Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Anangu
Anangu Logo
டிசம்பர் - பிப்ரவரி 2007


டெல்லியில் கூடிய இந்திய உலகம்!

தெ.சீ.சு. மணி

2006ம் ஆண்டு, நவம்பர் 9 முதல் 13 வரை டெல்லியில் ஒரு "மாற்றுலகம்' அணிவகுத்தது. 40,000 பேருக்குமேல் 5 நாட்களும் நடந்த மாநாட்டில் கூடினர்.

"இது ஒரு மேடை' என்கிறார்கள். ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு எதிரான மக்கள் கூடும் மேடை. மக்கள் இயக்கங்கள், அரசு சாரா நிறுவனங்கள் கூடி கருத்துப் பரிமாறிக்கொள்ளும் மேடை. அரசியல் கட்சிகளுக்கோ, ஆயுதக் குழுக்களுக்கோ இங்கு இடமில்லை.

WSF என்று அழைக்கப்படும் இந்த "உலக சமூக மாமன்றம்', ஐ.நா. மூலம் நடத்தப்படும் "உலக பொருளாதார மன்றம்' உலகமயமாக்கலை வலுப்படுத்துவதால் அதற்கு இணையாக "மாற்று உலகம் சாத்தியமே' என்ற முழக்கத்துடன் கூட்டப்பட்டது.

2001ல் பிரேசில் நாட்டில் முதல் மாநாட்டில் "பல பத்தாயிரம் பிரதிநிதிகளும்', இரண்டாவது மாநாட்டில் ஒரு லட்சம் பிரதிநிதிகளும், மூன்றாவது மாநாட்டில் அதைத் தாண்டிய கூட்டமும் கூடியது. 2004ம் ஆண்டு, இந்தியாவில், மும்பையில் "உலக சமூக மாமன்றம்' கூடியது. ஒன்றேகால் லட்சம் மக்கள், பிரதிநிதிகளாகக் கூடினர். 2003ம் ஆண்டு, "ஆசிய மக்கள் மாமன்றம்' ஹைதராபாத்தில் கூடியது. 20,000 பிரதிநிதிகள் கூடினர்.

2003ல் ஹைதராபாத்தில் இந்த "உ.ச.மா.', ஒரு "அந்நிய நிதிசார் தொண்டு நிறுவன முயற்சி' என்ற விமர்சனத்துடன், "மாற்று மாநாடு பேரணி'யை கத்தார் போன்ற புரட்சிகரக் கலைஞர்களின் பங்களிப்போடு, புரட்சிகர இயக்கங்கள் ஏற்பாடு செய்திருந்தன.

அதேபோல, 2004ம் ஆண்டு, மும்பையில் நடந்த "உ.ச.மா.' மாநாட்டை விமர்சித்து, "மும்பை எதிர்ப்பு' என்ற அணி திரட்டலை "உ.ச.மா. 04'ல் நடந்த "கிழக்கு கோரேகான்' பகுதியில் உள்ள "டெல்கோ' மைதானத்திற்கு எதிர் மைதானத்தில் "மும்பை எதிர்ப்பு' மாநாடு நடத்தப்பட்டது. இது சுவையான நிகழ்ச்சி. இரண்டிலும் "உலகமயமாக்கல்' கடுமையாக, ஆழமாக, அகலமாக விமர்சிக்கப்பட்டது. இரண்டு தளத்திலும் போய் உரையாற்றிய, "மேதா பட்கர்' போன்றோரும் இருக்கத்தான் செய்தார்கள்.

2003ம் ஆண்டு, ஹைதராபாத்தின் "ஆசிய சமூக மாமன்றம்', 2004ம் ஆண்டு மும்பையில் நடந்த "உலக சமூக மாமன்றம்' ஆகியவற்றை நடத்தியது "இந்திய அமைப்புக்குழு' இதில் மும்பை மாநாட்டுத் தயாரிப்பிற்காக எடுத்த ஒரு புதிய முடிவு : மாநாட்டுக்கான நிதி திரட்டலுக்கு, "அந்நிய நாட்டு நிதி நிறுவனங்களில்', அமெரிக்காவின், "ஃபோர்டு பௌண்டேஷன்', இங்கிலாந்து அரசின் "டி.எஃப்.டி.' ஆகியவற்றிடம் நிதி பெறக்கூடாது என முடிவெடுத்தனர். அதாவது. பிரேசிலில் நடந்த "உ.ச.மா.' ஒவ்வொன்றிற்கும் இந்த பகாசுர பன்னாட்டுக் கம்பெனிகளின் நிதிகளும் உருண்டன. இ.அ.கு. இதைத் தவிர்த்தது. பிரதிநிதிகள் கட்டணம், அரங்கு வாடகை, அங்காடி வாடகை ஆகியவையே 2004ம் ஆண்டு மாநாட்டிற்கு போதுமானதாய் அமைந்தது.

"இந்திய சமூக மாமன்றம்' நவம்பர் 9 முதல் 13 வரை நடந்துள்ளது. இந்த டெல்லி மாநாட்டில், "உலகமயமாக்கல், ராணுவமயமாக்கல், சாதிவெறி, ஆணாதிக்கவெறி, மதவெறி' ஆகியவற்றை எதிர்த்து அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

டெல்லியில் லோதிசாலை, லோதிதோட்டம் அருகே "ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கம்' அரங்கமாகத் தேர்வு செய்யப்பட்டது. அதில் தெற்குப்பகுதி, வடக்குப்பகுதி, நடுப்பகுதியில் உள்ள மாபெரும் மைதானம் ஆகியவை மாநாட்டு நிகழ்வுகளுக்கான இடங்களாகத் தேர்வு செய்யப்பட்டன.

"இந்திய அமைப்புக்குழு' இதற்கான ஏற்பாடு களை ஓராண்டாகக்கூடி, பலமுறை திட்டமிட்டது. கடைசியாக பெங்களூரில் கூடிய "இந்திய அமைப்புக்குழு' கூட்டத்தில் தென்னிந்தியப் பிரதிநிதிகளை "தயாரிப்புக்குழு'வில் சேர்க்க வில்லை என்ற கலகக் குரலெழுந்தது. அதற்கு விடையளிக்க, "துணைக் குழுக்களில் இடம் பெறுங்கள்' என அறிவித்து, அதைக் குறித்துக் கொண்டனர். பிறகு அந்தப் பட்டியல்களைக் காற்றில் பறக்க விட்டுவிட்டனர். வழக்கம்போல், இந்தி ஆதிக்கம், வடஇந்திய ஆதிக்கம், டெல்லி அறிவு ஜீவிகள் ஆதிக்கம் ஆகியவற்றுடன் "இந்திய சமூக மாமன்ற' மாநாடு திட்டமிடப்பட்டது. தங்குமிடங்களில் நாட்டுப்புற மக்கள் கூட்டத் திற்கென ஒதுக்கப்பட்ட "ஒருமைப்பாட்டு தங்குமிடங்கள்' குறைந்த காசில் இருந்தாலும், குறைந்த வசதிகளுடன் செய்யப்பட்டிருந்தது.

துவக்கமேடை, பிரும்மாண்டமான கலை நிகழ்ச்சிகள், மணிப்பூர் செய்திக்கு முதலிடம், இரோம் ஷர்மிளா இந்த வீராங்கனைப் பெண்மணியின் பெயர் அத்தனை பிரபலம். ஆறு ஆண்டுகளாக உண்ணாநிலைப் போராட்டம் இருந்து வருகிறார். "ஆயுதப்படைச் சிறப்பு சட்டத்தை' நீக்கக்கோரும் போராட்டம். "ஆயுதப்படையின் காவலர்கூட யாரையும் கேட்காமல் சுட்டுக்கொல்லலாம்' என்ற கொடூர அம்சத்துடன் எழுதப்பட்ட "ஆயுதப்படைச் சிறப்புச் சட்டம்' வடகிழக்கு மாநில மக்கள் மீது அதிகாரம் செலுத்தி வருவதை எதிர்த்து, மாபெரும் மக்கள் எழுச்சியின் "அறவழி வடிவம்'தான் இரோம் ஷர்மிலா. அதுபற்றிய வீடியோ படம் மேடையில் பல்வேறு "சமூக மாமன்ற நிகழ்வுகள்' பற்றிய வீடியோ படங்கள். கவிஞர் ஷாஹ்ரியாரி வாசித்தளித்த கவிதைகள். கவிஞர் சிரிக்யூர் சிரிக்யூரின் கவிதை மழை. கேரளாவின் நாட்டுப்புறப் பாடகர் சி.ஜே. குட்டப்பன் பாட்டு. ஜார்கண்ட் ஆதிவாசிகள் நடனம், டாக்டர் ராம்தயான் முண்டா தலைமையில் மத்தியப் பிரதேச மால்வா பகுதியிலிருந்து வந்த "பிரகலாத் சிங்டிபான்யா' குழுவினர் பாடிய "கபிர்' பாடல்கள். பெண்கள் பாடத்தடை போட்டுள்ள "மங்கனியர் சமூக'ப் பெண்மணி "ருக்மா மங்கனியர்' பாடல்கள். "இந்திய உலக நாட்டுப்புற ராக் பாடல்கள்' இப்படி கலைநிகழ்வுகளுடன் தொடக்கம்.

மேதாபட்கர், ரூத் மனோரமா (தமிழ் தலித் பெண் தலைவி) சுபா´னி அலி (மார்க்சிஸ்ட் மகளிர் அணி) என பிரபல பெண் பேச்சாளர்கள் மேடையை ஆக்கிரமித்தது ஒரு திருப்புமுனை. ஒரிசாவின் பழங்குடி பெண் தலைவி "துல்சிமைமுண்டா', பாலஸ்தீன பெண்கள் இயக்க முன்னோடி "எய்லின் குட்டாப்' போன்ற பெண் தலைவிகளும் அணி சேர்த்தனர். மனித உரிமை ஆர்வலர் "வேகுகாரா' ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருந்தார்.

தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்தோர் எண்ணிக் கையே 5000க்கு மேலிருக்கும். தலித் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், அரவாணி அமைப்புகள் அதில் அதிகம் இருந்தன. மீனவர் இயக்கங்களும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்களும்கூட தங்கள் அரங்குகளை நடத்த ஓடோடி வந்து கலந்துகொண்டனர். தமிழ்நாட்டிலிருந்து வந்த "த.நா. புதுவை மீனவ இயக்கங்களின் ஒருங் கிணைப்புக்குழு' தமிழ் சுவரொட்டி ஒட்டி கூட்டம் நடத்தினர். "ரெயின்போ' அமைப்பின் "பாலினச் சிறுபான்மையினர்' கூட்டம் அங்கங்கே கலக்கி வந்தனர். "இட ஒதுக்கீடு' கூட்டத்தை தமிழர்கள் வந்து ஆங்கிலத்தில் நடத்தினர். "தேசிய இன சுய நிர்ணய' கூட்டம் ஒன்று தமிழர், ஈழத் தமிழர், நாகர்கள், அஸ்ஸாம் போலந்து காரர்களுடன் நடந்தது. பெண்கள் இணைப்புக் குழுவினர் அதிக அளவில் கருப்பு ஆடையில் காட்சி தந்தனர்.

இத்தனை கருத்துப் பரிமாற்றங்கட்குப் பின்னர் நவம்பர் 13ம் நாள், "அருணா ராய்' போன்ற ராஜஸ்தான் மாநில பெண் தலைவியின் உரை "நிறைவு கூட்டத்தை' சிறப்பித்தது. அந்த அம்மையாரின் போராட்ட விளைவு "தகவல் பெறும் உரிமைச் சட்டமாக' மலர்ந்ததை அனைவரும் பாராட்டினர்.

விவரணப் படங்கள், அமுதனின் தமிழ் படங்களுடன் சேர்த்து, மூன்று கொட்டகைகளில் தொடர்ந்து நான்கு நாட்களும் காட்டப்பட்டன.

மாநாட்டுத் திடலின் ஒவ்வொரு மூலையிலும் துப்பாக்கி ஏந்திய "துணை ராணுவத்தினர்' டெல்லியின் பயங்கரவாத எதிர்ப்பை, பயங்கர மாகக் காட்டி நின்றது பீதியடையச் செய்தது. மொத்தத்தில் திருப்தியுடன் நாடு திரும்ப முடிந்தது. தொண்டு நிறுவனம் மூலமோ, களப்பணி மூலமோ, பெண்கள் அதிகம் பங்கெடுத்தது, உரை நிகழ்த்தியது, கலைஞர் களாகக் கலந்துகொண்டது "மாற்றத்தை உறுதி செய்வதாக இருந்தது'.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com