ஒடுக்கப்பட்டோரின் மாற்றுக் கல்விக்கான தந்தை என்று அழைக்கப்படுகிற பாவ்லோஃப்ரையிரேயின் "ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை" என்ற நூல் 1968-ல் வெளிவந்தது. பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டாலும் தமிழில் இந்நூல் வெளிவர கால் நூற்றாண்டாகி விட்டது. இரா. நடராசன் மொழி பெயர்த்து பாரதி புத்தகாலயம் வெளியிட்ட இந்நூலை முன் வைத்து ஆசிரியர் தினத்தையட்டியும், பாவ்லோப்ரையிரேயின் பிறந்த நாளைத் தழுவியும் இரண்டுநாள் வாசிப்பு முகாமை (செப் 4-5) ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பவானிசாகர் அணையில் நடத்தியது.

முதல் நாள் முகாமில் பல்வேறு ஊர்களிலிருந்து வந்தவர்களின் பரஸ்பர அறிமுகம், பாவ்லோ ஃப்ரையிரே பற்றிய அறிமுகம், அவர் எழுதிய ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை என்ற நூலின் அறிமுகம், இந்த நூலை எப்படி வாசிப்பது என்ற கலந்துரையாடல் நடைபெற்றது. புத்தகத்தை 7 பகுதிகளாகப் பிரித்து 7 குழுக்கள் உற்சாகமாக விவாதித்து முகாமிற்கான செலவை பங்கேற்றவர்களே ஏற்றுக்கொண்டனர். அடுத்த நாள் முகாமில் சிறப்பு பங்கேற்பாளர்களாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் புதுச்சேரி கல்வியாளர் தோழர் ஜே.கிருஷ்ணமூர்த்தி இருவரும் பங்கேற்றனர். முதலில் பிரின்ஸ், “பாவ்லோ பிரையரேவை நம் இரத்தத்தில் உறைந்து போகுமாறு நாம் பயில வேண்டும். பிரையரே சொல்வதுபோல் மக்களைத் தூண்டுவது மட்டுமே முக்கியமானது. தூண்டுவது ஒன்றே மக்களின் மௌனத்தினை கலைக்கும். அருகாமைப் பள்ளிகள் ஒன்றே கல்வி எல்லோருக்கும் கிட்ட ஒரே வழி. கல்வியினை இலவசமாக்காமல் “ஸ்காலர்ஷிப்” கொடுப்பது என்பது ஒருவரை மற்றவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி அவரது ஆன்மாவினைக் கொல்லும் முயற்சியாகும். நான் ஒரு மெட்ரிக்பள்ளி வைத்து நடத்துகிறவன் என்ற தகுதியில் சொல்கிறேன், குழந்தையின் பெற்றோர்களில் பெண்களே மிகவும் பொறுப்பானவர்கள், Ôஅது எப்படி என் குழந்தையை அடிப்பீங்க, அவன் தப்பே செய்திருக்கமாட்டான்Õ என்று சொல்லி குழந்தையின் உள்ளத்தில் நம்பிக்கையை விதைக்கிறாள். பிள்ளைகளோடு உரையாடுங்கள், பாடப்புத்தகத்தில் இருப்பது மட்டுமன்றி பலவற்றையும் உரையாடுங்கள், நீங்கள் அறியாத கோணங்களில் விவாதம் பயணிக்கும், இதைத்தான் பாவ்லோ பிரையரே சொல்கிறார். உரையாடல் ஒன்றின் மூலமே, “deafening silence அல்லது “Culture of Silence” உடைபடும். மௌனமே நாகரிகமானது என்பது மூடத்தனம் என்பதை பாவ்லோ பிரையரே சொல்வது போல் வேறு யாரால் சொல்ல முடியும். ஆசிரியர்களே, உங்கள் குழந்தைகளிடம் “இதை நாம் சேர்ந்து யோசிக்கலாமா, உங்களோடு சேர்ந்து நானும் படிக்கிறேன், வாய் விட்டுப் படிப்போம்” என்று ஒரு நாள் சொல்லிப்பாருங்கள் உங்கள் வகுப்பு என்னும் வானம் உங்கள் வசப்படும் என்றதும் முகாமில் உள்ளவர்களின் உணர்வுகள் உச்சத்தில் உறைந்து நின்றது.

இறுதியாக தொகுப்புரை தொடங்கியது. 1,2,3 என வரிசையாக ஒவ்வொரு குழுவும் தொகுப்புரை கொடுக்க பாவ்லோ பிரையரேவின் நூல் முழுமையாய் ஒரு திரைப்படம் போல் விரியத் தொடங்கியது. “கடைசியாக, 7வது மற்றும் இறுதிக் குழு வாருங்கள்” என பேரா. ந. மணி அழைக்க, பேராசிரியர் வெற்றிச்செல்வன் வந்து, “எங்கள் குழுவின் தொகுப்புரையினை பேராசிரியர் முருகேஷ் வழங்குவார்” எனச் சொல்ல, முகாம் பரபரப்படைந்தது. “ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரித்து ஆளுவதையே ஆதிக்கவாதிகளின் உரையாடலுக்கு எதிரானது என்று சித்தாந்தம் சொல்கிறது. ஆனால் உரையாடல் முறை அவர்களுக்கான விடுதலைக்கான பாதையினைக் காட்டுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றுபட வைப்பதற்கு சிந்தனைகளை கோஷங்களாக முன் வைப்பது மட்டுமே போதாது. அந்த உரையாடலின் நோக்கம் அல்லது புரட்சியாளர்களின் நோக்கமாக இருக்க வேண்டியது என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் முன் ஒடுக்குமுறையின் வடிவத்தை யதார்த்த சூழலோடு இணைத்து ஒரு பிரச்சனையாக முன்வைத்து அந்த யதார்த்தத்தினை மாற்றிடச் செய்ய அவர்களைத் தூண்டுவது ஆகும்” என தொகுப்புரையினை அவர் தொடர, அநேகரின் கண்கள் பனித்தன. பார்வைத் திறனில்லாத ஒருவருக்கு இது எப்படி சாத்தியம் என வியக்க அவரே சொன்னார், “நான் என்னுடைய iPodஇல் குரலைப் பதிந்து இந்நூல் முழுமையும் கேட்டேன்”. நண்பர்களே, ஒரு நூலினை வாசிக்க இவர் இத்தனை சிரமங்கள் எடுக்கிறார் என்றால், நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்கிற வினா நம்முன் பெரிதாக விரிகிறது.

இறுதியாக, ஜே.கே, “முதலில் நான் இம்முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்த ஈரோடு அறிவியல் இயக்கத் தினருக்கும், பேராசிரியர் ந. மணிக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்; ஆசிரியர்களாக நாம் விரும்பி எடுத்த இப்பணியினை நிறைவாகச் செய்கிறோமா? முதல் முதலாகப் பணியில் சேர்ந்தபோது என்ன கனவெல்லாம் வைத்திருந்தோம்; நாம் கொடுக்கப்போகும் கல்வியின் மூலம் பிள்ளைகள் சிந்திக்க ஆரம்பித்து புதிய சமூகத்தினைப் படைக்கத் துணைபுரிவோம் என்பதெல்லாம் 15 (அ) 25 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் என்னவாயிற்று? பாரதி சொல்வதுபோல் “கருகத் திருவுளமோ?”; நம்மை நம் கனவுகளை நனவாக்க செய்திடாமல் செய்ததற்கு இக்கல்வித் திட்டம், பாடமுறைகள், தேர்வுகள் என பல காரணிகள் இருந்தபோதும் நாம், நமது வாசிப்பு, பிள்ளைகளுடான அணுகுமுறை என்பன முக்கியக் காரணிகள் என நான் உணர்கிறேன்.; கையைக் கட்டுடா என்று சொல்வது அடிமைத்தனத்தின் நீட்சியல்லவா, அவ்வாறு சொல்லும்போது மட்டுமல்லாமல் அன்றாட நடவடிக்கைகளிலும் பாவ்லோ பிரையரே சொல்வதுபோல் ஆதிக்க சக்திகளின் கூறுகளை நாம் அறியாமலே நம் உள்ளத்தில் வைத்திருக்கிறோம். தொடர்ந்த வாசிப்பின் மூலமும், குழந்தைகளுடனான உரையாடலின் மூலமும், கற்பிப்பவர், கற்பவர் என்கிற நடைமுறை நீங்கி உரையாடி, விவாதித்து இருவரும் (ஆசிரியர், மாணவர்) கற்கின்ற அந்த நடவடிக்கை மூலமே அக்கூறுகளை நாம் களையமுடியும்; பகல் கனவு, முதல் ஆசிரியர், ஆயிஷா, எனக்குரிய இடம் எங்கே, ஏன் டீச்சர் என்னை பெயிலாக்கினீங்க போன்ற புத்தகங்கள் எத்தனை ஆசிரியர்களுக்குத் தெரியும்? தொடர்ச்சியான வாசிப்பு என்பதில்லாமல் எப்படி உரையாடல் சாத்தியப்படும்? கல்வி என்பது அரசியல் நடவடிக்கையே என்கிற தெளிவு வேண்டும். ஒரு “Political Clarity” யுடன் வகுப்புக்குச் செல்லவேண்டும். என் பள்ளியில் சுஜாதா என்கிற ஆசிரியர் பிள்ளைகளுடன் தரையில் உட்கார்ந்து பாடம் சொல்லிக் கொடுப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அவர்தான் ஆசிரியர்; பட்டுக்கோட்டை பள்ளியில் அது இயல்பான நடவடிக்கை; பிள்ளைகளுடன் பழகாதவரையில் அவரை மாணவர்களாக மட்டுமே பார்ப்பது என்பது எவ்வளவு மோசமான நடவடிக்கை; எப்போது வகுப்பில் “deafening silence”-ஐ உடைக்கிறோமா அப்போதுதானே அங்கு கல்வி சாத்தியம். வகுப்பறைகளில் ஒரு ஜனநாயகம் எப்போதும் வேண்டும். ஒரு ஆசிரியர் எப்போது ஒரு மாணாக்கரின் கேள்விக்கு விடை தெரியாது என்று செல்கிறாரோ அப்போதுதான் அவர் நல்ல ஆசிரியர். பாவ்லோ ஃப்ரையிரேவின் இந்நூலிற்கான வாசிப்பு முகாமினுடைய நோக்கமாக நான் காண்பது, இங்கிருந்து கலைந்து செல்லும்போது கல்வியினை உரையாடல் மூலம் சாத்தியமாக்குவோம், வகுப்பறையின் செவி கிழிக்கும் மௌனத்தினை உடைப்போம், இருவரும் கற்பவர்களாகி இணைந்து கற்போம் என்கிற உள்ள உறுதியினை எடுத்துச் செல்லவேண்டும் என்று உரையாற்றி முடித்தார்.” தோழர் ஜே.கேவின் ஆசைக்கேற்ப முகாமிலிருந்த அனைவரும் திடலில் ஒருவரோடொருவர் கை கோர்த்து நின்று முகாமிலிருந்த நோக்கத்தினை அவரின் வார்த்தைகளில் சூழ்ந்திருந்த மலைகளின் முகட்டில் ஒலித்தவாறே உரக்கச் சொல்லிக் கலைந்தனர்.

இம்முகாமின் வெற்றியாக நான் காண்பது,1) “சார், அடுத்த முகாமினை சுடர் நடராஜனின் பகுதியில் வையுங்கள், நாங்களும் அம்மக்களுக்கு ஏதாவது செய்கிறோம்” எனப் பெண்கள் முன்கையெடுத்துச் சொன்னது 2) சார், இரண்டு நாட்களில் இப்போது தான் வீட்டு ஞாபகம் வருகிறது, போனே பண்ணலை”, என்று ஒரு இளம் வயதுப் பெண் ஆசிரியர் சொன்னது 3) பூபாலன், வீதீமீணீ பள்ளி ஆசிரியர்கள், ணீவீபீமீபீ ணீt ணீநீtவீஷீஸீ ஸீரீஷீ ஆசிரியர்கள், சுடர் நடராஜன், பிரபு, பேராசிரியர் முருகேஷ் எனத் தொடங்கி பல்வேறு நல்ல மனிதர்களைக் கண்டதில் வாழ்வின் மீதான புதிய நம்பிக்கையைப் பெற்றேன் என்று ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் சொன்னது 4) படிக்கவே முடியாது என்று தூக்கி வைத்துவிட்ட புத்தகத்தினைப் படிக்க முடியும் பலருக்கும் புரிய வைக்க முடியும் என்கிற நம்பிக்கையைப் பலருக்கும் விதைத்தது.

முதல் ஆசிரியர்களுக்கான முகாம் என்கிற தாளவாடி மலைப்பகுதியில் ஈரோடு மாவட்ட அளவில் நடத்தி வெற்றி பெற்ற ஈரோடு அறிவியல் இயக்கமும், பேராசிரியர் ந. மணியும் இம்முறையும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். தமிழகத்தின் பல பகுதிகளிலும் இது போன்ற முகாம்கள் தொடரட்டும். இருளும் ஒளியும் நூலில் எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் சொல்வதுபோல் தோள் வலிக்கும் வரை புத்தகங்களினைச் சுமந்து சென்ற அந்தக் காலம் மீண்டும் வரட்டும். பாவ்லோ ஃப்ரையிரேவின் கூற்றான “மனிதப் பேச்சு உலகை மாற்றும்” என்பது நிஜமாகட்டும்.