Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Anangu
Anangu Logo
செப்டம்பர் - டிசம்பர் 2007


மொழி வெளியை வரையும் தந்தையரின் விரல்கள்

ஹைதராபாத்தில் நடந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தஸ்லீமா நஸ்ரினை, இஸ்லாத்தையும் இஸ்லாமியரையும் இழிவுப்படுத்தி எழுதியதாகக் கூறி தங்களை இஸ்லாமியரென அடையாளப்படுத்திக் கொண்ட குண்டர் படைத் தாக்கியது. ஒருவர் மதத்தைத் தாக்கி நூல் எழுதினால், மதத்தைக் காப்பவர்கள் தங்கள் மதத்தின் பெருமைகளை வலியுறுத்தி ஆயிரம் நூல்களை எழுதட்டும். விமர்சிப்பரைத் தாக்குவதால் மதத்தின் மீதான களங்கத்தைத் துடைத்துவிட முடியுமா? ஏற்கனவே இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், பிற்போக்குவாதிகள், மிக மோசமான ஆணாதிக்கவாதிகள் என்ற கருத்து மேற்குலகு மற்றும் இந்துத்துவா சக்திகளால் எழுத்து, காட்சி ஊடகங்களால் பரப்பப்படுகின்றன.

பெரும்பாலான குண்டு வெடிப்புகளை, ஏகாதிபத்தியங்கள் தங்கள் உளவுப்படைகளையும் கைக்கூலிகளையும் ஏவி செய்துவிட்டு, அதை முஸ்லீம் இனத்தின் மேல் பழி சுமத்தி பொதுமக்களை சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிராக திசைத்திருப்பிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு நிராயுதபாணி எழுத்தாளரைத் தாக்கி இஸ்லாமியர் மீதான வெறுப்பை பொதுமக்களிடம் அதிகப்படுத்த இவர்களே காரணமாகின்றனர். இஸ்லாம் குற்றம் என பட்டியலிடும் கொலைகாரன், குடிகாரன், கந்துவட்டிக்காரனை மதத்திலிருந்து நீங்குவதோ அல்லது அவர்களைத் தண்டிப்பதோ இல்லை. ஆனால் மாற்றுக் கருத்துடையவர்களை மட்டும் மதவெறியர்கள் தண்டிப்படிதும், தாக்குவதும் ஏன்?

மனித உரிமையையும், கருத்துச் சுதந்திரத்தையும் இந்த நாட்டில் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் மூவர் முன்னின்று இத்தாக்குல் வன்முறையை நடத்தியது, இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்ற அரசியல் சாசனத்தை மீறிய குற்றம். இக்குற்றத்தை இழைத்தவர்களின் பதவிகளைப் பறிக்காமல் அரசு மௌனமாக இருக்கிறது. தனிமனித உரிமையையும், கருத்துச் சுதந்திரத்தையும் அரசு மதவாதிகளின் கையில் ஒப்படைத்துவிட்டுச் செயலற்று நிற்பதையே இது காட்டுகிறது. இங்கு அரசியல் சாசனப்படி ஆட்சி நடக்கிறதா? அல்லது மதவாதிகளின் ஆட்சி நடக்கிறதா? என்பதை அரசு தனது குடிமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

அணங்கு


ஆசிரியர்
மாலதி மைத்ரி


தொடர்பு முகவரி
1, மாதா கோயில் வீதி,
ரெயின்போ நகர்,
புதுச்சேரி - 605011
கைப்பேசி: 9443090175
Email: [email protected]

ஜூன்-06 இதழ்
செப்டம்பர்-06 இதழ்
டிசம்பர்-06 இதழ்
மார்ச்-07 இதழ்

தமிழில் 90 களுக்கு முன் பெண்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக விரல்விட்டு சொல்லக் கூடிய அளவில் எழுதிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் சில ஆண் எழுத்தாளர்கள் பெண்கள் பெயரை தங்கள் புனை பெயராகக்கொண்டு எழுதியும் நூல் வெளியிட்டும் வந்தனர். ஆனால் 90 களுக்குப்பிறகு நவீன தமிழிலக்கியத்தின் மறுமலர்ச்சி என்று கொள்ளத்தக்க வகையில் நிறைய இளம் தலைமுறை பெண்கள் எழுதத் துவங்கினர்.தமிழ் நவீன இலக்கியச் சூழலில் பெண் எழுத்துக்கு கிடைத்த வரவேற்பும் அங்கீகாரமும் நிலைத்து விடாமல் செய்ய பல சதிகளும் அதன் தொடர்வினையாக அரங்கேறத் தொடங்கின. உலகின் வேறெந்த மொழியிலும் நிகழாத கொடுமையான அப்பட்டமான ஆணாதிக்க திமிருடன் ஆண்கள் பெண்களின் பெயரில் எழுதி பெண் எழுத்தின் அடையாளத்தை வரலாற்றில் குழப்பவும் அழிக்கவும் முனைந்துள்ளனர். தமிழ் பெண்படைப்பாளிகளின் படைப்புகளைத் தொகுக்க, ஆய்வு செய்ய முனையும் போது பல தணிக்கைகளையும் மீறி ஆண் போலிகள் பெண்கள் வரிசையில் நுழைந்து விடுகின்றனர்.

இந்திரா பார்த்தசாரதி (பார்த்தசாரதி), கலாப்ரியா (சோமசுந்தரம்) சாருநிவேதிதா (அறிவழகன்), பிரேதா (பிரேம்), சில்வியா (எம்.டி. முத்துகுமாரசாமி), யமுனா ராஜேந்திரன், யவனிகா ஸ்ரீராம் (இளங்கோ), தேவி பாரதி, யூமா வாசுகி, ராணி திலக் (தாமோதரன்), ஷோபா சக்தி (அந்தோனி), சுகுணா திவாகர் (சிவக்குமார்), வளர்மதி, செல்மா பிரியதர்ஷன் (ஸ்டான்லி), அசதா, அமிர்தம் சூர்யா, அம்சப்ரியா, ப்ரியம், சூர்ய நிலா, மயூரா, தாரா, பிரேமா பிரபா, கவிநி கமலா, மாலிகா (புதுவை இரத்தினதுரை), தேவி கணேசன் மற்றும் ஆதிரா (கற்சுறா), அசுரா, கோசலை மற்றும் அம்மன் (ரஞ்ச குமார்), ஆமிரா பாலி (ஹரஹர சர்மா), யூவியா, அருந்ததி, தமயந்தி என தமிழ்நாட்டிலும் அயலிலும் என 30க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்ணின் முகமூடி அணிந்து திரிகின்றனர். (இந்த பட்டியல் மேலும் நீளலாம். இதில் மூவர் மட்டுமே தற்போது பெண்கள் பெயரை உதறிவிட்டு தங்கள் பெயரில் எழுதுகின்றனர்.)

இவர்களில் சிலர் பெண் என்னும் முகமூடியுடன் மிக ஆபாசமாக எழுதி ஏற்கனவே நெருக்கடிக்களுக்குள்ளாகி தாக்குதல்களை மீறி செயல்படும் பெண் எழுத்துக்கு அதிகமான தண்டனை வழங்க துணைபோகிறார்கள். இவர்கள் பெண் எழுத்தை தமிழிலிருந்து அழிப்பதே குறிக்கோள் என்று காப்புகட்டிக் கொண்டு அலைகிறார்கள். இரண்டாண்டுக்கு முன் கேரளா, சிவகிரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். எழுத்தாளர் பூனத்தில் குஞ்ஞப்துல்லா மற்றும் டி.டி. ராமகிருஷ்ணன் போன்றோர் உடனிருந்தனர். ஒருவர் வந்து நீங்கள் தானே சாருநிவேதிதா, என் நூலை இந்த அரங்கில் வெளியிட முடியுமா என்று கேட்டுக்கொண்டார். எல்லோரும் சிரித்தோம்.

நான் மாலதி மைத்ரி, சாருநிவேதிதா ஒரு ஆண் என்றேன். சாருநிவேதிதாவை பெண் என்று நினைத்துதான் வாசித்து வருவதாக கூறினார். சமீபத்தில் அயலிலிருந்து பேசிய ஒரு பெண் எழுத்தாளர், பெண்களின் படைப்புகளைத் தொகுப்பதாகவும் சுகுணா திவாகரின் படைப்புகளை வாங்கி அனுப்ப முடியுமா என்று கேட்டிருந்தார்.

புதுவை மொழியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட யாணர் தொகுப்பில் பெண்கள் பெயரில் பல போலிகள் இருப்பதை அறிந்தவுடன் அப்போதே என் கண்டனத்தைத் தெரிவித்திருந்தேன். பெண்கள் பெயரை ஆண்கள் பயன்படுத்துவதை இத்துடன் நிறுத்த வேண்டும் எனவும் கேட்டிருந்தேன். பெண்ணின் அடையாளத்தையும் உழைப்பையும் காலங்காலமாக உறிஞ்சி சுரண்டி வாழும் ஆண் வர்க்கம் பார்த்தீனியம், வேலிகாத்தான் போன்று பெண் அடையாளத்தையும் சூழலையும் அழிக்க தழைத்து விட்டனர். இன்று பெண் படைப்புகளை ஆய்வு செய்யும் பல மாணவர்கள் இந்த ஆண்களையும் பெண்கள் என்றே கருதி தங்கள் ஆய்வை முடித்துள்ளனர்.

கோவையில் பா. தமிழரசி என்ற ஆய்வாளர் 20ம் நூற்றாண்டு பெண்கவிஞர்கள் என்ற தனது ஆய்வு நூலில் மாலிகா என்ற பெண் புனைப்பெயர் கொண்ட புதுவை இரத்தினதுரையின் கவிதைகளை பெண் கவிஞர் என்றே குறிப்பிட்டு எழுதிச்செல்கிறார்.அதே போல் அருந்ததி என்ற ஆணுடைய கவிதைகளையும் பெண்ணின் கவிதைகளாக பதிவு செய்துள்ளார். “பறத்தல் அதன் சுதந்திரத்திலும்”, “பெயரில் மணக்கும் பொழுதிலும்” எவ்வளவு சிரமப்பட்டும் போலிகளின் ஊடுறுவலை தடுக்க முடியாத வரலாற்றுப் பிழையுடனே தொகுப்பாகியுள்ளன. இலக்கியவாதிகளுக்கே ஆண் யார்? பெண் யார்? என்று கண்டுபிடிக்க முடியவில்லை. பாவம் வாசகர்களும் ஆய்வாளர்களும் என்ன செய்வர்.

பாலின பாகுபாட்டை கடைபிடித்து அடியொற்றி வாழும் தமிழ்ச் சமூகத்தில், இந்த ஆணாதிக்க சமூகம் வழங்கும் அனைத்து சலுகைகளையும் உமைகளையும் அனுபவித்துக் கொண்டு, எழுத்தில் மட்டும் தங்கள் பாலின அடையாளத்தை எப்படி அழித்துக்கொள்ள முடியும்? தங்களின் காதலிகளின் பெயரையோ அல்லது கனவுக்கன்னிகளின் பெயரையோ புனைபெயராக சூட்டிக்கொண்டு திரியும் இவர்களின் மனைவிகள் தங்களது காதலர்களின் அல்லது கனவுக்கண்ணனின் பெயரை வைத்துக் கொண்டாலோ அல்லது தங்களின் பெயருடன் இணைத்துக் கொண்டாலோ அவர்களுடன் இவர்கள் தொடர்ந்து வாழத் தயாரா? தங்களை பெண்ணாக உணர்கிறோம் என்று ஆயிரம் காரணங்களை இந்த ஆண்கள் பேசினாலும் ‘பெண்ணாக மாறாத’ அல்லது ‘அரவாணி’ அல்லாத ஆண்களை நாங்கள் பெண்களின் பெயரில் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. ரேவதி, ஆஷா பாரதி, வித்யா, பிரியா பாபு போன்ற அரவாணிகள் தங்களை முழுமையாக பெண்களாக மாற்றிக்கொண்டு எழுதுகிறார்கள்.

இதற்காக இவர்கள் இழந்ததும் அவமானப்பட்டதும் வலியுற்றதும் அதிகம். முன்பு அரவாணிகள் தங்களை பெண்ணாக மாற்றிக்கொள்ள, நிர்வாணம் செய்ய ரகசியமாக தாயம்மாவையும், அரைகுறை வைத்தியரை அணுகும் அவலம் இருந்தது. இன்று தமிழக நலவாழ்வுத்துறை அமைச்சர் பூங்கோதை, அரசு மருத்துவமனைகளில் பெண்ணாக மாற ‘நிர்வாணம்’ செய்துக்கொள்வதை சட்டப்ச்பூர்வமாக்கி பெண்ணாக உணரும் உங்கள் நெஞ்சில் பாலை வார்த்துள்ளார்.நாங்கள் பெண்கள் பெயரில்தான் எழுதுவோம் என்று அடம்பிடிக்கும் ஆண்கள் இதற்காக உள்ள மருத்துவமனைகளை அணுகி நிர்வாணம் செய்து கொண்டு தங்கள் எழுத்துப்பணியைத் தொடர எந்த ஆட்சேபணையும் இல்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com