Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Anangu
Anangu Logo
செப்டம்பர் - டிசம்பர் 2007


அனார் கவிதைகள்

நான் பெண்

1.

ஒரு காட்டாறு
ஒரு பேரருவி
ஓர் ஆழக் கடல்
ஓர் அடை மழை
நீர் நான்
கரும் பாறை மலை
பசும் வயல் வெளி
ஒரு விதை
ஒரு காடு
நிலம் நான்
உடல் காலம்
உள்ளம் காற்று
கண்கள் நெருப்பு
நானே ஆகாயம்
நானே அண்டம்
எனக்கென்ன எல்லைகள்
நான் இயற்கை
நான் பெண்

2.
அது போர்க்களம்
வசதியான பரிசோதனைக் கூடம்
வற்றாத களஞ்சியம்
நிரந்தர சிறைச் சாலை
அது பலிபீடம்
அது பெண் உடல்
உள்ளக் குமுறல்
உயிர்த் துடிப்பு
இரு பாலாருக்கும் ஒரே விதமானது
எனினும்
பெண்ணுடையது என்பதனாலேயே
எந்த மரியாதையும் இருப்பதில்லை அதற்கு
என் முன்தான் நிகழ்கின்றது
என் மீதான கொலை

நீல முத்தம்

முத்தம் விசித்திரமான
நீலப் பறவையாக அலைகிறது
அபூர்வமும் பிரத்தியேகமானதுமான பொழுதின்
நீல மின்னல்கள்
என் ரகசிய வானத்தில் நீ கண்டதில்லையா
அளவுகளைத் தாண்டி நீண்டு செல்லும்
முத்தம் தேவதை
நீல இருளின் நடு ஆகாயத்தில் எனது முத்தம்
முழு நிலா
முழுவதுமாக நனையும்போது
நீ உணர்வதில்லையா
எனது முத்தம் சீரான மழையென
பயிற்சிகளைப் பூரணப்படுத்தியிருக்கும்
சிப்பாய்களைப்போல
மிடுக்கும் ஒழுங்குமாக
அவை ஆயத்தங்களுடனிருக்கின்றன
முத்தம் கனவின் உண்மை
உண்மையின் கனவு
காயாத கசிவுடன் கண்ணாடியில் படிந்திருக்கிறது
மெல்லிய நீலத்துடன்
எரியத் தொடங்குகிறது நெருப்பு
சதைகளாலான பெருகும் விருட்சத்தில்
பெயரிட முடியாத கனி பழுத்திருக்கிறது
அதன் மென்மைகளோடும்
ஈரப்பதமோடும்
மென் நீலமெனத் தீராமல் படர்கிறது
கம்பீரமாக
பளப்பளப்பாக
கூர்மையான வாள்
என் உறையிலிருந்து
அச்சங்கள் எதுவுமற்று

ஒளியில்லாத இடங்கள்


நோக்கம்
ஒளியில்லாத இடங்களில் போய்ப்
பதுங்குகின்றது
நிழலின் வியாபகத்தில்
அரூபமடைந்திருக்கும் உடலின் நாடகம்
ஒளியற்ற இடத்தில்
சங்கடமின்றி முளைக்கிறது
அற்புதத்தின் தொடக்க நிலை
சாகச நிழல் மரத்தில்
விலக்கப்பட்ட கனி காய்த்திருக்கக் கூடும்
பிழையான திட்டங்களை
பின் தொடர்கின்றவர்கள்
ஒளியில்லாத இடங்களில் அகப்பட்டு விடுகிறார்கள்
ஒளி இயல்பினைக் கொல்லும்
ஒளியுடனிருப்பது பின் வாங்கச் செய்யும்
நீ ஒளியில்லாத இடத்தினிலிருந்து
இலக்கினை நிர்மூலம் செய்
கரையாத நிழலின் விளிம்பில் பொங்கும்
கர்வத்தின் கனவுப் பெருக்கு
ஒளியற்ற இடத்தின் ஒளி நானாகினேன்
முறைகள் தீர்மானங்கள்
ஆலோசனைகள் எதுவுமின்றி
எழுப்புகிறேன்
ஒளியில்லாத இடங்களில்
வாழ்க்கையை வேறொன்றாக

காற்றின் பிரகாசம்

காற்றைத் தின்னவிடுகிறேன்
என்னை
என் கண்களை
குளிர்ந்த அதன் கன்னங்களை வருடினேன்
முதல் முறையாக
காற்றில் வெளிப்படுமுன் பிம்பத்தை
பகலிரவாக பருகினேன் போதையுடன்
காற்றினுள்ளிருந்து எடுத்த முத்தங்கள்
வெள்ளமாய் பெருக்கெடுக்கின்றன
காற்றிலிருந்து நீளும் நீர் விரல்கள்
முன்னறியாத ராகங்களை
இசைக்கிறதென் சதைகளில்
என் வீடு காற்றாக மாறிவிட்டது
காற்றின் முடிவற்ற அலட்சியம்
மகிழ்ச்சியில் உலர்ந்து கிடக்கின்றது மணல்வெளி
உடல் பச்சை வானம்
முகம் நீல நிலவு
நான் பார்த்தேன் காற்றின் பிரகாசத்தை
ஒரு மின்வெட்டுப் பொழுதில்

ஓவியம்

ஒவ்வொரு வர்ணமாய்ப் பிரித்து
தரையில் கரைத்து
சிந்தும் ஓவியம் இது
இதன் இதயத்திலரும்பிய
கவிதைகளும் பாவப்பட்டவைதான்
வெறும் ஓவியத்தின் வாழ்வில்
என்ன அர்த்தமிருக்க முடியும்
அசையமுடியாக் கைகளும்
நகரமுடியாக் கால்களும்
பேசமுடியா உதடுகளும்
சந்தேகமே இல்லை
வாயில்லா ஜீவன்
ஆடாதசையாது
சுவல் மாட்டப்பட்டிருந்தது
பல்லிகள் எச்சில் படுத்துவதையும் எதிர்க்காமல்
வருகிறவர்களுக்கென்ன
வரைந்தவனை
வாழ்த்திவிட்டுப் போகிறார்கள்
சட்டங்களால்
சிலுவையறைப்பட்டிருக்கும்
ஓவியத்தைப் பார்த்து
உண்மை தெயாதவர்கள்
உயிரோவியம் என்றார்கள்

மின்னல்களைப் பசளிக்கும் மழை


மழையாய் பெய்து குளிர்ந்தன
எனக்குள் உன்பேச்சு
மழை தொடும் இடங்களிலெல்லாம்
ஈரச்சிதறல் தெப்பம்
புதிர்மையை மொழிபெயர்ப்பது போன்று பொழிகின்றாய்
ஓயாத பரவசமாய்
கோடை மழை
பின் அடைமழை
அளவீடுகளின்றி திறந்துகிடக்கும் இடங்கள் எங்கிலும்
பித்துப்பிடித்து பாட்டம் பாட்டமாய்
மழை திட்டங்களுடன் வருகின்றது
ஒவ்வொரு சொல்லாகப் பெய்கின்றது
தாளமுடியாத ஓர் கணத்தில் எனக்கு
மின்னல்களைப் பரிசளிக்கின்றது
அது அதன் மீதே காதல் கொண்டிருக்கிறது
எப்போதம் மழையின் வாடை உறைந்திருக்கும்
ராஜவனமென
பசுமையின் உச்சமாகி நான் நிற்கிறேன்
வேர்களின் கீழ் வெள்ளம்
இலைகளின் மேல் ஈரம்
கனவுபோல் பெய்கின்ற உன் மழை

பருவ காலங்களை சூடித் தியும் கடற்கன்னி


கடற்கன்னி பாடுவதை
யார் கேட்டிருக்கிறார்கள்
அபரிமிதமான ஆற்றலோடு தொடங்கும் பாடல்
இருகரைகளில் எதிரொலித்து
துறைமுகங்களைத் தாண்டி விழுவதை
அதிகாலை உறக்கம் கலைந்த படகோட்டி
மதுநெடியுடன் பிதற்றுகிறான்
கடற்கன்னியின் சொற்கள்
குறையாமல் விளைந்த வண்ணமிருக்கின்றன
கரைமணலில் சிறுமிகளின்
மடிகொள்ளாத வெண்சிப்பிகளாக
நடுக்கடலில் நங்கூரமிட்டிருக்கும் கப்பல்களில்
மாலுமிகளின் தனியறைகளில்
கடற்கன்னியின் வாசனை வியாபித்து
திரைச்சீலைகள் படபடக்கின்றன
அவளின் நீண்டு நெளியும் வால் வசீகப்பினை
படர்பாசிகளின் கீழிருந்து வெளிவரும்
மீன்குஞ்சுப் பட்டாளங்கள்
பிரயாசையுடன் பின்தொடர்கின்றன
அடர்த்தியான பச்சைநிற பளபளக்கும் செதில்கள்
நீர் அல்லிகளின் வேர்களைப் பின்னி
பௌர்ணமியில் இன்னுமதிகமாய் ஜொலிக்கின்றன
கற்படுக்கைகளிடையே சுழியோடிகள்
அவளது கண்களின் கவிதைகளைக் கண்டெடுத்து
ஆராய்ச்சிக் கூடங்களுக்கு எடுத்துச் செல்கின்றார்கள்
நள்ளிரவில் கடற்கன்னி
மேகங்களை வேட்டையாடுகிறாள்
அவற்றை வழுக்கும் பவளப் பாறைகளிடையே பதுக்கி வைத்து
ஜெல்லி மீன்களை ஏமாற்றுகிறாள்
சீறியெழுந்து நட்சத்திரங்களை ஆய்ந்து கொண்டு
நீருக்குள் நழுவும் அற்புதத்தை
தாம்மாத்திரமே பார்த்தபடியிருக்கின்ற கருங்கற்பாறைகள்
தம்மை அறியாமலேயே உருகிக் கொண்டிருக்கின்றன
உப்பின் காரநெடி காந்தும் அவளது நடனம்
அலைகளின் பயணங்களாய் ஓயாது நிகழ்கின்றது
மின்னல்கள் கூக்குரலிட்டுக் கூவிவெடிப்பதெல்லாம்
கடற்கன்னியின் பெயரைத்தான் என
மலைவாசிகள் நம்புகின்றார்கள்
புராதனகால கடல் அரக்கனின்
தந்திரோபாயங்களை தோற்கடித்தபடியே
பருவ காலங்களை அருளும் கடற்கன்னி
ஒவ்வொரு கடலினிலும் நீந்திக் கொண்டே இருக்கிறாள்
பெருகும் தன் ஆற்றலின் பிரவாகத்தைப் பாடிப்பாடி

யாரும் கேட்பதேயில்லை


நிறுத்தாத சாட்டையின்ங; விசையும்
ஓவியங்களின் பாடலும்
கேட்டபடியே தான் இருக்கின்றன
கடும் பாறைகளில் மோதி
ஓய்ந்து விடுகின்றது
ஆக்கிரமிப்பிலிருந்து
தப்பிச் செல்ல விரையும் அலைகள்
வாழ்க்கையின் நிழல்வரை
துயிலற்ற இருப்பின் பிண நெடி
இருண்ட சேற்றுப் பாதையைச் சமீபிக்கின்ற
அதிசயம் மிகு ஒளிச்சாரல்
இரட்சிக்குமென்ற ஆவலில்தான்
நால் திசைகளும்
திரும்பி மண்டியிட்டிருக்கின்றன
இருந்த போதிலும்
யாருக்கும் கேட்பதேயில்லை
துளைகள் அடைபட்ட
புல்லாங் குழலினுள்
செத்துக் கொண்டிருக்கிற கீதம்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com