Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Seide Madal
Seide Madal LogoSeide Madal Logo
ஏப்ரல் 2006

தேர்தல் சிந்தனைகள்

ஆனாரூனா

தேர்தல் கூட்டணி எனும் போர்த் தந்திரத்தைத் தமிழ்நாடுதான் முதன் முதலில் தொடங்கி வைத்தது. எதிர்க் கட்சிகள் ஓரணியில் நின்றால் ஆட்சி மாற்றம் நிகழும் என்பதை 1967-இல் தமிழகம் நிரூபித்தது. தேர்தல் கூட்டணி தேர்தல் முடிவோடு முடிந்து விடவேண்டும் என்று வெற்றி பெற்ற கூட்டணியில் பெரிய கட்சி விரும்பும். கூட்டணிதானே ஆட்சியை வென்றெடுத்தது; அதனால் எங்களுக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று வெற்றிக் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கு ஆசை வருவதும் இயல்புதான்.

Karunanidhi மத்தியில் ஒரு கட்சி ஆட்சி என்கிற ஏகபோகம் முடிவுக்கு வந்து, கூட்டணி ஆட்சிதான் இனி சாத்தியம் என்கிற நிலை வந்துவிட்டதால், மாநில அரசியலிலும், ஆட்சியில் பங்கு என்கிற கோரிக்கைகள் இனி தவிர்க்க முடியாததே! ஒத்த கருத்துடைய கட்சிகள் தேர்தலில் மாத்திரமல்ல, ஆட்சியிலும் பங்காளிகளால் நட்புறவைப் பேணமுடியும் என்பதை மேற்கு வங்கத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி அரசு மெய்ப்பித்து வருகிறது.

மேற்கு வங்கத்தில் தொடங்கிய இந்தப் புதிய வெளிச்சம் தான் மத்தியிலும் கூட்டணி அரசு சாத்தியம் என்கிற பார்வையைத் தந்தது. ஆனால் மத்தியில் முன்பு அமைந்த கூட்டணி அரசுகளும், நிம்மதியாக இருக்கவில்லை; இப்போதைய கூட்டணி அரசும் நிம்மதியாக இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. அதனால்தான், ‘குஜ்ரால் அரசு’ நீடிக்கவில்லை; ‘தேவகௌடா அரசு’ நீடிக்க வில்லை; ‘வாஜ்பேயி அரசு’ தொடரமுடியவில்லை. ‘மன்மோகன் அரசு’ம் பெருமூச்சுடன் காலம் தள்ளுகிறது. உத்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட கூட்டணி அரசுகளும் சஞ்சலத்திலேயே சரிந்தன. பீகாரில் பதவி ஏற்றுள்ள நிதீஷ்குமார் அரசு நீடிக்கும் என்பது நிச்சயமில்லை. கன்னடத்தில் ஒரு கூட்டணி அரசு கவிழ்ந்து புதிய கூட்டணி ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஒப்பந்தப்படி முதல் இருபது மாதங்களாவது நிம்மதியாக இருக்க முடியுமா?

தமிழகத்தில் தி.மு.க.வுக்கு, அதிமுகவும்தான் கூட்டணி சேரவில்லை. இந்த இரு கட்சிகளுடன் எல்லாக் கட்சிகளும் அணி சேர்ந்து, பிளவுண்டு, தள்ளாடி, தாவியணைத்து, வாழ்த்தி, வசைபாடி ஜனநாயகத்தின் முழுப்பரிமாணத்தையும் வெளிப்படுத்தியிருக்கின்றன. வரும் ஒரு நாளில் தி.மு.க.வும் அ.தி.மு.கவும் கூட்டணி சேராது என்று சொல்லிவிட முடியாது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் அலுவலகங்களைத் தவிர எல்லாக் கட்சி அலுவலகங்களிலும் தேர்தலில் நிற்பதற்கு வாய்ப்புக் கேட்டு நெரிசலில் சிக்கியவர்கள் ஏராளம்.

காங்கிரஸ் கட்சியின் சத்திய மூர்த்தி பவனில் ஒரு நாள் எங்கே பார்த்தாலும் காமராஜ் முகம்தான். தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைக்காதவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் எல்லோரும் காமராஜ் ஆகிவிட்டார்கள். காமராஜ் ஆவது, இப்போது வெகு எளிதாகி விட்டது. காமராஜ் என்பது வெறும் முகமூடிதான் என்று அவர்கள் காட்டிவிட்டார்கள். காமராஜ் ஆட்சி அமைக்க விரும்பும் மற்றொரு குழு இந்த காமராஜர்களை அடித்து நொறுக்கிக் காமராசருக்கும் பெருமை சேர்த்தது. எல்லாக் கட்சிகளிலும் இம்மாதிரியான அதிருப்தியாளர்கள் தங்கள் கோபங்களைப் பல விதங்களில் காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தேர்தலில் நிற்க வேண்டும் என்னும் ஆர்வப் பேரலை கொள்கைகளை அடித்துக் கொண்டு போய் விடுகிறது.

கிடைக்கிற கூட்டணியில் முடிகிறவரை இலாபம் என்று கட்சிகள் கணக்குப் போடுகின்றன. கூட்டணி என்பது அலை கடலில் தோணியா? அவசரத்தில் பற்றிக் கொண்ட புலிவாலா? எதுவாக இருந்தாலும், கட்சிகளின் தனித்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் இது நல்லதல்ல. யோக்கியர் சேஷன் வந்தார். தேர்தல் ஆணையத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தார் என்று அக்கிரகாரத்து ஏடுகள் எல்லாம் எழுதிப் பூரித்தன. தேர்தல் ஆணையங்களும் மனிதர்கள்தாம். அவர்களுக்கும் ஓர் அரசியல் பார்வை உண்டு என்பதை அனேகமாக எல்லோருமே மறந்து விடுகிறார்கள்.

சேஷன் ஒரு தீவிர சங்கர மட பக்தர். இப்போதுள்ள கோபாலசாமி அய்யங்கார் ஒரு தீவிர விஷ்ணு பக்தர். அரசியல் கட்சிகள் சுவர்களிலே, தெருவிலே விளம்பரம் செய்யக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கும் இவர்கள் தங்கள் அரசியலை நெற்றியில் எழுதிக் கொள்ளத் தயங்கியதில்லை; வெட்கப்படுவதில்லை. மதமும் ஒருவித அரசியலே. மதத் தலைவர்களே பல நாடுகளில் அரசியல் தலைவர்களாக இருக்கிறார்கள். மதமே அரசியலைத் தீர்மானிக்க வேண்டும் என்று இங்கே சங்கப் பரிவாரங்கள் ஆர்ப்பரிக்கின்றன. மிகப் பிற்போக்கான அரசியல் கோட்பாடுகளை வலியுறுத்தும் கட்சிகள், அமைப்புகள் இருக்கும் நாட்டில் மதச் சின்னங்களை வெளிப்படையாக அணிந்து திரிகிறவர்கள் நேர்மையான தேர்தல் ஆணையர்களாக எப்படி இருக்க முடியும்? தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை அறிவிக்கிறது. அதை இப்படியும் சொல்லலாம். ஆணையர்கள் அறிவிப்பதெல்லாம் விதிமுறைகள் என்று சொல்லப்படுகின்றன.

உண்மையில் திட்ட வட்டமான வெளிப்படையான தேர்தல் விதிமுறைகள் என்று இதுவரை எதுவும் நிச்சயிக்கப்பட்டதில்லை. ஆணையர்கள் எப்போதெல்லாம் வாய் திறக்கிறார்களோ அப்போதெல்லாம் அங்கிருந்து வழிபவவை தேர்தல் விதிமுறைகள் என்று நம்பப்படுகின்றன. கடைசிக்கும் கடைசிப் பரிசீலனையில் தேர்தல் ஆணையம் என்பது ஆதிக்க சக்திகளின் சேமநல வாரியமே! அவர்களில், பொது இடங்களில், தேர்தல் விளம்பரம் செய்யக் கூடாது என்கிறது தேர்தல் ஆணையம்.

Jayalalitha ஏன் செய்யக் கூடாது? ஆதிக்க சக்திகள் வீதிக்கு வரும்போது வருங்கால பாரதமே, நாளையத் தமிழகமே என்று சில தலைவர்களின் படம் இடம் பெறுவது அவர்களை அருவெறுப்படையச் செய்கிறது. உண்மையில் ஆதிக்க சக்திகளுக்குச் சேவகம் புரியத்தான் இவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். எஜமானர்களுக்கு, முன்னால் சேவகர்களைப் புகழ்வதை எஜமானத்துவம் எப்படி அனுமதிக்கும்! எஜமான விசுவாசம் காட்டவேண்டிய அடிமை நாய்களுக்கு என்ன அத்தனை மதிப்பு, மரியாதை? ஆதிக்க சக்திகளின் கோபம் தேர்தல் ஆணையத்துக்குப் புரிகிறது. உடனே சுவர்களில் பொதுஇடங்களில் தேர்தல் விளம்பரம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கண்டிப்புக் காட்டுகிறது.

இரவு பத்து மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது. ஏன்? ஏனென்றால் ஆதிக்க சக்திகளின் இரவு நேரக் கேளிக்கைகளுக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது. தேர்தல் கூட்டங்களால் அவர்களுக்கு வருமானம் கூடக் கிடைப்பதில்லை. தூங்கலாம் என்று படுத்தால் பிரச்சார சத்தம் எரிச்சலை ஏற்படுத்துகிறது. ‘‘ஏண்டா அம்பி, இதையெல்லாம் கவனிக்கக் கூடாதோ?’’ ஆதிக்க சக்திகள் முணுமுணுக்கின்றன. ஆணையம் உடனே தடை விதிக்கிறது.

தேர்தல் விளம்பரம் என்பதும் பிரச்சாரம் என்பதும் ஆதிக்க சக்திகளுக்கும் எரிச்சலூட்டும் சமாச்சாரமாக இருக்கலாம். ஆனால் இந்திய மக்களின் நிலையில்?...

இருபத்து நான்கு மணி நேரமும் கண்ணில் படும்படி எழுதி வைத்து, காதில் கேட்கும்படி கத்திப் பிரச்சாரம் செய்தால் கூட, வாக்குச் சாவடியில் நுழைந்ததும் வேட்பாளரின் பெயரும் சின்னமும் மறந்து எங்கோ குத்தி, எதையோ அழுத்தி விட்டு வந்து, ‘‘அப்போ... தப்பா போட்டுட்டேனா?’’ என்று வெகுளித்தனமாய் வருந்துவதுதான் இந்திய சராசரி மக்களின் நிலை.

‘இந்து’ பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதினாலே ஆட்சியைக் கவிழ்க்க முடியும்; அரசியலைத் தீர்மானிக்க முடியும் என்கிற வாய்ப்புகள் எல்லா இந்திய மக்களுக்கும் கிடைப்பதில்லை. பாமர மக்களே அதிகம் உள்ள ஒரு நாட்டில் விளம்பரம் செய்யக் கூடாது. இரவு நேரங்களில் பேசக் கூடாது என்பது என்ன நியாயம்?

சிந்திக்கக் கூடியவர்கள் இவ்வாறு கேட்கலாம்; ஆனால் தேர்தல் என்பதும், ஆட்சி என்பதும், இந்தியா என்பதும் இந்தப் பஞ்சைப் பராரிகளுக்கானவை அல்ல என்கிற எதார்த்தம் முகத்தில் அடிக்கிறதே!

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதாயம் தரும் இரட்டைப்பதவி வகிக்கலாமா? என்கிற பிரச்னை இப்போது புயலாய்க் கிளம்பியிருக்கிறது. தான் வகித்த அனைத்துப் பொறுப்புகளையும் உதறி விட்டு, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி, தன்மீது ஏவி விடப்பட்ட புயலைத் தென்றலாக மாற்றியிருக்கிறார் சோனியாகாந்தி. சோனியா காந்தியை அரசியலிலிருந்து முடிந்தால் இந்தியாவிலிருந்தே விரட்டி விடுவது என்று வெளிப்படையாகவும் திரைமறைவாகவும் சதிவேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் சங்கப் பரிவாரங்களின் சூழ்ச்சியை மீண்டும் முறியடித்திருக்கிறார் சோனியா காந்தி.

நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஜெயா பச்சன், உ.பி. அரசின் திரைப்பட வளர்ச்சிக்கழக உறுப்பினராகவும் இருக்கிறார். அது ஆதாயம் தரும் பதவி. அதனால் அவர் எம்.பி. பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவர் பிரச்னை கிளப்புகிறார். உண்மையில் இது பா.ஜ.கவின் ஏற்பாடு. இந்த முறையில் பிரச்னையைக் கிளப்பினால் அது சோனியா காந்தி, சோம்நாத் சட்டர்ஜி வரை ஈட்டியாகப் பாயும் என்பது பா.ஜ.க வின் திட்டம்.

திட்டமிட்டபடி ஜெயா பச்சன் விவகாரத்தைத் தொடர்ந்து சோனியா காந்தி குறிவைக்கப்படுகிறார். பா.ஜ.க. பரிவாரங்கள் குடியரசுத்தலைவர் அப்துல் காலாமிடம் புகார் மனு அளிக்கிறார்கள். அவர் தேர்தல் ஆணையத்துக்கு அதை அனுப்பி வைக்கிறார். இதிலே தேர்தல் ஆணையத்துக்கு என்ன வேலை? ஆதாயம் தரும் பதவிகள் என்னென்ன என்று திட்டவட்டமான விளக்கம், நெறி எதுவும் இதுவரை அரசியல் சாசனத்தில் இடம் பெறவில்லை.

Sonia Gandhi தேர்தல் ஆணையத்துக்கு ஆதாயம் தரும் பதவிகள் குறித்து அறிவிக்கப்பட்டதும் இல்லை. இதுவரை ஆணையம் இது குறித்துச் சிந்தித்ததும் இல்லை. ஜெயா பச்சன் சோனியா காந்தி போன்றவர்கள் தேர்தலில் நிற்க விண்ணப்ப மனு தந்தபோதே தேர்தல் ஆணையம் ஏன் நிராகரிக்க வில்லை? ஏனென்றால் இரட்டைப் பதவி, ஆதாயம் தரும் பதவி என்று எந்த நுணுக்கமான விவரமும் அறிவுறுத்தலும் தேர்தல் ஆணையத்துக்குக் கிடையாது. உண்டென்றால் அது பொறுப்பில்லாமல் நடந்திருக்கிறது என்று பொருள். இந்தப் பிரச்னைக்காக அது தண்டிக்கப்பட வேண்டும். இதனால் ஏற்படும் இடைத்தேர்தலுக்கான செலவு தேர்தல் ஆணையர்களிடமிருந்து வசூலிக்கப் படவேண்டும். ஆனால் பா.ஜ.க. அதை விரும்பாது.

இரட்டைப் பதவி வகிக்கலாமா? ஆதாயம் தரும் பதவி எது என்று விவாதித்து முடிவு செய்யலாம் என்று மன்மோகன் சிங் அரசு விவேகமாக நடந்து கொள்ளவில்லை. கொஞ்சம் சிந்தித்து அரசு முடிவு செய்திருந்தால் சோனியா காந்தி தமது எம்.பி. பதவியை இராஜினாமா செய்வதை நிறுத்தியிருக்க முடியும் என்று மத்திய அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது.

மன்மோகன் சிங் எப்போதும் பா.ஜ.க.வின் நற்சான்றிதழுக்காகவே செயல்படுகிறவர். அவர்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காக அவர் காங்கிரஸ் கட்சியையே தடைசெய்யவும் தயங்கமாட்டார். சோனியா காந்தி பற்றி அவருக்கென்ன கவலை? இரட்டைப் பதவி, ஆதாயம் தரும் பதவி குறித்து இனித் தேர்தல் ஆணையம் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடப் போகிறதோ? எம்.எல்.ஏ., எம்.பி.பதவி வகிப்பவர்கள் அமைச்சர்களாகப் பதவி வகிக்கலாமா? எம்.எல்.ஏ., எம்.பி. அமைச்சர் பதவிகளில் இருப்பவர்கள் சொந்தமாக வேறு தொழில் நடத்தலாமா? தமது பதவியின் செல் வாக்கால் இவர்கள் தம் தொழிலை வளர்த்துக் கொள்ள மாட்டார்களா?

முத்தையா செட்டியாரும், சிதம்பரம் செட்டியாரும், அத்வானியும், மோடியும் எந்தத் தொழிலும் அற்றவர்களா? டாட்டா, பிர்லா, அம்பானி, பஜாஜ் போன்ற செல்வந்தர்கள் அரசியல் தொடர்பே இல்லாதவர்களா? முதலாளித்துவ ஜனநாயகம் என்பது அடிப்படையில் தனிச்சொத்துரிமையைப் பேணுவதுதான். இதிலே சோனியா காந்தியை மட்டும் பா.ஜ.க. குறி வைப்பது, அவர் பார்ப்பனப் பெண்மணி அல்ல என்பதால்தான். பா.ஜ.க. எதிர்க்கும் ஒரே காரணத்தால், சோனியா காந்தியை ஆதரிப்பது இந்திய மக்களின் கடமையாகிறது. பார்ப்பனியப் பயங்கரவாதத்துக்கும் இந்துத்துவ மதவெறிக்கும் இந்தியா பலியாக விரும்பவில்லை என்பதை ரேபரேலி மக்கள் சோனியா காந்தியை வெற்றி பெறச் செய்வதன் மூலம் நிரூபிக்கப்போகிறார்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com