Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜூலை 2006

அமெரிக்க அதிபரைவிட மன்மோகன் சுதந்திரமானவரா?

ஆனாரூனா

அமெரிக்க அதிபர் என்றால் அவர் சர்வ அதிகாரமும் பெற்றவர் என்று பொதுவான ஒரு கருத்து உண்டு. ஆனால் அமெரிக்காவின் பல கொள்கை முடிவுகளை அவர் தன்விருப்பப்படி செய்துகொள்ள முடியாது.

Bush and Manmohan Singh இந்தியாவுடன் அணு ஆற்றல் தொடர்பாக புஷ்ஷும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் செய்து கொண்ட ஒப்பந்தம் என்பது அமெரிக்காவைப் பொறுத்த வரையில் ஒரு பேச்சுவார்த்தை; அவ்வளவுதான்.

புஷ்ஷும் சிங்கும் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றக் குழு ஒப்புதல் தரவேண்டும். அதன்மீது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும்.

ஆனால் இந்தியாவில் இம்மாதிரியான ‘தடை’களோ, விதிகளோ கிடையாது. எந்த நாட்டு அதிபருடனும் விருந்து சாப்பிட்டு, கைகுலுக்கி, ஒரு காகிதத்தில் அவர் சுதந்திரமாகக் கையொப்பமிடலாம். அதை யாரும் கேட்க முடியாது.

ஒப்பிட்டுப் பார்த்தால் அமெரிக்கக் குடியரசுத் தலைவரைவிட அதிக உரிமையும் சுதந்திரமும் உள்ளவராக இருக்கிறார் இந்தியப் பிரதமர்.

இந்தியப் பிரதமர் நினைத்தால் எந்த நாட்டுடனும், எந்தவிதமான முடிவையும் எடுக்க முடியும். இது கூடாது. எந்தவொரு வெளிநாட்டுடனும் இந்தியப் பிரதமர் செய்யும் ஒப்பந்தமும், நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனைக்கும், நாடாளுமன்ற விவாதத்துக்கும் பிறகே அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

உரத்த சிந்தனைக்குரிய பிரச்னை இது!


பெண்தான் அகப்பட்டாளா?

இரவு நேரக் கேளிக்கை விடுதிகளில் ஆபாச நடனம் ஆடியதாக 16 இளம் பெண்களும், விடுதி நிர்வாகிகள் மூவரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்கள்.

கைது செய்யப்பட்ட பெண்கள் காவல் துறையினரால் வீதியில் இழுத்துச் செல்லப்படுவதை பத்திரிகைகள் படம்பிடித்து வெளியிட்டன.

ஆனால் இம்மாதிரியான நிலைமைகளில், எந்த விடுதிகளில் இந்த ஆபாசம் நடந்தன என்பதை மட்டும் காவல்துறையும், பத்திரிகைகளும் ‘நாகரிகம்’ கருதியோ அல்லது ஆதாயம் கருதியோ மறைத்து விடுகின்றன. ஆபாச நடனம், விபச்சாரம் போன்ற வழக்குகளில் பெண்கள் மாத்திரமே கைது செய்யப்பட்டு அவமானப்படுத்தப்படுவது ஏன்?

அண்ணாசாலை அஞ்சலகத்துக்கு எதிரில் உள்ள ‘பால்ஸ்’ எனும் விடுதியிலும் அருகிலே உள்ள ‘ஸ்ருதி பேலஸ்’ என்ற ஆபாச விடுதிகளிலும் தான் இந்தக் கைதுகள் நடந்தன.

இந்த ஆபாச நடன நிகழ்ச்சிகள் இங்கே பல ஆண்டுகளாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஒருமுறை கூட இந்த விடுதிகளின் உரிமையாளர்கள் கைது செய்யப்படாதது ஏன்? ‘ரசித்துக் களித்த’ நடனப் பிரியர்கள் கைது செய்யப்படாதது ஏன்? இந்த விடுதிகள் தடை செய்யப்பட்டு மூடப்படாதது ஏன்?

பெண்களைத் துகிலுரிந்து ஆடவிட்டு ஆபாசத் தொழில் நடத்தும் அயோக்கியர்களைக் கைது செய்ய முடியாத காவல்துறை சமூக நிர்ப்பந்தத்துக்கும் வக்கிரத்துக்கும் பலியாகிப் போன பரிதாபத்துக்குரிய பெண்களைக் கைது செய்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

தமிழக மீனவர்களுக்கு...

“இராமேசுவரத்திலிருந்து மீன் வளத்துறையின் அனுமதி பெற்று 525 விசைப் படகுகள் மீன் பிடிக்கச் சென்றன. வியாழக்கிழமை (29. ஜூன் 2006) அதி காலை 2 மணியளவில் கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்கள்மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஜூலியான்ஸ் வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவருடன் இருந்த மீனவர்கள் மூவரும் படகை விரைந்து செலுத்தி அதிகாலை 4 மணிக்கு இராமேசுவரம் வந்து சேர்ந்தனர். அங்கு குண்டடிபட்ட ஜூலி யான்சுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்...’’

என்று செய்தி வருகிறது. தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் துயரம் இது.

தமிழக மீனவர்கள் காஷ்மீரப் பண்டிதர்கள் அல்ல. அதனால் இந்திய ஆதிக்க சக்திகளுக்கு தமிழக மீனவர்களின் உயிர் ஒன்றும் பெரிய பிரச்னை அல்ல.

ஆனால் தமிழக மீனவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத அளவுக்குப் பலவீனமானவர்களா? 525 படகுகள் செல்கின்றன என்றால் குறைந்த பட்சம் இரண்டாயிரம் பேர் கடலுக்குள் நுழைகிறார்கள். இந்த இரண்டாயிரம் பேர் நினைத்தால் இரண்டு இலங்கை ராணுவத் தடியன்களை வீழ்த்த முடியாதா?

ஒரே ஒருமுறை கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லாமல் இலங்கை இராணுவத்தைப் பிடிப்பது, என்று முடிவு செய்தால், பிரச்னையின் உக்கிரத்தை இந்திய அரசு உணர்ந்து கொள்ளாதா?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com