தத்துவம், கலை இலக்கியம், வீரம் ஆகியவற்றின் விளை நிலமாக இருந்தது கிரேக்கம் என்பதை நாம் அறிவோம். அம்மண்ணிலே தோன்றிய மாபெரும் அறிஞர்களில் ஒருவர் தான் பிளாட்டோ. இவர் சாக்ரட்டீசின் மாணவராவார். பிளாட்டோவின் இயற்பெயர் அரிஸ்டோக்கிளீஸ், அவர் எழுதுவதற்காக ஒரு புனைப்பெயரை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பி "பிளாட்டோ' என வைத்துக் கொண்டார். அனேகமாக புனைப்பெயரை வைத்துக் கொண்டு எழுதிய உலகின் முதல் எழுத்தாளர் அவராகத்தான் இருக்கும்.

"பிளாட்டோ' என்றால் பரந்த, விரிந்த என்று பொருள்படும் இச்சொல்லில் இருந்து தான் ஆங்கிலச் சொல்லான Flat வந்தது. பிளாட்டோவின் சொந்த ஊர் ஏதென்ஸ். செல்வசெழிப்புமிக்க குடும்பத்தில் இவர் பிறந்திருந்தாலும் எளிமையையே விரும்பியவர். இவரின் தந்தை அரிஸ்டோன், தாய் பெரிக்டியோனி. இவர்களுக்குப் பிறந்த நான்கு குழந்தைகளில் கடைசிப் பிள்ளைதான் பிளாட்டோ.

கிரேகத்தின் வழக்கப்படி இராணுவத்தில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தனது இருபதாவது வயதில் சாக்ரட்டீசிடம் மாணவராகச் சேர்ந்தார் பிளாட்டோ. இவருக்கு தத்துவத்துறையில் மட்டுமல்லாது இசை, கவிதை, ஓவியம் ஆகிய நுண்கலைகளின் மீதும் அளவற்ற ஈடுபாடு இருந்தது. சாக்ரட்டீசின் முதன்மை மாணவனாக இருந்த பிளாட்டோ, அவர் இறக்கும் காலம் வரை அவருடனேயே இருந்தார். சாக்ரட்டீஸ் இறந்த பிறகு பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இப்பயணங்கள் அவருக்கு அனுபவ அறிவை சேர்க்கவும், சாக்ரட்டீசின் கருத்துக்களை பரப்பவும் உதவின.

கிரேக்கம் திரும்பிய பிளாட்டோ ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். உலகின் முதல் பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆய்வுகளும், பொதுக்கல்வி போதனையும், நுன்கலை பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பிளாட்டோ எழுதிய "குடியரசு' என்ற நூல் மிகச் சிறந்தது என போற்றப்படுகிறது. பிளாட்டோவின் சிந்தனைகள் இன்றளவும் மிகச் சிறந்தவையாக மதிக்கப்படுகின்றன. பெண்களுக்கு தனி வாழ்விலும், அரசியலிலும் சம பங்கு தரவேண்டும் திறனை வளர்க்க கல்வி பயன்படவேண்டும். அன்பு, வீரம், பொறுமை, நேர்மை ஆகிய ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்று பிளாட்டோ வலியுறுத்தினார்.

"மனிதனிடம் அறிவு உறங்கும்போது, கீழான ஆசைகள் தோன்றி வாழ்வை சீர்குலைத்துவிடும். நல்லறிவு இல்லாததால் தான் தீமைகள் ஏற்படுகின்றன' என்றார் பிளாட்டோ. நீதி என்பது மனிதப்பண்பு எனச்சொன்ன பிளாட்டோ, புத்தரைப் போலவே - அதிகப்படியான ஆசையே துன்பங்களுக்கு காரணம் - என்றார். வாழும்போதே மக்களின் பேராதரவினையும், மதிப்பையும் பெற்றவர் பிளாட்டோ, அவர் தனது என்பதாவது வயதில் இறந்தபோது ஏதென்சு நகரமே துக்கம் அனுசரித்ததாம். விரிந்த சிந்தனையும் பரந்த உள்ளமும் எப்போதுமே மக்களின் பாராட்டுக்களை பெறும். உலகம் அவர்களைப் போற்றும். 