத்தாளப்பட்டவை.

முட்டம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பதின்வயதின் உச்சத்தில் இருக்கும் மாணவன் கூச்சன். இயல்பான மற்ற இளைஞர்களைப் போலவே வாழ்க்கையில் பெரிய பிடிப்புகள் இல்லாத சாதாரணமானவன். எல்லாமே துளசி என்ற அவன் வயதை ஒத்த பெண் வரும் வரைதான். துளசி புது ஊருக்கு வந்தவுடன் பையன்களுடனேயே சுற்றித் திரிகிறார். காதலிக்கவும் செய்கிறார். தங்களது திருமணத்தை மீறிய உறவுகளால் அப்பா-அம்மா இருவராலும் கைவிடப்பட்ட இளம்பெண் துளசி, தந்தை இல்லாத கூச்சன் இடையே காதல் அரும்புவதற்கு இயல்பாகவே நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவர்கள் இருவரது வாழ்க்கையே இப்படத்தின் கதை. துளசி என்னும் இளம்பெண்ணை ஆண்கள் எப்படி துய்க்க ஆசைப்படுகிறார்கள் என்பதுதான் கதையின் உள்ளோட்டம். அவளைக் காதலிக்கும் கூச்சனைத் தவிர, நாயகியின் அக்கா கணவன், ஊரில் சுற்றித் திரியும் ஒரு ரவுடி, தர்மன் ஆகிய மற்ற அனைவரும் அவரை ஒரு போகப் பொருளாக அனுபவிக்க நினைக்கிறார்கள்.

படத்தின் முதல் ஒரு மணி நேரம் ஆட்டோகிராபை நினைவுபடுத்துகிறது. பெரிய திருப்பங்கள் இன்றி நேர்கோட்டில் மிக மெதுவாக நகரும் படம், இப்படியேதான் கடைசி வரை செல்லுமா என்ற அயற்சி படரத் தொடங்கும் நேரத்தில், இடைவேளைக்கு முந்தைய கால் மணி நேரத்தில் படம் புதிய திருப்பங்களைக் காண்கிறது. இடைவேளைக்குப் பின்னர் சில திருப்பங்கள் இருக்கின்றன என்றாலும், படத்தின் போக்கில் பெரிய வித்தியாசத்தை உணர முடியவில்லை.

சாதாரண மக்களின் வாழ்க்கையில் திருமணம் போன்ற சடங்குகள் தீவிர அர்த்தம் பெறுகின்றன. எதிர்பாராத நிலையில் ரௌடி தர்மனின் மனைவியாகும் துளசி, அவனிடம் எந்த வகையான பிடிப்பும் அற்று இருக்கிறார். இருந்தபோதும், கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போனாலும் துளசியும் அவரது பாட்டியும் தர்மனைப் பற்றியே சிந்திக்கிறார்கள். தன் வீட்டு ஆம்பளை எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும் இந்தச் சமூகம் கற்றுத் தந்திருப்பதன் வெளிப்பாடு அது. தனக்கு ஏற்பட்ட மனக்காயங்களால் படம் முழுக்க அமைதியாக இருக்கும் துளசி, தர்மனை எந்த வகையிலும் தனக்குரியவனாகக் கருதாவிட்டாலும், அக்கா கணவனை மிரட்டித் துரத்தும்போது மட்டும் "நான் தர்மன் பொண்டாட்டி" என்று வீராவேசமாக பேசுகிறாள். கணவனை கைவிட்டு நிர்கதியாக ஊர் திரும்பிய துளசி, குடித்துவிட்டு ஊரைச் சுற்றித் திரியும் கூச்சன் என இருவரது அவலங்களையும் நேரடியாக உணரும் துளசியின் பாட்டி அவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. தர்மனை பெயிலில் எடுக்கவே முயற்சிக்கிறார். அதற்கு உதவுவதன் மூலமும், தர்மன் செய்த கொலையை ஏற்றுக் கொள்வதன் மூலமும் கூச்சனுக்கு நாயக பிம்பம் உருவாக்க முயற்சிக்கப்படுகிறது.

சேது, அழகி, ஆட்டோகிராப் மூலம் தமிழ் சினிமா காதலை வித்தியாசமாக பார்க்கத் துவங்கியது. அதுவரை காதலுக்கு மேக்கப் போட்டுப் பார்த்த சினிமா, வாழ்க்கை நடைமுறையில் எதிர்கொள்ளப்படும் காதலின் சோகமான பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தது. ஆனால் அதுபோன்று விதிமுறைகளை மாற்றி எழுதும் படங்களில் பயன்படுத்தப்படும் உத்திகளைக் காப்பியடிப்பது, தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்திவிடும். இந்தப் படத்தில் அப்படி சில காட்சிகள் இருக்கின்றன. இப்படம் கடலோரக் கவிதைகள் படத்தை நினைவுபடுத்துவதாக பலரும் குறிப்பிடுகிறார்கள். பாரதிராஜாவின் பட கதாபாத்திரங்கள், சம்பவங்களில் குறிப்பிட்ட அளவு இருக்கும் யதார்த்தம் என்றாலும், அந்தப் படங்களில் பெரும்பாலானவை ரொமான்டிசைஸ் செய்யப்பட்ட மிகைப்புனைவுகளை அடிப்படையாகக் கொண்டவை.

திருமணச் செய்தி கேள்விப்பட்டு நாயகன், நாயகியை தேடிச் சென்று மணப்பந்தலில் பார்ப்பது, காதல் தோல்வியால் நாயகன் குடித்துவிட்டு ஊர் சுற்றித் திரிவது என புளித்துப் போன பழைய படங்களின் சாயலும் சில இடங்களில் வருகிறது. அத்துடன் முக்கியமான தருணங்களில் நாயகனுக்கோ, நாயகிக்கோ விபத்து நேர்வது இயல்பாக நடப்பதுதானா? நாயகி ஊரைவிட்டு செல்லும்போது நாயகன் பார்க்க ஓடி வரும்போதும், நாயகி கடைசியாக நாயகனை பார்க்க வரும்போது விபத்துகள் நேர்கின்றன.

இந்தப் படத்தின் இரண்டு முக்கிய கண்டுபிடிப்புகள் தர்மனாக நடித்துள்ள தருண் க்ஷத்ரியா, கூச்சனின் அம்மாவாக வரும் "கூத்துப்பட்டறை" சந்திரா. ஒரு ரௌடி-பொறுக்கியின் வாழ்க்கையை, குணாதிசயத்தை மேற்பூச்சுகள் இல்லாமல் இவ்வளவு இயல்பாக முன்வைப்பதில் தருண் க்ஷத்ரியா வெற்றி காண்கிறார். உணர்ச்சிகளால் மாறிமாறி மிரட்டும் சந்திராவின் கதாபாத்திரத்தில் வேறு யாரையும் பொருத்திப் பார்க்க முடியவில்லை. இயல்பின் மறுவடிவமாக வரும் துளசியின் பாட்டியும் நல்லதொரு தேர்வே.

நாயகி தப்பிக்க உதவும் தோழி, நாயகியின் அக்கா என எந்தக் கதாபாத்திரத்துக்கும் சினிமா சாயம் பூசாமல், இயல்பாக உலவவிட்டிருக்கிறார் இயக்குநர். தர்மனின் அக்காவாக வரும் கேரக்டரைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவர் எந்த வகையில் துளசிக்கு உறவாகிறார்? தர்மன் கதாபாத்திரத்தைப் போலவே, அவரது அக்கா கதாபாத்திரமும் சமூக ஒழுக்கங்கள் பற்றி கவலை அற்ற லும்பன்கள் போல் உலவ விடப்பட்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கையில் அதெல்லாமே இயல்புகள். இப்படி பல யதார்த்த கதாபாத்திரங்களைப் பட்டியலிடலாம்.

Kunguma poovum konjum puravum ஒரு நல்ல சினிமாவுக்கான அனைத்து கூறுகளையும் தேர்ந்தெடுத்துள்ளார் இந்தப் படத்தின் இயக்குநர் ராஜ்மோகன். அவரது நடிகர்கள், குழுவினரின் உழைப்பு படத்தில் தெரிகிறது. ஆனால் அந்தக் கூறுகள் அனைத்தும் ஒன்றுகூடும்போது புத்துணர்ச்சியைத் தரும் கலைஅனுபவத்தை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மனிதரையும் சென்றடையும் படைப்பாக மாற வேண்டும். இந்த அம்சத்தில் இயக்குநர் முழுமையான வீச்சை அடையவில்லை என்று சொல்லத் தோன்றுகிறது. கேமரா, பாடல்கள், பின்னணி இசை, நடிப்பு, சரியான பாத்திரத் தேர்வு போன்ற அனைத்தும் படத்தின் பலம். ஆனால் இவற்றைக் கோர்த்து தேர்ந்த சினிமாவாக மாற்ற கதையும், அது சார்ந்த படைப்பாக்கத்திறமையும் அவசியம்.

யதார்த்தமான மனிதர்களின் காதலுக்கு மேக்கப் போடாமல் காட்டுவது அவசியமே. ஆனால் இயல்பான-எளிமையான மனிதர்களின் வாழ்க்கையில்தான் நிறைய உன்னதங்கள் புதைந்து கிடக்கின்றன. அவற்றை ஒரு கலைப்படைப்பு கண்டறிய வேண்டாமா? ஒரு காதல், சில மனிதர்கள் இப்படியும் உண்மையாக வாழ்வதற்கு வாய்ப்புண்டு என்பதை நிறுவுவதுடன் படம் முடிந்து விடுகிறது. அதைத் தாண்டி பயணிக்கவில்லை. அந்த வகையில் மிகுந்த எதிர்பார்ப்போடு, இது போன்ற படங்களை நாடி வரும் ரசிகனை படம் சற்று ஏமாற்றுகிறது.

லைட்ஹவுஸ், படகுகள், வலைகள், மீன்கள், மீனவர்களைக் காட்டுவதைத் தவிர, மீனவர்களது வாழ்க்கை, உள்ளார்ந்த விஷயங்கள் திரை அனுபவமாகப் பதிவாகவில்லை. ஒரு மீனவ கிராமத்தில் நடக்கும் கதையில், மீனவர்களின் வாழ்க்கை உரிய முறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது இயல்பாக எழும் எதிர்பார்ப்பு. முட்டம் போன்று தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஒரு ஊரைக் கையாளும்போது, ஏன் இளம்பிராயக் காதலுடன் படத்தை இயக்குநர் முடித்துக் கொள்ள வேண்டும்?

அதேபோல் நாயகன், நாயகி பிறரது சாதிப் பின்புலம், மதம் போன்றவற்றை அடையாளக் குறியீடுகளாகக் கூட காட்டவில்லை. அவர்களது பண்பாட்டு அடையாளங்கள், சடங்குகள், குறியீடுகள் வழியாக பின்னணியை குறிப்பால் உணர்த்தியிருக்கலாம். ஆனால் எப்படி முட்டம் என்ற ஊர் ஒரு பின்னணியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதோ, அதுபோல் கதாபாத்திரங்கள் யதார்த்தமாக இருந்தாலும், அவர்களை உண்மையுடன் நெருக்கமாக்கும் அடையாளங்கள் இன்றி அந்தரத்தில் நிற்கிறார்கள்.

படம் யதார்த்தமாகத் தோன்றுவதற்கு ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் முக்கிய காரணம். பருத்திவீரனுக்குப் பிறகு இனிமையான கிராமத்து இசையை யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தில் தந்திருந்தாலும், அந்தப் பாடல்களை சுவாரசியமாக காட்சிப்படுத்த இயக்குநர் தவறியிருக்கிறார். வணிகப் பட இயக்குநர்கள்கூட பாடல்களைப் படமாக்குவதில் தனி கவனம் எடுத்துக் கொள்கிறார்கள். அந்தப் பாடல்களின் காட்சிகளைப் பார்த்தாலே இதைப் புரிந்து கொள்ளலாம். சரியாகப் பொருத்தப்படாததால், பெரும்பாலான நேரங்களில் பாடல்கள் சம்பந்தமில்லாத இடத்தில் வந்து இடையூறு செய்கின்றன. படத்தொகுப்பு தடுமாறி இருக்கிறது. பிளாஷ்பேக்காக பயணிக்கும் படம் சில இடங்களில் திக்குத் தெரியாமல் பயணிக்கிறது. சில காட்சிகள் சம்பந்தமில்லாமல் திடீரெனத் தோன்றி மறைவதாக உள்ளன.

மேலும் பருத்திவீரன், சுப்ரமணியபுரம் படங்களுக்குப் பின்னர் வெளியாகும் கிராமம்-காதல் சார்ந்த படங்களில் நாயகி அல்லது நாயகனை கொன்றுவிடுவது வழக்கமாக இருக்கிறது. இந்தப் படத்தின் தொடக்கத்தில் ஊரே துயரம் தோய்ந்து இருப்பதைக் காட்டுவதன் மூலம் படத்தின் முடிவுக்கு, ஆரம்பத்திலேயே இயக்குநர் தயார்ப்படுத்தி விடுகிறார். அதனால் வெண்ணிலா கபடிக் குழுவில் நாயகனின் திடீர் சாவு சார்ந்த அதிர்ச்சி மதிப்பீடு, இந்தப் படத்தில் ஏற்படுவதில்லை. படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, காதல் நிறைவேறாததால் நாயகன் இறப்பான் என்று நினைக்கிறோம். காதலியும் பாவமாய் செத்துப் போவது புதிது. ஒரு வகையில் ஏமாற்றம்-விரக்தி-நிராசையின் வெளிப்பாடாக இந்த இறப்புகளைக் கருதலாம். ஆனால் இதுபோல துன்பியலாக முடிக்க வேண்டும் என்பதையும் ஒரு ஃபார்முலாவாக பின்பற்ற வேண்டியதில்லையே.

இந்தப் படத்துக்கு நேர்த்தியான புகைப்படங்கள், கவர்ந்திழுக்கும் புத்துணர்வு கொண்ட இசை, விளம்பரங்கள், பத்திரிகை, டிவி பேட்டிகள் போன்றவற்றின் மூலம் மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு உணர்வு தூண்டிவிடப்பட்டது. மசாலா படமானாலும் யதார்த்த படமென்றாலும் எதிர்பார்ப்பு உணர்வை பெரிதாகத் தூண்டிவிடுவதன் மூலம் மட்டுமே ஒரு படத்தை ஓடச் செய்ய முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

வழக்கமான ஃபார்முலா-மசாலா சினிமா பாதையில் செல்வதில்லை என்று முடிவெடுத்த இயக்குநர், தைரியமாக இந்தக் கதையை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர், தங்கள் திறமையை நம்பிய நடிகர்கள், கலைஞர்கள் அனைவரையும் பாராட்டலாம். ஆனால் சாமுராய் எடுத்த பாலாஜி சக்திவேல்தான், காதல் என்ற தமிழ் சினிமாவின் முக்கிய மைல்கல் படத்தை அடுத்ததாக எடுத்தார். அடுத்த படத்தில் உங்களிடமும் நிறைய எதிர்பார்க்கிறோம். அதற்காக காத்திருக்கிறோம் டைரக்டர் ராஜ்மோகன்.

- ஆதி 
நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com