Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo

நட்பின் சுகந்தமும் காதலின் வலியும்
அன்பாதவன்

உயிர்த்தீ (கவிதைகள்)
நளாயினி தாமரைச் செல்வன்

“கவிதை மொழி வாழ்வின் மவுனத்தையும், வாழ்வு சார்ந்த அதிர்வுகளையும் கூர்மையாக்குவது மனதில் ஏற்படும் நமைச்சல்களையும், ஏக்கங்களையும், இழந்தவைகளையும் நினைவுபடுத்தக் கூடியது. கவிதை மனதை உற்சாகப்படுத்தக் கூடியது. ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஒரு குரல் பேசும்; எதிர் குரல் கேட்கும்” எனக்குறிப்பிடும் விமர்சகர் முனைவர் அரங்க. மல்லிகா (நீர் நிரம்பிய காலம் பக் : 132) வின் சிந்தனையை பிரதிபலிப்பது போன்று நெய்யப்பட்டவை நாளாயினியின் கவிதைகள்

நட்பின் சுகந்தமும் காதலின் வலியும் உணர்த்தும் எளிய சொல்லாடல்களால் எனினும் அழுத்தமான உணர்வுகளால் தொகுத்த கவிதைத் தொகுப்பாக ‘உயிர்த்தீ’ பெண்ணியம் சிந்தனைகள் பரவலாகப் பேசப்படும் இந்தக் காலக்கட்டத்திலும் பெரும்பான்மை பெண்கள் அனுபவிக்கும் மனவேதனைகளுக்கு வார்த்தைகளேயில்லை. அதிலும் பிறந்த மண் விட்டு புகலிடம் தேடி உலக உருண்டையின் அட்ச, தீர்க்க ரேகைகளுக்குள் ஒளிந்து கொள்ள இடம் தேடியவையும் ஈழச் சகோதரிகளின் துயரம் சொல்ல இயலாதது. வாழ்வின் மீது கவியும் அரசபயங்கரவாதம் ஒரு புறமெனில் பாலியல் வன்கொடுமைகளும், இருத்தலுக்கே இயலாமல் போகும் வாழ்வியல் பிரச்னைகளும் மறுபுறம்.

சொந்தமண்ணை வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேறும் அவலத்தோடு, வாழ்ந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் விசா வேண்டி சான்றிதழ் துணைவியாக யாருடனோ இருக்க வேண்டிய கட்டாயம். அயல்நாட்டு சமையலறைகளில் பணிப் பெண்களாக வாழ்க்கையைத் தள்ளும் பரிதாபம்..... இப்படியெல்லாம் இணைந்து துரத்தும் ஈழப்பெண்டிரின் வாழ்வில் கவிதைக்கும் இடமுண்டு என்பது சற்றே ஆறுதலான சங்கதி. மாறிவரும் சமூக வாழ்வியல் சூழலில் பெண் மனதுபடும் ஊசலாட்டத்தை படம் பிடிப்பவையாக நளாயினியின் உயிர்த்தீ கவிதைகள்.

சுவாரசியமும், துன்பமும், ஏக்கமும், ஆசைகளுமாய் நிலும் பயண வழிக் குறிப்புகள் தாம் இக்கவிதைகள எது நட்பு... எது காதல்.. எந்தச் சூழலில் நட்பு காதலாகிறது என்பதெல்லாம் புரியாத ஒரு மாய அவஸ்தையின் தொகுப்பாக நளாயினியின் படைப்பாக்கம் மூலம் ஈழம் பெற்றோரோ டென்மார்க்கில் வாழ்வதோ சுவிட்சர்லாந்தில்.. இப்படியொரு வாழ்வு தமிழக பெண் படைப்பாளிகளுக்கு இதுகாறும் வாய்க்காதது.

இத்தனைச் சோகத்திலும் தன் மெல்லிய உணர்வுகளை கண்டுபிடித்து கோர்த்திருப்பது நளாயினின் வெற்றி

“எப்படி வேண்டுமானாலும் / இருந்துவிட்டு போகட்டும்
இப்போதாவது கண்டு பிடித்தேனே
எந்தன் மனசைஉந்தன் நினைவுகளோடு
நீர்த்தடாகத்துள் விழும் மழைத் துளியாய்
கண் மூடி இறங்கி ரசிக்கிறேன்”

ஆண் பெண் நட்பு என்பது வரையறைக்குட்பட்டது. அதே நேரம் மிக மிக அவசியமானது. இதை புரிந்தவராய் நளாயினி எழுதுகிறார்.

“நாம் எல்லாம் / காதலை மட்டுமே / சுவாசித்து பழகியவர்கள் / ஆண் பெண் நட்பை/ சுவாசிக்கப் பழகவேண்டும்.” அதற்கான காரணத்தையும் அவரே விளக்குகிறார்.

“காதல் தனது ஆட்சியை / பள்ளியறையில் முடித்துக்கொண்டு/ மூச்சடங்கிப் போகிறது
நட்பு அப்படியல்ல / இதயத்தின் இதயத்துள் / உணர்வின் உணர்வுகள் / புதுப்புது அர்த்தங்களை / வாழ்வின் எல்லை வரை / தருவதாய்.”

நட்பின் ஆழம் அதிகமாகி அதன் எல்லைகள் விரிவடைகிற போது சிலநேரம் அது காதலாகி விடவும் வாய்ப்பிருக்கிறது.

“உனக்குள்ளும் பல / கசங்கிய கவிதைகள்
எனக்குள்ளும் தான் / அதனால் தான் / நாள் நட்பை / தேர்ந்தெடுத்தோமா”

என்று வினா எழுப்புவரே ‘உன்னையே தந்துவிடேன்’ என உரிமை எழுப்பும் POSSESIVENESS உருவாகும் தருணம் நோக்கி நகர்கிறார். அப்படி காதல் வயப்படும் போது சூழல் மாற்றத்தில் “அரவணைத்து / அதன் / இறுக்கத்தில் என் சோர்வு / தொலைக்கும் / உன்பிடி” எனக் காமம் கலப்பதும் இயல்பாகிறது. இவை மாறிவரும் பண்பாட்டு சூழலின் பதிவுகள். மனசுக்குள் பரவும் மெழுகு வெளிச்சமாய் நட்பு குறித்த சிந்தனைகள் பரவும் போதே கருத்த நிழலாய் காதலும் காமமும்... பெண் மெழுகாய் உருகுவது காலமாற்றம் அல்லாது இருத்தலியல் பிரச்னையுங் கூட.

“ யாரோ சாய்த்து விட்டுப் போன / செடியை எடுத்து / பக்குவமாய் நீர் ஊற்றி / வளர்த்தெடுத்தாய் / பூத்துக்குலுங்கி / காய்த்துக் கனிந்து / அறுவடையாகும் நேரம் / இது யாருக்கும் சொந்தம் /” என்பவை துயரம் நிறைந்த புலம் பெயர் வாழ்வைச் சொல்லும் நுடக வரிகள்... வாழ்வின் யதார்த்தங்கள். நட்புக்கும் காதலுக்கும் இடைப்பட்ட ஒரு அறை மயக்க அவஸ்தையில் எழுதப்பட்ட இக்கவிதைகளை எதிர்கொள்ள ஒரு புதுமனசு தேவைப்படுகிறது. அதை புரிந்தவராய் நளாயினி இருப்பது சின்னதொரு நிம்மதி.

“ எத்தனைக் கவிதைகள் / எழுதி ஒளித்து வைத்திருக்கிறேன் /
கலைஞர் ஏற்பர் / சமூகம் ஏற்காது பார்”

இன்றையச் சூழலில், பெண்களின் படைப்புகள் பலராலும் பல்வேறு விதமாக விமர்சிக்கப் படுகையில் நளாயினியின் படைப்புகளும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளக் கூடும். ஆனாலும் படைப்பாளி அஞ்சவோ, ஒளிந்துகொள்ளவோ, தேவையில்லை, ஏனெனில் இவை, வாழ்தலின் இயலாமையில் குறைந்த பட்சஇருத்தலின் பதிவுகள்.

- அன்பாதவன்



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com