Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Maatru Maruthuvam
Maatru Maruthuvam wrapperMaatru Maruthuvam
ஏப்ரல் 2009

தமிழக அரசு கைகழுவுகிறது
மருத்துவர். நா.சண்முகநாதன்

பிப்ரவரி 17 அன்று இந்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தமிழக சட்டமன்றப் பேரவையில் முன் வைத்துள்ளார் நிதியமைச்சர். வரவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலுக்கான கவர்ச்சி அறிக்கை இது என குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் இந்த நிதிநிலை அறிக்கையில் கவர்ச்சிக்காக கூட மருத்துவ நலம் தொடர்பான நல்ல அறிவிப்புகள் இல்லை என்பது கவனத்துக்குரியது.

தாயக மருத்துவமான சித்த மருத்துவம் குறித்தோ மக்கள் மருத்துவங்களான ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, அக்குபஞ்சர், பேன்ற மாற்றுமருத்துவங்கள் குறித்தோ எந்த ஒரு அறிவிப்பும் திட்டமும் இடம்பெறவில்லை. பெரும்பாலான மக்கள் நம்பியிருக்கக்கூடிய அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் குறித்தோ கூடஎந்த ஒரு மேம்பாட்டுக்குறிப்பும் இல்லை.

தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளும், மருத்துவ காப்பீட்டு தனியார் நிறுவனங்களும் லாபத்தில் திளைக்க அரசு நிதி ரூ. 200 கோடியை வாரியிறைக்கும் ‘உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதல்வர் கலைஞரின் காப்பீட்டுத்திட்டம்’ என்றொரு திட்டம் ஏற்கனவே ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டதற்கிணங்க இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது. இந்தத் திட்டத்தினால் விவசாயத் தொழிலாளர் நலவாரியம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள், மீனவர் நல வாரியம் போன்ற அனைத்து நலவாரிய உறுப்பினர்களின் குடும்பத்தினர் பயன் பெறுவர். இதுதவிர ரூ. 24000க்குக் குறைவான ஆண்டு வருமானமுடைய அனைத்து குடும்பங்களும் இந்தத் திட்டத்தால் பயனடையலாம். இந்த காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்தும். ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும் எனப்படுகிறது.

இத்திட்டம் ஒன்றும் புதியதல்ல. தி.மு.க. அரசின் கண்டுபிடிப்பும் அல்ல. கடந்த பாரதிய ஜனதா நடுவண் அரசின் கடைசி நிதிநிலை அறிக்கையில் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற பெயரால் அறிவிக்கப்பட்ட திட்டம்தான் இது. இப்போது கூட ‘ராஜீவ் ஆராக்யஸ்ரீ திட்டம்’ என்ற பெயரில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடைமுறையில் உள்ள திட்டம் இது.

உண்மையில் இத்திட்டத்தால் மக்களுக்குப் பயனேதும் இருக்கப்போவதில்லை. பன்னாட்டு காப்பீட்டு நிறுவனங்களும் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளும் அவர்களிடம் கையூட்டுப் பெறும் ஆட்சியாளர்களும் அரசு அதிகாரிகளும் பயன்பெறக் கூடும். மக்களுக்கு ஒரு பயனும் இல்லை. சிறுநீரகச் செயலிழப்பு, மாரடைப்பு போன்ற 51 உயர்நிலை சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கு இத்திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இத்தகைய நோய்களை முழுமையாக நலமாக்கும் சிகிச்சை முறை ஏதும் ஆங்கில மருத்துவத்தில் இல்லை. அவர்களிடம் மருந்தில்லை என்பதற்காகவே எல்லாவற்றையும் அறுவை சிகிச்சை நோய்களாகக் கருதி உடலை ஊனமாக்குவதோடு நிரந்தர மருத்துவச் சந்தையின் வாடிக்கையாளர்களாகவும் மக்களை மாற்றி விடுகின்றனர். அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளபடி மேற்கண்ட நோய்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் நிச்சயமாக ஒரு லட்சம் ரூபாய் போதாது. இது நீங்கலாக தொடர் சிகிச்சைக்கும் மருந்து மாத்திரைகளுக்கும் எப்படி செலவு செய்வது?

மக்களின் மீது இந்த அரசுக்கு உண்மையான அக்கறை இருக்குமேயானால் இதே 200 கோடி ரூபாயைக் கொண்டு அரசே சொந்த மருத்துவமனைகளைத் தொடங்கலாம். இத்தொகையில் தாயக மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவங்களுக்கு உரிய பங்களிப்பை வழங்கினால் ஆங்கில மருத்துவத்தைவிட மேம்பட்ட பின்விளைவுகளற்ற சிகிச்சையினை அவை வழங்கும். இதுவெல்லாம் திராவிட இயக்கத்தில் ஊறித் திளைத்த அரசியல் சாணக்கியரான முதலமைச்சருக்கும் சித்த மருத்துவத்தின் புரவலர் என பெயர் பெற்றுள்ள நிதியமைச்சருக்கும் தெரியாததல்ல.

பணம் பாதாளம் வரைப் பாயும் எனும் முதுமொழிக்கு எடுத்துக்காட்டுதான் இது. பன்னாட்டு காப்பீட்டு நிறுவனங்கள் தரும் பங்கீட்டுத் தொகைக்காக மக்கள் நலனை காவு கொடுக்க முன் வந்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழக அரசு, நம்முடைய மாற்று குரல்களும் எதிர்ப்பும் ஆட்சியாளர்களின் செவிப் பறையை எட்டுமோ என்னவோ தெரியாது. ஆனால் ஆட்சியாளர்களின் செயலையும் நோக்கத்தையும் தமிழக மக்கள் புரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.

இதுபோன்ற திட்டங்கள் தமிழ்மக்களின் நலவாழ்வையும் தமிழ் மருத்துவமனை சித்த மருத்துவத்தையும் குழிதோண்டிப் புதைத்து அந்தப் புதை மேடையின் மீது தான் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கண்ணாடி மாளிகைகள் கட்டி எழுப்பப்படுகின்றன என்பதை நாம் உணர்ந்து கொண்டால் விடிவு பிறக்கும் காலம் வெகுதூரமில்லை.

இவ்விரண்டு பட்ஜெட்டிலும் கவனிக்க வேண்டிய ஒத்த தன்மை என்னவெனில், மாற்றுமருத்துவம் பற்றி ஒன்றுமில்லை. கட்டணமின்றி மருத்துவமில்லை. மருத்துவ சேவை மக்களுக்கு அளிப்பது அரசின் கடமையில்லை. இவற்றை ஒரே குரலில் ஓங்கிச் சொல்கிறார்கள் என்பதுதான்.

இந்திய அரசியல் சாசனத்தின் பாகம். நான்கின் தலைப்பு ‘கொள்கை விளக்கம்’. இதன் கீழ் பத்தொன்பது கோட்பாடுகள் (36-55) உள்ளன. நான்காம் பாகத்தில் விதிக்கப்பட்டுள்ளவற்றை எந்த நீதிமன்றத்தின் மூலமாகவும் வலியுறுத்த முடியாது. ஆனால் இவைதான் நாட்டின் ஆட்சி முறைக்கு அடிப்படையானவை. சட்டங்களை இயற்றும்போது இத்தகைய அடிப்படை கொள்கைகளைப் பயன்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.

இந்திய அரசியல் சாசனத்தின் நான்காம் பாகமான கொள்கை விளக்கத்தின் கோட்பாடுகள் 39 (உள), 41,42 ஆகியவை மருத்துவம் மற்றும் நலவாழ்வு பற்றி பேசுகின்றன. அவற்றை பெறுவது மக்களின் உரிமை என உரைக்கின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளாய் நமது ஆட்சியாளர்கள் மருத்துவத்தை மக்களுக்கு இலவசமாய் அளிப்பது எமது கடமை என முழங்கினார்.

2003-2004 ஆம் ஆண்டுக்கான மத்திய மாநில நிதி நிலை அறிக்கைகள் இந்திய அரசியல் சாசனக் கொள்கை விளக்கத்தை கொஞ்சமும் மதியாமல் காசுள்ளோர்க்கு மட்டுமே மருத்துவ வசதிகள் என உறுதிபட சொல்கின்றன. தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழிக்கச் சொன்னார் புரட்சிக் கவி சுப்பிரமணிய பாரதி. கையில் காசில்லை என்பதற்காக ஒரு நோயாளி வருந்திச் செத்தால், உடன் வாழ்வோர் வாய்மூடி மௌனித்தால், ‘மனித நேயம்’, ‘மனித உரிமை’, ‘நாகரிகம்’, ‘சகோதரத்துவம்’ போன்ற சொற்களுக் கெல்லாம் பொருளேதும் உண்டோ? இப்போது எத்தனை முறை ஜெகத்தை அழிப்பது?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com