சின்னப் பழுவேட்டரையர் வந்தியத்தேவனைத் தம்முடன் ஆஸ்தான மண்டபத்துக்கு, அழைத்துப் போனார். சக்கரவர்த்தியிடம் அவன் கூறியது என்ன என்பதைப் பற்றி அவன் சொன்ன சமாதானம் அவருக்கு அவ்வளவாகப் பூரண திருப்தி அளிக்கவில்லை. சக்கரவர்த்தியைத் தனியாகப் போய்ப் பார்க்கும்படி அவனுக்கு அனுமதி அளித்தது ஒருவேளை தவறோ என்றும் தோன்றியது. ஆதித்த கரிகாலரிடமிருந்து வந்தவனாதலால், அவனைப் பற்றிச் சந்தேகிக்க வேண்டியது முறை. ஆனால் தமையனார் முத்திரை மோதிரத்துடன் அனுப்பியுள்ளபடியால் சந்தேகிக்க இடமில்லை. ஆகா! இம்மாதிரி காரியங்களில் பெரியவருக்கு வேறொருவர் ஜாக்கிரதை சொல்லித்தர வேண்டுமா, என்ன? ஆனாலும், தாம் திடீரென்று தரிசன மண்டபத்துக்குள் சென்ற பொழுது அவ்வாலிபன் தயங்கி நின்று பயந்தவன் போல் விழித்தது அவர் கண் முன்னால் தோன்றியது. 'அபாயம்! அபாயம்!' என்று அவன் கூவியது நன்றாகக் காதில் விழுந்ததாக ஞாபகம் வந்தது. "அபயம்" என்று சொல்லியிருந்தால், அது தம் காதில் "அபாயம்" என்று விழுந்திருக்கக் கூடியது சாத்தியமா? எல்லாவற்றுக்கும் இவனை உடனே திருப்பி அனுப்பாமலிருப்பது நல்லது. தமையனார் வந்த பிறகு இவனைப் பற்றி நன்றாய்த் தெரிந்து கொண்டு பிறகு உசிதமானதைச் செய்யலாம். இம்மாதிரி தீரனாகிய வாலிபனை நாம் நம்முடைய அந்தரங்கக் காவற்படையில் சேர்த்துக் கொள்ளப் பார்க்க வேண்டும். சமயத்தில் உபயோகமாயிருப்பான். ஏன்? இவனுக்கு இவனுடைய முன்னோர்களின் பழைய அரசில் ஒரு பகுதியை வாங்கிக் கொடுத்தாலும் கொடுக்கலாம். இம்மாதிரி பிள்ளைகளுக்கு ஒரு முறை உதவி செய்துவிட்டால், அப்புறம் என்றைக்கும் நமக்குக் கட்டுப்பட்டு நன்றியுடனிருப்பார்கள். ஒருவேளை, இவன் உறுதியான விரோதி என்று ஏற்பட்டு விட்டால், அதற்குத் தக்க ஏற்பாடு செய்ய வேண்டும். எதற்கும் தமையனார் வந்து சேரட்டும் பார்க்கலாம்.

ஆஸ்தான மண்டபம் சென்றதும் வந்தியத்தேவன் அப்புறமும் இப்புறமும் ஆவலுடன் பார்க்கத் தொடங்கினான். தளபதியிடம் தான் ஓலையை எடுத்துக் கொடுத்த இடத்தில் உற்று உற்று நன்றாகப் பார்த்தான். தப்பித் தவறி இன்னொரு ஓலை - அந்த முக்கியமான ஓலை - கிடக்கிறதா என்றுதான். அதை மட்டும் கண்டுபிடிக்க முடியாவிட்டால், தன்னைப் போன்ற மூடன் வேறு யாரும் இருக்க முடியாது! உலகமே புகழும் சோழ குலத்து அரசிளங்குமரியைத் தான் பார்க்க முடியாமலே போய்விடும். ஆதித்த கரிகாலர் தன்னிடம் ஒப்புவித்த பணியில் சரிபாதியைச் செய்ய முடியாமலே போய்விடும்.

சின்னப் பழுவேட்டரையர் அங்கிருந்த ஏவலாளர்களில் ஒருவனைப் பார்த்து, "இந்தப் பிள்ளையை நமது அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு போ! விருந்தாளி விடுதியில் வைத்து வேண்டிய வசதிகள் செய்து கொடுத்துப் பார்த்துக் கொள்! நான் வரும் வரையில் அங்கேயே இரு!" என்றார்.

வந்தியத்தேவனும் ஏவலாளனும் வெளியே சென்ற உடன், இன்னொருவன் தளபதியிடம் பயபக்தியுடன் நெருங்கி, ஒரு ஓலைச் சுருளை நீட்டினான். "இங்கிருந்து தரிசன மண்டபத்துக்குப் போகும் வழியில் இது கிடந்தது. இப்போது சென்ற அந்தப் பையனுடைய மடியிலிருந்து விழுந்திருக்கக் கூடும்!" என்று சொன்னான்.

தளபதி அதை ஆர்வத்துடன் வாங்கிப் பிரித்துப் பார்த்தார். அவருடைய புருவங்கள் நெற்றியின் சரிபாதி வரையில் உயர்ந்து நெரிந்தன. அவருடைய முகத்தில் கொடூரமான மாறுதல் ஒன்று உண்டாயிற்று.

"ஆஹா! இளைய பிராட்டிக்கு ஆதித்த கரிகாலர் எழுதிய ஓலை. 'அந்தரங்கமான காரியங்களுக்கு உண்மையான வீரன் ஒருவன் - நினைத்த காரியத்தை முடிக்கக் கூடிய தீரன், - வேண்டும் என்று கேட்டிருந்தாயல்லவா? அதற்காக இவனை அனுப்பியிருக்கிறேன். இவனைப் பூரணமாக நம்பி எந்த முக்கியமான காரியத்தையும் ஒப்புவிக்கலாம்" என்று இளவரசர் தம் கைப்பட எழுதியிருக்கிறார். ஆ! இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. இந்த ஓலையைப் பற்றிப் பெரியவருக்குத் தெரியுமோ, என்னவோ? இவன் விஷயத்தில் இன்னும் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்!" என்று கோட்டைத் தளபதி தமக்குள்ளே சொல்லிக் கொண்டார். ஓலையைப் பொறுக்கிக் கொண்டு வந்தவனை அழைத்துக் காதோடு சில விஷயங்களைக் கூறினார். அவனும் உடனே புறப்பட்டுச் சென்றான்.

சின்னப் பழுவேட்டரையரின் மாளிகையில் வந்தியத்தேவனுக்கு ஆசார உபசாரங்கள் பலமாக நடந்தன. அவனைக் குளிக்கச் செய்து, புதிய உடைகள் அணிந்து கொள்ளக் கொடுத்தார்கள். நல்ல உடைகளை அணிந்து கொள்வதில் பிரியமுள்ள வந்தியத்தேவனும் குதூகலத்தில் ஆழ்ந்தான். காணாமற் போன ஓலையைப் பற்றிய கவலையைக் கூட மறந்துவிட்டான். புது உடை உடுத்திய பின்னர் இராஜபோகமான அறுசுவைச் சிற்றுண்டிகளை அளித்தார்கள். பசித்திருந்த வந்தியத்தேவன் அவற்றை ஒரு கை பார்த்தான். பின்னர், அவனைச் சின்னப் பழுவேட்டரையர் மாளிகையின் சித்திர மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார்கள். 'தளபதி வருகிற வரையில் இந்த மண்டபத்திலுள்ள அபூர்வ சித்திரங்களைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்!' என்றார்கள். இவ்விதம் சொல்லிவிட்டு, காவலர்கள் மூன்று பேர் மண்டபத்தின் வெளியில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டே சொக்கட்டான் ஆடத் தொடங்கினார்கள்.

சோழ குலத்தின் புதிய தலைநகரமான தஞ்சைபுரி அந்த நாளில் சிற்ப சித்திரக் கலைக்குப் பெயர் பெற்றதாயிருந்தது. திருவையாற்றில் இசைக் கலையும் நடனக் கலையும் வளர்ந்தது போல் தஞ்சையில் சிற்ப சித்திரக் கலைகள் வளர்ந்து வந்தன.

முக்கியமாக, சின்னப் பழுவேட்டரையர் மாளிகையில் இருந்த சித்திர மண்டபம் மிகப் பிரசித்தி அடைந்திருந்தது. அந்த மண்டபத்துக்குள் இப்போது வந்தியத்தேவன் பிரவேசித்தான். சுவர்களில் பல அழகிய வர்ணங்களில் தீட்டியிருந்த அற்புதமான சித்திரங்களைப் பார்த்துப் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்தான். அந்த ஆனந்தத்தில் தன்னை மறந்தான்; தான் வந்த முக்கியமான காரியத்தையும் கூட மறந்தான்.

சோழ வம்சத்தின் பூர்வீக அரசர்களையும் அவர்களுடைய வாழ்க்கைச் சம்பவங்களையும் சித்தரிக்கும் காட்சிகள் அவனுடைய கவனத்தைக் கவர்ந்து பரவசமடையச் செய்தன. முக்கியமாக, சென்ற நூறு வருஷத்துச் சோழர்களின் சரித்திரம் அந்தச் சித்திர மண்டபத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. வந்தியத்தேவனுக்கு அதிகமான ஆர்வத்தை உண்டாக்கிய சித்திரங்களும் அவைதாம்.

இந்தக் கட்டத்தில், சென்ற நூறு வருஷமாகப் பழையாறையிலும் தஞ்சையிலும் இருந்து அரசு புரிந்த சோழ மன்னர்களின் வம்ச பரம்பரையை வாசகர்களுக்குச் சுருக்கமாக ஞாபகப்படுத்த விரும்புகிறோம். இனி இந்தக் கதையில், மேலே வரும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வதற்கு, இதைத் தெரிந்து கொள்வது மிக்க உபயோகமாயிருக்கும்.

தொண்ணூற்றாறு போர் காயங்களைத் தன் திருமேனியில் ஆபரணங்களாகப் பூண்ட விஜயாலய சோழனைப் பற்றி முன்னமே கூறியிருக்கிறோம்.

சோழ மன்னர்கள் பரகேசரி, இராஜகேசரி என்னும் பட்டங்களை மாறி மாறிப் புனைந்து கொள்வது வழக்கம். பரகேசரி விஜயாலயனுக்குப் பிறகு அவனுடைய புதல்வன் ராஜகேசரி ஆதித்த சோழன் பட்டத்துக்கு வந்தான். அவன் தந்தைக்குத் தகுந்த தனயனாக விளங்கினான். முதலில் அவன் பல்லவர் கட்சியில் நின்று பாண்டியனைத் தோற்கடித்துச் சோழ ராஜ்யத்தை நிலைபடுத்திக் கொண்டான். பிறகு, பல்லவன் அபராஜிதவர்மனோடு போர்தொடுத்தான். யானை மீது அம்பாரியில் இருந்து போர் புரிந்த அபராஜிதவர்மன் மீது ஆதித்த சோழன் தாவிப் பாய்ந்து அவனைக் கொன்று தொண்டை மண்டலத்தை வசப்படுத்தினான். பிறகு கொங்கு மண்டலமும் இவன் ஆட்சிக்குள் வந்தது. ஆதித்தன் சிறந்த சிவபக்தன். காவிரி ஆறு உற்பத்தியாகும் சஹஸ்ய மலையிலிருந்து அப் புண்ணிய நதி கடலில் கலக்கும் இடம் வரையில் ஆதித்த சோழன் பல சிவாலயங்களை எடுப்பித்தான்.

இராஜகேசரி ஆதித்த சோழனுக்குப் பிறகு பரகேசரி பராந்தகன் பட்டத்துக்கு வந்தான். நாற்பத்தாறு ஆண்டு காலம் அரசு புரிந்தான். இமயத்தில் புலிச் சின்னம் பொறித்த கரிகால் பெருவளத்தானுக்குப் பின்னர் சோழ வம்சத்தில் மாபெரும் மன்னன் பராந்தகன்தான். வீர நாராயணன், பண்டித வத்சலன், குஞ்சர மல்லன், சூரசிகாமணி என்பன போன்ற பல பட்டப் பெயர்கள் அவனுக்கு உண்டு. "மதுரையும் ஈழமும் கொண்டவன்" என்ற பட்டமும் உண்டு. இந்த முதற் பராந்தகன் காலத்திலேயே சோழ சாம்ராஜ்யம் கன்யாகுமரியிலிருந்து கிருஷ்ணா நதி வரையில் பரவியத். ஈழ நாட்டிலும் சிறிது காலம் புலிக்கொடி பறந்தது. தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்து புகழ் பெற்ற பராந்தகனும் இவனேதான். இவனுடைய ஆட்சியின் இறுதி நாட்களில் சோழ சாம்ராஜ்யத்துக்குச் சில பேரபாயங்கள் வந்தன. அந்த நாளில் வடக்கே பெருவலி படைத்திருந்த இராஷ்டிரகூடர்கள் சோழர்களுடைய பெருகி வந்த பலத்தை ஒடுக்க முனைந்தார்கள். சோழ சாம்ராஜ்யத்தின் மீது படை எடுத்து வந்து ஓரளவு வெற்றியும் அடைந்தார்கள்.

பராந்தகச் சக்கரவர்த்திக்கு மூன்று புதல்வர்கள் உண்டு. இவர்களில் வீராதி வீரனாக விளங்கியவன் மூத்த புதல்வனாகிய இராஜாதித்யன் என்பவன். வடநாட்டுப் படையெடுப்பை எதிர்பார்த்து இராஜாதித்யன் திருமுனைப்பாடி நாட்டில் பெரும் சைன்யத்துடன் பல காலம் தங்கியிருந்தான். தன் தந்தையின் பெயர் விளங்கும்படி வீரநாராயண ஏரி எடுத்தான்.

அரக்கோணத்துக்கு அருகில் தக்கோலம் என்னுமிடத்தில் சோழ சைன்யத்துக்கும் இராஷ்டிரகூடப் படைகளுக்கும் பயங்கரமான பெரும்போர் நடந்தது. இந்தப் போரில் எதிரிப்படைகளை அதாஹதம் செய்து தன் வீரப் புகழை நிலைநாட்டிய பிறகு, இராஜாதித்யன் போர்க்களத்தில் உயிர் துறந்து வீர சொர்க்கம் அடைந்தான். இவனும் பல்லவ அபராஜிதவர்மனைப் போல் யானை மீதிருந்து போர் புரிந்து யானை மேலிருந்தபடியே இறந்தபடியால், இவனை 'ஆனைமேல் துஞ்சிய தேவன்' என்று கல்வெட்டுச் சாஸனங்கள் போற்றிப் புகழ்கின்றன.

இராஜாதித்யன் மட்டும் இறந்திராவிட்டால் அவனே பராந்தக சக்கரவர்த்திக்குப் பிறகு சோழ சிம்மானம் ஏறியிருக்க வேண்டும். இவனுடைய சந்ததிகளே இவனுக்குப் பின்னர் முறையாகப் பட்டத்துக்கு வந்திருக்க வேண்டும்.

ஆனால் இளவரசன் இராஜாதித்யன் பட்டத்துக்கு வராமலும் சந்ததியில்லாமலும் இறந்துவிடவே, இவனுடைய இளைய சகோதரர் கண்டராதித்த தேவர் தந்தையின் விருப்பத்தின்படி இராஜகேசரி பட்டத்துடன் சிங்காதனம் ஏறினார்.

இவர் தமது தந்தையையும் பாட்டனையும் போலவே சிவபக்தி மிகுந்தவர். அத்துடன் தமிழன்பு மிக்கவர். உண்மையில் இவருக்கு இராஜ்யம் ஆளுவதில் அவ்வளவு சிரத்தையே இருக்கவில்லை. ஆலய வழிபாட்டிலும் தமிழ் இன்பத்திலும் அதிகமாக ஈடுபட்டிருந்தார். மகான்களாகிய நாயன்மார்களைப் பின்பற்றிச் சிவபெருமான் மீது துதிப்பாடல்கள் பாடினார். 'திருவிசைப்பா' என்று வழங்கும் இப்பாடல்களில் கடைசிப் பாட்டில் இவர் தம்மைப் பற்றியே பின்வருமாறு சொல்லிக் கொண்டிருக்கிறார்:

"சீரான்மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்தாடி தன்னைக்
காரார் சோலைக்கோழி வேந்தன் தஞ்சையர்கோன் கலந்த
ஆராவின் சொற் கண்டராதித்தன் அருந்தமிழ் மாலை வல்லவர்
பேரா உலகிற் பெருமை யோடும் பேரின்ப மெய்துவரே!"

விஜயாலனுக்குப் பிற்பட்ட சோழ மன்னர்கள் பழையாறையிலும் தஞ்சையிலும் வசித்த போதிலும் பூர்வீகச் சோழத் தலைநகர் உறையூர் என்னும் பாத்தியதையை விட்டுவிடவில்லை. உறையூருக்கு இன்னொரு பெயர் கோழி என்பதாகும். ஆகையால் சோழ மன்னர்கள் தங்களைக் 'கோழி வேந்தர்' என்று சொல்லிக் கொண்டார்கள்.

கண்டராதித்த தேவர் சிம்மாசனத்திலிருந்து பெயரளவில் அரசு புரிந்த போதிலும், உண்மையில் அவருடைய இளைய சகோதரனாகிய அரிஞ்சயன் தான் இராஜ்ய விவகாரங்களைக் கவனித்து வந்தான். இராஜாதித்யனுக்குத் துணையாக அரிஞ்சயன் திருநாவலூர் முதலிய இடங்களில் சைன்யங்களுடன் தங்கியிருந்தான். இராஷ்டிரகூடர்களுடன் வீரப் போர் நடத்தினான். தக்கோலத்தில் சோழ சைன்யத்துக்கு நேர்ந்த பெருந் தோல்வியை விரைவிலேயே வெற்றியாக மாற்றிக் கொண்டான். இராஷ்டிரகூடர் படையெடுப்பைத் தென்பெண்ணைக்கு அப்பாலே தடுத்து நிறுத்தினான். 

எனவே, இராஜகேசரி கண்டராதித்த சோழர் தம் தம்பி அரிஞ்சயனுக்கு யுவராஜ பட்டம் சூட்டி அவனே தமக்குப் பின் சோழ சிங்காதனத்துக்கு உரியவன் என்றும் நாடறியத் தெரிவித்து விட்டார்.

இவ்விதம் கண்டராதித்தர் முடிவு செய்வதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. இவருடைய மூத்த மனைவி இவர் பட்டத்துக்கு வருவதற்கு முன்பே காலமாகிவிட்டாள். பிறகு வெகு காலம் கண்டராதித்தர் மணம் புரிந்து கொள்ளவில்லை.

ஆனால் இவருடைய தம்பி அரிஞ்சயனுக்கோ அழகிலும் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த புதல்வன் இருந்தான். பாட்டனாரின் பராந்தகன் என்னும் பெயரையும், மக்கள் அளித்த சுந்தர சோழன் என்னும் காரணப் பெயரையும் சூட்டிக் கொண்டிருந்தான்.

எனவே, தமக்குப் பிறகு தமது சகோதரன் அரிஞ்சயனும் அரிஞ்சயனுக்குப் பிறகு அவனுடைய புதல்வன் சுந்தரசோழனும் பட்டத்துக்கு வரவேண்டும் என்று கண்டராதித்தர் திருவுளங் கொண்டார். இந்த ஏற்பாட்டிற்குச் சாமந்த கணத்தினர், தண்ட நாயகர்கள், பொதுஜனப் பிரதிநிதிகள் எல்லாருடைய சம்மதத்தையும் ஒருமனதாகப் பெற்றுப் பகிரங்கமாக உலகறியத் தெரிவித்தும் விட்டார்.

இந்த ஏற்பாடுகள் எல்லாம் நடந்து முடிந்த பிறகு கண்டராதித்தரின் வாழ்க்கையில் ஓர் அதிசய சம்பவம் நடந்தது. மழவரையன் என்னும் சிற்றரசன் திருமகளை அவர் சந்திக்கும்படி நேர்ந்தது. அந்த மங்கையர் திலகத்தின் அழகும் அடக்கமும் சீலமும் சிவபக்தியும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. முதிர்ந்த பிராயத்தில் அந்தப் பெண்மணியை மணந்து கொண்டார். இந்தத் திருமணத்தின் விளைவாக உரிய காலத்தில் ஒரு குழந்தையும் உதித்தது. அதற்கு மதுராந்தகன் என்று பெயரிட்டுப் பாராட்டிச் சீராட்டி வளர்த்தார்கள். ஆனால் அரசர், அரசி இருவருமே இராஜ்யம் சம்பந்தமாக முன்னம் செய்திருந்த ஏற்பாட்டை மாற்ற விரும்பவில்லை. தம்பதிகள் இருவரும் சிவபக்தியிலும், விரக்தி மார்க்கத்திலும் ஈடுபட்டவர்களாதலால் தங்கள் அருமைப் புதல்வனையும் அந்த மார்க்கத்திலேயே வளர்க்க விரும்பினார்கள். கேவலம் இந்த உலக சாம்ராஜ்யத்தைக் காட்டிலும் சிவலோக சாம்ராஜ்யம் எவ்வளவோ மேலானது என்று நம்பியவர்களாதலால், அந்தச் சிவலோக சாம்ராஜ்யத்துக்கு உரியவனாக மதுராந்தகனை வளர்க்க ஆசைப்பட்டார்கள். ஆகையால் கண்டராதித்தர் தமக்குப் பிறகு தம் சகோதரன் அரிஞ்சயனும் அவனுடைய சந்ததிகளுமே சோழ சாம்ராஜ்யத்துக்கு உரியவர்கள் என்ற தமது விருப்பத்தைப் பகிரங்கப் படுத்தி நிலை நாட்டினார்.

எனவே, இராஜாதித்தன், கண்டராதித்தர் என்னும் இரு உரிமையாளர் வம்சத்தைத் தாண்டி அரிஞ்சயன் வம்சத்தாருக்குச் சோழ சிங்காதனம் உரிமையாயிற்று.

கண்டராதித்தருக்குப் பிறகு அதிக காலம் பரகேசரி அரிஞ்சயன் ஜீவிய வந்தனாக இருக்கவில்லை. ஒரு வருஷத்திலேயே தமையனாரைப் பின் தொடர்ந்து தம்பியும் கைலாச பதவிக்குச் சென்றுவிட்டான். 

பின்னர், இளவரசர் சுந்தர சோழருக்கு நாட்டாரும் சிற்றரசர்களும் பிற அரசாங்க அதிகாரிகளும் சேர்ந்து முடிசூட்டி மகிழ்ந்தார்கள். இராஜகேசரி சுந்தர சோழரும் அதிர்ஷ்ட வசத்தினால் தமக்குக் கிடைத்த மகத்தான பதவியைத் திறம்படச் சிறப்பாக வகித்தார். ஆட்சியின் ஆரம்ப காலத்தில் பல வீரப் போர்கள் புரிந்து பாண்டிய நாட்டையும் தொண்டை மண்டலத்தையும் மீண்டும் வென்றார். இராஷ்டிரகூடப் படைகளைத் தென்பெண்ணைக் கரையிலிருந்து விரட்டி அடித்தார்.

சுந்தர சோழ சக்கரவர்த்தியின் புதல்வர்களான ஆதித்த கரிகாலரும் அருள்மொழிவர்மரும் தந்தையை மிஞ்சக் கூடிய இணையற்ற வீரர்களாயிருந்தார்கள். அவர்கள் இருவரும் தந்தைக்குப் பரிபூரண உதவி செய்தார்கள். அவர்கள் மிகச் சிறு பிராயத்திலேயே போருக்குச் சென்று முன்னணியில் நின்று போர் புரிந்தார்கள். அவர்கள் சென்ற போர் முனைகளிளெல்லாம் விஜயலக்ஷ்மி சோழர்களின் பக்கமே நிலைநின்று வந்தாள்.

முந்தைய அத்தியாயம் அத்தியாய வரிசை அடுத்த அத்தியாயம்