Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஜனவரி 2007

வாழ்க்கை முடிவதில்லை

இளவேனில்

கிரேக்க இதிகாசங்களில் வரும் ஹெர்குலிஸின் பலம் தரையிலே இருந்தது. பூமியின் ஸ்பரிஸம் அவனைத் தீண்டும் வரையிலும் அவன் யாராலும் வெற்றி கொள்ளப்படாதவனாக இருந்தான்.

சாம்சனின் பலம் அவனது முடியிலே இருந்தது. உறக்கத்திலே அவனது முடியைச் சிறைத்த போது, அந்தோ, அம் மாவீரன் கைதாகிக் கண்களை இழந்து அடிமையானான்.

M.R.S. Mani நமது பாட்டியார் சொன்ன கதைகளில் வரும் ராஜகுமாரன் உயிர் ஏழு கடல் தாண்டி, அண்டோராப் பட்சியின் வயிற்றுக்குள்ளே இருந்தது.

இந்தக் கதைகளைப் கேட்ட நாள் முதலாய் என்னுள் எழுந்த கேள்வி ஒன்று: “எனது பலம் அல்லது உயிர் எங்கே இருக்கிறது?”

உடம்புக்கு அப்பாற்பட்ட உயிரும் சக்தியும் உண்டென்பது மதவகைப்பட்ட சிந்தனை. விஞ்ஞானம் இதை மறுக்கிறது.

நானோ மதமற்றவன். விஞ்ஞானத்தின் ஆதரவாளன். பிறகெப்படி என்னுள் இந்தக் கேள்வி எழுந்தது? “எனது பலம் அல்லது உயிர் எங்கே இருக்கிறது?”

ஒருவேளை இது என்னுள்ளிருக்கும் கலைஞனின் கேள்வியாக இருக்கலாம்.

கலைஞனின் அழகியல் விதிகளும் விஞ்ஞானியின் அறிவியல் விதிகளும் பல சந்தர்ப்பங்களில் முரண்பட்டுக் கொள்வதில்லையா? விஞ்ஞானியின் மொழியும் கலைஞனின் மொழியும்கூட வெவ்வேறு தன்மைகளைக் கொண்டிருக்க வில்லையா?

‘மண்ணில் தெரியுது வானம்’ என்று பாரதி சொல்வதை நம்மால் ரசிக்க முடியும். விஞ்ஞானியால் முடியாது.

கார்க்கி ஒரு முறை எழுதினார்: “ஓர் ஆட்டை ஆராயும் விஞ்ஞானிக்குத் தன்னை ஓர் ஆடாகக் கற்பனை செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் பேதமை ததும்பும் ஓர் எழுத்தாளன் தன்னை ஓர் ஆடாகவே கற்பனை செய்து கொள்ள வேண்டியதிருக்கிறது. சுயநலமில்லாத ஓர் எழுத்தாளன், கொடூரமான, சுயநலத்துக்காக எதையும் செய்கிற ஒரு பாத்திரத்தைப் படைக்கும் முன், அந்தப் பாத்திரத்தின் உணர்ச்சிகளையெல்லாம் தன்னுள் உருவாக்கிக் கொள்ள வேண்டியதிருக்கிறது.”

உண்மைதான்!

‘குங்குமப்பூ’ கதையில் வரும் தாய் “இப்படியாக நான் ரெண்டாவது முறையாகச் செத்தேன்...” என்று சொல்லும்போது நம்மால் கண்ணீரை மறைக்க முடிவதில்லை. கனவுகளும் நம்பிக்கைகளும் உடைந்து போன அந்தத் தாயின் வாழ்க்கை நம் கண்முன்னே விரிந்து நெஞ்சை அழுத்துகிறது. கே.ஏ.அப்பாஸ் உருவாக்கிய இந்த கதாபாத்திரத்தை யாரால் மறக்க முடியும்? ஆனால், இந்தப் பாத்திரத்தைப் படைக்கும் முன் கே.ஏ. அப்பாஸ் எத்தனை நாள் அந்தத் தாயின் அழுத்திக் கொல்லும் வாழ்க்கையைச் சுமந்து எத்தனை முறை சாவை அனுபவித்திருப்பார்!

ஓத்தெல்லோவாகி நித்திரை யொழிந்த எத்தனை ராக்காலங்களில் ஷேக்ஸ்பியர் துடித்திருப்பார்!

சிறைக் கொடுமைகளுக்கு அஞ்சாது, சாவின் வாசல் வரை சென்றும் அச்சமில்லாமல் திரும்பி வந்த என் தோழர் எம்.ஆர்.எஸ். மணி தனிமையில் திடீரென்று கண்களை மூடிக்கொண்டு அழுவதைப் பார்த்திருக்கிறேன். அந்த நாட்களில் வராத சோதனைகளும் வேதனைகளும் இப்போதா வந்துவிட்டன? இல்லை! தாமே உருவாக்கிக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தின் சோகங்களைச் சொந்தமாக்கிக் கொண்டு அவர் அழுதுவிடுகிறார்.

தன்னால் கொஞ்ச நாட்கள் மீனாய், குதிரையாய், செடியாய் மாற முடியவில்லையே என்று அலெக்சாந்தர் குப்ரீன் வருந்தியிருக்கிறார்.

இப்படித்தான் ஒவ்வோர் எழுத்தாளனும் தனது பாத்திரங்களின் வாழ்வைத் தானே வாழ்ந்து தீர்க்க வேண்டியதிருக்கிறது.

எழுத்தாளனுக்குத்தான் இந்த அவஸ்தைகள் எல்லாம். ஆராய்ச்சியாளனுக்கு இவை தேவையில்லை.

இம்மாதிரியான இலக்கியவாதியின், கலைஞனின் உணர்வுகளிலிருந்தே என் னுள் அந்தக் கேள்வி எழுந்திருக்க வேண்டும் - “எனது பலம் அல்லது உயிர் எங்கே இருக்கிறது?”

“உனது உடம்புக்கு அப்பால் உனது உயிரைத் தேடும் கலைஞனே உன்னைத் திருத்த முடியாது” என்று விஞ்ஞானி எனக்கு முகத்தைத் திருப்பிக் கொள்ளக் கூடும். ஆனாலும், நான் எனது உயிரின் உறைவிடத்தைக் கண்டறியும் முயற்சியைக் கைவிடவே இல்லை.

பலம், உயிர் என்பது உடம்போடு ஒட்டிக் கொண்டிராமல் ரகசியமாய் எங்கோ ஓரிடத்தில் மறைந்திருப்பதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறதல்லவா?

பகத்சிங் தூக்கிலிடப்பட்ட போது ஒரு கவிஞன் சொன்னான்: “உனது இறுதி மூச்சை சுதந்திர இந்தியா தனது முதல் மூச்சாக வாங்கிக் கொள்ளும்.” பகத்சிங் வரலாற்றை எழுதிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஓரிடத்தில் இவ்வாறு எழுதுகிறார்: “புரட்சிக்காரன் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்படுகிறான்!”

இவை வெறும் கவிதாலங்காரங்களாக இல்லாமல் நடைமுறை எதார்த்தமாகிவிடக் கூடாதா? ஆகிவிட்டால் எவ்வளவு ஆறுதலாக இருக்கும்? இன்னொருவனுக்குள் நான் இருந்து கொண்டிருப்பேனே!

அநீதிக்குப் பலியான ஆற்றாமைக் கோபம் “நான் செத்தாலும் ஆவியாய் வந்து பழிவாங்குவேன்” என்று சபதம் செய்கிறதே அப்படி ஓர் வாய்ப்பாவது கிடைக்காதா?

சின்ன வயதில் வரலாற்றுக் கதைகள் ஒன்றில் படித்தேன்:

‘ராசின்’ என்னும் ‘கலகக்கார’னை ஜார் மன்னன் தூக்கிலிடுகிறான். தூக்குமேடையில் நின்று கொண்டு ராசின் சொல்கிறான்:

“ஏ, கொடுங்கோலனே, என்ன நீ தூக்கிலிட்டு விடலாம். ஆனால், நான் மறுபடியும் பிறந்து வருவேன், வந்து உன் வம்சத்தைப் பூண்டறுப்பேன்!”

இவ்வாறு தூக்கிலிடப்பட்டு இறந்துபோன ராசின் நூறு ஆண்டுகளுக்குப்பின் மறுபடியும் பிறந்து வந்து தனது சபதத்தை நிறைவேற்றிக் காட்டினான். ஆனால், இப்போது அவனை ராசின் என்று யாரும் அழைப்பதில்லை. லெனின் என்று அழைத்தார்கள்.

இந்த வரலாற்றுக் கதாசிரியர் வரலாற்றையும் குழப்பி, மூட நம்பிக்கையையும் பரப்பியிருந்தார். ஆனாலும் அவரது கற்பனையை நான் ரசித்தேன். அறிவுக்குப் புறம்பான இந்தக் கற்பனையில் நான் தேடும் ஆறுதல் இருக்கிறதல்லவா?

இருக்கிறது. ஆனால், இந்த ஆறுதல் மெய்யான தில்லையே! கானலை நம்பி மானலைந்த கதையாகி விடாதா? ‘ஆத்ம சரீர சுகமளிக்கும்’ தெய்வீகப் பிரச்சாரகன் கூட நோய் வந்தால் மருத்துவரிடம் போகிறான்; பசி வந்தால் உணவைத் தேடுகிறான்; காமத்துக்குப் பெண்ணிடம் ஓடுகிறான். பைபிளைத் தரித்துக் கொள்ளமுடிவதில்லை. குரானைத் தின்ன முடிவதில்லை. கீதையைப் புணர முடிவதில்லையே!

கவிதாலங்காரங்களையும், கற்பனை சுகங்களையும் விஞ்ஞானப் பார்வை துடைத் தெறிகிறது.

“அப்படியானால் விஞ்ஞானத்தையும் கவிதாலங்காரத்தையும் இணைக்கவே முடியாதா?”

இந்தக் கேள்வியை தோழர் வி.பி.சி.யிடம் கேட்டேன். அவர் “முடியும்” என்றார். பிறகு சொன்னார்:

“விஞ்ஞானத்தையும் கவிதையையும் தத்துவ ஞானம் இணைத்துவிடுகிறது. ஆனால் எல்லாத் தத்துவ ஞானங்களும் அல்ல! மற்ற தத்துவங்கள் எல்லாம் பிரபஞ்சத்தை வியாக்கியானம் செய்கின்றன. அல்லது மரணத்துக்குப் பிந்திய வாழ்க்கையைப் பற்றிப் பேசுகின்றன.

“நிகழ்காலப் பிரச்சனைகளுக்குத் தப்பி ஓடும் ‘எஸ்கேபிஸம்’தான் அது. மார்க்சியமோ இந்த உலகையுமே மாற்றி அமைப்பதைப் பற்றிப் பேசுகிறது.

“நடைமுறை வாழ்க்கையின் பொறுப்புக்களைத் தட்டிக் கழிக்கிறவன்தான் மறுஜென்ம வாழ்க்கையைப் பற்றிக் கனவு காண்கிறான். கையில் தரப்பட்டிருக்கும் வாழ்க்கையை வீசி விட்டுப் போகிறவனா வேறொரு வாழ்க்கையை வெட்டிக் கொண்டுவரப் போகிறான்?

“கிழவிகள் சொல்லக் கேள்விப்பட்டதில்லையா? கூரையேறிக் கோழிபிடிக்க முடியாத வனா வானத்தைக் கீறி வைகுந்தத்துக்கு வழி காட்டப்போகிறான்?”

“நீ முதலில் கூரையேறு. வானம் உனக்கு வசியப்படும். இந்த வாழ்க்கைக்காகவும் இந்த உலகத்துக்காகவும் போராடு. அப்படிப் போராடும் மக்களோடு சேர்ந்து நில். வாழத்தகுதியற்றதென்று கருதும் இந்த வாழ்க்கையையும் உலகத்தையுமே மாற்றியமைத்து விட்டால் வேறொரு வாழ்க்கையும் வேறொரு உலகமும் உனக்கு எதற்காக?

“கற்பனை உலகிலிருந்து வெளியே வா! உன் கதவருகே வாழ்க்கை காத்துக் கிடக்கிறது. அதை சிக்கெனப் பிடி. எதிர் காலத்தின் மீது ஏறிச்செல்.

“ஸ்பார்ட்டகஸ் தனது காலத்துக்காகப் போராடினான். நமது காலத்திலும் நினைக்கப்படுகிறான். நீ நமது காலத்துக்காகப் போராடு. எதிர்காலத்திலும் நினைக்கப்படுவாய். மரணத்துக்குப் பின்பும் மனிதன் வாழ முடியும் என்பது இப்படித்தான்...”

நான் குறுக்கிட்டேன்:

“ஸ்பார்ட்டகஸை மாத்திரமா நாம் நினைவு கொள்கிறோம். ‘சீசரையும், காண்டையும், ஆதி சங்கரரையும் கூடத்தான் நாம் நினைவு கொள்கிறோம். அது எப்படி?”

வி.பி.சி. தொடர்ந்தார்:

“புரட்சிக்குப் பிந்திய சீனாவிலே ஈ ஒழிப்புப் போராட்டத்துக்குப் பிறகு, சில ஈக்களைப் பிடித்துப் பாதுகாத்தார்களாம். ‘இதுதான் ஈ. இதனால் விளைந்த கேடுகள் இன்னின்ன’ என்று பாடம் நடத்துவதற்காக. மியூசியத்திலே அழிந்து போன உயிரினங்களின் எலும்புக் கூடுகளைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்களே எதற்காக? கால சூழ்நிலைகளுக்கேற்பத் தம்மைத் தகவமைத்துக் கொள்ள முடியாத உயிரினங்கள் அழிந்து விடும் என்கிற டார்வின் கொள்கையை உறுதிப்படுத்துவதற்காக மியூசியத்தை உருவாக்கியவர்கள் டார்வினை நம்புகிறார்களோ இல்லையோ, மியூசியத்தினால் நாம் பெறும் படிப்பினை இதுதான்.

“நீ ஈயாக எலும்புக்கூடாக நினைக்கப்படுவதிலே உனக்கு ஆசை என்ன? சீசரையும் காண்ட்டையும், ஆதிசங்கரரையும் அறிவுலகம் அவ்வாறுதான் நினைவுகூறும்!”

ஆ... என் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்து விட்டது! எனது பலம் அல்லது உயிர் எங்கே இருக்கிறது என்று வி.பி.சி. எனக்குத் திசை காட்டினார்.

கிரேக்க இதிகாசங்களில் வரும் ஹெர்குலிஸின் பலம் தரையிலே இருந்தது. பூமியின் ஸ்பரிஸம் அவனைத் தீண்டும் வரையிலும் அவன் யாராலும் வெற்றி கொள்ளப்படாதவனாக இருந்தான்...

தரையிலிருந்து தூக்கி அந்தரத்தில் வைத்தே அவனைக் கொல்ல முடிந்தது.

எனது பலமும் ‘தரை’யிலேதான் இருக்கிறது. மக்களிடமிருந்து நான் விலகாதவரையிலும் என்னை யாராலும் வெற்றி கொள்ள முடியாது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com