Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Unnatham
UnnathamUnnatham Logo
ஜனவரி - பிப்ரவரி 2006

களைப்பில் திளைக்கும் மேதையின் மணம்

சண்முகராஜா

பரிசோதனை என்பதை தவறுதலாக புரிந்து கொண்டு பார்வையாளர்களை நாடகம் நிகழும் பக்கம் அண்டவிடாமல் சோர்வடையச் செய்பவர்கள், பார்வையாளர்கள் கணப்பொழுதேனும் குதூகலமாக இருந்துவிட்டாலோ, நாடகத்தை எளிமையாகப் புரிந்து கொண்டாலோ பதற்றமடைந்து நாடகம் தவறு செய்துவிட்டதாக எண்ணுபவர்கள் கொண்டாட்டத்தை உணராதவர்கள். நமது மரபுக்கலைகள், சடங்குகள் மற்றும் திருவிழாக்கள் இனக்குழு மக்களின் கொண்டாட்டங்களே. கொண்டாட்டத்தின் அடிப்படை உணர்வுகளை நவீன நாடகத்தில் திறம்பட பயன்படுத்தியோரில் குறிப்பிடத்தக்கவர் பி.வி.காரந்த். நிகழ்த்துப்பிரதி முழுவதும் படிந்துகிடக்கும் குதூகலமும் பார்வையாளனை பித்தங்கொள்ளச்செய்யும் ஒய்யார இசையும் காரந்திடம் கற்றுக் கொள்ளவேண்டிய ஒன்றாகும். நகைச்சுவை என்பது ஒரு விமர்சனம், நகையுணர்வை புறக்கணிப்பவர்கள் கலக இயல்பை துறக்கிறார்கள் என்னும் பி.வி.காரந்த், தனது நாடகப்பணி குப்பி கம்பெனியில் நடிகர்கள் சவரம் செய்வதற்கு ப்ளேடு விநியோகிக்கும் பொறுப்பிலிருந்து ஆரம்பித்ததாகக் கூறுவார். காரந்தின் நகைச்சுவையுணர்வு சூழலை குதூகலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் விசயம் சார்ந்த எதிர்ப்புணர்வையும் உள்ளடக்கியதாக இருந்தது.

பாபுகோடி வெங்கடரமண காரந்த் தெற்கு கன்னடத்தின் பந்த்வால் தாலுகாவைச் சேர்ந்த மஞ்சி என்ற கிராமத்தில் பிறந்து 1928ல் பள்ளி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் பள்ளிப்பருவத்திலேயே குப்பி வீரண்ணாவின் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். பின்பு குப்பி வீரண்ணா காரந்தை இலக்கியம் பயில பனாரஸ்ஸிக்கு அனுப்புகிறார், அங்கு காரந்த் இந்துஸ்தானி இசையை குரு ஓம் கர்நாத் தாக்கூரிடம் பயின்று, பின்னர் தேசிய நாடகப்பள்ளியிலும் பட்டம் பெறுகிறார். குப்பி வீரண்ணா கம்பெனி, தேசிய நாடகப்பள்ளி, போபால் ரங்கமண்டல், மைசூர் ரங்கயானா, கே.வி.சுப்பண்ணாவின் ஹெக்டு ஆகிய இடங்கள் காரந்த் அதிக நாட்கள் நாடகப் பணிக்காக செயல்பட்ட இடங்கள். அதில் தேசிய நாடகப்பள்ளி (1977-1981), ரங்கமண்டல்-பாரத்பவன்-போபால்(1981-1986), ரங்கயானா-மைசூர் (1989-1995) ஆகிய நிறுவனங்கள் அவர் இயக்குநராகப் பணியாற்றியவை.

மரபார்ந்த பாரம்பரிய கலைகளில் பொதிந்து கிடந்த நேர்த்தியான அழகியலையும், செறிவான கலாச்சார இருப்பையும் அதிகம் உணர்ந்தவராக காரந்த் இருந்ததே இந்திய அளவில் நவீன நாடகத்திற்கு யாரும் அதுவரை செய்திராத பணிகளை செய்ததோடு அதை ஓர் இயக்கமாகவும் மாற்ற முடிந்தது. சுரேஷ் அவஸ்தி, நேமிச்சந்திரஜெயின் ஆகியோரால் ‘வேர்களைத்தேடி’ திட்டம் கோட்பாடாக முன்னெடுக்கப்பட்டதும் இப்ராஹிம் அல்ஹாசி வழிவந்த அழகியலுக்கு மாற்றாக அவருடைய மாணவர்களாலேயே கண்டெடுக்கப்பட்ட புதிய இயக்கத்தின் பிரதிநிதித்துவ இயக்குநராக பி.வி. காரந்த் திகழ்ந்தார். மரபை மீட்டுருவாக்கம் செய்வதும் பிராந்தியக் கூறுகளை அதுவரை பேசப்படாத மொழியில் முன்வைப்பதும் அவர்களுடைய முக்கிய பணியாக இருந்தது.

மேலும் தேசிய நாடகப்பள்ளியின் இயக்குநராகத் திகழ்ந்தபோது அதன் ஒட்டுமொத்த அமைப்பை திருப்பிப்போடும் அளவிற்கு அதன் பாடத்திட்டத்தை முற்றிலுமாக மாற்றியமைத்தார். நாடக விரிவாக்கத் திட்டத்தை உருவாக்கி இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் நாடகப் பயிலரங்கங்களை நடத்தி நவீன நாடக இயக்கத்தை பரவலாக்கினார். தமிழ்நாட்டில் காந்திகிராமத்தில் நடத்தப் பெற்ற முதல் நவீன நாடகப் பயிரலங்கம் காரந்தால் விரிவாக்கத்திட்டத்தின் கீழ் நடத்தப் பெற்றதேயாகும்.

காரந்த் கர்நாடகத்திலும் வடஇந்தியாவிலும் ஒவ்வொரு நாடகத் தயாரிப்பின் மூலமும் பெரும் அலையை ஏற்படுத்தியவர் 1960களின் இறுதிப் பகுதியில் புராதன படச்சட்டகப்பாணி (Proscenium Style) நாடகங்களின் மத்தியில் காரந்தின் நாடகங்களான ஹயவதனா, ஜோகுமாரசாமி, சங்கராந்தி மற்றும் ஈடிபஸ் ஆகியன ஏற்படுத்திய அதிர்வுகள் இன்றுவரை மறக்க இயலாதவை. நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கிய காரந்த் ஐம்பதுக்கும் அதிகமானதை கன்னடத்தில் இயக்கியிருக்கிறார். மேலும் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பஞ்சாபி, உருது, குஜராத்தி, சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் அவர் நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.

ஹயவதனா, கட்டாலி பிலாகு, குச்சு குதுரே, ஏவம் இந்திரஜித், ஒடிபஸ், சங்கராந்தி, ஜோகுமாரசாமி, சத்தவரா நிராலு, கோகுல நிர்கமண, மேக்பத், கிங்லியர், சந்திரஹாஸா, ஹயவதனா, காசிராம் கோட்வால், மிருச்சகடிகை, முத்ரராட்ஷஸ் மற்றும் மாளவிகாக்னி மித்ரம் ஆகிய காரந்தின் முக்கிய தயாரிப்புகளாகும். எண்ணற்ற திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றிய காரந்த் நான்கு ஆவணப்படங்களையும், நான்கு திரைப்படங்களையும்கூட உருவாக்கியுள்ளார். அவரது உருவாக்கமான ‘சோமன துடி’ 1976ல் சிறந்த படத்திற்கான ஜனாதிபதி பரிசை வென்றதாகும்.

திரைப்படங்களைவிட நாடக மேடைகளிலேயே காரந்தின் ஆளுமை அசாத்தியமாக வெளிப்பட்டது எனக்கூறும் அவரது நண்பர்கள் ஹயவதனா, கோகுல நிர்கமண மற்றும் சத்தவரா நிராலு ஆகிய மூன்று நாடக தயாரிப்புகளையும் காரந்தின் முக்கியமான தயாரிப்புகளாக குறிப்பிடுகின்றனர்.

டெல்லியில் தேசிய நாடகவிழாவில் காரந்த், ஹெக்குடுவிற்காக தயாரித்திருந்த ‘கோகுல நிர்கமண’ நாடக நிகழ்வு மேகதூத் திறந்த வெளி அரங்கில் காணக்கிடைத்தது. அந்த ஆண்டு தேசிய விழாவில் கலந்து கொண்ட நூற்றுக்கு மேற்பட்ட நாடகங்களில் சிறந்த நான்கைந்து நாடகங்களில் அதுவும் ஒன்று எனலாம். அந்த அளவிற்கு அதன் பிரதி கட்டுமானமும் நாடக இசையும் நேர்த்தியாக அமைந்திருந்தது. பிரதிகட்டுமானம், நாடக வடிவமைப்பு ஆகியவற்றால் உருவாக்கப்படும் நாடகத்தின் ஒட்டுமொத்த தாளகதியை காரந்த் இசையை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கினார். எல்லாவித படைப்புநிலைக்கும் அவர் இசையையே ஆதாரமாகக் கொண்டார். இயல்பான உடையாடலில் கூட வார்த்தை, ஓசைகளை அவர் வெளிப்படுத்தும் விதத்தை கவனிக்கும் ஒருவரால் காரந்தின் இசைப் புலமையை அறிந்து கொள்ள முடியும். இசை வகுப்புகளில் சுரம், அபசுரங்களைவிட முயற்சி, முயற்சியின்மை பற்றிய கவனமே இசைக்கற்றலின் ஆரம்பமென கூறும் காரந்த் கடின உழைப்பாளி. செப்டம்பர் 1, 2001ல் புற்றுநோயால் இறப்பதற்கு முந்தைய வருடத்தில் எங்கள் வகுப்பிற்கு இரண்டாமாண்டு பாடத்திட்டத்தின்படி சமஸ்கிருத நாடகத்தை இயக்க வந்திருந்தார்.

எனது பேராசிரியர் கே.எஸ்.ராஜேந்திரனின் பயிலரங்குகளுக்கு நிரந்தர பயிற்றுவிப்பாளராக காரந்த் வருகை புரிந்தார். உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிகழ்ந்த இந்திரா பார்த்தசாரதியின் ‘ராமானுஜர்’ நாடகத் தயாரிப்பிலும், தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையத்தில் நடந்த சந்திரசேகர கம்பாரின் ‘மகமாயி’ நாடகத்தயாரிப்பிலும் காரந்த் எனக்கு ஆசிரியராக அறிமுகமாகியிருந்தாலும் அவருடன் நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப்பு எங்கள் வகுப்புத் தயாரிப்பிலேயே கிடைத்தது. ஏனெனில் அந்நாடகத்தில் மேடை நிர்வாகப் பொறுப்பை காரந்த் எனக்கு வழங்கியிருந்தார். பிரதி தேர்விலிருந்து இறுதி மேடையேற்றம் வரை அவருடைய ஒவ்வொரு அசைவையும் அவரின் தெரிவுகளையும் கூர்ந்து அவதானிக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

மகேந்திரவர்ம பல்லவனின் ‘பகவதஜ்ஜாகியம்’, ‘மத்தவிலாசம்’ ஆகிய இருநாடகங்களையும் தேர்வு செய்து இரண்டையும் இணைத்து ‘மத்த பகவதஜ்ஜாகவிலாசம்’ என்ற ஒரு முழுநீள நகைச்சுவை நாடகப் பிரதியை எங்கள் முன்னிலையிலேயே காரந்த் மிக இயல்பாகவும் சுவராஸ்யத்தோடும் உருவாக்கினார். சிவராமகாரந்தின் யட்சகான மையத்திலிருந்து யட்சகான கலைஞர்களை வரவழைத்து நடிகர்-நடிகைகளுக்கு இசையை, உடலசைவுகளை அவர்கள் மூலம் பயிற்றுவிக்கச் செய்தார். துறவிகளின் கேளிக்கைகளை நகைச் சுவையோடு சித்தரித்து ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள் என்பதில் மனித மனம் வெறும் செயற்கைத்தனமான உறவைக் கட்டமைத்துள்ளது, பாசாங்குகளை மீறி மனித மனத்தின் உண்மையான நாட்டமே இறுதியில் வெற்றியடைகிறது என்பதை மதத்தை மையமாக வைத்துப் பேசியிருந்தார். அந்த நாடகம் முடியும் தருணத்தில் எனது வகுப்பின் நடிகர்-நடிகைகள் சிறந்த கோமாளி நடிகர்களாக உருமாறியிருந்தார்கள். நாடகத்தயாரிப்பின் நாற்பது நாட்களும் காரந்த் கொண்டாட்டத்தில் திளைக்கும்படியான தருணங்களை வருவித்தபடியே இருந்தார். களிப்பில் திளைக்கும் மேதையின் மனம் தனது நீண்ட சிறகுக்கரங்களால் நம்மையும் அணைத்தபடியே இருக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com