Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Anangu
Anangu Logo
ஜூன் - ஆகஸ்ட் 2006


குருவிக்காரச் சீமாட்டி

ரமேஷ் - பிரேம்

குறக்குடி வந்திருப்பதாக ஊருக்குள் பேச்சுப் பரவி அடுக்களையில் அம்மாவோடு இருந்த எனது காதுகளுக்கு எட்டியது. மழைமாதம் கடந்து விட்டிருந்தது. ஊர்க் குளமும் கோயில் குளமும் வடக்குத் திசை ஏரியும் நிறைந்து இருந்தன. எங்கும் ஈரமும் பச்சையும். கோயிலுக்கு மேற்கே அமைந்த புளியந் தோப்பின் நெடும் பரப்பில் குறக்குடியின் இரைச்சல்கள் எழத் தொடங்கிவிட்டன. ஆண்களும் பெண்களும் சிறுவர்களுமாக தங்களுடைய கூடாரங்களை அமைக்கத் தொடங்கிவிட்டிருந்தனர். மாலை சூரியன் மறையவும் ஈரத்தோடு காற்று எங்கும் சூழ்ந்தது. அம்மாவிடம் சொல்லிவிட்டு எனது தோழிகளுடன் புளியந்தோப்புக்குச் சென்று விட்டேன். ஆண்கள் கூடாரங்களை இழுத்துக் கட்டிக் கொண்டிருந்தார்கள். பெண்கள் வெளியே அடுப்பு மூட்டி இரவு உணவுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். இக்குறக்குடிகள் ஆண்டுக்கு ஒருமுறை எங்கள் ஊருக்கு வந்து விடுவார்கள். எனக்குக் கருத்துத் தெரியவந்தக் காலத்திலிருந்து அவர்களை நான் அதியசத்தோடு பார்த்து வருகிறேன். யாருக்கும் இன்னதென்று விளங்காத அவர்களுடைய நீட்டி முழங்கும் மொழி எங்களுக்குச் சிரிப்பை ஏற்படுத்தும். அதே ஒலி அமைப்பில் நாங்கள் எங்களுக்குள் தமிழையும் பேசிச் சிரிப்போம்.

காலங்காலமாக ஒரு குறிப்பிட்ட பருவம் வந்து சில நாட்களோ வாரங்களோ எங்கள் ஊரில் தங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த குறக்குடியினர் எங்களுக்கு அந்த மாதங்களிலெல்லாம் விநோத வேடிக்கைக்காரர்களாக இருப்பார்கள். விதம் விதமான மணிகளும் உடலை மறைக்கும் குறைவான ஆடைகளும் வெட்ட வெளியில் நிகழும் அவர்களுடைய வாழ்க்கையும் எங்களுக்கு அதிசயமாகத் தோன்றும். என்னை ஒத்த பெண் பிள்ளைகளின் கழுத்தில் வண்ண வண்ண மணிகளும் ஆண் பிள்ளைகளின் கைகளில் வேட்டை ஆயுதங்களும் காணக் கிடைக்கும்.

எங்கள் ஊரைச் சுற்றி நீளும் குறும் புதர்க்காடுகளில் குறவர்களோடு எங்கள் ஊர் பையன்களும் சுற்றித் திரிவார்கள். கிட்டிகள், கூண்டுகள், வலைகள், கண்ணிகள், முள்கம்பிகள், ஈட்டிக்கோல் போன்றவற்றை வைத்திருக்கும் அவர்களிடம் துப்பாக்கிகளும் இருக்கும். எங்கள் வயதொத்த பெண்களிடம் நாங்கள் பேசுவோம். அவர்களுடன் அமர்ந்து மணி கோர்க்கக் கற்றுக் கொள்வோம். அம்மா சொல்லுவாள், “ஆணும் பொண்ணுஞ் சேர்ந்து ஊரையே கொறவன்குடியா ஆக்கிடுதுங்க. இந்தக் கொறத்தி வூடு அடங்குறாளா பாரு” என புலம்பிக் கொண்டேயிருப்பாள். எங்களுக்குச் சிரிப்புத் தாளாது.

அந்த மாசங்களில் எங்கள் ஊரில் மட்டுமின்றி சுத்துப்பட்டு ஊர்களிலும் விதம் விதமான கறிவகைகள் மணக்கும். மிளகாய் செலவையும் கறி மசாலாவையும் அம்மியில் வைத்து அறைத்து மாளாத அம்மாக்கள் அப்பாக்களைத் திட்டித் தீர்ப்பார்கள். அம்மியில் நாக்கை வைத்து அறைக்க வேண்டும் என்பார்கள். வகைவகையான பறவைகளையும் விலங்குகளையும் சரஞ்சரமாகத் தூக்கிக்கொண்டு குறவர்கள் ஊர்த் தெருக்களில் வருவார்கள். குயில், புறா, காடை, கௌதாரி, காட்டுக்கோழி, நீர்க்கோழி, செம்போத்து, கொக்கு, நாரை, நுளைமடையன், வாத்து, முயல், உடும்பு, வெளவால், வெள்ளெலி, பச்சைத்தவளை என விதம்விதமாக அடுப்பில் வேகும். அவர்கள் கொண்டுவரும் உறித்த காட்டுப்பூனையை மட்டும் அதிகமாக யாரும் வாங்கமாட்டார்கள்.

வீட்டு வேலைகளை அம்மாவுடன் சேர்ந்து முடித்ததும், ஈரக்கைகளைப் பாவாடையில் துடைத்தபடி கூடாரங்களை நோக்கிப் பக்கத்து வீட்டுத் தோழிகளையும் இழுத்துக் கொண்டு ஓடுவேன். அம்மாவின் ஏசல் முதுக்குப் பின்னால் விரட்டிக் கொண்டுவரும். குறவர்கள் முற்பகல்களில் வேட்டைக்குச் சென்றிருப்பர். பால் குடிக்கும் குழந்தைகளை துணியில் கட்டி மார்பிலும் முதுகிலும் சுமந்தபடி பெண்கள் வேலைகளைச் செய்து கொண்டிருப்பார்கள். குழந்தைகள் தமது பிஞ்சுக்கைகளால் பற்றியபடி இருக்கும் எச்சில் ஊறிய மார்புகள் வெளித் தெரிவது பற்றி கூச்ச மற்றவர்களாக இருப்பார்கள். அதைப் பார்க்க எங்களுக்கு மிகவும் வெட்கமாக இருந்தாலும் அம்மார்புகளை ரகசியமாகப் பார்த்து ரசித்தபடியிருப்போம். கருத்த, பழுத்த, மாநிறமாக அப்பெண்களின் செழுமையான உடற்பகுதிகள் வெகுளியோடு வெளித்தெரிய அவற்றைக் கண்டு எங்களுக்குள் குசுகுசுப்போம்.

Lady வயதான குறத்திகள் தோப்பில் இருந்தபடி விதம் விதமான மணிகளைப் பின்னிக் கொண்டிருப்பார்கள். சிறிய குறடும் மெல்லிய கம்பிகளும் வைத்து அவர்கள் வகைவகையான மாலைகளை உருவாக்குவது எங்களுக்குக் கண்கொள்ளா காட்சி. சின்னக் குறத்திகள் மணிகளுடன் வேறுவகையான கொக்கிகள், ஊசிகள், வளையல்களை எடுத்துக்கொண்டு சுத்துப்பட்டு ஊர்களைச் சுற்றி வருவார்கள். அவர்கள் ஊர்த் தெருக்களுக்குள் நுழைந்ததுமே நாய்கள் குரைக்கத் தொடங்கிவிடும். அவர்கள் ஊரைத்தாண்டி சேரிக்குள் நுழையும்வரை அவர்களின் பின்னாலேயே குரைத்தபடி சென்று எல்லையில் விட்டு விட்டு வரும்.

திடீரென்று ஒருநாள் காலை அவர்களின் கூச்சல், பேச்சு என எல்லாம் காணாமல் போயிருக்கும். புளியந்தோப்பு வெறுமையாக இருக்கும். குப்பைக் கூலங்களோ, அடுப்பெரித்த கரித்துண்டுகளோகூட கிடக்காது. இரவோடு இரவாக கூடாரங்களை அவிழ்த்துக் கொண்டு இடம் பெயர்ந்திருப்பார்கள். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே போனார்கள், யாருக்கும் தெரியாது. ஒருவித வெறுமை எங்களைச் சூழ்ந்துகொள்ளும்; ஆடிமாத கோயில் திருவிழா முடிந்தபிறகு சூழுமே அந்த வித வெறுமை. மீண்டும் அவர்கள் எப்பொழுது வருவார்களோ என்று ரகசியமாகக் காத்திருப்போம்.

எங்களுக்குள் சில ரகசிய கதைகள் பதுங்கியிருந்தன. எங்கள் தனிமை நேரப் பேச்சுகளில் அக்கதைகள் பல்லாங் குழிக்காய்களைப் போல மனக்குழிகள்தோறும் பகிர்ந்து போட்டு விடையாடப்படும். எங்கள் தோழிகளில் ஒருத்தி, குறவர்களும் குறத்திகளும் ரொம்ப அழகு என்று சொன்னதிலிருந்து குறவர் கூட்டம் பற்றியும் பலவித ரகசியக்கதைகள் எங்களுக்குள் உருவாகத் தொடங்கியிருந்தன.

ஊரில் சில அம்மாக்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு கண்நிறைய மையும் புருவங்களுக்கு மேல் வண்ணப் புள்ளிகளையும் இட்டு மணிகளை அணிவித்து “அடி என் குறத்தி” என கொஞ்சுவார்கள். குறக்குழந்தைகள் மீது அம்மாக்களுக்கு தனிபாசம் உண்டு. பெரிய கண்கள், பருத்த மார்புகள், வளைவு நெளிவான உடம்பு கொண்ட கவர்ச்சியானப் பெண்களை எங்கள் ஊரில் பெருங்குறத்தி என்று செல்லமாகவும் கள்ளமாகவும் குறிப்பிடுவார்கள். எங்கள் அத்தை ஒருமுறை தன் வீட்டுக்காரரை ஆசையோடு கன்னத்தில் கடித்து “அட என் குறவா” என்று கொஞ்சியது எனக்கு வேறுவிதமாக அர்த்தப்பட்டது.

என் தோழியொருத்தி குளத்தில் குளிக்கும் போது தான் ஒரு குறவனைதான் கல்யாணம் கட்டிக்கொள்ளப் போவதாகவும் அவனோடு ஊர் ஊராக அலையப் போவதாகவும் நீரில் சிவந்த கண்கள் படபடக்க ஒருமுறை சொன்னாள். சொன்னவள் வீடு திரும்பும் வழியிலேயே பெரிய மனுஷியானாள். நான் குட்டிப் பெண்ணாக இருக்கும்போது என்னை அம்மா குறத்தியிடம் பழைய சோற்றுக்கு வாங்கியதாக ஒருமுறை சொன்னாள். முட்டிக்கொண்டு வந்த அழுகையோடு நான் தூங்கிவிட்டேன். கனவில் என் அம்மா ஒரு குறத்தி போலத்தான் அன்று வந்தாள்.

குறவர்கள் வரும்போது கொண்டுவரும் கைரேடியோ அடிக்கடி என் கனவில் வரும். வேட்டை நேரத்தைத் தவிர ஓய்ந்திருக்கும் நேரமெல்லாம் கைரேடியோ ஏதேனும் ஒரு திசையை நோக்கி காற்றை வாங்கி இரைத்துக் கொண்டிருக்கும். ரேடியோ ஒலி இல்லாமல் குறவர்களால் தனித்திருக்க முடியாதோ என அடிக்கடி தோன்றும். அவர்கள் ஊரைவிட்டுப் போனபிறகும் ரேடியோ ஒலிமட்டும் கேட்டுக் கொண்டே இருக்கும். அதே போல அவர்கள் பக்கத்து ஊரில் உள்ள சினிமாக் கொட்டகைக்குத் தவறாமல் சென்று படம் பார்த்து விடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஊரைக் காலிச் செய்துவிட்டு போன பிறகு, வேறு ஏதேனுமோர் ஊரிலிருந்து படம் பார்க்க அந்தக் கொட்டகையைத் தேடி வருவார்களோ எனவும் தோழிகளோடு பேசிக்கொள்வதுண்டு.

அம்மா அத்தை, பக்கத்துவீட்டு சித்தியோடு மாலை ஆட்டத்துக்குப் போகும்போது கொட்டகை வாசலில் ஏதேனும் ஒரு குறவர் கூட்டம் எப்போதும் இருக்கும். “உன் சொந்தக்காரங்களடி. உன்னைத் தேடிதான் வந்திருக்காங்க” என அத்தை என்னைக் கிண்டல் செய்வாள். படம் ஓடும்போது காதல் காட்சிகளின் கிறக்கத்தில் கொட்டகையே புழுங்கும்போது கணவரோடு வாழாமல் வந்துவிட்ட சித்தி என் தொடையை கிள்ளுவாள். நான் சங்கடத்தோடு நெளிந்தபடி அவளது கையைக் கிள்ளி விடுவேன்.

பள்ளி வகுப்பறையிலும் பெண்களின் தொடைகளே எங்களுக்கு ரகசிய செய்தி அனுப்பும் இயந்திரம். ஒன்றிலிருந்து ஒன்று என தொடர்ந்து எல்லோருக்கும் பரவிவிடும் செய்தி. ரகசியமான செய்தி. அப்படித்தான் என் செய்தியும் அன்று வகுப்பு முழுக்கப் பரவியது. அந்த நாளே எனது பள்ளி வாழ்க்கையின் கடைசி நாளாகவும் ஆனது. படிக்க வேண்டும் என ஆசைப்பட்டது எல்லாம் ஒரே நாளில் முடிந்து போனது. அம்மா முடியாது என ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டாள். எட்டாம் வகுப்பின் பாதியில் நான் வீட்டோடு அடைபட்டேன்.

ஏதோ காரணங்களால் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து வராமல் இருந்த குறவர்குடி மீண்டும் வந்து சேர்ந்தபோது; எங்கள் கூட்டாளிகள் அத்தனைபேரும் பெரியப் பெண்களாகி படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு வீட்டோடு இருந்து கொண்டிருந்தோம். கோயில், ஊர்த்திரு விழா, பக்கத்து ஊர் சினிமா கொட்டகை என இரண்டொரு இடங்களைத் தவிர இந்த உலகத்தில் வேறு போக்கிடமற்றுப் போனாம். மாலையில் ஊர்க்குளத்தில் நீரெடுக்க ஒன்று கூடுவோம். சிலர் வீடுகளில் கிணறு இருந்தாலும், கதை பேசுவதற்காகவே குடத்தோடு வெளிவந்து விடுவோம். ஒரு நாளின் கதை முழுக்க அந்த ஒரு மணி நேரத்தில் பேசி முடிக்கப்படும். எங்களுடைய ரகசியப் பேச்சுக்களும் காதுமடல்களைச் சூடாக்கும் அதிரகசியப் பேச்சுக்களும் இப்போது ஏதேதோவாக மாறிப்போயிருந்தன.

முன்பு புரியாத வயதில் கிளுகிளுப்பாக இருந்த பல ரகசியங்கள் இப்போது சாதாரண உண்மைகளாக வண்ணமிழந்து போயிருந்தன. எல்லோருக்குமே அது ஒரு இடைக்கால வாழ்வுபோல தோற்றம் தந்தது. அடுத்து என்ன, எந்த ஊரு, எங்கு போகப்போகிறோம் என்பது மட்டுமே ஒவ்வொரு பேச்சிலும் தொக்கி நின்று சோர்வைத் தந்து கொண்டிருந்தது. வீட்டிற்குள் எதன் மீதும் முழு உரிமை இல்லாதது போன்ற தோற்றம் வலிய ஏற்படுத்தப்பட்டிருந்தது. என் அம்மாவும் அப்பாவும் சேர்ந்திருக்கும்போது பேச வேறு ஏதுமற்றவர்களாக என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். எந்த நேரத்திலும் நான் இந்த வீட்டை விட்டு, ஊரைவிட்டு வேறு வீட்டுக்கும் ஊருக்கும் இடம் மாற்றப்படலாம் என்பது மட்டுமே எனக்கு வந்துசேரும் செய்தியாக இருந்தது.

கண்ணுக்குப் புலப்படாத ஒரு ஆண் இரவும் பகலும் என்னை மருட்டிக் கொண்டிருந்தான். அவன் யார்? எங்கிருந்து வருகிறான். கருப்பா? சிவப்பா? எதுவுமே தெரியவில்லை. ஆனால் மிகப்பெரும் உருவமாக எனது அறையையும் வீட்டையும் அம்மா அப்பா அண்ணன் இவர்களின் மனத்தையும் நிரப்பிக்கொண்டு நின்றான். அழுகை அழுகையாக வந்தது. பயமாக இருந்தது. அந்த ஆணைக் கொல்ல வேண்டும் போல இருந்தது. அவனது குரல்வளையைக் கவ்வி குருதியை உறிஞ்ச வேண்டும் போல இருந்தது. அந்தத் தாகவிடாயின் போதுதான் ஒரு காட்டுமோகினி போல வந்து நுழைந்தாள் ஊசும்பி.

நாங்கள் முன்பு புளியந்தோப்பு பக்கம் போகும்போது அவளிடம் பேசிப்பழகியது உண்டு. இடுப்பில் ஒரு அரைப்பாவாடை கட்டி மேலே ஏதும் போடாமல் கொத்துமணி மட்டுமே அணிந்து கொண்டு திரிவாள். இப்போது அடையாளம் தெரியாமல் பூரித்துப் போயிருந்தாள். எங்கள் கிணற்றுப் பக்கம் வந்து “அக்கா தண்ணி வேணும்” என்று நின்றவளைப் பார்த்த போது நம்ப முடியவில்லை. “நீ ஊசும்பி இல்ல” என்றவுடன் உருகிப் போனவள் “அக்கா என்ன மறக்கலயோ” என்றபடி நெருங்கி வந்தாள்.

ஊசும்பிக்கு என் வயதுதான் இருக்கும்; ஒரு வயது கூடவும் குறையவும் இருக்கலாம். முட்டி வரை தொங்கிய பலவண்ணத் துணிவைத்துத் தைத்த பாவாடை, ஓரத்தில் மணிவைத்துப் பின்னிய ஜாக்கட் மட்டும் அணிந்து விடைத்து வளைந்த உடம்புடன் இருந்தாள். நடு வயிற்றிலிருந்து கோடாக இறங்கிய ரோமம் கீழே சென்று மறையும் இடம் வரை கண்ணில் பட, பின் இடுப்பின் சுழி அப்பட்டமாக வெளித் தெரிய பயப்படும் படியான தோற்றத்துடன் நின்றிருந்தாள். முதல்முறை அவளை அப்படி பார்த்தபோது நானே அப்படி உடல் காட்டி நிற்பதுபோல் கூச்சமாக இருந்தது. அவள் நடக்கும்போது கரகாட்டத்தின் நடுவில் சற்றே ஓய்வெடுக்கும் நடனக்காரியின் அசைவுபோல இருந்தது. “ஏண்டி இவ்வளவு நாளா வரல” என்று தொடங்கிய பேச்சு எங்களை மீண்டும் கூட்டாளிகளாக்கியது.

அவள் பேசும் தமிழ் முழுக்க வேறு மாதிரியாக இருந்தாலும் எனக்குக் கேட்க இனிமையாகவே இருந்தது. அவள் எங்கெங்கெல்லாம் சுற்றி வந்திருந்தாள். அவளை எனக்கு அப்படி ஏன் பிடித்துப்போனது. தினம் எங்கள் கிணற்றுப் பக்கம் வந்துவிடும் அவளுடன் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தேன்.

“அடி ஊசும்பி” என்று ஒருமுறை பேச்சு வாக்கில் கட்டிக்கொண்டபோது திடுக்கிட்டு விலகிய அவள் “வேணாம் அக்கா ஏதாவது நோவு வந்து சேரும்” என்றாள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. “எங்கள வேற ஆட்கள் தொட்டா ஏதாவது நோய் வந்துடும்னு சொல்லுவாங்க” “எங்க பொண்ணுகளோட பழக்கம் வைச்சிக்கிட்ட ஆம்பளைங்களுக்கு நோய் வந்திருக்கு”. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. “அதெல்லாம் சும்மாடி ஊசும்பி” என்றபடி அவள் தலையைத் தடவினேன்; பிசுபிசுப்பாக இருந்தது.

மறுநாள் அவளை வம்பு பண்ணி என்னுடன் தோட்டத்திற்குக் கூட்டிப்போய் மோட்டார் பம்பில் குளிக்க வைத்தேன். எண்ணெய், சீயக்காய், சோப்பு, பல்பொடி என்று அவளை மாற்றும் மருந்துகளை உபயோகித்து என் பழைய பாவாடையையும் சட்டையையும் போட்டு தலை சீவி பின்னல் போட்டபோது எனக்கே மூச்சுமுட்டுவது போல இருந்தது. “அடி மோகினிப் பிசாசு” என்றபடி அவளை என்னிடம் இழுத்தபோது “விடு அக்கா” என்று சிணுங்கியபடி என்னுடன் ஒட்டிக்கொண்டாள்.

மறுநாள் அவள் தோட்டத்துப்பக்கம் வரவில்லை. எனக்கோ கையும் காலும் ஒட மறுத்தன. இரண்டு நாள் கழித்து வந்தவள் பழைய பாவாடையில் கலைந்த தலையுடன் இருந்தாள். என்னடி என்றதற்கு முதுகையும் தொடையையும் காட்டினாள். கன்றிப்போன சிவந்த வீக்கம், கோடு கோடாக. எனக்கு அழுகையாக வந்தது. “எல்லாம் என்னாலதானே” என்றதற்கு “விடு அக்கா பரவாயில்லை” என்றாள்.

இனிமே துணியெல்லாம் மாத்தவேணாம். “ஆனா என்ன பாக்க வராம இருந்துடாதே” என்றேன்.

அதற்குப் பிறகு என்னுடன் இருக்கும்போது மட்டும் என்னுடைய பழைய பாவாடை சட்டையில் இருப்பாள் போகும்போது மாற்றிக் கொள்வாள். கிணற்றடியிலும் பம்புத் தொட்டியிலும் நாங்கள் வெகுநேரம் ஆட்டம் போட்டுக் கொண்டிருப்போம். சில சமயம் மாத்து உடையிலேயே பக்கத்துத் தோப்புகளுக்குப் போகும்முன் என் வீட்டுப் பக்கம் வந்து போவாள். அவளுடைய உடையும் தோற்றமும் மட்டுமல்ல பேச்சும் நடத்தையும்கூட இரண்டு விதமாக மாறிவிட்டது. நான் வீட்டுவேலை செய்த நேரம் போக தோட்டத்திலேயே அவளுக்காக நேரத்தைக் கழித்தேன். நான் எடுத்துக் செல்லும் சோறும் குழம்பும் இரண்டு பேருக்கும் போதுமானதாக இருந்தது. எங்கள் வாழைத் தோட்டத்திலும் தென்னந் தோப்பிலும் செய்ய ஏதாவது வேலை இருந்து கொண்டே இருந்தன. ஊசும்பிக்காக நான் கூடுதலாகவே தோட்ட வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். காலையிலிருந்து மதியத்திற்குள் மணிகளை விற்றுவிட்டு என்னைப் பார்க்க ஓடிவந்து விடுவாள். ஊசும்பி நிறைய பேசிக்கொண்டே இருந்தாள். துண்டு துண்டாக தொடர்பில்லாமல்.

மற்ற பெண்களுக்குத் தெரிந்த பல விஷயங்கள் அவளுக்குக் தெரிந்திருக்கவில்லை. தெரியாத ஏதோதோ விஷயங்கள் தெரிந்திருந்தன. ஒரு வீட்டின் உட்புறம் எப்படி இருக்கும் என்பது அவளுக்குத் தெரியாததாகவே இருந்தது.

வீட்டில் எல்லோரும் வெளியூர் கல்யாணத்திற்குப் போய் இருந்தபோது ஒரு பகல் நேரம் கிடைத்தது. ஊசும்பியை எங்கள் வீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் கூட்டி வந்துவிட்டேன். எல்லாவற்றையும் அதிசயமாகப் பார்த்தாள். தொடத் தயங்கினாள். அவளுக்கு தொட்டுக் காட்டி பெயர்களைச் சொன்னேன். தோசை சுடுவதை செய்து காட்டினேன். இரண்டாவது முறையே ஊற்றக் கற்றுக்கொண்டாள். திருப்ப வரவில்லை. என் புடவை ஒன்றை கட்டி இருந்த நகைகளைப் போட்டு கண்ணாடியில் காட்டினேன். முகத்தை கோணலாக வைத்துக் கொண்டு “இதெல்லாம் நமக்கு சரியில்லை” என்றாள். மாலை அவளை ரகசியமாக அனுப்பி வைத்தபின் எனக்கு அழுகை அழுகையாக வந்தது.

ஒருவித பசி என் உடம்பில் சுரந்தது. அவள் அணிந்து பார்த்த என்னுடைய ஜாக்கெட்டின் அக்குள் பகுதியில் அவளது வியர்வை வாடை காட்டு மல்லிகையின் தீவிரத்துடன் கமழ்ந்தது. என் முகத்தில் அதை ஒற்றிக்கொண்டேன். அவளது விரிந்த கண்களும் செழித்த உதடுகளும் மனசுக்குள் தீயைக்கிளர்த்தின. அவளுக்குப் புடவையை உடுத்துவது போல உடுத்தி அவளை நிர்வாணமாக்கி விட்டதை நினைத்தபோது மனதுக்குள் திகில் பரவியது. அவளது மார்பில் தவழ்ந்த மணிகளை அவிழ்த்து எனது நகைகளை அணிவித்தபடி அவளது செழித்த அங்கங்களை எந்தத் துணிச்சலில் தொட்டுப்பார்த்து என் முகம் புதைத்து அவளைச் சிலிர்க்க வைத்தேன். அவளும் திணறினாளே. என்னையும் அவளால் தவிர்க்க முடியவில்லையே. பேயி, பிசாசு, காட்டு மோகினி. அவளை முழு நிர்வாணத்தோடு மனம் கொணர்ந்து என் உறக்கத்துக்குள் ஆழ்த்தினேன். உடல் நடுங்கியது. காது மடல்கள் கொதித்தன. கண்கள் பெருகி தலையணையை நனைத்தன.

இரண்டு நாள் கழித்து நடந்த ஒரு காது குத்து விழாவின் போது அவளும் வேறு சில சிறுவர்களும் சாப்பிட்ட இலையை வெளியில் போடும் இடத்தில் உட்கார்ந்து பாத்திரங்களில் இலையில் மீந்த சோற்றை நிரப்பிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது எனக்கு மீண்டும் அழுகை வந்தது. இரவு தூக்கம் இல்லாமல் தலைவலியில் கிடந்தேன். மீண்டும் அவளைப் பார்த்தபோது கண் கலங்கிய என்னிடம் “மூணு நாளு நாளா செமத்தியான வேலைக்கா” என்றாள்.

“என்னோடயே இருந்திடு ஊசும்பி” என்றேன். அவள் கசப்புடன் சிரித்தாள்.

“சரி என்ன உன்னோட கூட்டிப் போயிடேன்.”

“ஏன் அக்கா உனக்கு அந்த விதி.’

நாங்கள் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோம்; எல்லாம் துக்கமாவே இருந்தன. அன்று இரவு துண்டு துண்டான கனவுகள். எல்லாம் ஊசும்பி பற்றியதாக இருந்தன. ஊசும்பியும் என்னை நினைப்பாளா என்று தோன்றியது. மறுநாள் காலையில் எழுந்திருக்க முடியாத காய்ச்சல். பத்துப் பதினைந்து நாட்கள் மாறி மாறி காய்ச்சலும் தூக்கமுமாக செத்துப் பிழைத்தது போல இருந்தது. என் தோழிகள் ஒவ்வொருவரும் மாறி மாறி வந்துவிட்டுப் போனார்கள். ஊசும்பி என்ன செய்வாள். ஒருநாள் சன்னல் ஓரம் உட்கார்ந்திருந்த போது தூரத்தில் கிணற்றுப் பக்கம் வேலியோரமாக நின்று கொண்டு எங்கள் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது. என்னால் நடக்கவோ பேசவோ முடியவில்லை. மீண்டும் சரிந்து படுத்துவிட்டேன்.

அவளை மறுபடியும் தோட்டத்துப்பக்கம் பார்க்க முடிந்தபோது ஏதும் பேசமுடியாமல் மன அழுத்தத்தோடு உட்கார்ந்திருந்தோம். போகும் போது “அக்கா உங்கிட்ட நிறைய பேசணும் நாளைக்கு வருவேன்” என்றாள்.

மனசு கனத்துப் போய் இருந்தது. மறுநாள் அவள் சொன்னாள். அவன் பக்கத்து ஊர்க்காரன். அவள் எல்லாவற்றையும் சாதாரணமாகச் சொன்னாள். “என்னடி ஊசும்பி உனக்கு என்ன ஆச்சி” என்றதற்கு; “உனக்கு ஆம்பளப் பழக்கம் இல்ல அக்கா. புரியறது கஷ்டம். என்ன ஆவுதோ எல்லாத்தையும் பாத்துடவேண்டியதுதான்.”

“உனக்குப் பிடிச்சிருக்கா ஊசும்பி.”

“பிடிச்சிருக்கு”

எனக்கு பயமாக இருந்தது. அவளிடம் சொன்னேன். எனக்கும்தான் பயமாக இருக்கு என்றாள்.

சில நாட்களுக்குப் பின் குறவர்குடியினர் கூச்சலும் குழப்பமுமாக நாட்டாண்மைகாரர் வீட்டின் முன் முறையிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பெண் ஒருத்தியைக் காணவில்லை. ஊரில் அவள் எந்தப் பைய னுடனோ ஓடிப்போய் விட்டதாகப் பேசிக் கொண்டார்கள். ஊரில் எல்லா ஆண்களும் அப்படியே இருந்ததை மாலைக்குள் கணக்குப் பார்த்த பஞ்சாயத்தார், குறவர்களை மிரட்டி உடனே ஊரைவிட்டு போகச் சொல்லி விட்டார்கள். இனிமேல் இந்த ஊர்ப்பக்கம் வரக்கூடாது என்றும் திட்டம் செய்து விட்டார்கள். குறவர்கள் புலம்பியபடியே ஊரை விட்டுச் சென்றார்கள். யாருக்கும் தெரியாது ஊசும்பி எங்கே போனாள் என்று. எனக்கு எல்லாம் கசப்பாக மாறிப் போயிருந்தது. குறவர்களின் புலம்பல் எனக்குத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தது.

ஊசும்பியைப் பார்த்ததாக இரண்டு மாதம் கழித்து ஒரு பெண் என்னிடம் சொன்னாள். பக்கத்து ஊர் கடைத்தெருவில் ஒரு ஆணுடன் கையில் பை வைத்துக்கொண்டு நடந்து சென்றதாகவும் பாவாடை தாவணியில் ஆளே அடையாளம் தெரியவில்லை என்றும் வேறு ஒரு பையன் சொன்னான். அடுத்த சில மாதம் கழித்து ஊருக்கு வெளியே இருந்த சைகோன்காரர் தோட்டத்தில் குடிசை போட்டு ஊசும்பி தங்கியிருப்பதாகப் பேச்சு வந்தது. ஊர்ப் பெண்களுக்கு ஒரே அதிசயம். பஞ்சாயத்துக் காரர்கள் “அவ நம்ம கோயில் எல்லயில இல்ல, நாம் ஒண்ணும் செய்ய முடியாது, விட்டுட்டுப் போங்க” என்று முடித்துக் கொண்டார்கள்.

ஊசும்பியை நான் மறுபடி பார்க்க முடியுமா என்பது கேள்வியாகவே இருந்தது. ஆனால் அவள் என்னைப் பார்க்க வருவாள் என்றும் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. அதே போல் அவள் வந்தாள். வாழைத் தோட்டத்தில் இரண்டு நாட்களாக வந்து வந்து காத்திருந்து விட்டு மூன்றாவது நாள் என்னைப் பார்த்தாள். என்ன பேசுவது என்று இருவருக்குமே தோன்றவில்லை. “நல்லா இருக்கியாடி”

“இருக்கன்”

ஏதும் பேசமுடியாமல் என் மடியில் படுத்துக் கொண்டு விசும்பினாள். எனக்கும் ஏதும் பேசமுடியாமல் தொண்டையை அடைத்தது. நெஞ்சுக்குள் வலித்தது. கொஞ்சம் நேரம் கழித்து கண்களைத் துடைத்துக் கொண்டவள், “பிடிச்சி தான் இருக்கு அக்கா, இந்த ஆம்பிளைகள் பண்ணற சேட்டையெல்லாம், என்னதான் அது, பாத்திட வேண்டியதுதான்” சிணுங்கிச் சிணுங்கி ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள். தோப்பில் இருக்க இடம் கிடைத்தது பற்றி கேட்டபோது “அந்த அய்யா நல்லவரு, ஒரு நாள் பங்களாவுல தனியா போய்ப் பாத்தேன், ஒன்னும் ஆபத்தில் லாதவரு, ஒரு அஞ்சு நிமிஷம் என்னை முழுசா பார்த்துக்கிட்டே இருந்தாரு அவ்வளவுதான், சின்னதா ஒரு வீடு கட்டி கொடுத்திருக்காரு. அவரும் இப்ப வந்துக்கிட்டுதான் இருக்காரு.”

எனக்கு மயக்கமாக இருந்தது. அவள் போகும் போது ஒரு மஞ்சள் தோய்த்த துணி முடிச்சை என்னிடம் கொடுத்து “அக்கா உன்கிட்ட இருக்கட்டும் பின்னாள வாங்கிக்கிறேன்” என்றாள். பிரித்துப் பார்க்காமல் எடுத்து வந்து என் டிரெங்குப் பெட்டிக்குள் மறைத்து வைத்தேன்.

ஊசும்பி அப்படித்தான் ஆரம்பித்தாள்; எந்தத் திட்டமும் இல்லாமல். ஊரில் பெண்கள் அவளைப் பற்றி கதை கதையாகப் பேசிக் கொண்டார்கள். அவர்களுக்குப் பிடித்தமான கதைகளையெல்லாம் அவளுடன் தொடர்புப்படுத்தி பேசிப் பார்த்தார்கள். ஆனால் ஊசும்பியின் உண்மையான வாழ்க்கை அவர்களின் கற்பனைகளைத் தாண்டி விரிந்து கொண்டிருந்தது.

என்னை மாதம் ஒருமுறையாவது சந்தித்துவிடும் ஊசும்பி ஒரு விநோதமான மாயாவிபோல மாறிக்கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. தன் முன் மண்டியிடாத ஆண்களை அவள் மறுமுறை சந்திப்பதே இல்லை என்று சொன்னாள். தன் முதல் ஆணை மூன்றாவது மாதத்திலேயே பிடிக்காமல் போனபின் வேறொருவனை ஒரு நிபந்தனையுடன் ஏற்றுக்கொண்டாள்; தன்னை அவன் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது. அவனும் அவளுக்கு பிடிக்காமல் போனது இயல்பாகவே நடந்தது. அவளுக்காக உயிரையும் தர யார் யாரோ காத்துக் கிடந்தார்கள். சோதனை செய்து, சோதனை செய்து சிலரை மட்டுமே அவள் ஏற்றுக்கொண்டாள். அவளுக்காக கொலை செய்யக்கூட தயாராகி துப்பாக்கியுடன் அலைந்த இரண்டொருவரும் இருந்திருக்கிறார்கள். அவள் எல்லாவற்றையும் என்னிடம் சொல்வதை நிறுத்திவிட்டு, நல்ல விஷயங்களை மட்டுமே பேச முடிவு செய்தேன். ஒவ்வொரு சந்திப்பின் போதும் அவள் தவறாமல் மஞ்சள் துணி முடிச்சொன்றை தந்துவிட்டு; தேவைப்பட்டால் பிறகு வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிச்செல்வது வாடிக்கையாக இருந்தது.

நான் ஊசும்பியை சந்திக்க ரொம்ப சிரமப்பட வேண்டியிருந்தது. தோட்டத்தில் சந்திப்பதை விட்டுவிட்டு கடைத்தெருவிலும் சினிமாக் கொட்டகையிலும் பக்கத்து ஊர் கோயிலிலும் மாறிமாறி பார்த்துப் பேசிக் கொண்டோம். அவளைப் பற்றிய கதைகளில் எப்போதும் புதிய புதிய ஆண்கள் வந்துகொண்டே இருந்தார்கள். ஊரில் உள்ளவர்களோ “அவளிடம் அப்படி என்ன இருக்கிறது” என்று கேட்டு விடை தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அது புரிய வாய்ப்பில்லைதான். ஊசும்பியோ நாளுக்கு நாள் பயப்படவைக்கும் அழகுடனும் ஆபத்தான கவர்ச்சியுடனும் பூரித்துக் கொண்டே இருந்தாள். எனக்கு அது அதிசயமாகத்தான் இருந்தது. நானும் எனக்கே அதிசயமாகவும் வியப்பாகவும் ஆகிக் கொண்டிருந்தேன்.

என்னைப் பெண் பார்க்க அதுவரை நான்கு பேர் வந்திருந்தார்கள். எனக்கு யாரையும் பிடிக்கவில்லை என்றே சொல்லி வந்தேன். அம்மாவும் அப்பாவும் எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று நினைத்தார்கள். அவர்கள் மிரட்டலுக்கு நான் வைத்திருந்த பதில் “இப்போ எனக்குக் கல்யாணம் வேணாம்” என்பதுதான். ஐந்து, ஆறு என எட்டுவரை பெண் பார்க்கும் சடங்கு நடந்து முடிந்தது. ஒவ்வொரு முறையும் எனக்குக் காய்ச்சல் வந்து கல்யாணப் பேச்சு தள்ளிப்போனது. அம்மா என்னிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். அப்பா சிடுசிடுவென வீட்டிலுள்ளவர்களைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார்.

தங்கைக்குக் கல்யாணம் ஆகாமல் அண்ணனுக்கும் கல்யாணம் ஆகாது என்பதால் என் அண்ணன் என்னை விரோதியாகப் பார்க்கத் தொடங்கிவிட்டான். எனக்கோ எந்த முடிவு எடுப்பது என்ற குழப்பமும் அந்த வெறுப்பிலிருந்து எப்படித் தப்பிப்பது என்ற தவிப்பிலுமாகக் காலம் கழிந்து கொண்டிருந்தது. இப்பொழுதெல்லாம் ஊசும்பியை என்னால் சந்திக்க முடிவதில்லை. கடைசியாகப் பார்த்துப் பேசியபோது, “அக்கா இனிமே அடிக்கடி உன்னப் பாக்க முடியுமோ என்னமோ ஆனா என்ன மறந்திடாத” என்று கண் கலங்கினாள். அவள் தந்த மஞ்சள் துணி முடிச்சோ என் டிரெங்குப் பெட்டியில் பாதியை அடைத்துக் கொண்டு விட்டது. அதில் என்ன இருந்தது என்று அதுவரை நான் பிரிந்துப்பார்த்ததில்லை. அவளும் சொன்னதில்லை.

ஊசும்பிக்காக சண்டை போட்டுக் கொண்டு இரண்டு பெரிய இடத்து ஆண்கள் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டு இறந்த சம்பவம் எங்கள் ஊரைச் சுற்றியும் அரியாங்குப்பம் கொம்யூனைத் தாண்டி புதுச்சேரி தனவந்தர்கள் மத்தியிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இரண்டு பேருமே வசதியான குடும்பத்தைச் சேர்ந்த செல்வாக்கான ஆட்கள். போலீஸ் விசாரணை என ஏதேதோ நடந்தபோது ஊசும்பியை காப்பாற்ற வேறு ஒரு பெரிய இடத்து நபர் தகுந்த ஏற்பாடு செய்துவிட்டதாக பேசிக்கொண்டார்கள். ஊசும்பி அப்போது சைகோன்காரர் பங்களாவிலேயே தங்கத் தொடங்கிவிட்டதாகவும் அப்பங்களாவை வேறு ஒரு ஆள் வாங்கி அவளுக்குத் தந்து விட்டதாகவும் பேச்சு இருந்தது. எனக்கு உண்மையில் ஊசும்பிக்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒருமுறை வயதான ஒரு பெண், படித்த நகரத்து பெண் போல் தோற்றம் கொண்டவர் எங்கள் வீட்டுமுன் வந்து நின்று குடிக்கத் தண்ணீர் கேட்டார். நான் செம்பில் எடுத்து வந்து தந்தபோது, நிழலுக்குக் கொஞ்சம் உட்காரலாமா என்று கேட்டபடி திண்ணையில் உட்கார்ந்தார். செம்பில் இருந்த தண்ணீரைக் கொஞ்சம் குடித்தவர் “நீதானம்மா சாந்தி” என்று கேட்ட போது எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

“நீங்க யாரு, என் பேரு எப்படித் தெரியும்” என்ற என்னை பக்கத்தில் உட்காரும்படி கைகாட்டி “வீட்டில் யாரம்மா இருப்பது” என்றார். “அம்மா இருக்காங்க” என்றவுடன் “சரி எல்லாத்தையும் சீக்கிரம் சொல்லிவிடறேன்” என்றபடி மெல்லிய குரலில் பேசத் தொடங்கினார்.

அவர் பேசப் பேச கண்ணீர் என்னையறியாமல் வடியத் தொடங்கிவிட்டது. “அந்தப் பெண் சொன்ன வீட்டு அடையாளத்தை வைத்துகண்டுபிடித்து உன்னையும் பார்த்து சொல்லச் சொன்னதை சொல்ல முடிந்ததற்கு கர்த்தருக்கு நன்றி சொல்லனும்” என்றபடி அந்த அம்மாள் எழுந்த போது உள்ளே இருந்து வந்த அம்மா “என்ன வேணும்” என்றபடி எட்டிப்பார்த்தாள். “தாகமா இருந்தது கொஞ்சம் தண்ணி கேட்டேன்” என்றபடி அந்த அம்மாள் எழுந்து போனார்.

காலம் வேகமாகவோ மெதுவாகவோ கடந்த கொண்டே இருந்தது. அந்தமுறை என்னைப் பெண்பார்க்க வந்தவர்கள் தூரத்து உறவுக்காரர்கள்; செஞ்சி பக்கம் ஒரு ஊர். அம்மா என் அண்ணனை முன்னால் வைத்துக்கொண்டு, “தம்பி இப்பவே சொல்லிட்டேன், மாப்பிள்ளை பிடிக்கல கல்யாணம் வேணாம் அப்படின்னு ஏதாவது உன் தங்கச்சி சொன்னா நான் குவளக்கொட்டையைக் குடிச்சி சாவறதத் தவிர வழியில்லை. வயசுக்கு வந்து பத்து வருஷமா ஒரு பொண்ண வீட்டுல வச்சிருந்தா ஊருல என்ன சொல்லுவாங்க, ஏதோ பாக்க லட்சணமா வயசு தெரியாம இருக்கிறதால இப்பவும் சொன்னா கல்யாணம் செஞ்சிக்க தயங்காம ஆளுங்க வந்து பாக்கராங்க. இவகூட வயசுக்கு வந்த புள்ளைங்க நாலும் அஞ்சுமா பெத்து கிழவியா ஆகிட்டாங்க. என்னால முடியாதடா தம்பி இப்பவே சொல்லிட்டேன்.”

அம்மாவைப் பார்க்கப் பாவமாக இருந்தது. கோபமாகவும் இருந்தது. “புடிக்கலன்னா என்ன செய்யறது” என்று நான் வாயைத் திறப்பதற்குள், “பொம்பளக்கி பிடிக்கிறது பிடிக்காதது என்ன வேண்டியிருக்கு, பிடிக்கறவனயெல்லாம் கட்டிக் கினுமுன்னா இங்க ஒருத்தி இருந்தாளே ஊசும்பி அவளமாதிரி போக வேண்டியதுதான். போடி அதுபோல போ. நீயும் அவளமாதிரிதான இருக்க. அதே போல போயிடு” அம்மா தலையில் அடித்துக் கொண்டாள்.

என் பேச்சை நிறுத்திக் கொண்டேன். அடுத்த மாதமே கல்யாணம் நடந்து. என் புகுந்த வீடு போனபோது ஒரு நிம்மதி இருந்தது. ஏன் என்று தெரியவில்லை. என் கணவர் மற்ற ஆண்களைப் போல இல்லை என்பது காரணமாக இருக்கலாம். ஆறுமாதம் வரை என் கணவரைத் தொட விடாமல் இருந்தும் ஏதும் பேசாமல் சாதுவாக நடந்து கொண்டது ஒரு காரணமாக இருக்கலாம். எப்படி என்றாலும் கனமான ஒரு துயரம் கலந்த நிம்மதி எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.

அதிக வசதியில்லாத என் கணவர் வீட்டில் எல்லாருமே கடின உழைப்பாளிகள். வானம் பார்த்த பூமியிலும் சலிக்காமல் உழைத்துக் கொண்டே இருந்தார்கள். அவர்களிடம் நான் சொன்னேன்; “ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் நம் வீட்டுக்கு பெரிய அதிர்ஷ்டம் வரப்போகுது. நாம வசதியாக வாழப்போறோம்.” அவர்கள் எப்போதும் போல சிரித்துக் கொண்டார்கள்.

ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எல்லாம் சொன்னது போல நடந்தபோது அவர்களால் நம்ப முடியவில்லை. “எப்படியம்மா உனக்கு இதெல்லாம் முன்னாலேயே தெரிஞ்சது”, என்று அதிசயமாகக் கேட்டார்கள்.

“ஒரு குறத்தி சொன்னது” என்றேன்.

“ஆமாம் குறத்தி சொன்ன குறி பல சமயங்கல்ல பலிக்கும்” அவர்கள் நம்பிக்கையோடு சொன்னார்கள். என் பெண்ணுக்கு வள்ளி என்று பெயர் இட்டபோது என் கணவர், “வள்ளியம்மான்னு கூப்பிட வசதியா இருக்கும்” என்று மகிழ்ச்சியடைந்தார். நான் சொல்லுவதை மாற்றிச் சொல்லும் பழக்கம் அவரிடம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் குடும்பம் வேறுவிதமாக வசதியாகிப் பெருகியபோது, உறவுக்காரர்கள் பலவிதமாகப் பேசிக்கொண்டார்கள். ஆனால் செஞ்சிப் பக்கம் உள்ள ஊர் நிலங்களில் புதையல் கிடைப்பது வழக்கம் என்பதால் எல்லோரும் எங்களுக்குப் புதையல் கிடைத்திருக்கிறது என்றுதான் பேசிக்கொண்டார்கள். என் மகளைத்தவிர வேறு என்ன புதையல் எனக்குக் கிடைத்துவிடப் போகிறது என்று நினைத்துக் கொள்வதுண்டு.

துயரமும் வலியும் வேதனையும் சிக்கல்களும் நிறைந்த தமிழின் கதை சொல்லும் மரபில், இப்படியான ஒரு நல்முடிவும் மன நிம்மதியும் கொண்ட ஒரு வாழ்க்கைக் கதையை கேட்டுப் பதிவு செய்வது ஆறுதலாக இருக்கிறது. இந்தக் கதையை வாழந்து பார்த்த சாந்தி அம்மாள் தன் வாழ்நாள் முழுக்க ஆதரவற்ற பெண் பிள்ளைகளை வளர்ப்பதிலும் அவர்களைப் படிக்க வைத்து விரும்பிய வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.

அவருடைய குடும்பம் வசதியான நிலையை அடைந்ததிலிருந்து வெளியே தெரியாமல் அவர் செய்து வந்த உதவிகள் அதிகம். பட்டினி கிடக்கும் ஒரு மனிதருக்கு பசியாற்றுவது என்பது கேட்பதற்கு மிகப் பழைய நீதியாகத் தோன்றலாம், உண்மையில் செயல்படுத்த மிகவும் கடினமான ஒன்று. பல வேளைகளில் பசியுடன் வரும் நண்பர்களை பசியுடனேயே திரும்பி அனுப்ப நேர்ந்தவர்களுக்கும்; பசியில்லாமல் மூன்று வேளை சாப்பிடும் அளவுக்கு ஒரு நண்பரின் வாழ்க்கை அமைந்திருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளாமலேயே காலம் கடத்தும் ஒரு காலகட்டத்தில் வாழ நேர்ந்து விட்டவர்களுக்கும், பசிக்கிறது என்று சொல்வது அநாகரிகமானது என்ற நாசுக்குப் பழக்கம் பற்றி கேள்விப் பட்டவர்களுக்கும் பசியாற்றுதல் என்பது எவ்வளவு கடினமான ஒரு மனத் தயாரிப்பு என்பது புரியக் கூடும்.

சாந்தி அம்மாள் தன் வாழ்நாள் முழுக்க அதை ஏதோ ஒரு வகையில் மனமுவந்து செய்து வந்தவர். அவரால் வாழ்க்கை பெற்றவர்கள் பலபேர். அவருடைய வாழ்க்கை அவரே குறிப்பிடுவது போன்று - கனத்த சோகமான நிம்மதி கொண்டது.

அவருடைய மகள் வள்ளியைப் பற்றி நிறைய பேருக்குத் தெரியாது. அவர் ஒரு சமூக இயக்க உறுப்பினராக வாழ்க்கையைத் தொடங்கி, அடக்கு முறை சட்டங்களுக்குப் பலியாகி சிலகாலம் சிறைச்சென்று பிறகு வட இந்தியாவில் ஆதி வாசிகள் போர்க்குழு ஒன்றில் முழுமையாக இணைந்து விட்டவர்.

அவர் இறந்துவிட்டதாக சிலர் சொல்வது உண்டு. ஆனால் இன்னும் திடமான ஒரு போராளியாகவே அவர் இருந்து கொண்டிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்வது உண்மையாகவே இருக்கும். அவரைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கச் சென்றபோது அவருடைய தாயார் சாந்தி அம்மாளை சந்திக்க நேர்ந்தது. அவர் தன் மகளைப் பற்றி பெருமிதமும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்.

ஆண்டுக்கு இரண்டு முறையாவது அவர் வீட்டுக்கு உளவுப்பிரிவினர் வருவது உண்டு என்றும், வழக்கம் போல “வள்ளியம்மை இருக்கும் இடம் தெரியாது. அவளிடமிருந்து எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை” என்ற உண்மையைக் கூறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இருபது வயதில் வீட்டைவிட்டுச் சென்ற தன் மகளுக்கு இப்போது நாற்பது வயதிருக்கும் என்றும் ஒவ்வொரு முறையும் “நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - போலீசாருடன் நடந்த மோதல்” என்ற செய்தி வரும்போது அவருடைய நெஞ்சில் ஒரு குமிழ் வெடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“வள்ளி உண்மையில் மிக மென்மையான, வன்முறையில் நம்பிக்கையற்ற பெண். அவள் தேர்ந்தெடுத்த பாதையில் எனக்கும்கூட முழுமையான நம்பிக்கையில்லை. ஆனால் காலம் மக்களை எதையோ நோக்கித் தள்ளுகிறது.” அந்த அம்மையார் இதை அமைதியாவே தெரிவித்தார்.

“என் மகள் மட்டுமா எத்தனை ஆயிரம் மகள்களும் மகன்களும் அங்கே இறக்கத் தயாராக இருக்கிறார்கள். நாம் மரணத்தை எப்போதும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம்; சிலர் பயந்து பயந்து சந்திக்கிறோம்; சிலர் பயமின்றி சந்திக்கிறார்கள். அமைதிக்காக அன்புக்கா ஒவ்வொருவரும் எதையாவது செய்யத்தான் வேண்டியிருக்கிறது.” அவர் பேசியவை அவ்வப்பொழுது நினைவில் தோன்றிக் கொண்டிருக்கிறது. என்றாலும் அவர் கூறிய கதையை வேறு ஒரு வடிவத்தில் பதிவு செய்திருப்பது மற்ற சில காரணங்களுக்காக. ஊசும்பியைப் பொருத்தவரை அவளுடைய வாழ்க்கை நம்ப முடியாத பல மாற்றங்களை அடைந்தது.

அவள் மிகவும் தந்திரமான மாயம் நிறைந்த ஒரு மோக உத்தியைக் கையாண்டிருக்கிறாள். தன் வாழ்நாள் முழுக்க எந்த ஆணையும் தன் உடலைத் தொட அனுமதிக்காமலேயே. அவர்களைத் தமது காதல் அடிமைகளாக அழகின் போதையில் தள்ளாடி விழுபவர்களாக வைத்திருந்து பின் விடை கொடுத்து அனுப்பி இருக்கிறாள். பிறகு, பிறகு என அவகாசம் கூறி பலரின் திருமணக் கோரிக்கைகளையும் காம வேண்டுதல்களையும் அவள் தள்ளிப்போட்டு தன் மீது ஒரு வியர்வைத் துளிகூட விழாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு ஆணும் அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்திருக்கிறான். எதைக் கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருந்திருக்கிறான்.

ஊசும்பிக்கு தன் அழகைப் பற்றிய தெளிவு, அதன் ஆற்றல், வலிமை பற்றிய நம்பிக்கை சாந்தியிடம் ஏற்பட்ட பழக்கத்தின் மூலமே ஏற்பட்டிருக்கிறது. “அடி மோகினிப் பிசாசே” என சாந்தி அவளின் அகன்ற கண்களைப் பார்த்துக் கொண்டே சொல்லும் போதெல்லாம் சாந்தியின் முகத்திலிருந்து அவள் வேறொன்றைத் தெரிந்து கொண்டிருந்தாள். சாந்தியின் முகத்தில் தோன்றிய ஒவ்வொரு உணர்வும் அவளுக்கு வேறு எதை எதையோ உணர்த்தி வந்திருக்கிறது. அதை முதன்முதலில் ஒரு ஆணிடம் பரிசோதித்துப் பார்த்தபோது, உறுதியானது. அவளுடன் எங்கு வரவும், எந்தத் தண்டனையை ஏற்றுக் கொள்ளவும் அவளுடைய முதல் காதலன் தயாராக இருந்தது அவளுக்கு வேறு வாசல்களைத் திறந்து காட்டியது. அவள் திட்டமிடப்படாத ஒரு விளையாட்டை சிறிய திட்டத்துடன் தொடங்கி விட்டாள். அவளுக்கு ஏற்பட இருந்த பெரிய பெரிய ஆபத்துகளைக்கூட ஒரு உதட்டுச் சுழிப்பில் சமாளித்திருக்கிறாள். ஒரு பத்து வருடத்தில் அவளுடைய வாழ்வின் சாகசம் ஏதேதோ எல்லைகளைத் தொட்டிருக்கிறது. எல்லை மீறிப் போக முயற்சித்தவர்களை மோதவிட்டு இல்லாமலாக்கி தான் காயமின்றி தப்பித்திருக்கிறாள்.

இவையெல்லாவற்றையும் ஒரு கட்டத் திற்குப்பின் முடிவுக்குக் கொண்டுவர எண்ணி தன்னை முற்றிலும் வேறொரு பெண்ணாக மாற்றிக் கொண்டபின் வயதான பிரஞ்சுக்கார செல்வந்தர் ஒருவரை சட்ட பூர்வமான கணவராக ஏற்று தனது வாழ்வை வண்ணமும் இசையும் நிரம்பியதாக மாற்றிக் கொண்டிருக்கிறாள். அவள் தன் கணவர் இறப்பதற்கு முன்பே உலக நாடுகளுக்கெல்லாம் சென்று வந்திருக்கிறாள். தனக்குப் பிடித்தமான அனைத்தையும் தனது கணவர் மூலம் செயல்படுத்திப் பார்த்திருக்கிறாள். ஊசும்பியின் வாழ்க்கை இன்றுவரை வண்ணமயமாகவே இருந்து கொண்டிருப்பதாக சாந்திக்குத் தெரிய வருகிறது. வேறு பெயரில் வேறு உருவில் வேறு உலகில் உலவும் ஊசும்பி என்ற அந்தச் சீமாட்டி இன்றும் கூட அழகுகுறையாத ஒரு தேவதை போலத்தான் மிதந்து கொண்டிருப்பாள் என்றும் சாந்தி நம்புகிறாள். தற்போது அவள் உலகை மூன்றாவது முறையாகச் சுற்றிவரும் பயணத்திற்குக் கூட தயாராகிக் கொண்டிருக்கலாம் என்று சாந்திக்கு சில சமயம் தோன்றும்.

ஊசும்பி தான் செல்லும் ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் விநோதமான அரிய வகைக் குருவிகளைக் கொண்டுவந்து, புதுச்சேரியின் வெள்ளை நகரப் பகுதியிலுள்ள தனது பிரெஞ்சு பாணி பங்களாவில் வைத்து வளர்த்து வருகிறாள். அந்த பன்னாட்டுக் குருவிகளைப் பேணிக்காக்க தக்க ஆட்களையும் வேலைக்கு அமர்த்தி யிருக்கிறாள். அவள் சிறுமியாக இருந்தபோது மரப்பொந்துகளிலிருந்துப் பிடிக்கப்பட்ட பச்சைக் கிளிகளை சிறு கம்பிக் கூண்டுகளில் அடைத்துத் தனது தெருப்பக்கமாக கூவி விற்றுக்கொண்டு போனதையும் தான் ஏக்கத்தோடு பார்த்ததையும் அக்கிளிக்காக ஏங்கியதையும் சாந்தி குரும் புன்னகையோடு நினைவு கூர்கிறாள். ஊசும்பியே அவளளவில் ஒரு குருவி என்றும், அக்குருவி எதற்குள்ளும் அடைபடாமல் உலகெல்லாம் பறந்துத் திரிவதாகவும் சாந்திக்குத் தோன்றியது.

திருமணத்திற்கு முன்பு சாந்தியைச் சந்திக்க வந்த ஒரு கிறித்துவ அம்மையார் ஊசும்பியின் வாழ்க்கைத் திட்டத்தைக் கூறியதுடன், சாந்தி திருமணம் செய்து கொண்டு வாழ்வது அல்லது சிலகாலம் கழித்து ஊசும்பியுடன் வந்து சேர்ந்து கொள்வது என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி ஊசும்பி சொன்னதையும் விவரித்துக் கூறினார். ஊசும்பியுடன் வந்து சேர்ந்து கொள்வதாக இருந்தால், தான் தந்த துணி முடிச்சுகளை எல்லாம் தன் வீட்டினருக்குக் கிடைக்கும்படி செய்துவிட்டு, ஒருநாள் தான் அனுப்பும் வண்டியில் தன் ஆட்களுடன் வந்து சேர்ந்து விட வேண்டுமென்றும் அதற்கு ஒரு ஆண்டோ இரண்டு ஆண்டோ ஆகலாம் என்றும் சொல்லிவிட்டிருந்தாள். கல்யாணம் செய்து கொள்வதாக இருந்தாள் அந்தத் துணி முடிச்சுகள் அனைத்தும் சாந்திக்குப் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு உரியது என்றும் தெரிவித்திருந்தாள். அதுவரை சாந்திக்கு துணிமுடிச்சுகளில் என்ன இருக்கிறது என்பது தெரியாது என்பதால் வந்திருந்த அம்மையாரிடம் துணிமுடிச்சில் என்ன இருக்கிறது என்று கேட்டபோதுஙீ தனக்கு அது சொல்லப்படவில்லை என்றும் இனி சாந்தி எப்போது வேண்டுமானாலும் அதைப் பிரித்துப் பார்க்கலாம் என்று ஊசும்பி சொன்னதாகவும் தெரிவித்தார்.

வந்தது போலவே அந்த அம்மையார் சென்று மறைந்ததும் சாந்தி இதுவரை தான் மனதில் கொண்டிருந்த அனைத்து எண்ணங்கள் குழப்பங்கள் ஆசைகள் எல்லாவற்றையும் கணக்குப் பார்த்துத் தெளிய வேண்டிய வலி நிறைந்த சூழலில் தள்ளப்பட்டாள். பல நாட்கள் தூக்கமின்றி கழிந்தபின் அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். வசதியில்லாவிட்டாலும் தன்னை மதிக்கும் ஒரு ஆண் போதும் என தன் கணவனைத் தேர்ந்தெடுத்தாள். திருமணம் ஆகி புகுந்த வீடு போகும்போது கனத்த தன் பெரிய இரும்புப் பெட்டியைத் தன்னுடனேயே கொண்டுச் சென்றாள். புதிய ஒரு ஆணின் தொடுகையை ஏற்கும் மனத் தயாரிப்பு வரும்வரை அவள் தன் கணவருடன் கூடாமலேயே இருந்தாள். அவள் மனம் அதை ஏற்கத் தயாரானதை அறிந்த ஒருநாள் பெட்டியைத் திறந்து ஒரு துணிமுடிச்சை எடுத்துப் பிரித்துப் பார்த்தவளுக்கு கை பதறிவிட்டது.

அத்தனையும் தங்கக் காசுகள். ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துப் பார்க்கப் பார்க்க அவளுக்கு வியர்த்துக் கொட்டி விட்டது. “இது சாந்தியக்காவின் முதல் பெண் குழந்தைக்கு” என்று ஊசும்பியின் குரல் கேட்டது. அவளிடம் அதைத் தெரிவித்த அம்மையார் ஊசும்பி சொன்னதாகச் சொன்னது திரும்பத் திரும்ப காதில் ஒலித்தபடி இருந்தது. “அதை வேண்டாம் என்று சொல்ல அக்காவுக்கு உரிமை உண்டு. ஆனால் எதுவுமே இல்லாமல் பிறந்த இந்த ஊசும்பி வேறு எப்படியும் இதை செய்திக்க முடியாது.” ஊசும்பி ஒருமுறை சாந்தியின் மடியில் படுத்து அழுததும் நினைவுக்கு வந்தது. சாந்தி அதற்குமேல் யோசிக்கவில்லை. எல்லாவற்றையும் ஒரு பழைய பானையில் போட்டு யாருக்கும் தெரியாமல் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியில் புதைத்துவிட்டு வந்த அன்று நீண்ட நேரம் குளித்தாள். இனி எல்லாவற்றையும் மறந்துவிட வேண்டியது என முடிவு செய்தபடி, தன் கணவரை அழைத்துக் கொண்டு புகுந்த ஊரைச் சுற்றிக் காட்டும்படி வெளியே கிளம்பினாள்.

பெண்களின் கதையை நாம் எத்தனை முறை கேட்டாலும் அதில் ஏதோ சில மறைக்கப்பட்டும் மர்ம மாக்கப்பட்டும் இருப்பது போலத்தான் தோன்றும். ஏனெனில் ஆண்கள், பெண்கள் எப்போதும் எதையோ மறைத்து வைத்திருப்பதான எண்ணத்தில் இருக்கிறார்கள். பெண்களும்கூட ஆண்கள் கூறும் அனைத்தையும் நம்பிவிடுவது இல்லை. ஏன் ஆண்கள் ஆண்களையும் பெண்கள் பெண்களையும்கூட நம்புவது இல்லை. ஏன் ஒவ்வொருவரும் நம்மை நாமே நம்ப முடியாமல் போவதால்தான் பிறரை நம்பவைத்து அதன்மூலம் நம்மை உறுதி செய்துகொள்கிறோம். இதை யெல்லாம் நாம் யோசித்தோ தெளிந்தோ அறிந்தோ செய்வதும்கூட இல்லை. ஒரு பழக்கத்தின் காரணமாக செய்துவிடுகிறோம். ஆனால் ஊசும்பி, சாந்தி, வள்ளி இவர்களில் யாரும் பழக்கத்தின் காரணமாகவன்றி, வேறு ஒரு திசையை தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள்.

இலக்கிய நுண்ணுணர்வு உடையவர்கள் இந்நேரம் இந்தக் கதை தந்திரமான ஒரு பெண்ணியக் கதை என்பதைக் கண்டுபிடித்து எச்சரிக்கை அடைந்திருப்பீர்கள். நுண்ணுணர்வு அற்றவர்கள் வேறு சில வாசிப்புகளைத் தேடிச் சென்று ஏமாற்றம் அடைந்திருப்பீர்கள். என்றாலும் இந்தக் கதை ஒரு கதையாகவே இருக்கட்டும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் கதை எப்படி கதையாக மட்டுமே இருக்க முடியும்? இந்தக் கதை அழகான பெண்கள் அழகற்ற பெண்கள் என்ற வகைமையில் பேசுவதால் ஆண் பார்வை உடையது என்பதை மறுக்க முடியாது. பெண்ணின் அழகு குற்ற வியலின் அத்தனை மூலாதார ஆற்றலையும் உள்ளடக்கியது என்று சொல்ல வருவதால் இது பழைய புராண மரபைப் பின்பற்றிச் செல்வது. நரிக்குறவர்கள் பற்றிய மேலோட்டமான சித்தரிப்பையும் அவர்கள் வாழ்க்கை பற்றிய தவறான தகவல்களையும் தருவதால் இது இனவெறித் தன்மை உடையது.

ஆண்கள் அத்தனைபேரும் பெண்களுக்காக எதையும் செய்வார்கள் என்ற கருத்தை உருவாக்க முயற்சிப்பதால் இது ஆண்களின் உளவியலுக்கு எதிரானது என்ற வாசிப்புகளுக்கும் இக்கதை இடம் தருகிறது. அது மட்டுமன்றி பெண்ணுக்கும் பெண்ணுக்குமிடையில் மிக உள்ளோட்டமான நேசம் நிலவ முடியும் என்று காட்ட முயற்சிப்பதால் பாரம்பரியமான ஒரு ஒழுக்கவியலை இது மீறுகிறது என்பதும்கூட உண்மையாக இருக்க லாம். இன்னும் ஒரு தருணத்தில் இது பெண்களைப் பற்றி பேசுவதால் ஆண் வாசிப்புக்கு ஒருவித மோகத் திருகலைத் தரலாம். அது பொதுவாக எப்போதும் நிகழக்கூடியது தான். மொழி அப்படி அமைந்துவிட்டது. சிறு வயதில் பெண்களின் பெயரை வெறுமையாக சுவரில் எழுதுவதே பாலியல் செயலாக அமைந்துவிடுவதை நாம் கவனித்து வருகிறோம்; அதனால், கதையில் அப்படி பாலியல் உட்கூறு இருப்பதை ஏற்கத்தான் வேண்டும்.

அரசியல் இக்கதையில் இல்லை என்பது ஒரு ஆறுதல்தான்; ஆனாலும் வள்ளி என்னும் பாத்திரம் அரசியலுடன் உறவுடையதாக இருப்பதற்கு நாம் பொறுப்பேற்கத் தேவையில்லை. அத்துடன் அது காணாமல் போன பாத்திரம்; அது பற்றி நமக்குக் கவலையில்லை. வேறு மாநிலத்தில் எங்கோ கண்காணாத இடத்திற்குப் போய்விட்ட பாத்திரம்.

ஊசும்பி பற்றிய பகுதிகள் மிகைப்படுத்தப் பட்டவையாக உள்ளன. அதிலும் பிரஞ்சு செல்வந்தருடன் வசதியான வாழ்க்கை என்பது நம்பும் படியாக இல்லை என்பது நியாயமான குற்றச் சாட்டு. ஆனால், “அழகு” என்ற அடையாளத் தினைக் கொண்டு உலகில் நடக்கும் விநோதங்களைப் பார்த்தபின் இதெல்லாம் ஒன்றுமில்லை என்றே தோன்றுகிறது. இவையெல்லாம் எப்படி இருந்தபோதும் ஒரு கதை கதையாகவே இருக்கட்டும் என்பதுதான் நாம் கடைசியாகச் சொல்ல முடிவது. அது காட்சி ஊடகத்தில் பதிவுப்படுத்தப் படும்போது அதன் மர்மங்கள் பகிரங்கப்பட்டு விடுகின்றன. அங்கே நிகழ்வது அத்துமீறிய ஒரு கொலை. நாம் கதாபாத்திரங்களைக் கொல்வதற்கு எந்தவித உரிமையும் அற்றவர்கள்.

இவை எல்லாவற்றையும் விட ஒரு துயரமான மனதைக் கனக்க வைக்கும் ஏதோ ஒன்று இதற்குள் இருந்து கொண்டிருப்பதை கதைசொல்லி என்பதையும் மீறி உணர முடிகிறது. அது ஒரு எதிர்பார்ப்பா, மனித உறவுகள் பற்றிய மிகையான பாவனையா, உண்மையைப் புரிந்துகொள்ள முடியாத மூட உணர்வா தெரியவில்லை. ஊசும்பி தன்னுடன் வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று கூறியிருந்ததை விட்டுவிட்டு திருமணம் என்ற ஒன்றை சாந்தி தேர்ந்தெடுத்ததற்கு என்ன காரணமாக இருக்கும்? பழகிய பாதுகாப்பான வாழ்க்கைக்கான தயாரிப்பா; இல்லை மாறிய வாழ்க்கை பற்றிய பயமா? இது இரண்டில் ஒன்று உண்மை என்றாலும் சாந்தி ஊசும்பியிடையே இருந்த நேசம் மேலோட்டமானதாகவே தோன்றும்.

அதுவும் அப்படியில்லை; ஊசும்பிக்கு இனி வாய்க்கப்போகும் வாழ்க்கையில் தான் ஒரு பாரமாகவும் பலவற்றுக்குத் தடையாகவும் இருக்கக்கூடாது என்ற எண்ணம் சாந்தியை வேறு முடிவெடுக்கத் துண்டியது என்பது தெரியும்போது, காலம்தோறும் மனித மனதைத் தொடரும் ஒரு சோகம் நினைவில் படிகிறது. ஊசும்பியின் வாழ்வில் சாந்தி இல்லாமலே போனது என்பது அவளுடைய தந்திரமனைத்தும் வீணாகிவிட்ட தையே காட்டுகிறது. மீறல்களில் பிறக்கும் நேசங்களின் வலி காலம் தோறும் இப்படித்தானோ.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com