Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Bank Worker's Unity
BWU Logo
அக்டோபர் 2007

எதற்காக இந்தத் தேவையற்ற ஒப்பந்தம் பிரதமர் அவர்களே!
வி.ஆர். கிருஷ்ணய்யர்

பிரதமர் அவர்கள் எனக்கு அண்மையில் எழுதியுள்ள பதில் கடிதத்தில், ‘தேச நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கம் கிஞ்சிற்றும் இல்லை' என்று குறிப்பிடுகிறார். மகத்தான மனிதர்களே இடறி விழுந்திருப்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன்... நமது ஒற்றைத் துருவ உலகில், அமெரிக்கா தனது ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. இதர தேசங்கள் தமது சுயேச்சையான வெளியுறவுக் கொள்கையைக் கடைபிடிப்பதை நிராகரிக்கிறது.

சர்வதேச ஒப்பந்தங்களை முன்னிறுத்தி நிர்ப்பந்திக்கும் வாஷிங்டன் ஒவ்வொரு நாடாய் தன் பிடிக்குள் கொண்டுவருகிறது. அமெரிக்க - இந்திய வேளாண் ஒப்பந்தம் இந்திய வேளாண்மையை காவு கொண்டுவிட்டது என்கிறார் டாக்டர் வந்தனா சிவா. "இந்தியா கோதுமையை ஏற்றுமதி செய்தாலும் சரி, இறக்குமதி செய்தாலும் சரி ‘கார்கில்' நிறுவனம் லாபம் அடைகிறது. அதே வேளையில் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். குழந்தைகள் பட்டினியால் பரிதவிக்கின்றனர். கார்கிலின் சந்தைப் பங்கும், லாபமும் வளர்வதென்பது இந்தியாவில் பட்டினியும், வறுமையும் வளர்வதோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது", என்கிறார் வந்தனா. கப்பற்படை பணியாளர் துறையின் முன்னாள் தலைவர் அட்மிரல் விஷ்ணு பகவத், மன்மோகன்சிங் மீது பணிவார்ந்த விமர்சனத்தை வைத்து இப்படி வினவுகிறார்:

"முன் தாக்குதல் போர்களைத் தொடுப்பது, சர்வதேச சட்டங்களையும், ஐ.நா. சாசனத்தையும் மீறுவது, இன்னொரு தேசத்தின் மீது படையெடுக்கக்கூடாதென்ற ‘நூரம்பெர்க் விதிமுறை'களையே மீறிய பெருங்குற்றம் புரிந்திருப்பது.... என்று மீண்டும் மீண்டும் மேலாதிக்கம் காட்டிவரும் நாடு அமெரிக்கா. இரானில் அணு ஆயுதத் திட்டம் எதுவும் இல்லையென்று சர்வதேச அணு சக்திக் கழகமே சான்றிதழ் அளித்த பிறகும், 72 மணி நேரத்திற்குள் இரானில் 1200 இலக்குகள் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவேன் என்று மிரட்டுகிற நாடு அது. இரண்டாவது உலகப் போருக்குப் பின், அடுத்தடுத்த அமெரிக்கா ஆட்சியாளர்கள் 66 நாடுகளில் குண்டு வீசுவது, தாக்குவது, படையெடுப்பது ஆகிய கைவரிசைகளைக் காட்டி வந்துள்ளனர். இத்தகைய ஒரு நாட்டோடு எப்படி ‘கேந்திரமான உறவு' (Strategic partnership) பூண முடியும்."

அமெரிக்க யுரேனியம், அணு உலை இவற்றை வாங்கினால் மட்டும்தான் எரிசக்தி தேவையை நிறைவேற்ற முடியுமென்று பிரதமர் வாதம் செய்கிறார். நமது ஆற்றல்களின் ஊற்றுக்கண்கள் ஏராளம். காற்றாலை மூலம் மின்சக்தி பெறும் வலுவை நாம் முழுமையாகக் கணக்கில் கொள்ளவேண்டும். எரிவாயுவிலிருந்து மின்னாற்றல் பெறும் ஏற்பாடு என்னவாயிற்று? சின்னஞ்சிறு நாடான நேபாளம் கூட பயன்படுத்தும் சூரிய ஆற்றல் மற்றும் உயிரியல் ஆற்றல்கள் போன்றவற்றை ஏன் புறம் தள்ள வேண்டும்? நமது நீர்மின் ஆற்றல் வசதி அளப்பரியது. பிறகு எதற்கு அணுசக்தி?

அணுசக்தி கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவர் டாக்டர் ஏ. கோபாலகிருஷ்ணன் கூறுவதிலிருந்து சில துளிகள் இதோ!.

"கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் நிலக்கரி வளம், இன்னும் போதுமளவு பயன்படுத்தப்படாத நீர் மின் ஆற்றல், இலகுவாகத் தோண்டக் கிடைக்கும் தோரியம் ஆகிய மூன்று ஆற்றல் ஆதாரங்கள் நமது நாட்டில் நிறைந்துள்ளன. சக்தி பாதுகாப்பு பற்றி உண்மையிலேயே இந்த அரசுக்கு அக்கறை இருக்குமானால் இந்த மூன்று ஆற்றல்களைப் பயன்படுத்த முனைப்பான, முன்னுரிமை மிக்க நடவடிக்கைகள் ஏன் எடுக்கப் படவில்லை?

"இறக்குமதி செய்ய வேண்டிய அணு உலைகளுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவை. அதற்கான தொழில் நுட்பம் இங்கில்லை. அதை இறக்குமதி செய்வதை 123 ஒப்பந்தம் அணுமதிக்கவில்லை.

"இப்படியான உலைகளைப் பெற பிரதமர் விழுந்தடித்துக் கொண்டு ஓடுவது, அந்நிய அணு சக்தி கம்பெனிகள் அவர்களது சரக்குகளை நமது தலையில் கட்டுவதற்கு ராஜ கம்பளம் விரிக்கத்தான்!

"சொந்த ஆற்றல் ஆதாரங்களைப் புறந்தள்ளிவிட்டு, கெடுபிடி நிறைந்த - வரைமுறைக்கு உட்பட்ட - சந்தேகத்திற்குரிய ஒரு ஒப்பந்தத்திற்குப் போவது ஏற்கத் தக்கதே அல்ல".

இன்றைய ஆளும் வர்க்கம் இழைக்கும் இத்தகைய பெரும்பிழைக்கு இந்திய மக்கள் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டி வரும்.

நன்றி : டெக்கான் கிரானிக்கல் (28/09/07)
தமிழில் : எஸ்.வி.வி.


அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம்
என்ன தான் பிரச்சனை?

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையில் ‘123' ஒப்பந்தம் இருக்கும் போது ஏன் ‘ஹைட்' சட்டம் பற்றி பேசப்படுகிறது?

123 ஒப்பந்தத்தின் இரண்டாவது பத்தியில், அவரவர் நாட்டின் சொந்த சட்டங்கள் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகள் போன்றவற்றுக்கு உடன்பட்டுத்தான் இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள அத்துணை நடவடிக்கைளையும் முழுமூச்சாக நின்று நாம் முடித்து விட்டாலும் கூட, அமெரிக்க நாடாளுமன்றம் பச்சைக் கொடி காட்டினால் தான் ஒப்பந்தம் அமலுக்கு வரும்.

அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் (Nuclear Non - Proliferation Treaty) கையொப்பமிடாத இந்தியாவுடன், அணுசக்தி சம்மந்தமான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஒத்துழைப்பதை முறைப்படுத்துவதற்காகவென்றே அமெரிக்க செனட்டில் இயற்றப்பட்டுள்ளதுதான் "ஹைட்" சட்டம். இந்த ஹைட் சட்டத்தின் நிபந்னைகளுக்கு உட்பட்டுத்தான் - அந்த நிபந்தனைகள் சரிவர பின்பற்றப்பட்டுள்ளதாக அவர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே தான், 123 ஒப்பந்தம் அமலுக்கு வரும். எனவே தான், அமெரிக்காவின் ஹைட் சட்டம் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதாகி விட்டது.

ஹைட் சட்டத்தின் நிபந்தனைகள் தான் என்ன?

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒத்துழைப்பு குறித்து நமது நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டு, பிரச்சினை பூதாகரமாக வெடித்த போது, எல்லாம் கட்டுக்குள்தான், இருக்கிறது என்று உறுதியளித்த பிரதமர் மன்மோகன் சிங் அதனை நிரூபிக்க ஒன்பது உறுதிமாழிகளை வழங்கி எதிர்க்கேள்வி கேட்டவர்களையெல்லாம் வாயடைக்கச் செய்தார். இது நடந்தது 2006 செப்டம்பரில், ஆனால் சென்ற ஆண்டின் இறுதியில் இயற்றப்பட்ட ஹைட் சட்டம், மன்மோகனின் "பாயிண்ட்டுகளை" தவிடு பொடியாக்கிவிட்டது.

உடனேயே ஹைட் சட்டம் குறித்து எதிர்ப்புகள் வெடிக்க, அரசு தரப்பில், 123 ஒப்பந்தத்தில் அனைத்தும் சரி செய்யப்பட்டு விடும் என்று உறுதி கூறப்பட்டது. ஆனால்...

ஹைட் சட்டப்படி அமெரிக்க அதிபர் 123 ஒப்பந்தம் ஏற்பட்ட ஆறு மாதத்திற்குள் - அதாவது 2008 ஜனவரி மாதத்திற்குள் - இந்தியா அனைத்து நிபந்தனைகளையும் ஏற்று, சரிவர செயல்படுத்திய பாங்கை, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு எடுத்துரைக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் இத்தகைய நற்சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். அமெரிக்க அதிபரின் நன்மதிப்பினை ஈட்டும் விதத்தில் நம் நாட்டின் செயல்பாடுகள் இருத்தல் வேண்டும். நெடுங்கால நட்பு நாடான ஈரானை எதிர்த்து இருமுறை வாக்களித்தது போன்ற நன்னடத்தைகள் தொடர்ந்து தேவைப்படும்!

நாட்டின் பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ள ஒப்பந்தத்தைச் சாடுவது முறையாகுமா?

அரசு செய்து கொள்ளும் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் தரக்கூடிய அல்லது மறுக்கக் கூடிய அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லையென்கிறது நமது அரசியல் சாசனம். உலகின் 85 நாடுகளில், நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமல் எந்தச் சர்வதேச ஒப்பந்தமும் செல்லாது என்பது தான் நிலை. நமது நாட்டில் நிலவும் ஜனநாயக விரோத அம்சம் விரைந்து நீக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் விவாதிக்கவே கூடாது அல்லது விவாதத்தை அனுமதிக்கவே முடியாது என்று கூறுவது எந்த வகை நியாயம்? அதிலும் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அதாவது காங்கிரஸ் கட்சிக்குத் தனி மெஜாரிட்டி கூட கிடையாது. இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு இருப்பதனால் மட்டுமே பிரதமர் நாற்காலியை அழகு படுத்திக்கொண்டிருக்கும். ஒருவருக்கு, நாற்பதாண்டுக் காலம் நாட்டையே கட்டுண்டு விடும்படி செய்ய என்ன தார்மீக உரிமை உள்ளது?

தமக்கு உறுதியான ஆதரவினை நல்கி வரும் இடதுசாரிகளைப் பார்த்து "வேண்டாமென்றால் விலகிக் கொள்ளட்டும்", என்று `நன்றி' பாராட்டும் பிரதமருக்கு மீடியாக்களின் விசில் பறக்கிறது! என்னே இவர்களின் ஜனநாயக மாண்புகள்?!

மின்தேவையைப் பூர்த்தி செய்ய வல்ல அணுமின் உற்பத்தியை ஏன் குறை கூறவேண்டும்?

நாட்டின் மொத்த மின் உற்பத்தியில், அணு மின் உற்பத்தியின் இன்றைய பங்கானது சுமார் மூன்று சதம் தான். அரசு உத்தேசித்துள்ள பிரம்மாண்ட முயற்சிகளனைத்தும் வெற்றி பெற்றால் கூட 2020 ஆம் ஆண்டில் அணுமின் உற்பத்தியின் பங்கு மொத்த மின் உற்பத்தியில் ஏழு சதத்தைத் தொடும். எனவே, மொத்த மின் தேவை பூர்த்தி என்பதெல்லாம் கலப்படமற்ற பொய்யே. இதற்கு நாட்டின் சுயாதிபத்திய உரிமையையும், வெளியுறவுக் கொள்கையையும் ஈடாக வைப்பது மதிகெட்ட பகடை உருட்டலாகும்.

இறக்குமதி செய்யப்போகும் செலவுக் கணக்கு என்று பார்த்தால், அணு மின் உற்பத்திக்கு ஆகக் கூடிய செலவு, இதரவகையிலான மின் உற்பத்தி செலவைப் போல் இரு மடங்குக்கும் கூடுதலானது.. எதற்கு இத்தகைய அதீத விலை கொடுக்க வேண்டும்?

உண்மையில், ஈனுலைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க தனியார் கம்பெனிகளுக்குத்தான் அணு ஒப்பந்தம் மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். 1986-ஆம் ஆண்டின் செர்னோபில் (ரஷ்யா) விபத்துக்குப் பிறகு ஈனுலைகளை வாங்குவாரின்றி தவித்துக் கொண்டிருந்த அமெரிக்கக் கம்பெனிகள் மூடுவிழாவை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தன. ஜெர்மனி நாடு இருக்கிற அணு சக்தி நிலையங்களையே மெது மெதுவாக மூடி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் இறையாண்மையைவிட்டுக் கொடுத்தும், இந்தியச் சமானியனின் தலையில் மிளகாய் அரைத்தும், அமெரிக்கக் கம்பெனிகளுக்கு சூடான வியாபாரம்!

இப்போது சொல்லுங்கள், உண்மையான தேசபக்தி உள்ளவர்கள் ஏற்கக் கூடியதா இந்த உடன்பாடு?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com