Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜனவரி 2007

சிவராமன் என்றொரு தோழன்

கவிஞர் கே. ஜீவபாரதி

தஞ்சை மாவட்டம் முத்துப்பேட்டை பஜாரில் ஒரு தையற்கடை. அதன் உரிமையாளர் சுந்தரராஜனும் சிவராமனும் பேசிக் கொண்டிருந்தனர்.

Jeevabharathi இவர்கள் இருவரும் கம்யூனிஸ்டுகள். இவர்களுடன் இவர்கள் மீது பற்றுக்கொண்ட சிறுவன் கோபால்சாமியும் இருந்தான். பேசிக் கொண்டிருந்தபோது இருந்த இடத்திலிருந்தே மூன்று டீ கொண்டு வரும்படி எதிரில் இருந்த டீக்கடைக்கு கோபால்சாமி குரல் கொடுத்தான்.

சிறிது நேரத்தில் டீக்கடையில் வேலைபார்க்கும் சிறுவன் மூன்று டீயுடன் வந்தான். வந்தவன் சிவராமனை விழிமூடாது பார்த்துக் கொண்டிருந்தான்... அதன்பின் சிவராமனை அவன் தொட்டுப் பார்த்தான்... அதன்பின் சிவராமன் போட்டிருந்த சிவப்புத்துண்டையே பார்த்துக் கொண்டிருந்தான்... அந்தச் சிறுவனின் விழிகளில் அவ்வளவு ஆச்சரியம்! அந்த ஆச்சரியத்தை வார்த்தைகளால் அவனால் வெளிப்படுத்த இயலவில்லை. ஆம்! அவன் பிறவியிலேயே ஊமை!

அந்தச் சிறுவனால் பேசத்தான் முடியவில்லை. இருப்பினும் அவன் எண்ணத்தை வெளிப்படுத்த அவன் தயங்கவில்லை. சிவராமனை நோக்கி பூணூலைப்போல் செய்து காட்டி “நீங்கள் பிராமணரா?” என்று சைகையால் கேட்டான்.

சிவராமன் “இல்லை” என்று பதில் சொன்னான். தொப்பியைப்போல் தலையில் கைவைத்துக் காட்டி “முஸ்லீமா?” என்றான் அந்தச் சிறுவன். அதற்கும் “இல்லை” என்றான் சிவராமன். அப்போதும் அந்தச் சிறுவனின் விழிகள் சிவராமன் தோளில் கிடந்த சிவப்புத் துண்டின் மீதே! அதை அறிந்த சிவராமன் தன் தோளில் இருந்த சிவப்புத் துண்டை எடுத்து அந்தச் சிறுவன் கழுத்தில் மாலையாகப் போட்டான். அந்தச் சிறுவன் முகத்தில் ஆயிரம் சூரியன்!

அப்போது, “நம்ம அண்ணன் கருக்கருவாக் கட்சி... நீயும் அந்தக் கட்சியில் சேர்றீயா?” என்றான் கோபால்சாமி. புரியாமல் விழித்தான் டீக்கடை சிறுவன். அதைப் புரிந்து கொண்ட கோபால்சாமி அரிவாள் சுத்தியலைப் போன்று கைகளால் செய்து காண்பித்து, “இந்தக் கட்சியில் சேருகிறாயா?” என்றான் கோபால்சாமி அதைப் புரிந்துகொண்ட அந்த டீக்கடை சிறுவன் சிரித்துக் கொண்டே சரி என்று தலையாட்டிவிட்டு டீக்கடைக்கு ஓடினான். அவனையே சிவராமன் பார்த்துக் கொண்டிருந்தான்.

1948-ல் கல்கத்தாவில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து தோழர் பி.சி. ஜோஸி விடுவிக்கப்பட்டு தோழர் பி.டி.ரணதிவே அந்தப் பொறுப்பிற்கு வந்தார். ஆயுதம் ஏந்தி நேரு சர்க்காரை வீழ்த்துவது என கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு முடிவு செய்தது. அதனால் மாநாடு முடிந்ததும் கம்யூனிஸ்டுகளை காங்கிரஸ் அரசு கைது செய்ய முயன்றது. அதனால் மாநாட்டில் கலந்துக் கொண்ட கம்யூனிஸ்டுகள் தலைமறைவாகத்தான் ஊருக்குத் திரும்பினார்கள். கம்யூனிஸ்டுகளை சிறையில் அடைத்தல்; சிறையிலேயே அடித்துக் கொல்லுதல்; விஷம் கொடுத்து சாகடித்தல்; துப்பாக்கிக் குண்டுக்கு பலியிடுதல்; கம்யூனிஸ்டுகளின் குடும்ப உறுப்பினர்களை சித்ரவதை செய்தல் என ஆளும்வர்க்கம் தொடர் தாக்குதலைத் தொடுத்தது.

இதற்குப் பதிலாக கம்யூனிஸ்டுகளும் பல தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டனர். கம்யூனிஸ்ட் கட்சி மீது தடைவிதித்த காங்கிரஸ் அரசு கம்யூனிஸ்டுகளை தேடித் தேடி வேட்டையாடியது. கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களும் முன்னணித் தோழர்களும் தலைமறைவாக வாழ்ந்துக் கொண்டு அரசுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சிவராமனும் தலைமறைவானான்.

பகலில் ஏதாவதொரு கிராமத்தில் பதுங்கிக் கொள்வது, இரவில் ஒவ்வொரு கிராமமாக நடந்து சென்று இயக்கத் தோழர்களை சந்தித்து அரசுக்கு எதிராகவும், பண்ணையார்களுக்கு எதிராகவும் செயல்படத் துணிந்தவர்தான் சிவராமன். சில நிகழ்வுகளுக்கு அவனே தலைமை ஏற்றான். அதனால் காவல்துறை சிவராமனை வலைபோட்டுத் தேடியது. எவர் கண்ணுக்கும் சிக்காமல் சிவராமன் தன்னுடைய பணிகளைத் தொடர்ந்தான். தோழர் எம்.வி.சுந்தரம் கொடுத்த வெளிநாட்டுத் துப்பாக்கி ஒன்று சிவராமனுக்கு துணையானது!

சிறுகளத்தூர் பண்ணையார், நெடும்பலம் பண்ணையார் ஆகியோரை எதிர்த்தும், அவர்களின் அடாவடித்தனங்களை முறியடித்தும் சிவராமன் செய்த செயல்கள் பண்ணையார்களையும், காவல்துறையினரையும் அச்சம் கொள்ளச் செய்தது. அதனால் சிவராமனைத் தேடும் படலம் தீவிரமானது. தஞ்சை மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமமாக சிவராமன் ஓடினான். சேரி மக்கள் மத்தியிலேயே வாழ்ந்தான்.

கிராம மக்களை மிரட்டி அவர்களையும் தங்களோடு சேர்ந்து சிவராமனைத் தேட போலீசார் பணித்தனர். ஒவ்வொரு ஊராகத் தேடினர். அப்படி தேடுவோர் மத்தியில் முஸ்லீம் இளைஞன் வேடத்தில் சிவராமனும் சென்றான். அதனால் அவனைக் கைது செய்ய முடியாமல் காவல் துறையினர் தவித்தனர்.

சிவராமன் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவன் வைத்திருந்த துப்பாக்கியும் எப்படியோ காணாமல் போயிற்று. இந்த நிலையிலும் தன் சக தோழர்களையும் தான் பிறந்த சாம்பவன்ஓடை கிராமத்தையும் பார்த்துவிட சிவராமன் விரும்பினான்.

அதனால் தம்பிக்கோட்டை, சித்தமல்லி, பட்டுக்கோட்டை ஆகிய இடங்களுக்கெல்லாம் சிவராமன் சென்றான். அதன்பின் ஆம்பலாப்பட்டுக்கு சிவராமன் சென்றபோது போலீஸாரின் அத்துமீறல்களை அங்கு கண்டான். அங்கிருந்து தான் பிறந்த ஊரான சாம்பவான் ஓடையை நோக்கி சிவராமன் நடந்தான்.

‘நாட்டுச்சாலை’ என்ற கிராமத்திற்கு வந்தபோது சிவராமன் டீ குடிக்க விரும்பி ஒரு டீ கேட்டான். அங்கிருந்த மஞ்சு வேளாளன் என்பவன் சிவராமனைப் பற்றி விசாரிக்க, மாடு வாங்க வந்ததாகச் சொல்லி சிவராமன் சமாளித்தான்.

டீக்கடையிலிருந்து சிவராமன் வெளியேறியபோது, ஒரு தண்ணீர் குடத்துடன் ஒரு பையன் எதிர்வந்தான். அவன் சிவராமனைக் கண்டதும் அவன் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி... ஏதேதோ அவன் பேச நினைத்தான்... இயலவில்லை... ஆம்! முத்துப்பேட்டையில் சிவராமன் சந்தித்த அதே ஊமைச் சிறுவன்தான் அவன்!

சிவராமன் சென்றதும் அந்த ஊமைச் சிறுவனிடம் வந்து சென்றவனைப்பற்றி மஞ்சு வேளாளன் விசாரிக்க, அந்த ஊமைச் சிறுவன் சைகையாலேயே சிவராமனைப் பற்றி பெருமையாகச் சொல்லியிருக்கிறான். அடுத்த நிமிடம் மஞ்சு வேளாளன் என்ற கயவன் போலீஸுக்குத் தகவல் தர, போலீஸார் அந்தக் கிராமத்தை முற்றுகையிட்டனர்.

நாட்டுச்சாலையிலிருந்து சாம்பவான் ஓடைக்குச் செல்லும் குறுக்குப் பாதையில் சிவராமன் நடந்துக் கொண்டிருந்தான்.

வழிமறித்த போலீஸார் சிவராமனை போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். இதை அறிந்த ஊரே அங்கு திரண்டது. அதில் இந்த ஊமைச் சிறுவனும் இருந்தான்.

போலீஸ் ஜீப் விரைந்தது. அதன் பின்னே சிறிதுதூரம் “அங்ஙே... அங்ஙே.... என்று கத்தியபடி அந்த ஊமைச் சிறுவன் ஓடினான். தெரியாமல் மோசம் செய்துவிட்டோமே என நினைத்து தலையில் அடித்து அவன் கதறினான்.

நாட்டுச்சாலைக்கு வெளியே ஒரு சவுக்குத் தோப்பில் வைத்து போலீஸார் சிவராமனை விசாரித்தனர். கம்யூனிஸ்டுத் தலைவர்களை காட்டிக் கொடுக்க வலியுறுத்தினர். அதற்கு சிவராமன் இணங்கவில்லை. அதனால் சிவராமனை அங்கிருந்து செல்லும்படி போலீஸார் அறிவித்தனர்.

நடக்கவிட்டு முதுகில் சுட போலீஸார் விரும்புகின்றனர் என்பதை அறிந்த சிவராமன் நெஞ்சை திறந்து காட்டி சுடச் சொன்னான். காவலர்கள் என்ற கயவர்கள் அந்த மாவீரனை நெஞ்சில் சுட்டு மண்ணில் வீழ்த்தினர். சிவராமனின் ரத்தம் நாட்டுச்சாலை சவுக்குத் தோப்பில் சிந்திச் சிதறியது. இந்தக் கொடிய நிகழ்வு 1950 மே 3 அன்று நடந்தது. அப்போது அவனுக்கு வயது 25!

ஆம்! சிவராமன் என்ற செங்கோடி மைந்தன் மறைந்து 46 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், மெய்யான கம்யூனிஸ்டுகளின் நெஞ்சங்களில் சிவராமன் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான்.


புரட்சிக் கவிஞரின் மீசை

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமது, ‘பாண்டியன் பரிசு’ எனும் காவியத்தைத் திரைப்படமாக்கும் முயற்சியில் இருந்த நேரம்.

கலைஞருக்கும், நடிகர் திலகம் சிவாஜிக்கும் நண்பரான கரந்தை சண்முக வடிவேலுவின் ‘தாய்நாடு’ பத்திரிகை அலுவலகத்துக்கு அடிக்கடி வருவார். அந்தப் பழக்கத்தில் தாய்நாடு பத்திரிகையின் ஆசிரியர் புரட்சிக் கவிஞரிடம் “வெகு நாட்களாகவே உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று ஆசை...” என்றார்.

“கேளேன்...” என்றார் புரட்சிக்கவிஞர்.

“நீங்களோ ஆரியப் பண்பாடுகளுக்கு எதிரானவர். ஆனால், ஆரிய சாம்ராஜ்ய ஆசையில் வெறிபிடித்த ‘இட்லரின் மீசை’யை ஏன் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

“இது இட்லர் மீசை என்று எவன் சொன்னான்?”

“எல்லோரும்தான்!”

“இட்லர் சொன்னானா? கேட்டுப்பார் சொல்ல மாட்டான்!”

“ஏன்?”

“ஏனென்றால் இந்த மீசைக்குப் பெயர் சாப்ளின் மீசை! புகழ்பெற்ற நடிகன் சார்லி சாப்ளினின் தீவிர ரசிகனாய் இருந்தவன்தான் இட்லர். சாப்ளினை விரும்பாதவர்தான் யார்? நானும், இட்லரும், இன்னும் அனேகரும் சாப்ளின் மாதிரி மீசை வைத்துக் கொண்டவர்கள்தான்.

இட்லர் சாப்ளினின் மேதைமையை ரசித்தாலும், சாப்ளின் இட்லரின் பாசிசத்தை எதிர்ப்பவனாக இருந்தான். அதனால் இட்லரைக் கடுமையாக விமர்சனம் செய்து ‘மாபெரும் சர்வாதிகாரி’ எனும் திரைப்படத்தை நடித்து வெளியிட்டான்.

இட்லரால் சாப்ளினின் ஏளனத்தையும், கண்டனத்தையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. “சாப்ளினை எங்கே பார்த்தாலும் சுட்டுக் கொல்லலாம், கைது செய்யலாம்” என்று உத்தரவு பிறப்பித்தான்.

சாப்ளினைக் கொலை செய்ய உத்தரவிட்டாலும், இட்லர் தனது மீசையை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால்தான் சாப்ளின் மீசை ‘இட்லர் மீசை’ என்று பெயர் பெற்று விட்டது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com