Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Anangu
Anangu Logo
செப்டம்பர் - டிசம்பர் 2007


இரகசியக் கொலையாளி
பஹீமாஜஹான்


பகல் முழுதும்
மலைகளின் சாம்பல் நிறப் போர்வைக்குள்
தேங்கிக் கிடக்கும் இருள்
மாலையில் பதுங்கிப் பதுங்கி மலையிறங்கி
ஊன் திசைகளெங்கிலும்
உறைந்திட ஆரம்பிக்கும் கணங்களில்
எனை வழியனுப்பி வைப்பாய்

உன்னையும் எனது ஆனந்தங்களையும்
அந்த வீட்டுத் தனிமையின்
பசியுற்ற வாய்களிடம்
தின்னக் கொடுத்துவிட்டு
எதிர்க் காற்றில் மோதி மோதி
உற்சாகமிழந்த பாதங்களால்
மிதிவண்டியை உழக்குவேன்

திரும்பித் திரும்பிப் பாராமல்
பக்குவமாய்ப் போய் வருமாறு
உன் பிரார்த்தனைகளையெல்லாம்
வழித்துணையாய்த் தொடரவிட்டு
நெஞ்சின் திரவியத்தை
வழியனுப்பி வைப்பாய்

மௌனத்தில் மூழ்கிய
பரந்த வயல் வெளியின்
கடைசி வளைவையும்
கடந்து மறையப் போகும் கணத்தில்
ஏக்கத்துடன் திரும்புவேன்:
நின்றிருப்பாய் அவ்விடத்தே
நீயொரு புள்ளியென
துயரம் தழுதழுக்கும் வார்த்தைகளை
வீட்டினுள் அலையவிட்டு-நீ
கதவுகளை மூடிக்கொள்ளும் இரவில்
தூரத்து மலைகளில்
ஊமையாய்த் தீயெரியும்

நீ முத்தமிட்ட வாசனையும்
சேலைத் தலைப்பால் போர்த்தி எனை
தூங்கவைக்கும் கதகதப்பும்
நினைவில் மேவிட உறங்கி....
மறுநாளும்
உனக்கான பகல் உணவை
மாலையில் எடுத்து வருவேன்

உனைப் பிரிந்து நான்
நீள் தூரம் சென்ற காலங்களில்
உயிர் வதைபட வாழ்ந்திருப்பாய்
மீளவந்து உனைக்காணும்
ஒவ்வொரு காலத்திலும்
அநாதரவாய் விடப்பட்ட
உனதுயிரின் கரைகளை
அத்தரித்தே அழித்திருக்கும்
மூப்பும் துயரும்

உனது இறுதி உணவுக் கவளமும்
வாந்தியாய்ப் போய் விட்ட அன்று
நீ இழுபட்டுச் சென்ற
தலையெழுத்தின் கதை
தடைபட்டு நின்றதா?
கண் மூடிவிடுமுன்
எனைக் கண்டுவிட வேண்டும் என்பதே
உனதுயிர் கூட்டியுச்சரித்த
இறுதிச் சொற்களாயிற்றா?

உன் கடைசி நிம்மதியும்
நான் தானென்பதை ஏன் மறந்தேன்?
கைசேதமுற்றுத் தவிக்கும்
ஆன்மாவைச்
சாவு வரையும் சுமந்தலைய
ஏன் விதிக்கப் பட்டேன்?

நான் வந்தேன்
பாதையைத் திறந்து
ஆயுதம் தத்த வீரர்கள்
குண்டுகள் அற்ற
பொதிகளிலும் வாகனங்களிலும் மனிதர்களிடத்தேயும்
அதனைத் தேடித் தேடி
அனுப்பி வைத்த நாளொன்றில் நான் வந்தேன்
உனைத் தவித்துச் சாகவிட்டு
எங்கோ பரதேசம் கிடந்தவளாக...
யாருமேயறியா இரகசியக் கொலையாளியாக...

நீ உறங்கிய கட்டில்
காலியாகக் கிடந்தது
நீ நீரருந்தும் கோப்பை
காணாமற் போயிருந்தது
ஆலய வளவில்
புல் மூடிப் படர்ந்த இடமொன்று
எனக்காகக் காத்திருந்தது

அம்மம்மா.....
மலை அத்தனை சுமை மோதக்
கேவியழும் கண்ணீருடன்
கைகளை ஏந்துகிறேன்
விரலிடுக்கினூடு வழிந்தோடுகிறது
நீ காட்டிய பேரன்பு


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com