Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜனவரி 2007

இசைமேதை ராஜரத்தினம் பிள்ளை

இளவேனில்

நாகஸ்வரம் என்றதுமே ஒருவரது நினைவுக்கு வருவது, ராஜரத்தினம் பிள்ளை என்ற பெயர்தான். இசையுலகில் நாகஸ்வரத்துக்கு விசேஷ ஸ்தானத்தைத் தேடியவர் இவர்.

Rajarathinam Pillai 27.8.1898 (ஹேவிளம்பி - ஆவணிமீ-10) அன்று, திருவாவடுதுறை என்ற கிராமத்தில் குப்புஸ்வாமி பிள்ளை, கோவிந்தம்மாள் எனும் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார், ராஜ ரத்தினம். இவருக்குத் தயாளு அம்மாள் என்ற தமக்கை உண்டு. இவ்வம்மையாரின் குமாரரே, திருவாவடுதுறை ‘கக்காயி’ நடராஜசுந்தரம் பிள்ளை.

ராஜரத்தினம் பிள்ளையின் தாய் மாமனான திருமருகல் நடேச நாகஸ்வரக்காரர், திருவாவடுதுறை மடத்து வித்வானாகி அவ்வூரில் குடியேறியபோது, குப்புஸ்வாமி பிள்ளையின் குடும்பமும் திருவாவடுதுறையில் வந்து தங்கியது.

திருக்கோடிக்காவல் வயலின் கிருஷ்ணையரிடம் வாய்ப்பாட்டு கற்றுத் தன் ஏழாவது வயதுமுதல் பாட்டுக் கச்சேரிகள் செய்யத் தொடங்கிய ராஜரத்தினம் பிள்ளை, பிற்காலம் புல்லாங்குழல் விற்பன்னராக விளங்கிய திருப்பாம்புரம் ஸ்வாமிநாத பிள்ளையுடன் சேர்ந்தும், சில காலம், பாட்டுக்கச்சேரிகள் நடத்தி வந்தார். பின்னர், நாகஸ்வரம் கற்பதற்காகத் திருமருகல் நடேசபிள்ளையிடம் தவிற்கலைஞராக இருந்தவரும், நாகஸ்வரம் வாசிப்பதில் அதிகப் புலமை பெற்றிருந்தவருமான அம்மாசத்திரம் கண்ணுஸ்வாமி பிள்ளையிடம் கொண்டு போய்விட்டார், திருவாவடுதுறை மடத்தின் ஸர்வாதி காரியான பொன்னுப்பிள்ளை.

சிலவருடங்கள் கழித்து ராஜரத்தினம் எல்லோரும் வியக்கத்தக்க அளவில் நாகஸ்வர வல்லுனராக ஆனார். குருகுலவாஸம், ஸாதகம் என்பதெல்லாம் ஒரு வியாஜமாகயிருந்ததே தவிர, உண்மையில் முன்ஜன்ம நற்கருமங்களின் பலனாக, அக்கலை அவருக்கு இயற்கையாகவே லபித்திருந்தது.

துரிதமான, வக்கிரமான பிருகாக்கள், சுருதி சுத்தமும், வன்மையும் நிறைந்த ஒலி, ஆற்றலான பிரயோகங்கள், மணிக்கணக்கில் ராக ஆலாபனை செய்யும் திறமை ஆகியவையெல்லாம் ராஜரத்தினம் பிள்ளையிடம் தாமாக வந்து சேர்ந்தன.

சுயகௌரவத்தில் மிகவும், அக்கறையுள்ளவரான இவருக்குக் கோபம் வந்துவிட்டால், யாரிடம் பேசுகிறோமென்றில்லாமல், ‘கெட்ட’ வார்த்தைகளை சரமாரியாக வீசித், தூக்கியெறிந்து பேசிவிடும் சுபாவமிருந்தமையால், இவரை நெருங்கிப் பேசக் கூடப் பலர் அஞ்சினார்கள்.

ஒத்துக்கொண்ட கச்சேரிக்கு சரியாக வந்து சேருவாரா, வந்தாலும் வாசிப்பாரா என்ற ஐயப்பாடு ரஸிகர்களிடையே எப்போதும் இருந்ததாகும். பூஜை, தனிப்பட்டவொரு இறைவனிடம் ஈடுபாடு என்பதெல்லாம் ராஜரத்தினம் பிள்ளையிடம் காணப்படாத காரணத்தால், பொதுவாக அனைவரும், அவருக்கு ‘இறைபக்தி’யுணர்வு கிடையாதென்றே கருதுவர். ஆயினும், அவருடைய உள்ளத்தில் கடவுள் பக்தி இருந்து, நீறுபூத்த தணல் போல வெளிக்குத் தெரியாமல் இருந்தது.

திருச்செந்தூர் உற்சவத்தின் ஏழாந்திருநாளில் வாசிக்க அவர் சென்றிருந்தார். வாசஸ்பதிராக ஆலாபனை, கரைபுரண்டோடும் வெள்ளமாகப் பிரவகித்தது. வாசித்துக் கொண்டிருந்த ராஜ ரத்தினம் பிள்ளை, வாஹனத்தில் எழுந்தருளும் முருகப் பெருமானின் மீது கண்பதித்ததும், வாசிப்பு தடைப்பட்டு விட்டது.

ஸ்வாமியின் அலங்காரத்திலும், அவன் அழகு பொலியும் திருமுக மண்டலத்திலும், மெய் மறந்து சில நிமிடங்கள் நின்றுவிட்ட அவர், சுயநினைவு வந்ததும், நாகஸ்வரத்தைக் கொடுத்துவிட்டு, ஸ்வாமியின் அருகே சென்று, தன் கழுத்திலிருந்த விலையுயர்ந்த நவரத்தின மாலையைக் கழற்றி, ஸ்வாமிக்கு அணிவிக்கச் செய்து விட்டுப், பின்னர், தான் நின்றிருந்த இடத்துக்குத் திரும்பி வாசிக்கத் தொடங்கினார்.

வேறொரு சமயம், மன்னார்குடிக்கருகேயுள்ள கோமாலப்பேட்டை ஆலயத்தில் இரவு ஸ்வாமி புறப்பாட்டின்போது வாசிக்க அவர் சென்றிருந்தார்.

அன்று காலை, ஆற்றங்கரைக்குச் சென்றுவிட்டுத் திரும்புகையில், கோவிலின் பிராகாரத்திலிருந்த முருகனைக் கண்டார்.

அந்த முருகனின் கற்சிலைக் கொப்பானது வேறெங்குமேயில்லை. பிரமித்து, வாய்மூடிக், கண்பதித்து நின்ற ராஜரத்தினம் பிள்ளை, உடனே ஆளை அனுப்பித் தன் நாகஸ்வரத்தை எடுத்து வரச் செய்து, அந்த ஸந்நிதியில் நின்று சுமார் ஒன்றரை மணிநேரம் ‘ஷண் முகப்ரியா’ ராக ஆலாபனை செய்து, அப்பெருமானுக்குக் காணிக்கை ஆக்கினார்.

இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, என்னிடம் அவர் கூறியதாவது: “எனக்கு பூஜை, புனஸ் காரம் இதிலெல்லாம் ஸரியா ஈடுபாடு கிடையாது; ஆனால், என்னைக் கவருகின்ற அளவில் இறைவனின் அமைப்போ, அலங்காரமோ காணப்படுகையில், நான், என்னையே மறந்துவிடுவதுடன், எதையும் அர்ப்பணிக்கத் தயங்கவும் மாட்டேன்.”

கதர்வேஷ்டி, சட்டை, தலையில் குடுமி என்றெல்லாம்தான் நாகஸ்வரத் தவிற்கலைஞர்கள் காட்சி தருவது வழக்கம். அவ்விதமாகவே முதலில் இருந்த ராஜரத்தினம் பிள்ளை, மாற்றமொன்றை உண்டாக்கிக் கொண்டார். ‘கிராப்’ வைத்துக் கொண்டு, ஷெர்வானி, ஸுர்வால் முதலிய உடையணிந்துக், காலிலே ‘ஷு’ போட்டுக் கொண்டு, பழமையை உடைத் தெறிந்தார்.

1925 ஆம் ஆண்டு ஸெப்டம்பர் மாதம், திருச்செந்தூரில் நாகஸ்வரக் கச்சேரி நிகழ்த்த இவர் சென்றபோது, திருநெல்வேலி புகைவண்டி நிலையத்திலுள்ள ‘ஸ்பென்ஸர் ரூமில்’, பிரபல நாடக - இசை மேதையான எஸ்.ஜி. கிட்டப் பாவுக்கு முதன் முதலாக அறிமுகம் செய்விக்கப்பட்டார். அறிமுகப் படுத்தியவர்கள் மணிசர்மா, திருநெல்வேலி ருத்ரம் பாகவதர், தளவாய் பொன்னையா என்போர் ஆவர்.

அதுகாறும், நாகஸ்வரக் கச்சேரி என்றால், பங்குபெறும் கலைஞர்கள் யாவரும் நின்று கொண்டே நிகழ்த்துவதுதான் வழக்கம். இல்லங்களில் நடைபெறும் திருமணம் போன்ற வைபவங்களின்போது மட்டுமே உட்கார்ந்து வாசிப்பார்கள்.

மேடை போட்டுத்தான் வாசிக்க முடியுமென்று ஒரு நிபந்தனையை உண்டாக்கி, வீதிவுலா, ஸ்வாமி புறப்பாடு எதுவானாலும், உட்கார்ந்து வாசிக்கத் தொடங்கியவர், ராஜரத்தினம் பிள்ளைதான். திருநெல்வேலி, பாளையங்கோட்டை லப்பாஜி வெங்கடராமன் என்பவர் வீட்டில், 1929 இல் நடைபெற்றவொரு திருமண விழாவில், இரவு ஊர்வலத்தில் மேடையிட்டு அதில மர்ந்து முதன்முதலாக வாசித்தத் திருவாவடுதுறையார், அது முதல் ‘மேடை’க் கச்சேரிகளையே நடத்தலானார்.

திருவாவடுதுறை மடத்திலும், மாயூரம் துலா மாத ஸ்வாமி புறப்பாட்டிலும், திருவிடைமருதூர் தைப்பூச வெள்ளிரத விழாவிலும் மட்டுமே நின்று கொண்டு அவர் வாசிப்பார்.

ராஜரத்தினம் பிள்ளையின் வாசிப்பினை வருணிக்க வார்த்தைகளேயில்லை. எத்தனைக் கூறினாலும், அவை குறைவானவையாகத்தான் இருக்கும். அதிகமாக ஸ்வரம் அல்லது பல்லவி வாசிப்பதில் இவருக்கு விருப்பம் குறைவு; அதிலும் ‘வியவஹார’மாக ஸ்வரங்கள் போடுதலை, இவர் கட்டோடு வெறுத்தார்.

ஒரு சில கீர்த்தனைகள் மட்டுமே வாசிப்பார்; ஆனால் அமானுஷ்யமான கற்பனை செறிந்த தாயும், அதற்கு ஈடு கூறமுடியாத விதத்திலும், அவருடையராக ஆலாபனைகள் அமைந்திருக்கும். இன்றுவரை அதற்கொப்பானராக ஆலாபனையை எவரிடமும் கேட்கமுடியவில்லை.

சீடர்களைப் பயிற்றுவிப்பதற்கான நேரமோ, பொறுமையோ ராஜரத்தினம் பிள்ளைக்கு கிடையாது. இவருடன் கூடவிருந்து, இவருடைய வாசிப்பைக் கேட்டுத்தான் பலர் முன்னேறினர். இவர் ஒருவருக்குக் கற்பித்தாரென்றால், அது ‘கக்காயி’ நடராஜசுந்தரம் பிள்ளைக்குத்தான். 1929 ஆம் ஆண்டு வரை ராஜரத்தினம் பிள்ளையுடன், துணைநாகஸ் வரம் இசைத்துவந்தவர், இந் நடராஜசுந்தரம் பிள்ளை.

அடுத்துத் திருவாவடுதுறையாரின் கருத்தைக் கவர்ந்த சீடர், காருக் குறிச்சி பி.அருணாசலம் ஆவார். அருணாசலத்தை வாசிக்கச் சொல்லி, அதிலே தவறு களிருப்பின் திருத்துவார், ராஜரத்தினம் பிள்ளை.

28.06.1935 அன்று திருநெல்வேலி மாவட்டம், கு.எ.பண்ணையில் கச்சேரி செய்ய வந்திருந்த ராஜரத்தினம் பிள்ளையிடம் சீடராகச் சேர்ந்தவர், அருணாசலம். தன்குருவுடன் சேர்ந்து வாசித்துவந்த அருணாசலம், பின்னர் தனியாக வாசிக்கத் தொடங்கி விரைவில் பெரும் புகழையும், தனிப்பட்ட கௌர வத்தையும் பெற்றார்.

வேறு பல நாகஸ்வரக் கலைஞர்கள் ‘புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்ட’ கதையையொட்டித் தலையைக் ‘கிராப்’ செய்துகொள்வதிலும், பட்டுச்சட்டை அணிவதிலும், காலில் ‘ஷு’ அணிந்து நடப்பதிலும், ராஜரத்தினம் பிள்ளையைப் பின்பற்றினார்களே தவிர, இசையில் அவரை நெருங்கிக் கூடப் பார்க்க முடியவில்லை.

தகுதியும். யோக்கியதையும் அளவற்றிருந்தபடியால், கேவலமாக எடுத்தெறிந்து பேசுவதை ராஜரத்தினம் பிள்ளையிடம் மக்கள் பொறுத்துக் கொண்டார்கள்.

திரைப்படத்துறையிலும் அடிவைத்த ராஜரத்தினம் பிள்ளை, ‘கவி காளமேகம்’ என்ற படத்தில் நடித்தார். காளமேகம், நினைத்த மாத்திரத்தில், பயங்கரமான கவிமழை பொழிந்தது போலத், திருவாவடுதுறைக் ‘காளமேகம்’ இசைமழை பொழிந்த, அப்படப் பாடல்கள், இசைத்தட்டுகளில், அவருடைய பாட்டின் சிறப்பைப் பறை சாற்றும் விதத்தில் இருக்கின்றன. நாகஸ்வரத்தில் இணையற்ற புகழும், முதலாவது ஸ்தானத்தையும் பெற்றிருந்தபோதும், திருவாவடுதுறையார், திருச்சி வானொலி வாயிலாகத், தன் வாய்ப்பாட்டு வினிகைகளை, அவ்வப்போது ஒலிபரப்பி வந்துள்ளார்.

திருவீழிமிழலை சுப்பிரமணியபிள்ளை வயலின், தஞ்சாவூர் டி.கே. மூர்த்தி மிருதங்கத்துடன் இவர் பாடியிருக்கும் ஒலிப்பதிவொன்று, இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

ராஜரத்தினம் பிள்ளைக்கு நான்கு மனைவியர். சிலர் ஐந்தென்றும் கூறுவதுண்டு. ‘பட்ட மகிஷி’யான சாரதாம்பாள், தஞ்சாவூர் சாமிநாத பிள்ளை என்பவரின் மகள்.

திருப்பரங்குன்றத்தில் வசித்துவந்த சிவகிரி செல்லையா நாகஸ்வரக்காரரின் மகளான சுப்புத்தாயம்மாள் இரண்டாவது மனைவி. மூன்றாமவர், பெண்ணாடத்தைச் சேர்ந்த ஜன கத்தம்மாள்; தூத்துக்குடியைச் சேர்ந்த பாப்பம்மாள் என்பவர், ராஜரத்தினம் பிள்ளையின் நான்காவது துணைவி. பாப்பம்மாளின் சகோதரரான திருவாவடுதுறை அண்ணாமலையெனும் நாகஸ்வரக்கலைஞர், காஞ்சீபுரத்தில் வசித்து வருகிறார்.

பிள்ளைக்கு இத்தனை மனைவிகளிருந்தும் சந்ததியின்மையால், சிவாஜி என்ற பையனை ஸ்வீகாரம் செய்துகொண்டார். அவரே, தன் மாமனான திருமருகல் நடேசபிள்ளைக்கு ஸ்வீகார மகன்தானே!

திருவாவடுதுறையாருக்குத் தவில் வாசித்தவர்கள் பலர். அம்மாசத்திரம் கண்ணுச்சாமிப் பிள்ளை, நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, மலைக் கோட்டை பஞ்சாபகேசபிள்ளை, பந்தணைநல்லூர் ரத்தினம் பிள்ளை, திருமங்கலம் சுந்தரேச பிள்ளை, கும்பகோணம் தாதக் கிருஷ்ணன், கும்பகோணம் தங்கவேல் பிள்ளை, நாச்சியார் கோவில் ராகவப் பிள்ளை, நீடா மங்கலம் ஷண்முகவடிவேல், யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி - இன்னும் எத்தனையோ பேர்.

தனது நாகஸ்வர இசையை, ஏராளமான இசைத்தட்டுக்களில் பதிவு செய்துள்ளார். இவற்றில், ‘கச்சேரி செட்’ எனும் தொகுப்பில், எட்டுக்குடி பால சுப்பிரமணிய பிள்ளையும், வேறு பலவற்றில் நாச்சியார் கோவில் ராகவப்பிள்ளையும் தவில் வாசித்துள்ளனர்.

திருவாவடுதுறையை விடுத்துச் சென்னையில் குடியேறி வாழ்ந்துவந்த ராஜரத்தினம் பிள்ளை, அடையாற்றில், தான் வசித்திருந்த இல்லத்தில் 12.12.1956 அன்று இயற்கையெய்தினார்.

அவருடைய நாகஸ்வர வாசிப்பு உயர்வானதா, அல்லது வாய்ப்பாட்டாவென்று முடிவு செய்வது எளிதல்ல. இரண்டே நிமிடங்களில், சுமார் இரண்டு மணி நேரம் ஆலாபனை செய்தாலும் நிறைவு பெறாத கரஹரப்பிரியா போன்ற ராகங்களைப் பாடும் அவரது ஒப்பற்ற வன்மைக்கு எடுத்துக்காட்டாகக், ‘கவிகாளமேகம்’ திரைப்படப்பாடல் இசைத் தட்டுக்கள் விளங்குகின்றன. “ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால், பொன்றாது நிற்பதொன்று இல்”, என்பது வள்ளுவர் வாக்கு. திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் மறைவினால் காலியாகிவிட்ட அந்த ஆசனம், இன்னும் காலியாகவே இருக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com