Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Unnatham
UnnathamUnnatham Logo
ஜனவரி - பிப்ரவரி 2006

இன்று

அஜயன்பாலா

அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப கலையின் முகமூடிகள் வெவ்வேறு வண்ணங்களில் கணம்தோறும் உருமாறிக் கொண்டிருக்கின்றன. மனித மனம் கலையை ஒரு சமூகத்தின் ஆன்மாவை பிரதிபலிக்கும் கருவியாக தொடர்ந்து பயன்படுத்தி தனது இறையான்மையை காத்துக் கொள்கிறது. கலையின் கடைசிக்குழந்தையான சினிமா தற்போது டிஜிட்டல் கேமராக்களின் வருகையால் தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்கான நிர்பந்தத்திற்கு இயல்பாகவே உந்தப்பட்டு அதற்கான வழிவகைகளை குறும்படம் மற்றும் ஆவணப்படங்களின் வாயிலாக கண்டடையத் தவித்து நிற்கிறது.

தமிழுக்கு இது குறும்படங்களின் பொற்காலம் எனக் கூறுமளவிற்கு கையடக்க கேமராக்களின் உதவியுடன் தமிழகத்தின் பல்வேறு மூலைமுடுக்குளில் கலைஞர்கள் தங்களது கருப்பொருளை நோக்கி கேமராவை ழர்ர்ம் ண்ய் செய்யத் துவங்கியுள்ளனர். சினிமா குறித்த அடிப்படை ஞானம் இவர்களின் முயற்சிக்கு தடையாக இருக்கவில்லை. குருடன் சிலையை தடவிபார்ப்பதுபோல் தங்களது ஆளுமைகளை தட்டுதடுமாறி தாங்களாகவே தடவிப் பார்த்து பூரிப்படைகின்றனர். இவர்களில் பலரது முயற்சி முதல்நிலையிலேயே தோல்வியடைந்தாலும் குறிப்பிட்ட சிலர் அசாத்தியமான படங்களையும் உருவாக்கியிருக்கின்றனர். விரல்விட்டு எண்ணக்கூடிய சில இயக்குனர்கள் இத்துறையில் தொடர்ந்து திரைப்படங்களை எடுத்து நவீனச் சூழலுக்கு வலிமை சேர்த்து விடுகின்றனர்.

இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர வேறெந்த மாநிலத்திலும் இவ்வளவு தீவிரமாக இத்துறையில் மற்றவர்கள் இயங்குகிறார்களா என்பது ஆச்சர்யமே. இயல்பாகவே, நமக்கிருக்கும் தன்னுணர்வும், பிறகாரியங்களின் மீதான அதீதமும்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். இன்றைய டிஜிட்டல் யுகத்தின் முக்கியப் பயன்பாடுகளான, குறும்படம், ஆவணப்படங்கள் மற்றும் இதர வகையான செய்திப்படங்களும் நாளைய வரலாற்றை தீர்மானிக்கக் கூடிய முக்கிய சக்திகளாக உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது.

அகசுதந்திரம் அதிகமுள்ளவர்கள் ஆளுமைமிக்க கலைஞர்களாக உருவெடுப்பதுபோல் அகவெழுச்சியும் உந்துதலும் உள்ள ஒரு சமூகம் பிற சமூகத்திலிருந்து தன்னை மேலும் முன்னெடுத்துச் செல்லும். ஒரு சமூகத்தின் அக எழுச்சி அதன் கலைகளை முன்வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. காலம் தோறும் கலையின் முகம் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப மாறிவரும் சூழ்நிலையில் அந்த மாறுதல்களை அச்சமூகம் எவ்வளவு தூரம் உள்வாங்கி தங்களை வெளிப்படுத்துவதைப் பொறுத்து அச்சமூகம் தன்னை பின்னடைவுகளிலிருந்து காப்பாற்றிக் கொள்கிறது. உலகம் முழுக்க ஒரு சர்க்கியூட்டிற்குள் கொண்டு வர முயலும் இன்றைய எலக்ட்ரானிக் யுகம் கலையுலகத்திற்கு பரிசளித்திருக்கும் கையடக்க டிஜிட்டல் கேமராக்களின் பயன்பாடுதான் நாளைய சமூகத்தின் அக எழுச்சியை தீர்மானிக்கும் புதிய சக்திகள். இதுபோன்ற காலத்தின் சமிக்கைகளை முன்கூட்டியே அறியாத நுண்ணறிவற்ற அரசு எந்திரமும் ஊடகங்களும் அச்சமூகத்தை பெரும் அவலத்திற்கு தயார் படுத்துகின்றன.

இத்தகைய சூழலில் வெளியாகியிருக்கும் கவிஞர் அய்யப்பமாதவனின் ‘இன்று’ என்ற கவிதையை முன்வைத்து முழுவதும் படிமங்களின் தொகுப்பாக கொண்டுவரப்பட்டுள்ள இக்கவிதை சித்திரத்திற்கு கவிதையின் பின்னணியே போதுமானதாக இருக்கிறபோது பின்னணி இசை படைப்பின் ஓர்மையை தேவையில்லாமல் சிதறடிக்கிறது. எந்த சப்தமும் இல்லாமல் வெறும் காட்சி படிமங்களுக்குப்பின் கவிதையை வாசிக்கும் குரல் மட்டுமே ஒலித்திருக்குமாயின் இன்னும் தன்னை முழுமையான படைப்பாக இக்கவிதை சித்திரம் உருவாகியிருக்ககூடும். மேலும் கவிதைகளில் சொற்கள் ஒரு வாசகனுக்கு பல் அர்த்த சாத்தியபாடுகளை முன்வைக்கிறது. ஆனால் காட்சி வடிவத்தில் படைப்பாளியின் கற்பனை முழுவதும் திட்டமிட்ட வடிவத்திற்குள் சிக்கிக் கொள்வதால் கவித்துவம் என்பது இருவேறு காட்சிகளை ஒன்றிணைக்கும் போதும் அல்லது ஒட்டு மொத்த காட்சிகள் தரும் ஒருமையின் போது மட்டுமே சாத்தியமான தாகப்படுகிறது. காற்றில் ஆடும் கிளிப்புகள், ஓவியங்கள், மலர்கள், விரல்களின் நிழல்கள்,வாகனங்கள் விரையும் நகர மேம்பாலம் என வெவ்வேறு படிமங்களில் மூன்று நிமிட காட்சியில் நாம் மறந்து போன ஒரு கனவை நமது ஆழ்மனத்திலிருந்து மீண்டும் நனவு மனநிலைக்கு கொண்டு வருகிறது.

நகரத்தின் நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் ஒரு கவிமனத்தின் சிதிலத்தை மலர்கள் மற்றும் தீயினை குறியீடாக பயன்படுத்தி, இக்கவிதைக்கான காட்சிகளை காட்சியியல் படிமங்களாக உருவாக்கியுள்ள இயக்குனர் பாண்டியராஜனும் ஒளிப்பதிவாளர் செழியனும் பாராட்டுக்குரியவர்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com