Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
அக்டோபர் 2006

பெரியாறும் சிறியாரும்

ஆனாரூனா

முல்லைப் பெரியாறு நதி நீர் சிக்கலில் இந்திய நீதித் துறையின் செயல்பாடு கேலிக்குரியதாகியிருக்கிறது. மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழகம் திட்டமிட்டு வஞ்சிக்கப்பட்டிருப்பது அம்பலமாகியிருக்கிறது.

பண்பாடு என்கிற பெயரில் தமிழ்மக்களிடையே மண்டிப்போய்விட்ட அலட்சியப் போக்குக்கும் கோழைத்தனத்துக்கும் அறைகூவல் விடப்பட்டிருக்கிறது.

மார்க்சிஸ்ட் என்கிற பெயரில் கூட ‘போக்கிரிகள்’ வம்பு - வல்லடி நடத்த முடியும் என்று தெரிய வருகிறது. (‘போக்கிரி’ என்கிற சொல்லாட்சி கேரள முதல்வர் அச்சுதானந்தனின் அன்பளிப்பு).

‘தேசிய ஒருமைப்பாடு’ என்கிற அலங்காரச் சொல்லடுக்குக்குப் பின்னே, வஞ்சகமும் சூதும் பதுங்கியிருப்பது தெரிய வருகிறது.

என்று ஒரு பாமரன் உணர்ச்சி மீதுற சபிக்கிற தொனியில் மண்வாரித் தூற்றினால் அது வேடிக்கைக் குரியதோ, பொருளற்றது என்று புறந்தள்ளுதற்குரியதோ அல்ல.

முல்லைப் பெரியாறு நதி நீர் தொடர்பாக தமிழக அரசும் கேரள அரசும் பேசிப் பேசி, பேசிப் பேசி, கண்டதெல்லாம் பொழுதழிப்பே என்கிற நிலையில்தான் தமிழக அரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

இரு மாநில அரசுகளின் வாதங்களையும் பல நாள் கேட்டு, தீர்ப்புக்கு முன் நீண்ட அவகாசம் எடுத்துக் கொண்டு ஆழ்ந்த ஆய்வுக்கும் சிந்தனைக்கும் பிறகு தான் உச்ச நீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்பது பாப்பாப்பட்டி பஞ்சாயத்தோ, பட்டிமன்றத் தீர்ப்போ அல்ல என்றுதான் நம்பப்படுகிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, கேரள அரசு அதை நிறைவேற்றாமல், தீர்ப்பை முறியடிக்கும் விதத்தில் சட்டமன்றத்தில் நீதிநீர் தொடர்பாக புதிய சட்டம் ஒன்று கொண்டு வரும் போது, யோக்கியத் தன்மை வாய்ந்த உச்ச நீதிமன்றம் என்ன செய்திருக்க வேண்டும்?

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படாமல், தீர்ப்பை அவமதிக்கும் நோக்கில் சட்டம் இயற்றும் போக்கிரித் தனத்தை அனுமதிக்க முடியாது. ஆகவே மத்திய அரசு கேரள அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்.

ஆனால் ‘போக்கிரி அச்சுதானந்தனின்’ முரட்டுத் தனத்துக்குப் பிறகு இரு மாநில அரசுகளும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்’ என்று மதகுருமார்பாணியில் உபதேசம் செய்தால் தீர்ப்புரைத்த நீதிபதிகளின் மன நிலைகளும், குணச் சித்திரங்களும் கேள்விக்குரியனவாகாவா?

முன்னர் தந்த தீர்ப்புக்கும் பின்னர் வந்த உபதேசத்துக்கும் இடையே நடந்தது என்ன என்று சித்தப் பிசகில்லாத எந்த நீதிபதிக்கும் சந்தேகம் வராதா?

சரி; பேச்சு வார்த்தைகளின்மூலம் பிரச்னைக்குத் தீர்வு காணலாம் என்றால், பேச்சு வார்த்தையில் கலந்து கொள்கிறவன் பக்குவப்பட்டவனாக பண்பாடுள்ளவனாக இருக்க வேண்டாமா?

உச்சநீதிமன்றத்தின் உச்சந்தலையிலேயே கால் வைத்துவிட்ட தெம்பில்,

“போக்கிரித்தனமான வாடகைதாரரைப் போல் நடந்து கொள்கிறது தமிழக அரசு!” - என்று பேசுகிறார் கேரள முதல்வர்.

என்ன நாகரிகம்; என்ன பண்பாடு!

ஒரு மார்க்சிய முதல்வர் அத்வானியின் தோரணையில் பேசுவார் என்று யாராலும் கற்பனை செய்ய முடியுமா? அச்சுதானந்தன் பேசியிருக்கிறாரே!

இம்மாதிரி தடித்த வார்த்தைகளால் பொறுப்பற்றுப் பேசுகிறவனைத்தான் ‘போக்கிரி’ என்று யோக்கியர்கள் சொல்வார்கள்.

எனில் அச்சுதானந்தன் ஒரு போக்கிரியேதான். அவருக்குப் புரிகிறமாதிரி சொல்வதானால் - வக்கிரம் படிந்த லும்பனேதான்.

முதல்வரே லும்பனாக இருக்கும் போது மற்ற அமைச்சர்களின் பேச்சும் நடவடிக்கையும் எப்படி இருக்கும்? திருவாங்கூர் சமஸ்தானத்துடன் சென்னை ராஜதானி செய்து கொண்ட ஒப்பந்தம் செல்லாது என்கிறார் ஒருவர். அணையை உடைக்க வேண்டும் என்கிறார் ஒருவர்.

தமிழகத்திலே மலையாளிகள் அதிகமாக வாழ்கிறார்கள் என்பதற்காகத் தாராளம் காட்டுவோம் என்று எதிர்பார்க்கக் கூடாது என்றும் ஒருவர் பேசுகிறார்.

இம்மாதிரியான ‘போக்கிரி’க் கூட்டத்துடன் பேச்சு வார்த்தை நடத்த, உபதேசம் செய்து அந்த நீதிபதிகளைத்தவிர நாகரிக மனிதர்களால் இயலாது.

“போக்கிரித்தனமான வாடகைதாரரைப்போல் நடந்து கொள்கிறது தமிழக அரசு” என்று அச்சு தானந்தன் பேசினால்,

அவருக்கு இணையான சொற்களில் பதிலளிக்க முயன்றால் அது பேசித் தீர்க்கும் விவகாரமாக இருக்காது. மாறாக ‘தீர்த்து விட்டு’ப் பேசும் நட வடிக்கையாக மாறிவிடும்.

போக்கிரி அச்சுதானந்தனும், அவர் வாழும் கேரளமும் அவர்பேசும் மலையாளமும் பிறப்பதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகம் இருந்தது. தென்னாடு முழுவதும் தமிழ் கூறும் நல்லுலகமாகவே இருந்தது. தமிழப் பேரரசுகள் தகர்ந்து, சமஸ்தானங்களாய், பாளையங்களாய்த் தமிழகம் சிறு சிறு துண்டுகளாய் மாறிப்போன போது கூட மலையாளம், அல்லது கேரளம் என்றொரு நிலப்பரப்பே கிடையாது.

சேர - சோழ - பாண்டியர் தமிழர்களே அல்லாது மலையாளிகளோ, கன்னடர் களோ, தெலுங்கர்களோ அல்லர்! ஆரியக் கலப்பால் சோரம்போனவர்கள் தங்களைத் தமிழர்கள் அல்லர் என்று கூறிக் கொண்ட போதிலும் மலையாளிகளும், கன்னடர்களும், தெலுங்கர்களும் எம் சோதரர்களே என்று சொந்தம் பாராட்டும் உயர்ந்த உள்ளம்கொண்ட இனம் தமிழினம்.

கேரளத்திலே, கன்னடத்திலே, ஆந்திரத்திலே ஒரு தமிழன் முதல்வராக முடியுமா?

தமிழ் நாட்டில்தான் உலகுக்கொரு விசித்திரமாய் தெலுங்கர் முதல்வராக முடியும்; மலையாளி முதல்வராக முடியும்; கன்னடத்துப் பெண்மணி முதல்வராக முடியும்.

எப்படி இது சாத்தியமாகிறது?

மொழியால் நாம் வேறுபட்டாலும், இனத்தால் ஒருவரே என்று இன்னமும் தமிழினம் பாசம் வளர்ப்பதால்தான். திருவாங்கூர் சமஸ்தானத்துடன் சென்னை ராஜதானி செய்து கொண்ட ஒப்பந்தம் செல்லாது; அதனால் சட்டப்படி முல்லைப் பெரியாற்றில் தமிழகத்துக்கு உரிமையும் கிடையாது என்று இன்று போக்கிரிகள் பேசுகிறார்கள்.

நூறு ஆண்டுகளுக்கு முன் திருவாங்கூர் ராஜாவுடன் வெள்ளை அரசாங்கம் ஒப்பந்தம் செய்தபோது, முல்லைப் பெரியாறு பகுதி உண்மையில் திருவாங்கூர் சமஸ்தானத்துடன் அடங்கிய பகுதியல்ல. திருவாங்கூர் சமஸ்தானதுக்குச் சம்பந்தமில்லாத பகுதிக்கு ஒப்பந்தம் செய்து கொண்டதே அறியாமையாகும்.

வெள்ளையரின் அறியாமை தர்மப்படியும், சட்டப்படியும் கேரளத்துக்கான நியாயமாகிவிட முடியாது.

மொழிவழி மாநிலங்கள் பிரிந்தபோதுகூட தேவி குளம் பீர்மேடு பகுதிகள் தமிழகத்துக்குச் சொந்தமாகியிருக்க வேண்டும். திருவாங்கூர் சமஸ்தான மக்களும் கேரளத்துடன் இணைய விரும்பவில்லை.

தேவிகுளம் பீர்மேடு பகுதி மக்களும் கேரளத்துடன் இணைய விரும்பவில்லை. மாறாக இப்பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்று அங்கும் இங்கும் போராட்டங்கள் நடந்தன.

அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராசர்தான் “மேடாவது, குளமாவது (பீர்மேடு, தேவி குளம் என்பதையே அவ்வாறு எரிச்சலுடன் குறிப்பிட்டார்) எல்லாம் எங்கும் போய்விடவில்லை. இந்தியாவுக்குள்தான் இருக்கிறது” என்று ‘பெருந்தன்மை’ காட்டி, தமிழக நிலப்பகுதியை கேரளத்துக்கு வழங்க இசைவு தந்தார். இந்தப் பெருந்தன்மையை ஏமாறித்தனமாகக் கருதிக்கொண்டு இன்று எகத்தாளமாகப் பேசுகிறார் போக்கிரி அச்சுதானந்தன்.

அன்று தமிழகப் பகுதிகள் இந்தியாவுக்குள் இருப்பதைக் காமராசர் பெருமையாகக் கருதினார். இன்றோ தமிழகம் இந்தியாவுக்குள் இருப்பதாலேயே போக்கிரிகள் எல்லாம் தமிழர்களை இழிவு செய்கிறார்கள். தமிழர்களின் உரிமைகளை மறுக்கிறார்கள் என்று அவரே மனங் கசந்து மாய்ந்திருப்பார்.

யோசிக்கும் வேளையில் மற்றொரு உண்மையும் தெரிகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனி நாடுகளாய்ப் பிரிந்து போனதால்தான் சிந்துநதி சிக்கலில்லாமல் பாகிஸ்தான் மக்களுக்குப் பயன்படுகிறது.

சர்வதேச விதிகளின்படி இரு நாடுகளுக்குள் பாயும் நதிக்கு தனியொரு நாடு முழு உரிமை கொண்டாட முடியாது. பிரிவினை நேராமல் பாகிஸ்தானும் இந்தியாவுக்குள் இருந்திருந்தால் தண்ணீருக்காக எத்தனை போராட்டங்களை நடத்த நேர்ந்திருக்குமோ? எத்தனை பேரின் ரத்தத்தால் சிந்துநதி சிவந்திருக்குமோ! தண்ணீருக்காகத் தமிழ் நாடு தனி நாடாகத்தான் வேண்டுமா?

தமிழர்களின் விரிந்த மனத்துக்கும் சகோதர உணர்வுக்கும் மரியாதை இல்லை. அதனால் நீண்ட வரலாற்றுப் பாரம்பரிய உரிமையுடைய தமிழ் நிலம் அனைத்தும் திரும்பப் பெறப்படவேண்டும்.

கேரளத்துக்கும், கன்னடத்துக்கும், ஆந்திரத்துக்கும் பாச உணர்வில் பறி கொடுத்து விட்ட நிலப் பகுதிகளை மீட்க எல்லைப் போர் தொடங்கியே தீர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தமிழர்கள் அறச் சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தால் நேர்மையுணர்ச்சியுள்ள யாராலும் அதனைத் தவறு என்று சொல்லிவிட முடியாது.

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வைகை பொருனைநதி-என
மேவிய ஆறு பல ஓடத்த - திரு
மேனி செழித்த தமிழ் நாடு

இன்று எந்த ஆற்றிலும் தண்ணீர் இன்றிக் கண்ணீரும் கம்பலையுமாய்க் கையேந்தி நிற்கிறது. தர்மமா இது? தகுமா இது?

நடுவர் மன்றத் தீர்ப்பை ஏற்கமறுக்கிறது கன்னடம்.

உச்சநீதி மன்றத் தீர்ப்பை முறிக்கிறது கேரளம்.

தீர்ப்பளித்த பிறகு வெட்கங்கெட்ட முறையில் கேரளத்துக்குப் பணிந்து, பேசித்தீர்த்துக் கொள்ளலாமே என்று உபதேசம் செய்கிறது உச்ச நீதிமன்றம்.

தனக்குச் சம்பந்தமில்லாத ஒருநாட்டில் நதி நீருக்காக இரு தேசிய இனங்கள் மோதிக் கொண்டிருக்கின்றன. வெளிநாட்டுப் பிரச்னையில் எப்படித் தலையிடுவது என்பதுமாதிரி மோனம் காக்கிறது இந்திய நடுவண் அரசு. தேசிய ஒருமைப்பாடு, தேசிய ஒருமைப்பாடு என்று வெகு காலமாய் விரிவுரை செய்து கொண்டிருக்கும் இந்திய ஆதிக்க சக்திகள் ஒருமைப்பாடு என்பது கவிதாலங்காரங்களால் உருவாக்கப்படுவதில்லை என்பதை உணரவேண்டும்.

தேசிய ஒருமைப்பாடு என்பது சொர்க்கமாகக் கூட இருக்கலாம். ஆனால்-சொர்க்கத்துக்கு வெளியேதான் சுதந்திரம் இருக்கிறதென்றால்?... தமது விலங்கை மெச்சிக்கொள்ளும் அடிமைகளைத் தவிர சொர்க்க வாசத்துக்கு யாரும் ஆசைப்பட மாட்டார்கள். இறுதியாக ஒன்று- ‘நான்சென்ஸ்’ - முட்டாள்கள் என்கிற சொல்லைப் பயன்படுத்தியதற்காக பண்டித நேருவே தமிழ் நாட்டின் கொந்தளிப்பையும் கறுப்புக் கொடிப் போராட்டங்களையும் சந்திக்க நேர்ந்தது.

தமிழர்களைப் ‘போக்கிரிகள்’ என்று இழிவு செய்த அச்சுதானந்தன் ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டார்.


‘போக்கிரித்தனமான’ கேரள முதல்வர்

செய்தியாளர்: முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் என்று கேரள அரசு மிரட்டி உள்ளதே?

கலைஞர்: முல்லைப் பெரியாறு விஷயத்தில் நாங்கள் கடைப்பிடிக்கும் அணுகுமுறைக்கும், கேரள அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. கேரள முதல்வர் சில கடுமையான, விரும்பத்தகாத வார்த்தைகளை தமிழக அரசைப் பற்றிக் கூறியுள்ளார். இது வருந்தத்தக்கது. இதுபோன்ற அணுகுமுறை மாநிலங்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தாது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com