Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
பிப்ரவரி 2006
கட்டுரை

உலக மதங்கள் ஒரு தத்துவப் பார்வை

வாசுகி பெரியார்தாசன்

பல தெய்வ வழிபாடு

ஏரி: சர். ஜேம்ஸ் நீங்கள் ஏராளமான தகவல்களையும் நிறைய சலனங்களையும் அளித்து விட்டீர்கள். பவுல் அவர்களும், மத்தேயு அவர்களும் உங்கள் கருத்துக்களை எவ்வளவு சகிப்புத்தன்மையோடு கவனித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்கிறேன். அவர்களால் உங்கள் கருத்தை எங்கே பின்பற்ற இயலவில்லை என்பதை விரைவில் நமக்குச் சொல்வார்கள் என்று நம்புகிறேன். ஆனால் நாம் முதலில் கிரேக்கர்களின் மதத்தைப் பற்றி தியோடர் அவர்களை விளக்குமாறு கேட்டிருக்க வேண்டும் என்று நீங்களெல்லாம் எண்ணவில்லையா? அவர் பல தெய்வ வழிபாட்டாளராக புறச் சமயியாக இருப்பது பெரிதும் கவனத்தைக் கவரக் கூடிய நிலையாக இருந்திருக்கும்.

தியோ: அம்மா! நான் கிரேக்கன் என்று சொல்லிக் கொள்வதற்குத் தகுதியானவன் அல்லன். இன்றைய கிரேக்கர்கள் ‘ஸ்லாவிய’ இனத்தவராவர். அவர்கள் சீனர்களைப் போன்று பழம் பண்பாட்டை மரபுவழியாகப் பெற்ற பழங்கால மக்கள் அல்லர்; அவர்கள் அமெரிக்கர்களைப் போன்று ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்க முயற்சிப்பவர்கள். ஆனால் எனது நாட்டின் பழஞ்சமயத்தில் நான் நாட்டம் கொண்டதும் கற்றதும் உண்டென்பதால் உங்களிடம் அவற்றைப் பற்றி மகிழ்ச்சியோடு பேசுவேன். உண்மையில் நீங்கள் இதைப் பற்றிக் கேட்பீர்கள் என நான் நினைத்ததால் கில்பர்ட் முர்ரேவிலிருந்து ஒரு சிறு மேற்கோளைக் கொண்டு வந்திருக்கிறேன்.

Hindus சர்.ஜே: அவரை நான் மிக நன்றாக அறிவேன். சலனமற்ற நிலையில் அவர் ஒரு அமைதியான மனிதர்.

தியோ: எங்கள் நாட்டைப் பற்றி அவர் மிக நன்றாக எழுதியுள்ளார். அவர் கூறுகிறார்: ‘பிற துறைகளைப் போலவே மதத் துறையிலும் தொடக்க காலத்தில் கீழ்நிலைக் கோட்பாடுகளிலிருந்து நவீன கால தீர்க்கமான முடிவுகள் வரை, அனைத்தையுமே பண்டைய கிரேக்கம் சுவீகரித்திருந்தது. தொடக்ககால மூட நம்பிக்கைகளின் எந்தச் சாயலும் கிரேக்கப் பதிவுகளில் பதியப்படாததாய் இல்லை. உலகில் எய்தப்பட்ட எந்த உன்னதமான ஆன்மீக சிந்தனையும் தேல்ஸ் தொடங்கி தூயபால் வரையில் பரந்துள்ள கிரேக்க இலக்கியத்தில் தன் சாயலில் அல்லது தன் எதிரொலியாக ஒரு கருதுகோளைப் பெறாததாக இல்லை. நான் இந்த வியத்தகு கருத்து வளர்ச்சியை விவரித்துக் காட்டுவதோடு, சர். ஜேம்ஸ் அற்புதமாக ஆய்ந்துரைத்த மதத்தின் பரிணாம வளர்ச்சியை கிரேக்க எடுத்துக் காட்டுகளுடன் விளக்க முடியும் என்று கருதுகிறேன்.

தொடக்க காலத்தில் பிற இன மக்களைப் போலவே கிரேக்கர்களும் மலைகளிலும், விண்மீன்களிலும், விலங்குகளிலும், தாவரங்களிலும் உள்ள சக்திகளை வணங்கிவந்தார்கள். பெரும்பாலும் வானம்தான் முதலில் வழிபடும் பொருளாக இருந்திருக்கலாம். ஜீயஸ் என்ற கிரேக்க சொல்லும் டீயஸ் என்ற லத்தீன் சொல்லும். டை என்ற சமஸ்கிருதச் சொல்லும் வானத்தையே குறிக்கும், அமெரிக்காவில் நீங்களும் கடவுளும் வானமும் ஒன்று என்பதுபோல ‘விண்ணகமே எம்மைக் காப்பாற்று’ ‘விண்ணகத்தை நான் துதிக்கிறேன்’ என்று கூறுகிறீர்கள். சராசரி மனிதர்கள் அனைவருமே கடவுள் மேகங்களுக்கு அப்பால் இருக்கிறார் என்றுதான் நம்புகிறார்கள். கிறித்துவிற்கு முன்னால் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த நடுநிலைக் கோட்பாட்டாளரான கிரிளிபஸ் என்பார் கடவுளை, சூரியனென்றும், சந்திரனென்றும், விண்மீனென்றும், விதியென்றும், தெய்வங்களாக மாறிய மனிதர்களென்றும் பெயரிட்டு அழைக்கிறார்.

நாமறிந்த வகையில் முற்காலச் சடங்குகள் அனைத்துமே மண்ணின் வளத்திற்காகச் செய்யப்பட்ட தாவர வழிபாட்டுச் சடங்குகளே. இளவரசி ‘தானே’வின் கதையை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? கோட்டை ஒன்றில் அடைக்கப்பட்ட அவளை கிரேக்கப் பெருந்தெய்வம் ஜீயஸ் பொன்மழை வடிவில் வந்து காண்பாராம். இப்புராணக் கதை பழைய சடங்குகளிலிருந்து வளர்ந்து வந்திருக்கிறது என்று அறிஞர்கள் நம்புகிறார்கள். அந்த ஆகாயத் தெய்வத்தினால் அளிக்கப் பட்ட பொன்மழையினால் பூமி செழிப்படைந்தது என்று நம்பினார்கள். நீங்கள் டிமெட்டர், பர்சிபோன் ஆகிய தெய்வங்களைப் பற்றியப் புராணக் கதைகளை அறிந்திருப்பீர்கள் என்பதில் ஐயமில்லை. நீங்கள் பிரிட்டானிய காட்சிச் சாலையில் பெய்டயாஸ் அல்லது ப்ரேக்ஸ்டல்ஸ் வடித்த சிலைகளைவிட மிக அழகான டிமெட்டர் சிலையை ஒருவேளைக் கண்டிருப்பீர்கள். டிமெட்டர் ஒரு தானியத் தேவதை. ரோமானியர்கள் அவளை ‘செரேல்’ என்றும் அமெரிக்கர்கள் ‘செரியஸ்’ என்றும் அழைப்பார்கள். அவருடைய மகள் பர்ஸிபோன் வலிந்து நரகத்திற்கு அனுப்பப்பட்டாள். ஆனால், டிமெட்டர் மிக அதிகமாக வருந்தியதால் பர்ஸிபோன் குளிர் காலத்தை நரகத்தில் கழிக்கும் நிபந்தனையுடன் மீண்டும் ஒவ்வொரு அறுவடைக் காலத்திலும் பூமிக்குத் திரும்பும்படி அனுமதிக்கப்பட்டாள்.

ஆண்: நாமும் நரகத்திற்குச் செல்லவேண்டி இருந்தால் கோடை காலத்தை விட குளிர் காலத்தை அங்கே கழிப்பது மேல்.

தியோ: இக்கதை மண்ணின் வசந்தத்தையும், வளத்தையும் குறிப்பிட்டுக் காட்டச் சொல்லப்பட்ட ஒரு சிறிய காட்சி. ஏறத்தாழ எல்லா புராணக்கதைகளுமே நீங்கள் கூறியதைப் போல் ஆவி வழிபாடான ஆன்மீகத் தாவர வழிபாட்டுச் சடங்குகளை விளக்குவதற்காகவும், மனிதத்துவம் ஏற்படுத்துவதற்காகவும் உண்டாக்கப்பட்டவையே. கிரேக்கர்களால் பாபிலோனியர்களின் இஸ்தர் தேவதையிடமிருந்து கொண்டுவரப்பட்ட அழகான ஆப்ரோடைட் ஆரம்ப காலத்தில் தானியச் சக்திகளிலிருந்து இறங்கி வந்தாள் என்று கருதப்பட்டது. அவளுடைய விழா வசந்த காலத்தின் தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. உண்மையில் ஈஸ்டர் விழா என்பது வசந்த காலத்திற்கான - இஸ்தர் தேவதைக்கான விருந்தே!

மத்: கிறித்துவ திருச்சபை தன்னுடைய இறை ஞானத்தினால் சமயம் கடந்து புறச் சமய சடங்குகளையும் மக்களின் பழக்க வழக்கங்களையும் மதத்திற்குள் ஈர்த்துக் கொண்டது.

தியோ: ஆப்ரோடைட் இயற்கையிடத்திலும் மனிதனிடத்திலும் படைப்பாற்றல் சக்தியைக் குறிக்கும் அற்புதமான குறியீடாகும். நம் மூதாதையர்கள் இக் காலத்தைப் போல் அப்போது கற்புக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரவில்லை.

க்ளா: தங்களுக்கு நவீனர்களோடு சரியான பரிச்சியம் இல்லை போலிருக்கிறது.

தியோ: இடைக்கால கிறித்துவர்கள் அல்லது கடுஞ்சீர் திருத்தச் சமயவாதிகள் வரையிலாவது சொல்லலாம். சரியாகச் சொல்ல வேண்டுமானால், அவர்கள் மிக அதிகமான குழந்தை உற்பத்தியை வரவேற்றார்கள். நீங்கள் கட்டற்ற விபரீத ஒழுக்கம் என்று கருதக்கூடிய காதலையும் ஒளிவுமறைவற்ற காமத்தையும் அவர்கள் வழிபட்டார்கள். மிகச் சிறந்த அறிஞரான யூரி பிடஸ் எழுதிய ஹிப்பாலை டஸ் என்ற உயர்ந்த நூலில் நீங்கள் காண்பது போல் ஆப்ரோ டைட், இஸ்தார் அல்லது வீனஸ் ஆகியவற்றின் சக்தியையும், உயர்வையும், உரிமைகளையும் அவர்கள் அங்கீகரித்தார்கள். ஒரு மனிதன் காதல்வெறியில் தெய்வீகப் பரிசைத் தேவதைகளுக்கு அர்ப்பணிக்காமல் வாழ்ந்தால் அவன் துரதிர்ஷ்டம் வாய்ந்தவனாக இருப்பான் என்று அவர்கள் நம்பினார்கள். ஆசியா மைனரின் பல பகுதிகளிலும் உள்ள பெண்கள் இதை மதத்திற்காக முறை தவறாமல் செய்ய வேண்டிய ஒரு கடமையாகக் கருதி கோயில் வாயில்களில் நின்றிருப்பார்கள். தன்னைக் கேட்கும் எந்த வழிப்போக்கனுக்கும் தன்னை அர்ப்பணித்து அந்த தேவதையின் வழிபாட்டுப் பீடத்தில் தன்னுடைய புனிதமான விபச்சாரத்தின் மூலம் ஈட்டிய தொகையை வழங்கிவிடுவார்கள். அப்படித்தானே சர் ஜேமஸ்.

சர்.ஜே: நிச்சயமாக! கோயிலின் புனித மதில்கள் அழைப்புக்குக் காத்திருக்கும் மாதர்களால் சூழப்பட்டிருந்தன. அவர்களில் சிலர் ஆண்டுக் கணக்காகக் காத்திருக்க நேர்ந்தது.

தியோ: அடோனிஸ் கடவுளும் பாபிலோனிலிருந்து கொண்டு வரப்பட்டதே. செமிட்ஸ் இனத்தவர்கள் அவனை ‘டாமுஸ்’ என்றும், சில சமயங்களில் ‘அடோன்’ என்றும் அழைத்தார்கள். இதற்குப் பொருள் தலைவன். கிரேக்கர்கள் இப் படத்தை ஒரு பெயரென்று நினைத்து அதைத் தங்களுடைய திருடப்பட்டக் கடவுளுக்கு இட்டார்கள். பாபிலோனிய புராணக்கதைகளும், கிரேக்க புராணக் கதைகளும் அடோனிஸ் ஒரு காட்டுப் பன்றியால் கொல்லப்பட்டதாகக் கூறுகின்றன. ஒருவேளை, ஆரம்பகால செமிட் இனத்தவர்கள் வழிபட்டுவந்த புனித விலங்கின் மனித வடிவமே அவனாக இருக்கலாம். ஆண்டுக்கொருமுறை அடோனிஸின் மரணத்திற்காக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகிற வகையில் மதப்பற்றுள்ள மக்கள் ஒரு காட்டுப் பன்றியைப் பலியிட்டு பொதுவிருந்தின்போது சாப்பிடுவார்கள். சில நாட்களுக்குப் பின்னர் அவர்கள் அவனுடைய உயிர் மீட்பு நாளைக் கொண்டாடினர்.

சர்.ஜே: அவனின் இறப்பும், உயிர் மீட்பும் பற்றிய புராணச்செய்திகள் பின்னால் மண்ணின் சிறப்பையும், செழிப்பையும் குறித்துக் காட்டும் தாவர வழிபாட்டுச் சடங்குகளாக இருக்க வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் மனிதச் சார்பற்ற பொது முறையான முயற்சியாக இருந்த மதத்தின் வளர்ச்சி பின்னால் திரிந்து மனிதர்களை மையமிட்டதாகவும் புராணங்களை உருவாக்கக் கூடியதாகவும் ஆயிற்று.

தியோ: இக்கருத்து ஏறத்தாழ டையோனிசஸ் புராணத்தை ஒத்திருக்கிறது. டிமெட்டர் தானியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதைப் போல டையோனிசஸ் மதுவைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறான். மற்ற தாவர வழிபாட்டுக் கடவுள்களைப் போலவே, பூமியில் கோடையும், வசந்தமும் வருவதுபோல இவனுக்கும் இறப்பும் உயிர்ப்பும் உண்டு என்று நம்பப்படுகிறது. அவனுடைய விழாவையும் கூட அவனின் இறப்பையும் உயிர்ப்பையும் நாடகமாக நடிக்கப்படுவதன் மூலம் நினைவு நாளாகக் கொண்டாடப்படுகிறது. அதிலிருந்து டையோனிசஸ் நாடகம் மட்டுமல்லாமல் ஆஸ்க்கிலஸ் சோபோக்லஸ் யூரிடஸ் போன்றோரின் உயர் தன்மைகளும் நாடகங்களாக்கப்பட்டன. இவைகள் டையோனிசஸ் வழி பாட்டின் ஒரு பகுதியாக, மதத்தோடு சம்பந்தப்பட்டதாக இருந்தன. இருந்தாலும், இந்த விழாச் சடங்குகளில் நகைச்சுவையும் இருந்தது. குறிச்சின்னங்கள் டையோனிசஸ் ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டன. பாலுணர்வு மிக்க பாடல்களோடு கூடிய காமஸ் என்றழைக்கப் பட்ட இந்த குறிவழிபாட்டு விழாவிலிருந்து ‘காம்-எடி’ என்ற சொல் வந்தது. கிரேக்க நாடகாசிரியர் அரிஸ்டோபேன்சின் பொறுப்பற்ற தன்மையை நீங்கள் மன்னித்துவிட வேண்டும் - அவரின் கதைகளில் மரியாதைக்குரிய பெண் யாருமே இல்லை என்பதற்காக!

சர்.ஜே: அது கிரேக்க இயற்கை பெருந்தெய்வத்தின் சிறப்புக் கருதி உருவாக்கப்பட்ட நாடகம்.

தியோ: நீங்கள் சொல்வது சரிதான்

சர் ஜேம்ஸ்: மனித வடிவக் கடவுள்கள் மிருக வடிவக் கடவுள்களின் இடத்தைப் பெற்றது போல் டையோனிசஸ் புனித வெள்ளாட்டின் இடத்தைப் பெற்றான்: அவன் என்னவாக இருந்தான் என்பதை மக்கள் மறந்து விடவில்லை. அவனுக்காக ஒரு வெள்ளாடு பலியிடப்பட்டது. வெள்ளாட்டின் உருவத்தில் அவன் பதிக்கப் பெற்றான். அவன் பெயர்களில் ஒன்று ‘வெள்ளாட்டுக் குட்டி’ என்பது. அவனுடைய ஊர்வலத்தை நடத்துகிறவர்கள் வெள்ளாட்டுப் பொய்முகங்களோடு தங்களை அலங்கரித்துக் கொள்வார்கள். அக்காட்சி நமக்கு ‘ட்ராஜடி’ - ட்ராஜ் - ஆய்ட்ஸ் என்ற சொல்லை உருவாக்கிக் கொடுத்தது. புனித விலங்குகள் அனைத்துமே குலவழிபாட்டுச் சின்னங்களாக எல்லா கடவுள்களோடும் இணைக்கப்பட்டன. கடவுள்களை மனிதத்துவப்படுத்தும் நீண்ட தொடரில் முன்னோர் வழிபாட்டை தொடர்ந்து காண முடியும் என்ற செய்தி ஹோமரின் கவிதைகளில் காணப்படுகிறது. கிரேக்கர்களைப் பொறுத்த அளவில் மனிதனுக்கும் கடவுளுக்கும் இணைக்கமுடியாத இடைவெளி எதுவும் கிடையாது. ஓர் உயர்ந்த மனிதன் கடவுளாகலாம். கடவுள்கள் மனிதர்களோடு கலந்தன. இறப்பைத் தவிர எல்லா வகையிலும் (நற்குணங்கள், இழி செயல்களில் எல்லாம்கூட) அவைகள் மனிதர்களைப் போன்றே இருந்தன.

முன்னோர் வழிபாட்டைக் கடைப்பிடித்த பலவித கூட்டங்கள் நகர அரசுகளில் ஒன்று சேர்ந்தபொழுது இக் கூட்டங்களின் கடவுள்கள் ஒரு பொதுவான பல தெய்வக் கோயிலில் சேர்க்கப்பட்டன. மதச்சடங்குகள் நிறைந்திருந்த நாட்களில் இருந்த இயற்கை கடவுள்கள் சிறந்த முன்னோர்களோடு சேர்க்கப்பட்டு ஒரே குடும்பமாக அமைக்கப்பட்டன. இறுதியில் கவிஞர்களின் கற்பனை வளத்தாலும், இசை வாணர்களின் இசையாலும் பழங்கால புராணங்கள் போற்றுதற்குரியனவாக ஆக்கப்பட்டன. ஒலிம்பஸ் மலையில் கிரேக்கப் பெருந் தெய்வங்கள் தோன்றலாயின.

ஆண்: தியோடர் அவர்களே, ஒலிம்பியக் கடவுள்கள் தங்கள் உலக ஆட்சியை அமெரிக்க ஐக்கிய நாடுகளுடைய குடியரசுத் தலைவரின் அமைச்சரவை பாணியில் அமைந்திருந்தன என்பதை எப்போதேனும் நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? பாலஸ் ஏதென் அல்லது மினர்வா - அரசின் செயலாளர்; பாசிடன் அல்லது நெப்டியூன் கடற்படையின் செயலாளர்; டிமெட்டர் அல்லது கெரஸ் விவசாயத் துறையின் செயலாளர்; ஹெர்மஸ் அல்லது மெர்குரி தபால் இலாகாவின் இயக்குநர்; ஏர்ஸ் அல்லது மார்ஸ் படைத்துறையின் செயலாளர், ஹீரா அல்லது ஜுனோ உள் விவகாரத்தின் செயலாளர்; அவளின் முக்கிய வேலை தலைவரான ஜீயஸ் அல்லது ஜுபிடரின் பல மனைவிகளை அடையும் பண்பை அடைவதைக் கட்டுப்படுத்துவதாகும்.

தியோ: இவைகளைத் தவிர இன்னும் பல கடவுள்களும் இருந்தன. கிரேக்கர்கள் எல்லாவற்றையும் கடவுளாக்கினார்கள். நல்வாய்ப்பைக் கூட டைகே என்ற தேவதையாக்கினார்கள். பண்டைய மக்கள் அனைவருமே வாழ்க்கையின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு கடவுள் தேவை என்று விரும்பினர். ரோமானியர்கள் கிரேக்கக் கடவுள்களை எடுத்துச் சென்று அவற்றை இரண்டு மடங்காக்கினார்கள். அவர்களுடைய ஒவ்வொரு மூச்சுக் காற்றும் தெய்வங்களையும் தேவதைகளையுமே உச்சரித்தன. குழந்தைகள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ‘அபீனா’ கடவுள் அவைகளைப் பாதுகாத்தது; ‘டொமி டக்கா’ அவர்களை மீண்டும் அழைத்துக் கொண்டு வந்தது; ‘இனடர்டக்கா’ இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட நிலைக்குப் பொறுப்பேற்றது; ‘க்யூபா’ குழந்தைகள் தூங்கும்போது காவல் காத்தது; ‘எடுக்கா’ அவர்களுக்குச் சாப்பிடக் கற்றுக் கொடுத்தது; ‘பே புலினஸ்’ பேசக் கற்றுக் கொடுத்தது; ‘ஸ்டேட்டனஸ்’ நிற்கக் கற்றுக் கொடுத்தது. இவ்வாறு நூற்றுக்கணக்கான கடவுள்கள் இருந்தன.

ஹானிபல் கானோவை வெற்றிகொண்டுவிட்டு ரோமின் மீது படையெடுத்துச் சென்று, கோட்டை வாயிலின் மிக அருகில் செல்லும்போது ஒரு கனவு கண்டான். அக்கனவில் ஒரு குரல் அவனைத் திரும்பிச் சென்றுவிடும்படி கூறியது. அவனும் அக்குரலுக்கு கீழ்ப் படிந்தான். ரோமானியர்கள் அந்த புதுக்கடவுளுக்கு அவ்விடத்தில் ஒரு வழிபாட்டு திருத்தலம் அமைத்து அக் கடவுளுக்கு ‘ரிடிகுலஸ்’ என்று பெயரிட்டார்கள். அதாவது மனிதனை ஆபத்திலிருந்து திரும்பும்படிச் செய்யும் கடவுள், அங்கு ஒவ்வொரு வயலிலும் களஞ்சியம் இருப்பது போல் ஒவ்வொரு வீட்டிலும் ரோமனிய குல தெய்வங்கள் இருக்கும். ஒவ்வொரு தெருவின் குறுக்கிலும் கோயில்கள் இருக்கும்.

ஆண்: பாதுகாக்கும் தேவதைகளையும், உள்ளூர்ச் சாமியார்களையும் வழிபடும் கிருத்துவர்களின் மரபுவழிச் செயல் இந்த பலதெய்வப் பெருக்கத்திலிருந்து வந்ததா?

தியோ: அப்படித்தான் நான் நினைக்கிறேன்.

ஆண்: ஆமாம்! எல்லாக் கடவுள்களையும் எல்லா நேரத்திலும் திருப்திப்படுத்தி சமாளிப்பது என்பது ஒரே உடையில் வாழ்நாள் முழுவதையும் கழிப்பது போன்று சலிப்பூட்டும் வேலையாயிற்றே; அனடோல் பிரான்ஸ் புருசோனிடம் ‘ஒரு கடவுளை மட்டும் வழிபட வேண்டும்’ என்ற முதற் கட்டளையை வெறுப்பதாகக் கூறுவார். அவர் எல்லா கடவுள்களையும், கோயில்களையும் தேவதைகளையும் போற்ற விரும்பினார். அவர் எல்லாவற்றையும் விரும்பியதற்குக் காரணம் ஒருபோதும் அவர் அவைகளை வணங்கப் போவதும் இல்லை - கிரேக்கர்களும், ரோமானியர்களும் வழிபடுகிறார்கள் என்பதற்காக.

Greece தியோ: ஆம்! நீங்கள் சொல்வதும், சர் ஜேம்ஸ் சொல்வதும் சரியே. சராசரி கிரேக்கர்கள் தங்கள் கடவுள்களுக்காக மிகவும் கவலைப்பட்டு, அவைகளுக்குப் பயந்து அவைகளை அமைதிப் படுத்துவதற்காக மிக அதிகமான நேரத்தைச் செலவழித்தார்கள். பலதெய்வக் கோட்பாடு திருப்திகரமானதாக இல்லை என்றாலும் அக்கோட்பாட்டில் உயர்ந்த அழகும், அறிவும் இருந்தது; இயற்கையின் அமைப்புகளையும், சக்திகளையும் பண்புறு ஏற்றி மதிப்பது நல்லது; இப்பல கடவுள்கள் என்பது ஒரு கடவுளைக் காட்டிலும் உலகில் உள்ள நேரெதிர் முரண்பாடுகளையும், பேதங்களையும் சுட்டிக் காட்டுகின்றன. இந்தப் பல தெய்வ நம்பிக்கையிலிருந்து தான் கலையின் பல வடிவங்கள் தோன்றின. கல்லறையிலிருந்து சிற்பக்கலையும் கட்டிடக் கலையும் மத நிகழ்ச்சிகளிலிருந்து நாடகக்கலையும், தோத்திரப் பாடல்களிலிருந்து இசையும், கவிதையும், தோன்றி வளர்ந்தன. இதற்குக் கைம்மாறாகக் கலை மதத்தைப் பண்படுத்தியது. பண்டைய கடவுள்களை மேம்படுத்தியது.

ஹோமரும், ஹெசாய்டும் ஒலிம்பிய கிரேக்கப் பெருந்தெய்வங்களுக்கு வடிவமும், குணமும் கொடுத்தனர். பெய்டியாஸ் அவைகளுக்கு உயர்நிலையையும், கௌரவத்தையும் அளித்தார். நீங்கள் கூறலாம் - பெய்டியாஸின் கடவுள்கள் தோன்றிய போது ஹோமரின் கடவுள்கள் அழிந்திருக்கலாம் என்று! பொதுவான மனிதன் கொடுமையே வடிவான ஒழுக்கக் கேடான தெய்வங்களை உருவாக்கினான். கலைஞர்கள் அவற்றிற்கு மனிதத் தன்மை புகுத்தி கிரேக்கர்களின் நாகரிகப் பண்பாட்டு வளர்ச்சியைப் பிரதிபலிக்கும்படி அமைத்து விட்டனர். ஹிசாயி டின் கட்டுக்கதைகளில் வரும் கொலைகார ஜீயஸ் கடவுளுக்கும் அசீலியஸின் ஆண்மை மிகு கற்பனையில் வடிவமைக்கப்பட்ட உலகின் உன்னதத் தன்மைக்கும் சோபோக்ளேசின் தூயஞான வடிவான கடவுளுக்கும் இடையில்தான் எவ்வளவு வேறுபாடு! கலை மதத்திற்குப் பட்டிருக்கிற கடப்பாடு பற்றி நான் பலமுறை படித்திருக்கிறேன். ஆனால் யாரும் மதம் கலைக்குப் பட்டிருக்கிற கடப்பாடு பற்றி உணர்ந்ததாகத் தெரிய வில்லை.

எனினும் டையோனிசஸ் விழாவிலிருந்து நாடகம் தோன்றியது கிரேக்க சமய உறுதிக் கோட்பாட்டிற்கு ஏற்பட்ட தீமையே! ஏனென்றால், நாடகம் இலக்கியமாகவும் வளர்ச்சி பெற்று அத்தத்துவம் அனைத்து சமயக் கோட்பாடுகளையும் தகர்த்தெறிந்தது. இது சோபோக் கிளிசின் ஒரு கடவுட் கோட்பாட்டிலிருந்து, யூரிபிடசின் இறை ஐயுறவுக் கோட்பாட்டிற்கும், அதிலிருந்து அவருடைய நண்பர் புரோட்டாக்ரசின் புகழ்பெற்ற கூற்றான ‘இரண்டில் ஒன்று - கடவுள் இருந்தாலும் இல்லையென்றாலும் நம்மால் அறிய இயலாது’ என்ற அளவிற்கு வளர்ச்சி அடைந்தது. நீங்கள் அறியவேண்டும் க்ளாரன்ஸ் முதல் உலோகாயதவாதி நீங்களல்ல.

(நன்றி: தமிழ்ச் சான்றோர் பேரவை செய்தி மடல்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com