அன்பான குழந்தைகளே!

thazir

வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

இனிவரும் மாதங்களில் நிறைய திருநாள்கள் வருகின்றன. ஊரும், வீடும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். நீங்களும் புதுத்துணிளை அணிந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இனிப்புகளையும், பலகாரங்களையும் சாப்பிடுவீர்கள். உறவினர்களின் வீடுகளுக்குப் போய் வருவீர்கள். உறவினர்களை வரவேற்பீர்கள்.

திருவிழா என்பது எப்போதுமே மகிழ்ச்சியானது தான். அப்போது பனி கவிவதுபோல நமது மனங்களில் மகிழ்ச்சி கவிந்து கொள்கிறது. துக்கமோ, கவலையோ ஓடிப்போய் விடுகிறது. திருவிழாக்களும், திருநாட்களும் பக்திக்காக உருவாக்கப்படவில்லை. மனிதர்கள் ஒன்றாகக் கூடி மகிழவே அவை உருவாக்கப்பட்டன. ஆனால் அவற்றை தந்திரமாக பிற்காலங்களில் பக்திக்காக மாற்றிக் கொண்டனர்.

இத்திருவிழா காலங்களில் நீங்கள் ஒற்றுமையை, கூட்டுறவை கற்றுக் கொள்ளவேண்டும். உங்களிடம் அதிகமான பணமோ, பொருட்களோ இருந்தால் பிறருக்கு கொடுத்து மகிழ வேண்டும். ஏழ்மையிலும், தேவையிலும் இருக்கும் நண்பர்களை உங்கள் வீட்டுக்கு அழைத்து, அவர்களோடு திருவிழாவையும் திருநாளையும் கொண்டாடி மகிழ வேண்டும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். எளிமையாக, ஆனால் நிறைவாக கொண்டாட வேண்டும். திருவிழா என்பது மகிழ்ச்சி, அன்பு ஆகியவற்றின் வெளிப்பாடு என்பதைப் பிறருடன் பகிர்ந்து கொண்டால் புரிந்து கொள்வீர்கள்.

மாற்றங்களை நோக்கி...

புதிய சிந்தனைகளை செயல் வடிவாக்குவது வளர்ச்சியின் ஓர் அவசியம். அறிவு வளர்ச்சியில் மட்டுமின்றி எல்லாத் துறைகளுக்குமே இது பொருந்தும். தலித்திய நோக்கில் குழந்தைகளுக்கு ஒரு மாத இதழ் இருந்தால் எப்படி இருக்கும் எனத் தோன்றியது; உடனடியாக அதற்கு செயல்வடிவம் தர எண்ணி, "தலித் முரசி'லேயே எட்டுப்பக்கங்களை ஒதுக்கி "தளிர்' தொடங்கினோம். கடந்த மார்ச்சில் தொடங்கிய "தளிர்' மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது. எட்டுப்பக்கங்களில் தான் எதையும் சொல்லியாகவேண்டும் என்ற வரையறை வேறு. ஆனாலும் "தளிர்' பெரிய வரவேற்பு பெற்றதை வாசகர் கடிதங்களும், தொலைபேசி வழி உரையாடல்களும், நேர்கருத்துகளும் தெரிவித்தன. "தளிர்' பகுதியில் வெளியான குழந்தைப் பாடல்களும், கதைகளும், ஓவியங்களும், கட்டுரைகளும் பாராட்டைப் பெற்றன. அப்பக்கங்களில் குழந்தைகளின் ஆக்கங்களும் இடம் பெற்றன.

"தளிர்' பகுதி வந்ததால் "தலித் முரசி'ன் வழக்கமான பகுதிகளில் சில இடம் பெற முடியாமல் போயின. இதழின் ஓட்டத்தையும், அடர்த்தியையும் இப்பகுதி குறைப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. ஆயினும் "தளிர்' நிறுத்தப்படவில்லை. ஆனால் "தலித் முரசு' 13ஆம் ஆண்டில் நுழையும் தருணத்தில் - அதன் வடிவத்திலும், உள்ளடக்கத்திலும் சில மாற்றங்களை மேற்கொள்ள இருக்கிறது. இச்சூழலில், குழந்தைகள் படிப்பதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு என்று தனியாக ஓர் இதழ் இருந்தால் தான் சரியாக இருக்கும் என்பதால், "தளிர்' பகுதி இவ்விதழுடன் நிறுத்தப்படுகிறது.

சூழலும், போதிய நிலைத்தன்மையும் உருவாகும் போது "தலித் முரசே' குழந்தைகளுக்கான ஒரு தனி இதழைக் கொண்டு வரும். ஆனால் இனி குழந்தைகள் உரிமை தொடர்பான செய்திகளையும், கட்டுரைகளையும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து வெளியிடும். "தளிர்' பகுதிக்கு பதிலாக இலக்கியம், வரலாறு மற்றும் பண்பாடு தொடர்பான ஆய்வுகள், புதியவர்களின் பக்கங்கள் ஆகியவை தொடர்ந்து "தலித் முரசி'ல் இடம் பெறும்.